You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையில் மேன்டோஸ் புயல் ஏற்படுத்திய சேதம் என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களைத் தாக்கிய மேன்டோஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கடந்துசென்றிருக்கிறது. இந்தப் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசும் உள்ளாட்சி நிர்வாகங்களும் மேற்கொண்ட முயற்சிகள் என்ன?
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மேன்டோஸ் புயல் சனிக்கிழமை அதிகாலையில் மாமல்லபுரத்திற்கு அருகில் கரையைக் கடந்து, வலுவிழந்து மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் புயல் மாமல்லபுரத்திற்கு அருகில் கரையைக் கடந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும், புயல் கரையைக் கடந்தபோது சென்னை, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் 70 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசியது.
இந்த மேன்டோஸ் புயலின் காரணமாக சென்னை நகரத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்திருக்கின்றன. 150க்கும் மேற்பட்ட மரங்கள் தெரு விளக்குகளின் மீது சாய்ந்திருப்பதால், அந்தக் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, மின்சாரம் தாக்கியதிலும் சுவர் இடிந்து விழுந்ததிலும் குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளனர். 98 கால்நடைகளும் 181 வீடுகளும் இந்த மழையால் சேதமடைந்திருக்கின்றன.
இந்தப் புயல் வரப்போவதை ஒட்டி, மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், பெரும் எண்ணிக்கையிலான படகுகள் சேதத்திலிருந்து தப்பின. ஆனால், சென்னை காசிமேடு பகுதியில் நாட்டுப் படகுகள் வெகுவாகச் சேதமடைந்திருப்பதாக அங்குள்ள மீனவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் இந்தப் புயலில் சேதமடைந்திருப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவரும் நாட்டுப்படகு மற்றும் ஃபைபர் படகு சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான கேசவராமன் பிபிசியிடம் தெரிவித்தார். "எங்களில் நிறைய பேர் எங்கள் படகுகளை இழந்துவிட்டோம். அவற்றைச் சரிசெய்ய முடியாது. சில படகுகளை தண்ணீர் இழுத்துச் சென்றுவிட்டது. அவற்றின் சில பாகங்கள்தான் கிடைத்திருக்கின்றன" என்கிறார் கேசவராமன்.
காசிமேட்டைச் சேர்ந்த பக்தவத்சலம் ஐந்து லட்ச ரூபாய் கடன் வாங்கி இரண்டு படகுகளை வாங்கியிருக்கிறார். அவற்றுக்கு வட்டியைக் கட்டிவருகிறார். இப்போது அவை சேதமடைந்துவிட்ட நிலையில், வட்டியையும் முதலையும் எப்படிச் செலுத்துவது என்ற கவலையோடு, வேறு வேலை கிடைக்குமா என்ற கவலையும் அவரை ஆட்கொண்டிருக்கிறது.
"வேறு படகுகளில் வேலை கிடைக்க இன்னும் ஒரு மாதமாவது ஆகும். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்கிறார் பக்தவத்சலம்.
தமிழ்நாடு அரசு இழப்பீடு தரவேண்டுமெனக் கோரியிருக்கிறார்கள் மீனவர்கள். சேதமடைந்த படகுகள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இதேபோல, பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள கடைகளில் பெரும் பகுதி சேதமடைந்திருக்கிறது. பல கடைகளின் மேற்கூரைகள் புயல் காற்றில் பறந்துவிட்டன. சென்னை தியாகராய நகரில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 கார்கள் முழுமையாக நொறுங்கிவிட்டன.
நிவாரண ஏற்பாடுகள்
இந்த மேன்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தன. 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்தப் பணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டனர். புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த வெள்ளிக்கிழமையன்று ஐயாயிரம் பணியாளர்களும் ஒட்டுமொத்தமாக 25,000 பணியாளர்களும் புயல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் பிற இடங்களில் தேங்கும் தண்ணீரை அகற்றவும் 900 மோட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், சுரங்கப் பாதைகள் எதிலும் தண்ணீர் தேங்கவில்லை. பிற இடங்களில் தேங்கிய தண்ணீரை அகற்ற சுமார் 300 மோட்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
ஒட்டுமொத்தமாக 600 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை மதியத்திற்குள் பாதி இடங்களுக்கு மேல் மின் இணைப்புகள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன. மீதி இடங்களிலும் விரைவில் மின்சாரம் தரப்படுமென தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 355 துணை மின் நிலையங்களில், புயலால் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக 10 துணை மின் நிலையங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னையிலும் பல இடங்களிலும் மின்வாரியமே மின்சாரத்தை நிறுத்தி வைத்தது. புயல் கரையைக் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மின் வாரியத்தைச் சேர்ந்த 1,100 பணியாளர்களும் ஒட்டுமொத்தமாக 11,000 பணியாளர்களும் புயல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.
மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட இடங்களில் சனிக்கிழமை காலை முதல் படிப்படியாக மின்சாரம் தரப்பட்டுவருகிறது.
மழையின் காரணமாகவும் பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதாலும் சென்னையின் மின்தேவை வெகுவாகக் குறைந்தது. இரவு 9 மணியளவில் 2,200 மெகாவாட்டாக இருந்த மின் தேவை, நள்ளிரவு ஒரு மணியளவில் வெறும் 750 மெகாவாட்டாக குறைந்தது. சனிக்கிழமை மாலையில் மீண்டும் 2,178 மெகாவாட் என்ற அளவுக்கு மின்தேவை அதிகரித்துள்ளது.
கடந்த 121 ஆண்டுகளில் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையில் 12 புயல்கள் கடந்து சென்றுள்ளன. தற்போது கடந்து சென்ற மேன்டோஸ் புயல், 13வது புயலாகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்