You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"போதைப்பொருள் பயன்பாடு தெரிய வந்தால் உடனே சீல் வைக்கப்படும்" - காவல்துறையின் புத்தாண்டு கட்டுப்பாடுகள்
2023 புத்தாண்டு தினத்தன்று மெரினா கடற்கரையிலும் எலியட்ஸ் கடற்கரையிலும் சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டாட்டத்திற்காகக் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் தமிழக காவல்துறை வெளியிட்ட வழிகாட்டுதல் சில கட்டுப்பாடுகளைத் தெரிவித்திருந்தது. அதன்படி, நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதியில்லை. டிசம்பர் 31ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரைகளில் கூடும் பொதுமக்கள் கடலில் இறங்கி கொண்டாட அனுமதி இல்லை எனவும் தெரிவித்தது.
புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை வெப்பேரியில்காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் பேசியபோது, “புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் மகிழ்ச்சியுடன் அமைவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் துறை செய்துள்ளது.
பாதுகாப்புப் பணியில் 16,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 1,500 பேர் பணியாற்றுவார்கள். 368 இடங்களில் வாகன சோதனை நடைபெற உள்ளது.
மது போதையில் வாகனம் ஓட்டினாலோ, அதிவேகமாக வாகனங்களை ஓட்டினாலோ வழக்குப் பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். மது போதையில் விபத்து உயிரிழப்பை ஏற்படுத்தினால் கொலை வழக்குக்கு நிகரான பிரிவில் வழக்கு பதியப்படும். 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
இதுபோக, பைக் ரேஸ் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு 25 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 100 முக்கியக் கோவில்கள், தேவாலயங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதோடு, டிசம்பர்31 இரவு மற்றும் புத்தாண்டு தினத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு காவல்துறை புதன்கிழமை வெளியிட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் இரண்டு நாட்களும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். புத்தாண்டு தினத்தன்று பொதுமக்கள் தேவையில்லாமல் மோட்டார் வாகனங்களில் செல்ல வேண்டாம் என்று மாநில காவல்துறை உயரதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதோடு, புத்தாண்டு அன்று அதிகாலை 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்கள் நடைபெறக் கூடாது, டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்களும் மக்கள் கடலுக்குள் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் இந்த இரண்டு நாட்களிலும் கடலில் இறங்கவோ குளிக்கவோ அனுமதி கிடையாது. இதுபோக முக்கிய இடங்களில் டிரோன் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
“நட்சத்திர விடுதிகள், பண்ணை வீடுகளில் உரிய அனுமதி பெற்றே கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். கொண்டாட்டத்தின்போது போதைப் பொருள் பயன்படுத்துவது தெரிந்தால் நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட இடத்திற்கு சீல் வைக்கப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவற்றோடு, கொண்டாட்டங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் கொரோனா நெறிமுறைகளைக் கடைபிடித்தே நடைபெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 31ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரை மணற்பகுதிகளும் மூடப்படும். பொதுமக்கள் கடற்கரை ஓரங்களுக்குச் செல்ல அனுமதி இல்லை,” என்றும் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.
இதேபோல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு உட்பட பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுச்சேரியிலும் கடற்கரை பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்