You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"அரசு வலிமையற்றதாக இருக்கிறது": வெறுப்புணர்வு பிரசாரத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம்
அரசு வலிமையற்று இருப்பதாகவும், தன்னுடைய அதிகாரங்களை இழந்து தகுந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு திராணியற்று இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் காட்டமான கருத்துக்களை கூறியுள்ளது.
மும்பையில் நான்கு மாதங்களுக்கு முன்பு சாகல் இந்து சமாஜ் இயக்கத்தின் சார்பாக ஊர்வலம் நடத்தப்பட்டது. அந்த ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் லவ் ஜிகாத்திற்கு எதிராகவும், இந்து மத கருத்துக்களை வலியுறுத்தியும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. வலதுசாரி இயக்கமான சாகல் இந்து சமாஜ் இயக்கம், இந்த ஊர்வலத்தில் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக செயல்பட்டதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு குறித்த விசாரணையை இன்று உச்சநீதிமன்றம் மேற்கொண்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, நாட்டில் நடைபெற்று வரும் வெறுப்புணர்வு பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தவறியதற்காக அரசாங்கத்தை சாடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது சாகல் இந்து சமாஜ் தரப்பு வழக்கறிஞரிடம், “எந்தவொரு சூழ்நிலையிலும் கண்ணியத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியம். ஆனால் ஊர்வலத்தின்போது இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு திரும்பி செல்லுமாறு கூறி கோஷம் எழுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் தாங்கள் வாழ்வதற்காக இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் உங்களுடைய சகோதர, சகோதரிகள் என்பதை நினைவுக்கொள்ளுங்கள்” என்று நீதிபதி கே.எம்.ஜோசப் கூறினார்.
அதேபோல் வெறுப்புணர்வு பிரசாரம் பற்றி உச்சநீதிமன்றம் குறிப்பிடும்போது, “வெறுப்புணர்வு என்பது ஒரு தீய சுழல் போன்றது” என்று கூறியுள்ளது. இது போன்ற குற்றச்செயல்களை ஒழிப்பதற்கு அரசாங்கங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
”இதற்கு முந்தைய காலம் வரை நாட்டில் சகோதரத்துவத்தின் உணர்வு சிறப்பாகவே இருந்தது. ஆனால் தற்போது அதில் விரிசல்கள் விழ ஆரம்பித்திருக்கிறது என்பதை கூறுவதற்கு வருத்தமடைகிறேன்” என்று நீதிபதி நாகரத்னம் தெரிவித்தார்.
இந்து அமைப்புகளின் வெறுப்புணர்வு பிரசாரங்களை கட்டுப்படுத்த தவறிய மஹாராஷ்டிரா அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை ஏப்ரல்28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த அவமதிப்பு மனு தொடர்பாக மஹாராஷ்டிர அரசாங்கம் முன்னதாகவே பதில் அளிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அதேபோல் இந்த வெறுப்புணர்வு பிரசாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்கள் மீதும், இதில் சம்பந்தப்பட்டிருக்கும் நபர்கள் மீதும் மஹாராஷ்டிர மாநில அரசே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது மேலும் சில முக்கிய கருத்துக்களும் நீதிபதிகளின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. நாட்டில் நான்கு மாதங்களுக்குள் 50 ஊர்வலங்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், அதில் வெறுப்புணர்வு பிரசாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் கேரளத்தைச் சேர்ந்த ஷாஹின் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை செய்திகளின் அடிப்படையில் சேமித்ததாக அவர் குறிப்பிட்டார்.
”நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் சுயகட்டுபாடு இருக்க வேண்டும்” என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல் நாட்டின் அனைத்து குடிமக்களும், நாட்டின் பிற தரப்பு மக்களை கொச்சைப்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் உள்ள அரசியல்வாதிகளே தங்களது பிரச்னைகளுக்காக மதத்தை பயன்படுத்தி வருகின்றனர் என நீதிபதி ஜோசப் குறிப்பிட்டார்.
“நாட்டில் ஒருவர் அதிகாரமிக்க சக்திவாய்ந்த அரசியல்வாதியாய் உருவாவதற்கு, இதுபோன்ற விஷயங்கள் முக்கியமான விதிமுறைகளாய் கடைபிடிக்கப்பட்டு வருகிறது” என்று நீதிபதி ஜோசப் கூறுகிறார்.
”நாட்டில் வெறுப்புணர்வு பிரசாரங்கள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. அனைத்து பக்கங்களிலிருந்தும் இதுபோன்ற புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, நாட்டில் உள்ள அனைத்து தரப்பு இந்தியர்களின் மீதும் நீதிமன்றத்தால் அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க முடியுமா” என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
நீதிபதி நாகரத்னம் கூறும்போது, “நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம். பண்டிட் ஜவஹர்லால் நேரு, வாஜ்பாய் போன்ற பேச்சாளர்கள் நம்முடன் இருந்திருக்கிறார்கள். அவர்களின் உரைகளை கேட்பதற்கு கிராமப்புறங்களிலிருந்தும் மக்கள் கூடுவார்கள். ஆனால் இன்று பெரிதாக ஞானம் இல்லாதவர்கள்கூட மேடைகளில் உரையாற்றி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “அனைத்து தரப்பிலும் சிறு சிறு குழுக்களும் கூட இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகின்றன. அதற்காக இப்போது நாட்டில் உள்ள அனைத்து இந்தியர்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பதிவு செய்ய முடியுமா? போதிய அறிவும், கல்வியும் இல்லாதவர்களிடம்தான் சகிப்புதன்மையையும் காணமுடிவதில்லை. எத்தனை அவமதிப்பு வழக்குகளை நாங்கள் கையாள்வது? இதற்கு பதிலாக நாட்டின் மக்களாகிய அனைவரும் ஏன் இனி மற்றவர்களை கொச்சைப்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுக்கக்கூடாது? இதில் என்ன வகையான மகிழ்ச்சி நமக்கு கிடைக்கிறது” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
அதேபோல் ”அரசியலும் மதமும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட்டால் இதுபோன்ற பிரச்னைகள் முடிவுக்கு வரும்” என நீதிபதி ஜோசப் தெரிவித்துள்ளார்.
”இதுபோன்ற வெறுப்புணர்வு பிரசாரங்களை ஒழிப்பதற்கு மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்” உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்