You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடலூரில் காணாமல் போன பொறியியல் பட்டதாரியின் சடலம் குடிநீர் தொட்டியில் மீட்பு - என்ன நடந்தது?
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீர் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அப்பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பரிசோதனை செய்த போது அழுகிய நிலையில் காணாமல் போனவரின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசங்கரனின் மூத்த மகன் சரவணக்குமார் (வயது 37) இளங்கலை பொறியியல் பட்டம் முடித்துள்ளார். வேலையின்றி வீட்டிலிருந்த சரவணகுமார் கடந்த 9 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாயமான அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் தெரியவில்லை. இதனால் பயத்திலிருந்த குடும்பத்தினர் மாயமான சரவணக்குமாரைக் கண்டு பிடித்துத் தரக்கோரி கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமாரைத் தேடும் பணியைத் தொடங்கினர்.
நீர்த்தேக்க தொட்டிக்குள் சடலம்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் ஊராட்சி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் நேற்று மாலை ஊராட்சி பணியாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப் பார்த்தனர். அப்போது கடந்த 9 நாட்களுக்கு முன்பு மாயமான சரவணகுமார் உடல் அழுகிய நிலையில் பிணமாக நீர்த்தேக்கத் தொட்டிக்குள் மிதப்பது தெரிய வந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊராட்சிப் பணியாளர்கள் இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்துக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் தகவலறிந்து வந்த சிவசங்கரன் குடும்பத்தினர் மகன் உயிரிழந்த நிலையில் நீர்த்தேக்கத் தொட்டிக்குள் கிடப்பது அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
பின்னர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த சரவணகுமாரின் உடலைக் கைப்பற்றினர். இதையடுத்து அவரது உடலை உடற்கூராய்வு பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தகவலறிந்து குடிநீர்த் தொட்டி முன்பு கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள காவல் துறையினர், சரவணகுமார் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேசன் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
கிராம மக்களிடம் மருத்துவ குழுவினர் சோதனை
அழுகிய நிலையில் பிரேதம் கிடந்த குடிநீரைக் கடந்த சில நாட்களாக கிராம மக்கள் குடித்து வந்ததால் அவர்களிடையே நோய்த் தொற்று குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அக்கிராமத்தில் முகாமிட்டு குடிநீரைப் பயன்படுத்திய பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர். இது மட்டுமின்றி கிராம மக்கள் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரிடமும் மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
காவல் கண்காணிப்பாளர் என்ன சொல்கிறார்?
இதுகுறித்து விளக்கம் அறிய கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேசனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது பேசிய அவர், "குடும்பத்தினர் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நீர்த்தேக்க தொட்டியில் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் சடலம் இருந்த குடிநீரைக் கிராம மக்கள் பயன்படுத்தியதால் மூன்று மருத்துவக் குழுக்கள் பொதுமக்களிடம் பரிசோதனை செய்து வருகின்றனர். இதுவரை கிராம மக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் நலமுடன் இருக்கின்றனர்.
இந்த போதிலும் மருத்துவ குழுவினர் கிராம முழுவதும் பரிசோதனை செய்து வருகின்றனர். தற்போது மேல்நிலைத் நீர்தேக்க முழுவதும் சுற்றம் செய்யப்பட்டு, குடிநீர் பைப் லைன் அனைத்துமே சுற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அவரது உடல் தற்போது உடற்கூராய்வு பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணையில் விளக்கமான தகவல் தெரியவரும்," என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்