இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி - முதல் இன்னிங்கிஸில் வலுவான நிலையில் இந்தியா

பிரசுரிக்கப்பட்டது

ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் சதம் காரணமாக இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. அவர் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 186 ரன்களின் ஆட்டமிழந்தார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதில் நான்காவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாள் ஆட்டம் தொடங்கிய 6ஆவது ஓவரிலேயே ரவீந்திர ஜடேஜா அவுட்டானார்.

டாட் மர்ஃபி வீசிய பந்தை அவர் லாங் ஷாட் அடித்தபோது உஸ்மான் கவாஜா அதை கேட்ச் செய்து அவரை அவுட்டாக்கினார். 28 ரன்களில் ஜடேஜா வெளியேறியதைத் தொடர்ந்து ஸ்ரீகர் பரத் களமிறங்கினார்.

மேலும் விக்கெட் சரியாமல் இருவரும் பார்த்துகொண்டனர். இதனால், ரன்கள் எடுப்பது மந்தமானது. 102வது ஓவரில் 300 ரன்களை எட்டிய இந்திய அணி அடுத்த 50 ரன்களை எடுக்க 27 ஓவர்களை எடுத்துக்கொண்டது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் அவர்களை ரன் எடுக்க முடியாதபடி கட்டுப்படுத்த முடிந்ததே தவிர விக்கெட்களை வீழ்த்த முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இடையே ஒருவித அச்சுறுத்தல் உணர்வு தென்பட்டது.

சதம் அடித்த விராட் கோலி

அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீகர் பரத் 44 ரன்கள் எடுத்திருந்ததுபோது நேதன் லயன் பந்துவீச்சில் ஹேண்ட்ஸ்கோப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து விராட் கோலியுடன் அக்ஷர் பட்டேல் இணைந்தார். ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்ததும் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஸ்ரீகர் பரத் களமிறங்கினார். அவர் ஆட்டமிழந்த பின்னர், அக்ஷர் பட்டேல் களமிறங்கினார்.

இதனிடையே, "மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் வலி இருப்பதாகப் புகார் கூறினார். அவர் ஸ்கேன் எடுக்கச் சென்றுள்ளார், பிசிசிஐ மருத்துவக் குழு அவரைக் கண்காணித்து வருகிறது," என்று பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 138வது ஓவரின் 2வது பந்தில் 1 ரன் எடுத்து தனது டெஸ்ட் போட்டிகளில் தனது 28வது சதத்தை விராட் கோலி எட்டினார்.

கடைசியாக பங்களாதேஷுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்திருந்தார். 1200 நாட்களுகுப் பிறகு தற்போது மீண்டும் அவர் சதம் அடித்துள்ளார்.

அதே ஓவரில் இந்தியா 400 ரன்களை எட்டியது. சதம் அடித்ததை தொடர்ந்து விராட் கோலியின் ஆட்டம் வேகமெடுத்தது.

இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி

163ஆவது ஓவரின் 4வது பந்தில் பவுண்ட்ரி அடித்து 150 ரன்களை கடந்த விராட் கோலி 200 ரன்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு சரியாக ஜோடி அமையவில்லை.

ஆட்டத்தின் 172ஆவது ஓவரில் அக்ஸர் பட்டேல் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்த 3 ஓவர்களில் ரவிச்சந்தரன் அஸ்வின் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே உமேஷ் யாதவும் ஆட்டமிழந்தார்.

டாட் மர்ஃபி வீசிய 178வது ஓவரின் 5வது பந்தை மிட் விக்கெட்டில் விராட் கோலி அடிக்க அது லபுஷேனிடம் கேட்சாக மாறியது. இதையடுத்து 186 ரன்களில் விராட் கோலி வெளியேறினார்.

ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காரணமாக விளையாடாததால் 571 ரன்களுடன் இந்தியாவின் முதல் இன்னிங்கிஸ் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நேதன் லையன், டாட் மர்ஃபி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

91 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில் 2வது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா தொடங்கியது. 4வது நாள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்களை எடுத்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: