ஆண்களை விட பெண்கள் அதிகம் குளிராக உணர்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கோடேரு ஸ்ரவானி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஏசி வெப்பநிலை குறித்து வீடு அல்லது அலுவலகத்தில் ஆண்களும் பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை கவனித்திருப்பீர்கள்.
ஆண்கள் ஏசியில் குளிர்ச்சியை கொஞ்சம் அதிகப்படுத்தச் சொல்வார்கள், ஆனால் பெண்கள் ஏற்கெனவே குளிராக இருக்கிறது, குறைக்க வேண்டும் என்பார்கள்.
ஏன் இப்படி நடக்கிறது?
குளிரை தாங்கக்கூடிய திறன் பெண்களுக்கு குறைவாக இருக்கிறதா? அல்லது இது வெறும் பெண்களின் பார்வையா? அல்லது உண்மையிலேயே அப்படி இருக்கிறதா?
பெண்கள் ஏன் அதிகமாக குளிராக உணருகிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
'சயின்ஸ் டைரெக்ட்' (ScienceDirect) மற்றும் நேச்சர் ஆகிய முன்னணி ஆய்விதழ்களில் வெளியான ஆய்வறிக்கைகளின்படி, பெண்கள் ஆண்களை விட அதிக குளிராக உணருகின்றனர் என தெரியவந்துள்ளது. பெண்கள் ஆண்களை விட 2.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக (24-25 டிகிரி செல்சியஸ்) இருக்கும்போது சௌகரியமாக உணருகின்றனர்

பட மூலாதாரம், Getty Images
வளர்சிதை மாற்றமும் ஒரு காரணமா?
'தி கான்வர்சேஷனில்' வெளியான ஆய்வறிக்கையின்படி, பெண்களுக்கு வளர்சிதை மாற்ற விகிதம் ஆண்களை விட குறைவாக இருப்பதால், அவர்களின் உடல் வெப்பத்தை உற்பத்தி செய்வதற்கான திறன் குறைவாக இருக்கிறது.
இதனால், வெளிப்புற வெப்பநிலை குறையும்போது பெண்கள் குளிராக உணருகின்றனர் என்கிறது, 'தி கான்வர்சேஷன்'.
ஆண்களுக்கு வளர்சிதை மாற்ற விகிதம் அதிகமாக இருப்பதால், அதிகமான வெப்பநிலையில் அவர்கள் வெப்பமாகவும் அசௌகரியமாகவும் உணர்கின்றனர் என்கிறது, ScienceDirect.com.
இங்கிலாந்து வார்விக் மெடிக்கல் ஸ்கூல் பேராசிரியர் பால் தோர்னால்லி கூறுகையில், "பெண்கள் மற்றும் ஆண்களின் சராசரி வளர்சிதை மாற்ற விகிதம், உடலில் வெப்பம் உற்பத்தியாதல் ஆகியவைதான் சூழலில் ஏற்படும் மாற்றத்தைத் தாங்குவதற்கான திறனை தீர்மானிக்கிறது" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
சராசரி வளர்சிதை மாற்ற விகிதம் என்ன?
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்களின் உடல் பயன்படுத்தும் மொத்த ஆற்றல் தான் வளர்சிதை மாற்ற விகிதமாகும்.
அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் (basal metabolic rate (BMR) என்பது ஓய்வின்போது அடிப்படையான செயல்களை புரிவதற்கு நம் உடல் எரிக்கும் கலோரிகளின் அளவாகும் என்கிறார், அப்போலோ மருத்துவமனையின் விசிட்டிங் கன்சல்டன்ட் அறுவை சிகிச்சை நிபுணரான பி. சுஜீத் குமார்.
உடலுக்குத் தேவையான ஆற்றல், ஊட்டச்சத்து மற்றும் எடையை பராமரிப்பது ஆகியவற்றுக்கு வளர்சிதை மாற்ற விகிதம் முக்கியம்.
ஒவ்வொருவருக்கும் வளர்சிதை மாற்ற விகிதம் தனித்துவமானதாக இருக்கும். இது, ஒருவரின் மரபணுக்கள், வளர்சிதை மாற்றம் மற்றும் வாழ்வியலை பொறுத்து மாறுபடும்.
ஓய்வின்போது, இதயம், நுரையீரல், மூளை ஆகிய முக்கியமான உறுப்புகள் முறையாக செயல்படுவதற்கான ஆற்றலை மட்டுமே உடல் பயன்படுத்தும்.
வளர்சிதை மாற்ற விகிதம் மூன்று வழிகளில் அளவிடப்படுகிறது.
- ஆக்சிஜன் நுகர்வு
- கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம்
- உடல் வெப்பத்தை உற்பத்தி செய்தல்

பட மூலாதாரம், Getty Images
ஹார்மோன்களும் காரணமா?
பெண்களுக்கு அதிகளவில் உள்ள ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டிரான் போன்ற ஹார்மோன்களும் உடல் மற்றும் தோலின் வெப்பநிலையை பாதிக்கின்றன. அதுகுறித்து தி கான்வர்சேஷனில் வெளியான ஆய்வுக் கட்டுரை விளக்குகிறது.
மருத்துவர் சுஜீத் குமார் கூறுகையில், உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிக்கும்போது, ரத்த நாளங்கள் தளர்வடைவதால், சில பெண்கள் குளிராக உணருகின்றனர் என்றார்.
புரொஜெஸ்டிரான் தோலில் உள்ள ரத்த நாளங்களை சுருங்கச் செய்வதால், உள்ளுறுப்புகளை சூடாக வைத்துக்கொள்ள சில பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் குறையும். இதனாலும் சில பெண்கள் குளிராக உணர்வார்கள்.
மாதவிடாய் உட்பட மாதம் முழுவதும் இந்த ஹார்மோன்களின் சமநிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

பட மூலாதாரம், Getty Images
'தி கான்வர்சேஷனில்' வெளியாகியுள்ள கட்டுரையில், பெண்களின் பாதம், கைகள் மற்றும் காதுகள் ஆகியவற்றின் வெப்பநிலை ஆண்களைவிட மூன்று டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என்பதால், இந்த ஹார்மோன்கள் பெண்களை குளிராக உணரச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கருப்பையிலிருந்து கருமுட்டை (ovulation) வெளிப்படுவதற்கு ஒரு வாரம் கழித்து, புரொஜெஸ்டிரான் ஹார்மோன் அதிகரிக்கும். இதனால், மார்பகம் முதல் இடுப்புக்கு மேல் பகுதி வரையில் உள்ள முக்கிய உறுப்புகளின் வெப்பநிலை அதிகமாகும். அதாவது, பெண்கள் இந்த சமயங்களில் வெளிப்புற வெப்பநிலையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்" என்கிறார், மருத்துவர் பி. சுஜீத் குமார்.
எனினும், அவர் கூறுகையில், மெனோபாஸ் (மாதவிடாய் முற்றிலுமாக நின்ற பின்பு) நிலையில், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டிரான் ஹார்மோன்களின் தாக்கம் குறையும் என்றும் இதனால் பெண்கள் உடல் சூடான நிலையை அதிகம் உணர்வார்கள் என்றும் இதனால் எரிச்சல், கோபம் ஆகியவற்றுக்கு ஆட்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆண்கள் மற்றும் பெண்களின் உடலமைப்பில் வித்தியாசங்கள்
ஆண்களுக்கு தசை நிறை (muscle mass) அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் இருக்கும். இதனால், ஆண்களுக்கு அதிகளவில் வெப்பம் உற்பத்தியாகிறது என்கிறார் சுஜீத் குமார்.
தசை நிறை அதிகமாக இருக்கும்போது, அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகமாக இருக்கும்.
பெண்களை பொறுத்தவரை தசை நிறை குறைவாகவும் கொழுப்பு அதிகமாகவும் இருக்கும், இதனால் வெப்பம் உற்பத்தியாதல் குறைவாக இருக்கும் என்பதால், பெரும்பாலான பெண்கள் குளிர்வது போன்று உணர்கின்றனர் என்கிறார் அவர்.
உடல் வெப்பநிலை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வித்தியாசமாக இருக்கும். அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதமும் (பிஎம்ஆர் ) தசை நிறை அடிப்படையிலேயே அமையும்.

விலங்குகளுக்கு இப்படி இருக்குமா?
மருத்துவர் சுஜீத் குமார் கூறுகையில், உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்ய முடியாத (cold-blooded animals) விலங்குகள், வெப்பத்தை உற்பத்தி செய்யக்கூடிய விலங்குகள் (warm-blooded animals) என இருவகை விலங்குகள் உள்ளன என்றார்.
சிறிய விலங்குகள் அதிகமான வளர்சிதை மாற்ற விகிதத்தைக் கொண்டவை என்று அவர் கூறுகின்றனர்.
பெரிய விலங்குகளை விட சிறிய விலங்குகள் ஒரு யூனிட் உடல் நிறைக்கு அதிகளவிலான பிஎம்ஆர்-ஐ கொண்டுள்ளன.
பெரிய விலங்குகள் குறைவான வளர்சிதை மாற்ற விகிதத்தைக் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
எனினும், ஆண்களை விட பெண்கள் ஏன் அதிக குளிராக உணருகின்றனர் என்பது குறித்து மேலதிக ஆய்வுகள் தேவை என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
























