நேபாளத்தில் கடும் வெள்ளம் - 57 தமிழர்களின் நிலை என்ன?

பட மூலாதாரம், Reuters
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவலின்படி, 291 வெளிநாட்டினர் உட்பட 384 சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 57 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 57 பயணிகளும் கும்பகோணத்தை சேர்ந்த ஒரு சுற்றுலா நிறுவனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் திருச்சி, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
"மொத்தம் 57 பேர் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு 3 வாகனங்களில் சென்றுள்ளனர். அதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் உள்ளனர். அந்த 17 பேரின் போன்களும் ரீச் ஆகவில்லை. அவர்களைத் தொடர்புகொண்ட பிறகே எப்படி உள்ளார்கள் என்பது தெரியவரும்" என கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடி கூறியுள்ளார்.
"கடந்த 23-ஆம் தேதி 57 பேர் கிளம்பினர். நேபாளத்தில் 3 பேருந்துகளில் அவர்கள் சென்றுகொண்டிருந்தனர். இன்று காலை ஒரு பேருந்தில் சென்ற ரகு என்பவர் போன் செய்து, 'திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. எங்கள் பேருந்து தப்பித்துவிட்டது. ஆனால், பின்னால் வந்த பேருந்து பள்ளத்தில் உருண்டு விழுந்ததைப் பார்த்தோம்' என்றார். இன்னொரு வண்டியின் நிலையும் என்னவென்று தெரியவில்லை'' என சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் சாதிக் கூறினார்.

பட மூலாதாரம், Shaktimaya Tamang
எங்கு வெள்ளம்?
ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பிறகு 291 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் 93 நேபாள நாட்டினர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
தொடர்புகொள்ள முடியாத சுற்றுலாப் பயணிகளில் அதிக எண்ணிக்கையிலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்றும் அந்த வாரியம் தெரிவித்துள்ளது.
வடக்கு நேபாளத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் உயிரிழப்புகளும் பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த வெள்ளத்தில் பல கிராமங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதுடன், நீர்மின் அணை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

பட மூலாதாரம், RSS
தலைநகர் காத்மாண்டுவுக்கு வடக்கே, திபெத் எல்லையை ஒட்டியுள்ள ராசுவா பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்தப் பகுதி நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்துள்ளது.
திபெத்தில் இருந்து நேபாளத்துக்குப் பாயும் போதேகோசி ஆற்றில் பனி உருகியதால் இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். திரிசூலி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பல மாவட்டங்களில் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலைமை குறித்து பிபிசியிடம் பேசிய ராசுவா மாவட்ட தலைமை அதிகாரி நரேந்திர பரியார், பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். சேதத்தின் முழு அளவைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு இது மிகவும் ஆரம்பக்கட்டம் என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், RSS

பட மூலாதாரம், RSS
உதவி எண்கள் அறிவிப்பு
நேபாளம் பெரு வெள்ளத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களோ தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளலாம்.
அதன்படி அரசு அறிவித்துள்ள உதவி எண்கள்:
இந்தியாவிற்குள்: 1800 309 3793
வெளிநாடு: +91 80 6900 9900 ( Missed call )
தொடர்புக்கு: +91 80 6900 9901
தமிழ்நாடு இல்லம் புதுடெல்லி: 9289516712 ( கட்டுப்பாட்டு அறை )
பிரதமர் நரேந்திர மோதி இரங்கல்
"நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்திய மக்கள் நேபாளத்தில் உள்ள தங்களது சகோதர, சகோதரிகளுடன் தோள் கொடுத்து நிற்கிறார்கள். நேபாளத்திற்குத் தேவையான அனைத்து வகையான மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எங்களது குழுக்கள் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































