நேபாள வெள்ளத்தில் 160க்கும் மேற்பட்டோர் பலி - மீட்புப் பணியில் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள்

நேபாள வெள்ளத்தில் 160க்கும் மேற்பட்டோர் பலி - மீட்புப் பணியில் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள்

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த வெள்ளத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைப் பாதுகாப்பாக மீட்க வேண்டுமென அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் 49 பேரும், கும்பகோணத்தைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் 57 பேரும் நேபாளம் சென்றிருந்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலம் மற்றும் வான்வழித் தேடல், மீட்புப் பணிகளுக்காக நேபாள ராணுவம் 2,000 வீரர்களைக் களமிறக்கியுள்ளது. மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளான ராசுவா, நுவாகோட் மாவட்டங்களில் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ராஜாராம் பஸ்நெட் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதுவரை வெள்ளத்தில் சிக்கியிருந்த 97 பேரை ராணுவம் மீட்டுள்ளதாக அவர் கூறினார். அவர்களில் மூவர் திரிசூலி ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பாதையில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக நேபாள காவல் துறையும் ஆயுதப் படையும் தங்கள் அதிகாரிகளை களமிறக்கியுள்ளன.

மீட்புப் பணியில் நேபாள வீரர்கள்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, மீட்புப் பணியில் நேபாள வீரர்கள்

அதிகாரிகளின் கூற்றுப்படி, காணாமல் போன சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவில் இருந்து 100க்கும் மேற்பட்டோர், அமெரிக்காவில் இருந்து 54 பேர், ஆஸ்திரேலியாவில் இருந்து 34 பேர் மற்றும் பிரிட்டனில் இருந்து 33 பேர், அத்துடன் நேபாளத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும் அடங்குவர்.

போடேகோஷி ஆற்றின் கிளை நதியான லெந்தே ஆற்றின் ஓட்டத்தை ஒரு பனிச்சரிவு தடுத்ததால்தான் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. வெள்ளநீர் முதலில் சீன எல்லைக்கு அருகிலுள்ள ரசுவாகடி அருகே உள்ள திமுரே பகுதியை வந்தடைந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வந்த அந்தப் பகுதியின் பரந்த நிலப்பரப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. அதன் பிறகு வெள்ளநீர் வேகமாக கீழ்பகுதிகளுக்குப் பாய்ந்து சென்றது.

அந்தப் பகுதியில் மழை பெய்யும் என எந்த முன்னறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதனால், இந்தப் பேரிடர் குறித்து அப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை. வெள்ளம் தாக்கிய நேரத்தில் மக்கள் தங்களின் அன்றாட வேலைகளில் வழக்கம் போல் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு