தமிழ்நாட்டை உலுக்கிய 'பவரியா' கொள்ளையர்கள் யார்? பிடிபட்டது எப்படி? - பகிரும் முன்னாள் டிஜிபி

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

நாள்: ஜனவரி 9, 2005

நேரம்: அதிகாலை 2.30 மணி

இடம்: திருவள்ளூர் மாவட்டம், தானாகுளம் கிராமம்

கும்மிடிப்பூண்டி தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சுதர்சனத்தின் வீட்டுக்குள் கொள்ளைக் கும்பல் ஒன்று புகுந்தது.

முதல் மாடியில் உறங்கிக்கொண்டிருந்த சுதர்சனம் திடீர் சத்தம் கேட்டு கீழே இறங்கிவந்தார். அவரைக் கொள்ளைக் கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

சுதர்சனத்தின் வீட்டில் இருந்த சுமார் 60 சவரன் நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு கொள்ளைக் கும்பல் தப்பிவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் தான் 'பவரியா' என்ற பெயர் வெளியில் வந்தது.

முன்னதாக, 1996 ஆம் ஆண்டு வேலூரில் மருத்துவர் மோகன்குமார் கொலை, 2002 ஆம் ஆண்டு சேலம் காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராஜன் கொலை உள்பட 24 குற்ற வழக்குகளில் 'பவரியா' கும்பலுக்கு தொடர்பிருப்பதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

"கும்மிடிப்பூண்டியில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் கொல்லப்பட்ட பின்னரே இந்த வழக்கில் அன்றைய அ.தி.மு.க அரசு தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியது" எனக் கூறுகிறார் ஜாங்கிட்.

'பவரியா' கும்பலைப் பிடித்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஓய்வுபெற்ற டி.ஜி.பி எஸ்.ஆர்.ஜாங்கிட் (அன்றைய வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்தவர்).

சுதர்சனம் கொலை வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று(நவம்பர் 21) தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் 24ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாகவும் நீதிபதி அறிவித்தா. அதன்படி இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தண்டனை விவரம்

இந்த குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க ஐ.ஜி.ஜாங்கிட் தலைமையில் சிறப்பு தனிப்படை உருவாக்கப்பட்டு, பவாரியா கொள்ளையர்களான ஹரியானாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக், ஜெயில்தார் சிங் மற்றும் 3 பெண்கள் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புழல் சிறையில் இருந்த ஓம் பிரகாஷ் உள்ளி்ட்ட இரண்டு பேர் வழக்கு விசாரணையின்போது இறந்து விட்டனர். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மூன்று பெண்கள் தலை மறைவாகினர். எஞ்சியிருந்த 4 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையி்ல் இருந்து வந்தது.

சிறையில் இருந்த நான்கு பேரில் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் நவம்பர் 24ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். அதேபோல இந்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் உள்ள ஜெயில்தர் சிங் மீதான தீர்ப்பும் நவம்பர் 24ஆம் தேதி வெளியிடப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

அதன்படி மூன்று குற்றவாளிகளுக்கும் தண்டனை விவரங்கள் நீதிபதி ஆபிரஹாம் லிங்கனால் அறிவிக்கப்பட்டன.

முதல் குற்றவாளி ஜெகதீஷுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 396ன் கீழ் மூன்று ஆயுள் தண்டனைகளும் 30 ஆயிரம் அபராதமும் 397வது பிரிவின் கீழ் ஓர் ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இரண்டாவது குற்றவாளி ராகேஷைப் பொறுத்தவரை, இந்திய தண்டனைச் சட்டம் 397வது பிரிவின் கீழ் ஓர் ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் அபராதமும்; பிரிவு 397ஐ பிரிவு 109ன் சேர்த்து இரண்டு ஆயுள் தண்டனைகளும் 20 ஆயிரம் அபராதமும் 396வது பிரிவின் கீழ் ஓர் ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் அபராதமும்; ஆயுதச் சட்டத்தின் பிரிவு 27 (2)ன் கீழ் ஓர் ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மூன்றாவது குற்றவாளி அசோக்குக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 397ன் கீழ் ஓர் ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் 397வது பிரிவை, 109ன் இணைத்து 2 ஆயுள் தண்டனைகளும் 20 ஆயிரம் அபராதமும்; 396வது பிரிவின் கீழ் ஓர் ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஜெயில்தர் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் என்ன நடந்தது? விரிவாகத் தெரிந்துகொள்ள ஓய்வுபெற்ற டி.ஜி.பி. எஸ்.ஆர்.ஜாங்கிட்-ஐ பிபிசி சந்தித்தது.

திருவள்ளூரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கு 2009 ஆம் ஆண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

'சில வட மாநிலங்களை சேர்ந்த நபர்கள் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம்' எனக் கருதப்பட்டதால் அன்றைய வடக்கு மண்டல ஐ.ஜி ஜாங்கிட் தலைமையில் நான்கு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், கைரேகை நிபுணர்களைக் கொண்ட ஐந்து தனிப்படைகள் உருவாக்கப்பட்டன.

"கொள்ளைக் கும்பலைப் பிடிப்பதற்கான தனிப்படைக்கு என்னை தலைமை தாங்குமாறு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் அன்றைய டிஜிபியும் (அலெக்ஸாண்டர்) கூறினர்" என்கிறார், எஸ்.ஆர்.ஜாங்கிட்.

மோகன் குமார் வழக்கில் என்ன நடந்தது?

கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குழுவின் தலைவராக பார்க்கப்பட்ட ஹரியாணாவை சேர்ந்த ஓம் பிரகாஷ் என்கிற ஓமா, அவரின் தம்பி ஜெகதீஷ் உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

1995 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் வாலாஜாபாத்தில் மருத்துவர் மோகன்குமார் என்பவரின் வீட்டில் 'பவரியா' கொள்ளையர்கள் கொள்ளையடித்ததாக போலீஸார் கூறுகின்றனர்.

அப்போது மோகன்குமார் கொல்லப்பட்டார். அவரின் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் தாக்கியுள்ளனர். 'பவரியா கொள்ளையர்கள்' பிடிபட்ட பிறகு ராணிப்பேட்டையில் சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஓம் பிரகாஷ் பவரியா, லட்சுமணன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் சிறையில் ஓம் பிரகாஷ் பவரியா உயிரிழந்தார்.

வழக்கில் மீதமுள்ள நபர்களான ஜெகதீஷ், அசோக், ராகேஷ் உள்பட நான்கு பேருக்கு எதிரான சுதர்சனம் கொலை வழக்கை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

20 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் தமிழ்நாடு காவல்துறையின் வரலாற்றில் 'பவரியா' வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

'வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களைக் காவல்துறை நெருங்கியது எப்படி? கொள்ளை போன நகைகளை காவல்துறை மீட்டதா?' என்பதை அறிவதற்கு தனிப்படைக்குத் தலைமை தாங்கிய எஸ்.ஆர்.ஜாங்கிட்டை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது.

"ஆளும்கட்சி எம்.எல்.ஏ கொலையின்போது கிடைத்த தடயங்களை வைத்து சில வட மாநிலங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினோம். அப்போது தான், இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஒரு சம்பவத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தோம்".

"1995 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 24 குற்ற வழக்குகளில் பவரியா கும்பலுக்குத் தொடர்பிருந்தது. அவர்கள் மீது கர்நாடகாவில் மூன்று வழக்குகளும் ஆந்திராவில் நான்கு வழக்குகளும் பதிவாகியுள்ளன" எனக் கூறுகிறார்.

பவரியா கும்பல் தான் ஈடுபட்டது என்பதை எப்படி உறுதி செய்யப்பட்டது?

"இந்த வழக்கில் கைரேகைகள் முக்கிய பங்கு வகித்தன. அவர்களின் பின்னால் ஒரு பெரிய குழு இயங்கியது தெரியவந்தாலும் அவர்கள் யார் என்பதை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியவில்லை. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றோம்.

1997 ஆம் ஆண்டு ஆக்ரா சிறையில் ஒரு கைரேகை கிடைத்தது. அது தமிழ்நாட்டில் கிடைத்த ரேகையுடன் ஒத்துப்போனது. சில வட மாநிலங்களில் கொள்ளையில் ஈடுபடும் குழுக்கள் குறித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் விவரித்தனர். அது 'பவரியா'வுடன் ஒத்துப் போனது.

பிறகு குற்றத்தில் ஈடுபட்டவர்களைத் தேடினோம். முதலில் அசோக், லட்சுமணன் பவரியா என 13 பேரை கைது செய்தோம். மீரட்டில் தேடுதல் பணியின்போது நடந்த மோதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்".

இரண்டு பேரை என்கவுன்ட்டர் செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?

"உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் (2006 மார்ச் மாதம்) வழக்கில் முக்கிய நபர்களாக பார்க்கப்பட்ட சுரா பவரியா, விஜய் பவரியா ஆகியோரை கைது செய்வதற்குச் சென்றோம். அது இரவு நேரம். இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இரண்டு பேர் இறந்தனர். இதுதொடர்பாக மீரட்டில் நீதித்துறை விசாரணை நடந்தது".

தமிழ்நாட்டில் கொள்ளை முயற்சிகளை அரங்கேற்றியது எப்படி?

"சில வட மாநிலங்களில் இருந்து லாரிகளில் வருவார்கள். நெடுஞ்சாலைகளில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிடுவார்கள். அவர்கள் சத்தம் போட்டாலும் எளிதில் காவல்துறை வருவதற்கு வாய்ப்பில்லை. கொலை, கொள்ளையை நடத்திவிட்டு சொந்த ஊருக்குச் சென்றுவிடுவார்கள்".

குற்ற வழக்குகளில் முதலில் சேகரிக்கப்படும் தடயங்கள் மிக முக்கியமானவை. இந்த வழக்கில் கொள்ளையர்கள் சிக்குவதற்குக் காரணமாக இருந்த ஆதாரங்கள் என்ன?

"கொலை, கொள்ளை நடந்த இடங்களில் இரண்டு ஷூக்கள் கிடைத்தன. அதுபோன்ற ஷூவை தென்னிந்தியாவில் யாரும் அணிவதில்லை. அவர்கள் இந்தியில் பேசியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி குண்டு ஒன்று கிடைத்தது. அதைத் தமிழ்நாட்டில் யாரும் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள குற்றவாளிகளின் கைரேகைகளுடன் அவர்களின் ரேகைகள் ஒத்துப் போகவில்லை".

கொள்ளைக் கும்பலின் செயல்பாடுகள் குறித்து 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டிருந்தது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

"ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு வகையான செயல்முறைகள் இருக்கும். கொள்ளை முயற்சியில் பெண்களை பாலியல்ரீதியாக வன்கொடுமை செய்யும் வழக்கம் பவரியா குழுவிடம் இல்லை. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என யார் கையில் கிடைத்தாலும் தாக்குவார்கள். எதிர்ப்பே காட்டாவிட்டாலும் தாக்குவார்கள்".

பவரியா என்பவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்?

"பவரியா என்பது சாதியின் பெயர். ராஜஸ்தானில் ராஜ்புத் படையில் அவர்கள் அங்கம் வகித்தனர். மிகவும் வீரம் செறிந்தவர்களாக அவர்கள் பார்க்கப்பட்டனர்".

"கி.பி 1526 ஆம் ஆண்டில் ராஜ்புத்திரர்களுக்கும் முகலாயர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இவர்கள் தப்பிச் சென்றனர். இவர்களிடம் குதிரைகள் இல்லை என்பதால் நடந்தே ஆரவல்லி மலைக்கு சென்றனர். அப்போது உணவுக்கு வழிதேடும்போது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டனர். இவர்களில் சிலருக்கு அதுவே தொழிலாகிப் போனது".

தென்மாநிலங்களில் எந்த வீட்டுக்குச் சென்றாலும் தங்க நகை இருக்கும் என்பதால் தமிழ்நாட்டில் கொள்ளையடிப்பதற்காக பவரியா குழு வந்ததாக பேசப்பட்டது. அதில் உண்மை உள்ளதா?

"உண்மை தான். கைதானவர்களை விசாரிக்கும்போது, 'தமிழ்நாட்டில் எந்த வீட்டுக்குச் சென்றாலும் தங்கம் கிடைக்கும்' எனக் கூறினார்கள். நெடுஞ்சாலை ஓரங்களில் வசிக்கும் வசதி படைத்தவர்களின் வீடுகளில் தங்கம் அதிகமாக கிடைக்கும் என்பதால் அந்த வீடுகளை குறிவைத்துள்ளனர்."

வழக்கில் அடையாளம் காணப்பட்ட 30க்கும் மேற்பட்டோரில் சுமார் 20 பேர் தலைமறைவாகிவிட்டதாக நாளேடுகளில் செய்தி வெளியானது. அவர்களை பிடிப்பதில் தோல்வி ஏற்பட்டதாக பார்க்கலாமா?

"எங்களிடம் பெரிய பட்டியலே இருந்தது. அவர்களில் 15 பேரை கைது செய்தோம். மீதமுள்ள சுமார் 20 பேரை கைது செய்ய முடியவில்லை. அவர்களில் பலர் பல்வேறு வகைகளில் பவரியா குழுவுக்கு உதவி செய்துள்ளனர். அவர்களின் சொத்துகளை விற்பதில் உதவி செய்துள்ளனர்".

தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்னவாகின?

தமிழ்நாட்டில் கொள்ளையடித்த நகைகளை பறிமுதல் செய்ய முடிந்ததா? அதனை என்ன செய்தனர்?

"அதனை மீட்பது மிகவும் சிரமம். நகைகளை விற்று அந்தப் பணத்தில் லாரி வாங்கியுள்ளனர். அந்த லாரியைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் கொலை, கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். லாரிக்குள் ரகசிய அறை அமைத்து துப்பாக்கி, கோடரி போன்ற ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு அந்த லாரிகளைப் பறிமுதல் செய்தோம்".

தமிழ்நாட்டில் குற்றத்தில் ஈடுபட்டு வடமாநிலம் செல்லும் நபர்களைப் பிடிப்பதில் உள்ள சிக்கல்கள் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் காட்டப்பட்டிருக்கும். உங்கள் பணியில் எந்த மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்தது?

"மொழி என்பது முக்கிய சிக்கலாக இருந்தது. அங்குள்ளவர்களுக்கு இந்தி மட்டுமே தெரியும். அவர்களிடம் தகவல்களை பரிமாறிக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. எங்கள் குழுவில் உள்ள சிலருக்கு உருது தெரியும். அதை வைத்து அவர்கள் இந்தி மொழியைக் கையாண்டனர். உள்ளூர் மக்களிடம் நானே உரையாடலை மேற்கொண்டேன்"

"அடுத்து தென்னிந்தியாவை போன்று சாம்பார், இட்லி எல்லாம் கிடைக்காது. தந்தூரி ரொட்டி மட்டுமே கிடைக்கும். பருவநிலையும் கடினமாக இருந்தது. கொலைச் சம்பவம் நடந்த ஜனவரி மாதத்தில் அங்கே அதிக குளிர் நிலவும். இதனால் தனிப்படையை சேர்ந்தவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது".

கொள்ளையர்களைப் பிடிப்பதில் வடமாநிலங்களில் உள்ள நீதித்துறை, காவல்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்பு போதுமானதாக இருந்ததா?

"அவர்கள் ஒத்துழைப்பு கொடுத்ததால் எளிதில் கைது செய்ய முடிந்தது. பவரியா குழுவில் இரண்டு பெண்கள் இருந்தனர். இவர்களை ஹரியாணாவில் கைது செய்தோம். இதற்கு உதவி செய்வதற்காக பெண் காவலர்களை அங்குள்ள உயர் அதிகாரி அனுப்பி வைத்தார். கைது உத்தரவைப் பெறுவதற்கு உத்தரபிரதேச காவல்துறையும் ஒத்துழைப்பு கொடுத்தது".

இந்த வழக்கில் நிறைவு பெறாத விஷயங்கள் என ஏதேனும் உள்ளதா?

"இன்னும் சிலரைக் கைது செய்ய முடியவில்லை. அவர்களுக்குப் பெரிய பங்களிப்பு இல்லையென்றாலும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். கைதானவர்களில் சிலர் பிணை வாங்கிக் கொண்டு அப்படியே சென்றுவிட்டார்கள். அவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் டி.ஜி.பியிடம் கூறியிருந்தேன்".

கொள்ளையர்களைப் பிடித்த தனிப்படைக்கு அன்றைய அதிமுக அரசிடம் இருந்து பாராட்டுகள் கிடைத்ததா?

"எங்கள் கடமையை செய்தோம். அதில் எங்களைக் கௌரவிப்பதற்கு ஒன்றும் இல்லை".

கடந்த செப்டம்பர் மாதம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 'பவரியா' கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என நாளேடுகளில் செய்தி வெளியானதே?

"நானும் படித்தேன். ஆனால் அவர்கள் பவரியா குழுவாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. தற்போது அவர்களில் பலர் அரசுத் துறைகளில் பணியாற்றுகின்றனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து குழந்தைகளைப் படிக்க வைக்கின்றனர். முன்பைப்போல குற்றச் செயல்களில் ஈடுபடுவது இல்லை எனக் கேள்விப்பட்டேன்".

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு