You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனிதர்கள் பேசத் தொடங்கியது எப்படி? - வியக்க வைக்கும் தகவல்கள்
உங்கள் கழுத்தின் மேல் பகுதியில் இருக்கும் சிறிய எலும்பு, நாம் ஏன் பேசுகிறோம் என்பதை புரிந்துகொள்ள முக்கியமாக இருக்கக்கூடும். இது ஹையோயிட் எலும்பு என்று அழைக்கப்படுகிறது, இது நாக்கையும் குரல்வளையையும் தாங்குகிறது.
அனைத்து விலங்குகளிலும் இந்த எலும்பு காணப்படுகிறது. ஹவ்லர் மங்கி போன்ற உயிரினங்கள் இதன் மூலம் சத்தங்களை எழுப்புகிறது. ஆனால் மனிதர்களில் இது தனித்துவமான வடிவில் அமைந்து, மிகவும் சிக்கலான பேச்சை உருவாக்க உதவுகிறது.
புதைப்படிவங்களை பகுப்பாய்வு செய்ததன் மூலம், குறைந்தது 1,35,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களிடம் மொழியியல் திறன் இருந்தது என்று நம்மால் கூற முடியும் என்கிறார் சாவ் பௌலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மெர்சிடிஸ் ஒகுமுரா
பழமையான டி.என்.ஏ.க்களை ஆய்வு செய்வதும் விஞ்ஞானிகளுக்கு நம்முடைய பேச்சு குறித்த கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளது. FOXP2 ஜீன் மொழியின் பரிணாமத்துடன் தொடர்புடையது. இது ஆரம்பகால வளர்ச்சியடைந்த மனிதர்களிலும், அவர்களின் முன்னோர்களான நியாண்டர்தால்களிலும் காணப்படுகிறது.
"விலங்கினங்கள், பறவையினங்கள் மற்றும் மீன்கள் உட்பட முதுகெலும்பு உள்ள பெரும்பான்மையானவற்றில் இது காணப்படுகிறது." என்று குறிப்பிடுகிறார் மெர்சிடிஸ் ஒகுமுரா.
மனிதர்களில் FOXP2 ஜீனில் ஒரு குறிப்பிட்ட மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இது மூளையில் தொடர்பு மையங்களை கட்டுப்படுத்துகிறது.
"விலங்கினங்களில் காணப்படாத, உடல் அமைப்பு மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றின் ஒரு தனிப்பட்ட கலவை மனிதர்களிடம் உள்ளது. இதுவே மனித மொழி இவ்வளவு நுணுக்கமானதாக இருப்பதற்கான காரணம் போல தெரிகிறது." என்கிறார் லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டயான் நெல்சன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு