You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்களை அதிகம் பாதிக்கும் பித்தப்பை கற்கள் உருவாவது எப்படி? அறிகுறி, சிகிச்சை உள்பட 14 முக்கிய விஷயங்கள்
- எழுதியவர், மருத்துவர் ஹிமானி
- பதவி, கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர், பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
"எனக்கு திடீரென வயிற்றின் வலது புறத்தில் கடுமையான வலி ஏற்பட்டது. நான் அதை வாயுத்தொல்லை என நினைத்தேன். மருந்துகள் எடுத்துக் கொண்ட பிறகும் அந்த வலி நீங்கவில்லை. இறுதியாக பரிசோதனை செய்து பார்த்தபோது தான் எனக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவந்தது"
பலரும் இதுபோன்ற அனுபவங்களைப் பகிர்கின்றனர்.
பித்தப்பை கற்கள் என்பது உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட இரைப்பை குடல் நோயாக இருக்கிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பலருக்கும் பல ஆண்டுகளுக்கு அதன் அறிகுறிகளே இருக்காது. ஆனால் சிலருக்கு அது கடுமையான வலி, தொற்று, மஞ்சல் காமாலை மற்றும் கணைய அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு முறையாக சிகிச்சையளிக்கப்பட்டால் இந்தப் பிரச்னையிலிருந்து முழுமையாக குணமடைய முடியும்.
1. பித்தப்பை என்றால் என்ன?
பித்தப்பை என்பது கல்லீரலுக்குக் கீழே இருக்கும் பை போன்ற உறுப்பு ஆகும். அது 7 முதல் 10 செமீ நீளம் வரை இருக்கும்.
கல்லீரல் தினசரி உற்பத்தி செய்யும் பித்த நீரை தற்காலிகமாக சேமித்து வைப்பது அதன் முதன்மையான பணி.
கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளைச் சாப்பிடுகிற போது பித்தநீர் சிறு குடலில் வெளியேறி கொழுப்புச் சத்து செரிமானமாக உதவுகிறது.
2. பித்தப்பை கற்கள் எப்படி உருவாகின்றன?
பித்தப்பை நீரில் மூன்று முக்கிய பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
- கொலஸ்ட்ரால்
- பித்த உப்புகள்
- பைலிரூபின்
இந்த மூன்று பொருட்களுக்கும் இடையேயான சமநிலை தடைபடுகிற போது சிறிய படிகங்கள் உருவாகின்றன. காலப்போக்கில் அவை பெரிதாகி கற்களாக மாறுகின்றன.
கற்கள் உருவாவதற்கு முதன்மையான காரணங்கள்
- பித்த நீரில் அதிக அளவில் கொலஸ்ட்ரால்
- பித்தப்பையை முழுமையாகக் காலி செய்ய இயலாமை
- பைலிரூபின் அதிகப்படியான உற்பத்தி
- பித்தப்பையில் தொற்று அல்லது வீக்கம்
3. பித்தப்பை கற்கள் எத்தனை வகைப்படும்?
1. கொலஸ்ட்ரால் கற்கள்
மிகவும் பொதுவான இந்த வகை கற்கள் தான் 80% சந்தர்ப்பங்களில் உருவாகின்றன.
2. நிறமி கற்கள்
பிலிரூபின் அதிக அளவில் இருக்கிறபோது அவை ஏற்படுகின்றன. கல்லீரல் நோய்களிலும் சில ரத்தம் சார்ந்த நோய்களிலும் இவை பொதுவாக உருவாகின்றன.
3. கலவை கற்கள்
கொலஸ்ட்ரால், கால்சியம் மற்றும் பிலிரூபின் ஆகியவற்றின் கலவையால் கற்கள் உருவாகின்றன.
4. அதிக ஆபத்தில் உள்ளவர்கள் யார்?
மருத்துவர்கள் ஐந்து எஃப் (F) சூத்திரத்தை வைத்து நினைவில் கொள்கின்றனர்.
- ஃபீமேல் (Female) - பெண்கள்
- நாற்பது (Forty) - 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.
- கொழுப்பு (Fat) - அதிக உடல் எடை
- ஃபெர்டைல் (Fertile) - கருவுறும் திறன் கொண்ட பெண்
- ஃபேர் (Fair) - மேற்கத்திய நாடுகளில் உள்ள வெள்ளையர்
இதில் பல ஆபத்துக் காரணிகள் இந்தியர்களுக்கும் பொருந்தும்
5. இதர ஆபத்து காரணிகள் என்ன?
- உடல் பருமன்
- நீரழிவு நோய்
- அதிக கொலஸ்ட்ரால்
- பிரசவம்
- ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மருந்துகள்
- குடும்ப வரலாறு
- நீண்ட நேரம் விரதம் இருத்தல்
- துரிதமான எடை இழப்பு
- அதிக கொழுப்புள்ள உணவுமுறை
- குறைந்த நார்ச்சத்து கொண்ட உணவுமுறை
- கல்லீரல் நோய்கள்
- ஹீமோலிடிக் இரத்த சோகை
- முதுமை
இந்தியாவில் பித்தப்பை கற்கள் அதிகரித்து வரும் சுகாதாரப் பிரச்னையாக மாறி வருகின்றன. மக்கள்தொகையில் 5 - 15% பேர் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது பித்தப்பை கற்களால் பாதிக்கப்படுவார்கள்.
இது ஆண்களைவிடவும் பெண்களிடத்தில் 2 - 3 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. 40 வயதுக்குப் பிறகு இந்த ஆபத்து அதிகரிக்கிறது.
உடல் பருமன் அதிகரிப்பு, உடற்பயிற்சி குறைவது மற்றும் அதிகப்படியான துரித உணவுகளின் நுகர்வு போன்ற காரணங்களால் இளைஞர்கள் மத்தியிலும் இந்தப் பிரச்னை காணப்படுகிறது.
6. பித்தப்பை கற்கள் - அறிகுறிகள் என்ன?
பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் இல்லாத நிலையில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின்போது தற்செயலாகக் கண்டறியப்படுகிறது.
அறிகுறிகள் எப்போது தோன்றும்?
- வயிற்றின் வலது பக்கத்தில் கடுமையான வலி (பித்தநீர்க் குழாய் வலி)
- தோள்பட்டை அல்லது முதுகிற்குப் பரவும் வலி
- கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வலி
- குமட்டல்
- வாந்தி
- அஜீரணம்
- வயிற்று உப்புசம்
- வாயுத் தொல்லை
ஆபத்தான அறிகுறிகள்
உங்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் நிச்சயம் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்
- காய்ச்சல்
- நடுக்கம்
- மஞ்சள் காமாலை
- கண்கள் மஞ்சள் நிறமாதல்
- அடர் நிற சிறுநீர்
- வெள்ளை நிற மலம்
- கடுமையான வயிறு வலி
- விடாத வாந்தி
7. நோய் கண்டறியும் பரிசோதனைகள் என்ன?
- அல்ட்ராசவுண்ட்: இது மிகவும் எளிதான, குறைந்த செலவுடைய மற்றும் மிகத் துல்லியமான பரிசோதனையாகும்.
- ரத்தப் பரிசோதனைகள்: CBC, கல்லீரல் செயல்பாடு பரிசோதனைகள் – சீரம் பிலிரூபின், கல்லீரல் என்சைம்கள்
- எம்.ஆர்.சி.பி.
- பித்த நாளத்தில் கற்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் போது சிடி ஸ்கேன்
- ஈ.ஆர்.சி.பி என்பது கற்களைக் கண்டறிய மட்டுமல்லாமல், சில சிறப்புச் சூழல்களில் அவற்றை அகற்றவும் பயன்படுத்தப்படுகிறது.
8. தற்போதுள்ள சிகிச்சைகள் என்ன?
- அறிகுறிகள் இல்லாத சிறுநீரகக் கற்கள் உள்ள பெரும்பாலானோருக்கு எந்தவொரு சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.
- மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பது போதுமானது.
- அறிகுறிகள் நீடித்தால் மற்றும் வலி மீண்டும் ஏற்பட்டால், அறுவை சிகிச்சையே சிறந்த தீர்வாகும்.
- லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அகற்றுதல் - இது தற்போது உலகளவில் உள்ள ஒரு நிலையான சிகிச்சை முறையாகும். இது லேப்ராஸ்கோபிக் கோலிசிஸ்டெக்டமி என்று அழைக்கப்படுகிறது.
லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் நன்மைகள்
- சிறு காயங்கள்
- குறைவான வலி
- குறைவான ரத்தப்போக்கு
- விரைவில் குணமடைதல்
- 1-2 நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புதல்
- விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்புதல்
9. அவசர அறுவை சிகிச்சை எப்போது தேவைப்படுகிறது?
- கடுமையான பித்தப்பை அழற்சி
- பித்தப்பை வெடிக்கும் அபாயம்
- பித்த நாள அடைப்பு
- கணைய அழற்சி
- தொற்று
மருந்து மூலம் கற்களைக் கரைக்க முடியுமா?
சில சிறப்புச் சூழ்நிலைகளில் மருந்துகளைப் பயன்படுத்தலாம். ஆனால், அவை அனைவருக்கும் பலனளிப்பதில்லை. சிறிய கொலஸ்ட்ரால் கற்கள் இருப்பவர்களுக்கு மருந்துகள் உதவியாக இருக்கலாம்.
இவற்றிற்குச் சிகிச்சை அளிக்க மாதங்களோ அல்லது ஆண்டுகளோ ஆகலாம், ஆனால், கற்கள் மீண்டும் தோன்றுவதற்கான ஆபத்து அதிகம். எனவே, அறுவை சிகிச்சையே நிரந்தரத் தீர்வாகக் கருதப்படுகிறது.
10. பித்தப்பையை அகற்றுவது ஆபத்தானதா?
இது தான் பலரும் அஞ்சும் கேள்வியாக உள்ளது
பித்தப்பை அகற்றப்பட்ட பிறகும், கல்லீரல் தொடர்ந்து பித்தநீரை உற்பத்தி செய்கிறது, அது நேரடியாக சிறுகுடலுக்குச் செல்கிறது.
எனவே, பலரால் முற்றிலும் இயல்பான வாழ்க்கையை வாழ முடிகிறது.
11. சிகிச்சை தாமதமானால் என்ன நடக்கும்?
- கடுமையான பித்தப்பை அழற்சி
- பித்தப்பை சீழ் தேக்கம்
- பித்தப்பை திசு அழுகல்
- பித்தப்பையில் துளை
- தடைசார் மஞ்சள் காமாலை
- பித்த நாள அழற்சி
- கடுமையான கணைய அழற்சி
- குடல் அடைப்பு
- பித்தப்பை புற்றுநோய் வருவதற்கான அரிதான ஆபத்தும் உள்ளது
12. தடுப்பது சாத்தியமா?
- 100% தடுப்பு சாத்தியமில்லை என்றாலும், ஆபத்தை கணிசமாகக் குறைக்க முடியும்.
- ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரியுங்கள்.
- உடல் பருமன் குறைக்கப்பட வேண்டும். ஆனால், உடல் எடை குறைப்பு திடீரென்று நிகழக்கூடாது.
- மாதத்திற்கு 2 முதல் 4 கிலோவிற்கும் அதிகமாகக் குறைக்கக்கூடிய தீவிர உணவுக் கட்டுப்பாட்டு முறைகளைத் தவிர்க்க வேண்டும்.
- உடற்பயிற்சி - தினமும் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
- சீரான உணவு - பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்.
- குறைக்க வேண்டியவை - துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக நெய் அல்லது வெண்ணெய் கொண்டவை, டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகள்.
- போதுமான அளவு தண்ணீர் - தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
- நீரிழிவு கட்டுப்பாடு - நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருந்தால், ஆபத்து குறைகிறது.
13. மக்களிடையே நிலவும் கட்டுக்கதைகளும் உண்மையும் என்ன?
கட்டுக்கதை: கற்கள் இருந்தால் நீங்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்
உண்மை: அறிகுறிகள் இல்லாத பெரும்பாலானோருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது.
கட்டுக்கதை: ஆயுர்வேதம் அல்லது வீட்டு வைத்தியம் மூலம் கற்களை முழுமையாகக் கரைக்க முடியும்.
உண்மை: இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. சுயமாகச் சிகிச்சை செய்துகொள்வது ஆபத்தானது..
கட்டுக்கதை: பித்தப்பை அகற்றப்பட்டால், உங்களின் வாழ்நாள் முழுவதும் செரிமானம் சரியாக இருக்காது.
உண்மை: பெரும்பாலான மக்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
14. நீங்கள் எப்போது மருத்துவரைச் சந்திக்க வேண்டும்?
பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், நீங்கள் தாமதமின்றி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
- வயிற்றின் வலது பக்கத்தில் கடுமையான வலி
- 4 முதல் 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் வலி
- காய்ச்சல்
- வாந்தி
- மஞ்சள் காமாலை
- கண்கள் மஞ்சள் நிறமாதல்
- அடர் நிற சிறுநீர்
இக்காலத்தில் பித்தப்பைக் கற்கள் பொதுவாகக் காணப்பட்டாலும், அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. பெரும்பாலானோருக்கு எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை என்றாலும், சிலருக்கு இது கடுமையான வலி, தொற்று, மஞ்சள் காமாலை மற்றும் கணைய அழற்சி போன்ற தீவிர பாதிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமச்சீரான உணவு, சரியான உடல் எடை மற்றும் சீரான உடற்பயிற்சி ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்னைக்கான ஆபத்தை ஓரளவுக்குக் குறைக்கலாம்.
வயிற்றின் மேல் வலது பகுதியில் அடிக்கடி வலி ஏற்பட்டால், சுயமாகச் சிகிச்சை செய்துகொள்வதற்குப் பதிலாக, மருத்துவரை அணுகி அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது. இப்பிரச்னைக்கு உள்ள பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் நிரந்தரமான சிகிச்சை நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் கிடைக்கிறது.
சரியான நேரத்தில் கண்டறிதல், முறையான சிகிச்சை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை தான் பித்தப்பைக் கற்களிலிருந்து பாதுகாப்பதற்கான முக்கிய ஆயுதங்களாகும்.
(குறிப்பு: கட்டுரையாளர் ஒரு மருத்துவர். மருத்துவ நடைமுறைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். உடல்நலம் தொடர்பான எந்தவொரு முடிவையும் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே எடுக்க வேண்டும்.)
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு