You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா உலகில் வலிமை பெற 'ஸ்க்ரூ' உதவியது எப்படி?
சில நேரங்களில் ஒரு நாட்டின் வலிமையை நிரூபிப்பது மிகச் சிறிய, சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரை, அந்த வலிமையை வெளிப்படுத்தியது 60 டிகிரி கோணத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு ஸ்க்ரூ.
இந்தக் கதை 1920-களின் தொடக்கத்தில் ஆரம்பமாகிறது. அப்போது தரநிலைகள் தொடர்பாக உலகம் முழுவதும் பெரும் குழப்பம் நிலவியது. இன்றைய பார்வையில் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு பல விஷயங்களில் ஒரே மாதிரியான விதிமுறைகள் இல்லை.
ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி விதிகள் இருந்தன. அமெரிக்காவில்கூட ஒரே நாடாக இருந்தபோதிலும், ஒவ்வொரு மாகாணமும் தனித்தனி நடைமுறைகளைப் பின்பற்றியது. உதாரணமாக, நியூயார்க் நகரில் பச்சை நிற போக்குவரத்து விளக்கு "நிறுத்து" என்பதைக் குறித்தால், பஃபலோ நகரில் அதே பச்சை விளக்கு "செல்" என்பதைக் குறித்தது.
"இன்று நாம் அனைவரும் சிவப்பு விளக்கில் நிற்கிறோம்; பச்சை விளக்கு எரியும்போது செல்கிறோம். அவை இவ்வளவு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதால், அவற்றை நாம் தரநிலைகள் என்றே நினைப்பதில்லை," என்று பிரபலமான '99% இன்விசிபிள் பாட்காஸ்டின் தயாரிப்பாளர் ரோமன் மார்ஸ் குறிப்பிடுகிறார்.
இந்தக் குழப்பத்தைச் சீர்செய்தவர் ஹெர்பர்ட் ஹூவர். பின்னர் பெரும் பொருளாதார மந்தநிலையின் காலத்தில் அமெரிக்க அதிபராக இருந்ததற்காக விமர்சிக்கப்பட்டாலும், அதற்கு முன்பு அவர் அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளராகப் பணியாற்றினார்.
அந்தப் பொறுப்பில் இருந்ததால், இந்தப் பிரச்னையைத் தீர்க்க மிகவும் பொருத்தமான நபராக அவர் கருதப்பட்டார்.
சரியான அமைப்புகளும், ஒழுங்குபடுத்தப்பட்ட உற்பத்தி முறைகளும் இருந்தால் அனைவரும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையுடன் ஹூவர் செயல்பட்டார். இதன் காரணமாக, சாலைகளில் பயன்படுத்தப்படும் கற்கள் முதல் கோப்பைகள் மற்றும் கண்ணாடிக் குவளைகள் வரை பல்வேறு பொருட்களுக்கு ஒரே மாதிரியான தரநிலைகளை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
பொருளாதாரம் சீராக இயங்குவதற்கு செயல்திறன் மிகவும் முக்கியம் என்று ஹூவர் நம்பினார். அந்த செயல்திறன், பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் அன்றாடப் பொருட்களிலிருந்தே தொடங்குகிறது என்றும் அவர் கருதினார்.
உதாரணமாக, தெருக்களில் பயன்படுத்தப்படும் நடைபாதைக் கற்களுக்கு 65 வெவ்வேறு அளவுகள் இருப்பதற்குப் பதிலாக 11 அளவுகள் மட்டுமே இருந்தால், சேதமடைந்த ஒரு கல்லை மாற்றுவது மிகவும் எளிதாகிவிடும்.
கிடங்கிற்குச் சென்று அதே அளவிலான மற்றொரு கல்லை எடுத்துப் பொருத்தினால் போதும். ஏனெனில், எப்போதும் அதற்குப் பொருந்தக்கூடிய மாற்றுப் பொருட்கள் கிடைக்கும்.
இவ்வாறு, ஒவ்வொரு பொருளாக ஹூவர் அந்தக் குழப்பத்தை குறைக்கத் தொடங்கினார்.
மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் படுக்கை விரிப்புகள், படுக்கை ஸ்பிரிங்கள், வாகனங்களின் பிரேக் லைனிங்கள், டயர்கள் என அனைத்தும் அவரது தரநிலைப்படுத்தும் முயற்சிக்குள் வந்தன. அவசியமே இல்லை என்று தோன்றும் சில விஷயங்களைக்கூட அவர் ஆய்வு செய்தார்.
உதாரணமாக, சுடு நீர் நிரப்பப்பட்ட ஒரு கண்ணாடிக் குவளை விற்பனைக்கு ஏற்றதாகக் கருதப்பட வேண்டுமெனில் எத்தனை மணி நேரம் வெப்பத்தைத் தாங்க வேண்டும் (6 மணி நேரம்) என்பதையும், ஒரு டயரில் குறைந்தபட்சம் எவ்வளவு புதிய ரப்பர் இருக்க வேண்டும் (70 சதவீதம்) என்பதையும் அவர் நிர்ணயித்தார்.
"இந்த ஒப்பந்தங்களை எட்டுவதற்கு நீண்ட விவாதங்களும், சில நேரங்களில் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் லாபி குழுக்களுடன் நேரடியான மோதல்களும் நடந்தன," என்று ரோமன் மார்ஸ் கூறுகிறார்.
"ஆனால், உலகை உண்மையில் ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் ஒரு பொருளுக்கான தரநிலையை நிர்ணயிக்கும் போராட்டத்தைப் போல சவாலானதும், முக்கியத்துவம் வாய்ந்ததும் வேறு எதுவும் இல்லை. அது ஸ்க்ரூவின் திருகு இழை தொடர்பான போராட்டமாகும்," என அவர் குறிப்பிடுகிறார்.
'வெவ்வேறு மொழி'
மருத்துவமனைப் படுக்கை விரிப்புகளுக்கான தரநிலையை நிர்ணயிப்பது, அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் ஸ்க்ரூக்களுக்கான தரநிலையை நிர்ணயிப்பது அனைவரையும் பாதிக்கும்.
பிரச்னையின் மையத்தில் இருந்தது ஸ்க்ரூவின் திருகு இழை (thread). உருளை வடிவ உடலைச் சுற்றி சுழன்று செல்லும் இந்த இழை, அதனைப் பெறும் மற்றொரு பகுதியுடன் துல்லியமான கோணத்தில் பொருந்த வேண்டும்.
60 டிகிரி ஸ்க்ரூ என்பது, அதன் திருகு இழைகள் 60 டிகிரி கோணத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.
55 டிகிரி ஸ்க்ரூவும் 60 டிகிரி ஸ்க்ரூவும் வெறும் பார்வையில் ஒரே மாதிரியாகத் தோன்றலாம். ஆனால் அவற்றை பொருத்த முயன்றால்தான் வித்தியாசம் தெரியவரும்.
"அந்த வித்தியாசத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாது," என்கிறார் வரலாற்றாசிரியரும் ஹொவ் டு ஹைட் எம்பயர் நூலின் ஆசிரியருமான டேனியல் இம்மெர்வார். "ஆனால் அந்த வித்தியாசம்தான் எல்லாமும்."
நடைபாதைக் கற்கள் உற்பத்தியாளர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவது ஒப்பீட்டளவில் எளிதாக இருந்தது.
ஆனால் ஒரு நாடு முழுவதும் ஒரே வகை ஸ்க்ரூவைப் பயன்படுத்தச் செய்வது முற்றிலும் வேறு விஷயமாக இருந்தது. யாரும் மற்றொருவரின் தரநிலையை ஏற்கவும் தயாராக இல்லை.
இருப்பினும், 1924-ஆம் ஆண்டில் அமெரிக்கா வெற்றி பெற்றது. 60 டிகிரி திருகு இழையைக் கொண்ட ஸ்க்ரூவுக்கான தேசிய தரநிலையை அது உருவாக்கியது.
இதனால் மகிழ்ச்சியடைந்த ஹெர்பர்ட் ஹூவர், "இது ஒரு கனவு நனவான தருணம். நாம் ஒரு லட்சிய உலகை அடைந்துவிட்டோம்," என்று கூறினார்.
ஆனால் ஒரு பிரச்னை இருந்தது. ஸ்க்ரூக்களைப் பொறுத்தவரை, உலகின் பிற நாடுகள் இன்னும் வேறு வகைகளில் இருந்தன. அமெரிக்கா தன் நாட்டுக்குள் கட்டுப்படுத்தியிருந்த அந்தக் குழப்பம், உலகளவில் புதிய சிக்கல்களை உருவாக்கியது.
"20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது. ஆண்டுதோறும் அதிகமான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, ஒன்றோடொன்று பொருந்துகின்றனவா என்பது முக்கியமானதாக மாறியது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அவை ஒரே வகையில் இருந்தனவா என்பதே கேள்வியாக இருந்தது," என்று இம்மெர்வார் விளக்குகிறார்.
"அமெரிக்காவின் 60 டிகிரி ஸ்க்ரூக்கள் வெளிநாடுகளுக்குச் சென்றபோது, 55 டிகிரி அல்லது வேறு தரநிலைகளைப் பயன்படுத்தும் பொருட்களைச் சந்தித்தன."
"அது ஒருவருக்கொருவர் புரியாத மொழிகளைப் பேசுவதைப் போன்றது. 'நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை; நாம் ஒன்றாகச் செயல்பட முடியாது' என்று அவை கூறிக்கொள்வதைப் போல," என வரலாற்றாசிரியர் விளக்குகிறார்.
பொருட்கள் ஒரே மொழியில் பேசாததால் ஏற்பட்ட இந்தச் சிக்கல் விரைவில் மேலும் தீவிரமடைய இருந்தது.
ஒரு சூரிய அஸ்தமனமும் ஒரு சூரிய உதயமும்
இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, அமெரிக்க நிலப்பரப்பை நேரடியாகத் தாக்காத ஒரு போரில், தன் நாட்டை, நாசி ஜெர்மனிக்கு எதிராகப் போராடிய நாடுகளுக்கு உதவும்படி அதிபர் ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது.
20-ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான அரசியல் உவமைகளில் ஒன்றைப் பயன்படுத்தி அவர் இதை விளக்கினார்.
"என் அண்டை வீட்டில் தீப்பிடித்துள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள். என்னிடம் சில அடிகள் தூரத்தில் ஒரு தோட்டக் குழாய் இருக்கிறது. அந்தக் குழாயை உங்கள் தீ அணைப்பு தண்ணீர் குழாயுடன் இணைக்க முடிந்தால், தீயை அணைக்க நான் உதவ முடியும்."
ஆனால், வரலாற்றாசிரியர் டேனியல் இம்மெர்வார் சுட்டிக்காட்டுவது போல, அந்த உவமையில் ஒரு வெளிப்படையான சிக்கல் இருந்தது:
"உங்கள் குழாய், அண்டை வீட்டின் இணைப்புடன் பொருந்தாவிட்டால் என்ன செய்வது?"
அந்தச் சிறிய பிரச்னை, நேச நாடுகளின் போர்முயற்சியையே கிட்டத்தட்ட முடக்கிவிட்டது.
எந்த தரநிலையும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை. போரின் தொடக்கத்தில், நேச நாடுகள் ஒன்றுக்கொன்று பகிர்ந்து பயன்படுத்தக்கூடிய ஒரு துப்பாக்கி அல்லது ஒரு தோட்டாக்கூட இல்லை என்று கனடாவின் ஒரு அதிகாரி கூறியிருந்தார்.
அந்தக் காலத்தில் நேச நாடுகளுக்கான முக்கிய ஆயுத, வாகன மற்றும் தளவாட விநியோகஸ்தராக அமெரிக்கா மாறியது.
ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் போரிலும் குண்டுவீச்சிலும் சிக்கியிருந்த நிலையில், அமெரிக்க தொழிற்துறைகள் முழுத் திறனுடன் இயங்கி, அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து போர்க்களங்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பின.
ஆனால் அந்த விமானங்கள், டாங்கிகள், லாரிகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட இடத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் ஒன்று சேர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பழுது பார்க்கப்பட வேண்டியிருந்தது.
போர்க்களத்தில் படைகள் உயிர்வாழ தேவையான அனைத்தும், பல சமயங்களில் ஒன்றுக்கொன்று பொருந்தாத ஸ்க்ரூக்களையே சார்ந்திருந்தன.
இந்த பொருந்தாமை பிரச்னைகளைச் சமாளிப்பதற்காக, போர் காலம் முழுவதும் கூடுதல் ஸ்க்ரூக்கள், நட்டுகள் மற்றும் போல்டுகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப அமெரிக்கா சுமார் 60 கோடி அமெரிக்க டாலர்களை செலவிட்டது.
இறுதியில், 55 டிகிரி திருகு இழை தரநிலையைப் பயன்படுத்தி வந்த பிரிட்டன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது.
1943 முதல் 1945 வரை நடைபெற்ற அந்தக் கூட்டங்களின் பதிவுகளை ஆய்வு செய்த இம்மெர்வார், ஒரு பேரரசின் வீழ்ச்சியையும் மற்றொரு பேரரசின் எழுச்சியையும் குறிக்கும் ஒரு குறியீட்டு நிகழ்வை கண்டறிந்தார்.
முதல் கூட்டத்தில், பிரிட்டிஷ் தரப்பு இந்த விவகாரத்தைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தது.
இரண்டாவது கூட்டத்தில், தங்களது தொழிற்சாலைகளை மறுசீரமைப்பது குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியது.
மூன்றாவது கூட்டத்தில், "போர் காலத் தேவைக்காக மட்டுமே" தொழிற்சாலைகளை மாற்றியமைப்போம் என்றது.
நான்காவது கட்டத்தில், அவர்கள் முழுமையாக ஒப்புக்கொண்டனர். அமெரிக்க தரநிலையையே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.
மிகப் பெரிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துறையில், இனிமேல் விதிகளை நிர்ணயிப்பது பிரிட்டன் அல்ல, அமெரிக்காதான் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொண்டது.
இந்த முடிவு எடுக்கப்பட்டபோதும், லண்டன் நகரின் மீது நாசி ஜெர்மனியின் குண்டுகள் தொடர்ந்து விழுந்துக்கொண்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொருட்களின் ஐக்கிய நாடுகள் சபை
அமெரிக்காவும் பிரிட்டனும் ஒரே திருகு இழை கோணத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, உலகின் மற்ற நாடுகளும் படிப்படியாக அதையே பின்பற்றின.
தரநிலைகள் என்பது பனிப்பந்து போல செயல்படுகின்றன என்று இம்மெர்வார் விளக்குகிறார். பெரும்பாலானோர் ஒரு முறையைப் பின்பற்றத் தொடங்கியவுடன், அதற்கு எதிராகப் போராடுவதை விட அதனுடன் இணைந்துகொள்வதே நடைமுறைக்கு ஏற்றதாகிவிடுகிறது.
1947-ஆம் ஆண்டு, 25 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்து சர்வதேச தரநிர்ணய அமைப்பை உருவாக்கினர். இது பொருட்களுக்கான ஒரு வகையான "ஐக்கிய நாடுகள் சபை" போன்ற அமைப்பாக இருந்தது. அதன் பின்னர் உலகம் படிப்படியாக அமெரிக்காவின் தரநிலைகளுடன் தன்னை ஒத்திசைத்துக்கொள்ளத் தொடங்கியது.
இம்மெர்வாரின் விருப்பமான உதாரணம் "நிறுத்து" சாலை அடையாளப் பலகை ஆகும்.
டெட்ராய்ட்டைச் சேர்ந்த ஒரு காவல் அதிகாரி, சதுர வடிவிலான "நிறுத்து" பலகை மற்ற பலகைகளுடன் எளிதில் குழப்பமடைவதாகக் கருதினார். அதனால் அதன் மூலைகளை வெட்டி எண்கோண வடிவத்தை உருவாக்கினார்.
அந்த வடிவம் அமெரிக்காவில் பிரபலமானது. பின்னர் 1953-ஆம் ஆண்டு அது சர்வதேச தரநிலையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது அது மஞ்சள் நிற எண்கோண பலகையாக இருந்தது.
ஆனால் அதற்குப் பிறகு ஒரு ஆண்டிலேயே, அமெரிக்க வேதியியலாளர்கள் நீடித்த தன்மை கொண்ட பிரதிபலிப்பு சிவப்பு நிறத்தை உருவாக்கினர். மேலும், சிவப்பு நிறம் போக்குவரத்து விளக்குகளுடனும் சிறப்பாக பொருந்தும் என்று போக்குவரத்து நிபுணர்கள் கருதினர்.
இதையடுத்து, எந்தத் தயக்கமும் இன்றி அமெரிக்கா தனது "நிறுத்து" பலகையின் நிறத்தை மஞ்சளிலிருந்து சிவப்பாக மாற்றியது. இதனால் உலகின் மற்ற நாடுகளும் மீண்டும் தங்களது தரநிலைகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இம்மெர்வார் தனது ஆய்வு உதவியாளருடன் மேற்கொண்ட கணக்கீட்டின்படி, இன்று சிவப்பு நிற எண்கோண "நிறுத்து" பலகையைப் பயன்படுத்தும் நாடுகளில் உலக மக்கள்தொகையின் 91 சதவீதம் பேர் வாழ்கின்றனர். அதில் வட கொரியாவும் அடங்கும்.
ஆனால், தனக்குப் பொருத்தமில்லாத தரநிலைகளைப் பின்பற்றாமல் இருக்க வேண்டிய உரிமையை அமெரிக்கா தொடர்ந்து வைத்திருக்கிறது.
அதற்கான மிகத் தெளிவான உதாரணம் மெட்ரிக் முறை ஆகும்.
அமெரிக்கா தொழில்துறை வல்லரசாக உருவெடுக்கும் முன்பே பிரான்சில் உருவான இந்த அளவீட்டு முறையை, உலகின் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டன.
ஆனால் அமெரிக்கா மட்டும், மற்ற நாடுகளைப் போல அதில் இணைவது அவசியம் என்று கருதவில்லை.
அதனால்தான், உலகின் பெரும்பாலான நாடுகளில் கால்பந்து போட்டிகள் 100 மீட்டர் நீளமுள்ள ஃபிஃபா தரநிலை மைதானங்களில் நடைபெறுகின்றன. ஆனால் அமெரிக்காவில், 100 யார்டு நீளமுள்ள என்எஃப்எல் மைதானங்களே இன்னும் பயன்பாட்டில் உள்ளன.
ஒரு புதிய பேரரசு
இரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்கா உலகம் முழுவதும் ராணுவத் தளங்களையும் கொண்டிருந்தது. மேலும், போரால் பாதிக்கப்படாமல் இயங்கிக் கொண்டிருந்த சில தொழில்துறை பொருளாதாரங்களில் ஒன்றாகவும் அது இருந்தது.
அந்த நேரத்தில், பழைய பேரரசுகளின் வழிமுறையை அமெரிக்கா தேர்ந்தெடுத்திருக்கலாம். அதாவது ஆக்கிரமிப்புப் படைகள் போன்றவற்றின் மூலம் தனது செல்வாக்கை விரிவுபடுத்தியிருக்கலாம்.
ஆனால் அமெரிக்கா வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தது. அது திடீரென ஒழுக்க நெறி காரணமாக ஏற்பட்ட மாற்றமல்ல. அதைவிடச் சிறந்த ஒரு வழியை அது கண்டுபிடித்திருந்தது.
இம்மெர்வாரின் கூற்றுப்படி, பழைய வகை பேரரசை பராமரிப்பது தொடர்ச்சியான முயற்சியைக் கோரியது. படைகள், உள்ளூர் ஆளுநர்கள், கிளர்ச்சிகளை ஒடுக்க வேண்டிய அவசியம் ஆகியவை அதில் இருந்தன.
ஆனால் அமெரிக்காவின் புதிய அதிகாரம் வேறு விதமாக செயல்பட்டது.
"இது முற்றிலும் வலிமையோ அல்லது நிலப்பரப்போ இல்லாத அமைப்பு அல்ல. உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ராணுவத் தளங்கள் இன்னும் உள்ளன. ஆனால் ஒரு ஸ்க்ரூவின் திருகு இழை போன்ற தரநிலைகள் துப்பாக்கி முனையில் திணிக்கப்படுவதில்லை," என்று இம்மெர்வார் கூறுகிறார்.
நேரடியாக ஆட்சி செய்யாமல் ஒரு நாடு தனது செல்வாக்கை செலுத்துவது இதுவே முதல் முறை அல்ல.
வர்த்தகம், முதலீடு ஆகியவை காலனிகளைப் போலவே பயனுள்ள கருவிகளாக இருக்க முடியும் என்பதை பிரிட்டிஷ் ஏற்கெனவே நிரூபித்திருந்தது.
ஆனால் அமெரிக்கா அதற்கு மேலும் ஒரு புதிய அடுக்கைச் சேர்த்தது. உற்பத்தி, தொழில்நுட்பத் தரநிலைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றின் உலகளாவிய வலையமைப்பை உருவாக்கியது.
இதன் மூலம் உலகின் பல நாடுகள், அமெரிக்காவின் தொழில்நுட்பங்கள், உதிரிபாகங்கள் மற்றும் தரநிலைகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவானது.
இதனால் வலிமையின் பயன்பாடு முற்றிலும் மறைந்துவிடவில்லை. ஆனால் அதனுடன் சேர்ந்து, கண்களுக்குப் புலப்படாத பல புதிய வழிமுறைகளும் செயல்படத் தொடங்கின.
சில நேரங்களில் ஒரு நாட்டின் செல்வாக்கை நிலைநாட்டுவதற்கு அதன் கொடியை வேறு நாட்டின் நிலத்தில் நாட்ட வேண்டிய அவசியமே இருக்காது. ஏனெனில், அந்த நாட்டின் ஸ்க்ரூக்கள் ஏற்கெனவே உலகத்தை ஒன்றாகப் பிணைத்துவிட்டிருக்கும்.
இந்தக் கட்டுரை, பிபிசி ஸ்டுடியோஸ் மற்றும் 99% இன்விசிபிள் தயாரித்த "100 பொருட்களில் அமெரிக்காவின் வரலாறு" என்ற தொடரின் இரண்டாவது அத்தியாயத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு