ஏஐ கிறிஸ்துவுக்கு எதிரானது என சிலர் நம்புவது ஏன்? அது மனிதர்களை சாத்தானை வணங்கச் செய்யும் கருவியாக செயல்படுகிறதா?

பட மூலாதாரம், Fotograzia via Getty Images
- எழுதியவர், லெபோ டிசெக்கோ
- பதவி, க்ளோபல் ரிலிஜன் கரஸ்பாண்டண்ட், பிபிசி நியூஸ் வேர்ல்டு சர்விஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
"செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உலக அழிவின் காலகட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது."
இவை, மனிதகுலத்துக்கு வரவிருக்கும் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கும் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு நபரின் வார்த்தைகள் அல்ல.
அட்லாண்டாவைச் சேர்ந்த மிகவும் செல்வாக்கு மிக்க போதகர் பிலிப் அந்தோனி மிட்செல் கூறிய வார்த்தைகள் இவை. அவர் குறிப்பிடும் "உலக அழிவின் காலகட்டம்" என்பது உலகத்தின் முடிவைக் குறிக்கிறது.
மிட்செல் தனது கணிப்பை வெளியிட்டு ஓராண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில், இன்று டிக்டாக் மற்றும் பாட்காஸ்ட்கள் முதல் பதிப்புலகம் வரையிலான பல்வேறு தளங்களில் செயல்படும் பல முக்கிய கிறிஸ்தவப் பிரமுகர்களும், செயற்கை நுண்ணறிவு உலக அழிவுக்கு காரணியாக இருக்குமா என்பது குறித்து விவாதித்து வருகின்றனர்.
"உலக அழிவின் காலகட்டத்தில் ஏஐ ஒரு பகுதியாக இருக்க முடியுமா?" என்று மெகா சர்ச் போதகர் கிரெக் லாரி கேள்வெழுப்புகிறார்.
"அது மிகவும் சாத்தியம்."
இதற்கிடையில், போதகர் மைக் சிக்னோரெல்லி ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் பார்வையாளர்களை எச்சரிக்கையில், "ஆண்டிகிறிஸ்ட் (கிறிஸ்துவுக்கு எதிரான சக்தி) உருவாகும் விதத்தில் இது ஒரு முக்கியமான பகுதியாகும்" என்று கூறுகிறார்.
செயற்கை நுண்ணறிவை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பதை இந்தப் போதகர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், கடவுளுக்குப் பதிலாக தன்னை வணங்குமாறு மக்களை ஏமாற்றுவதற்கு சாத்தானின் பிரதிநிதியாகக் கருதப்படும், கிறிஸ்துவுக்கு எதிரான சக்தி, ஏஐ- ஐ பயன்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
கிறிஸ்தவத்தில், "உலக அழிவின் காலகட்டம்" என்பது பூமியின் இறுதி நாட்கள் தொடர்பான தீர்க்கதரிசனங்களைக் குறிக்கிறது. கிறிஸ்துவுக்கு எதிரான சக்தி (ஆண்டிகிறிஸ்ட் ), கடவுளின் எதிரியாகக் கருதப்படுகிறார். இயேசுவால் போரில் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பு அவர் அதிகாரத்தைக் கைப்பற்றுவார் என்று நம்பப்படுகிறது.
இந்தக் கருத்துகள் பைபிளின் இறுதி நூலான வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை பெரிதும் அடிப்படையாகக் கொண்டவை. இதில் "கடலில் இருந்து வரும் மிருகம்" உள்ளிட்ட தெளிவான மற்றும் அச்சமூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏழு தலைகளும் 10 கொம்புகளும் கொண்ட அந்த மிருகம், கிறிஸ்துவுக்கு எதிரான சக்தியைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது.
பல கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை உருவகமாகப் பார்க்கின்றனர். ஆரம்பகால கிறிஸ்தவ திருச்சபையை ரோமானியப் பேரரசு துன்புறுத்திய காலத்துடன் இது தொடர்புடையது என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால், மற்றவர்கள் இதை ஒரு தீர்க்கதரிசனமாகக் கருதுகின்றனர். அவர்களில் சிலர், ஏஐ தான் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் "இரண்டாவது மிருகம்" என்றும், மனிதகுலத்தை ஏமாற்றி கிறிஸ்துவுக்கு எதிரான சக்தியை வணங்கச் செய்யும் "பொய்யான தீர்க்கதரிசி" என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலர், ஏஐ-யே கிறிஸ்துவுக்கு எதிரான சக்தி என்று கூறுகின்றனர்.

பட மூலாதாரம், DeAgostini/Getty Images
ஏஐ உலகை மாற்றி வருகிறது என்பதில் சந்தேகமில்லை.
அதன் சக்தி மற்றும் திறன் குறித்து கவலைகளும் அதிகரித்து வருகின்றன.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னாள் ஆய்வாளர் ஜேக்கப் காக்ஸன், "எதிர்காலத்தில் நாம் அனைவரும் உயிரிழக்கக்கூடும்" என்று கூறியிருப்பது முதல், ஏஐ வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்காவிட்டால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் எச்சரித்து வருவது வரை பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ளன.
"பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படும் காலங்களில் உலக அழிவு குறித்த விவாதங்கள் அதிகரிக்கின்றன" என ஏஐ மற்றும் தொழில்நுட்பத்தின் நெறிமுறைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தும் செயின்ட் ஜான்ஸ் இறையியல் மற்றும் குருத்துவப் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் நோரீன் ஹெர்ஸ்ஃபெல்ட் கூறுகிறார்.
"சமூகத்தில் ஏற்படும் அழுத்தங்களைப் புரிந்துகொள்ளவும், அவை வெறுமனே தற்செயலாக நிகழ்பவை அல்ல என்றும், அவை கடவுளின் திட்டத்தின் ஒரு பகுதிதான் என்றும் உணரவும் இது மக்களுக்கு ஒரு வழியை வழங்குகிறது" என்று அவர் கூறுகிறார்.
ஏஐ வேலைவாய்ப்புகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை தொழிற்புரட்சியின் தாக்கத்துடன் ஒப்பிடும் ஹெர்ஸ்ஃபெல்ட், அதனுடன் அதிக அளவிலான நிச்சயமற்ற தன்மையும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
"நாம் வேகமாக மாற்றம் நிகழும் காலகட்டத்தில் வாழ்கிறோம். கணினி தொழில்நுட்பம் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை நாம் பார்க்கிறோம்" என்கிறார் அவர்.
"இந்தத் தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் என்றும், இது அனைத்தையும் மாற்றிவிடும் என்றும், அனைத்திலும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் நம்மிடம் கூறப்படுகிறது. இதுபோன்ற வேகமான மாற்றம் மக்களுக்கு மிகவும் கடினமானதாக உள்ளது" என்று அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், ஏஐயின் தாக்கத்தால் தங்களின் செயல்பாட்டுத் திறன் குறைந்து வருவதாகவும் ஒரு உணர்வு உள்ளது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நம்மில் பெரும்பாலானோரின் வாழ்க்கையில் ஏஐ ஒரு பகுதியாகிவிட்டது.
அதே நேரத்தில், "ஏஐ நம் அனைவரையும் அழித்துவிட 10-15 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது" என்று சிலிக்கான் வேலி எச்சரித்து வருகிறது.
"கடவுள் இன்னும் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்றும், இதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது என்றும், இது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது என்றும் மக்கள் உணர முடிந்தால், 'இந்த தருணத்தை நான் எப்படி எதிர்கொள்ள விரும்புகிறேன்? நான் என்ன செய்ய வேண்டும்? தீமையின் பக்கம் அல்லாமல் நன்மையின் பக்கம் என்னை எப்படி நிலைநிறுத்திக் கொள்வது?' என்று அவர்கள் கேட்க முடியும்."

பட மூலாதாரம், Daniel Boczarski/Getty Images
2022-ஆம் ஆண்டு பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வின் படி, அமெரிக்காவில் உள்ள மக்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேர் நாம் உலக அழிவின் காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று நம்புகின்றனர்.
கிறிஸ்தவர்களிடையே இந்த எண்ணிக்கை 47 சதவிகிதமாக அதிகரிக்கிறது.
இந்தப் போக்கு ஒவ்வொரு தசாப்தத்திலும் மீண்டும் மீண்டும் காணப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்தந்த காலகட்டத்தின் கவலைகள் கிறிஸ்துவுக்கு எதிரான சக்தி என்ற உருவத்தின் மீது பிரதிபலிக்கப்படுகின்றன.
"எனது பாட்டி, ஃபிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்டை கிறிஸ்துவுக்கு எதிரான சக்தி என்று கருதினார்" என்று வட கரோலினாவில் உள்ள எலான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெஃப்ரி சி. பக் கூறுகிறார்.
அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், பெரும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் பதவியேற்றார்.
அது பெரும் நிச்சயமற்ற தன்மையும் வறுமையும் நிலவிய காலகட்டமாக இருந்தது. அவர் முன்வைத்த 'நியூ டீல்' திட்டம் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது.
தனது பாட்டியின் பார்வை, "தற்போதைய நிகழ்வுகளை ஒரு குறிப்பிட்ட பைபிள் கதையுடன் பொருத்திப் பார்க்கும் முயற்சியின் பகுத்தறிவற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது" என்று ஜெஃப்ரி சி. பக் கூறுகிறார்.
அமெரிக்காவில் உலக அழிவு குறித்த பேச்சுகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தாலும், 1960-களில் அது அதிக கவனம் பெற்றது.
"அது சமூகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவிய காலகட்டமாக இருந்தது. இரண்டு அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரையும் சேர்த்துக் கணக்கிட்டால், மூன்று பேர். வெள்ளையர்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான கறுப்பின மக்களின் கோபம் காரணமாக நகரங்கள் தீப்பற்றி எரிந்தன.
போருக்கு எதிரான போராட்டங்கள் முதல் இளைஞர்களின் எதிர் கலாசாரம் வரை, அதற்கு முன்பு இல்லாத வகையில் குழந்தைகள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தத் தொடங்கினர்" என்று ஜெஃப்ரி சி. பக் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
'பயங்கரமான தொழில்நுட்பங்கள்'
1970-களில், 'த லேட் கிரேட் பிளானட் எர்த்' என்ற புத்தகம் பிரபலமடைந்தது. இந்தப் புத்தகம், உலக அழிவு குறித்த தீர்க்கதரிசனங்களை சமகால நிகழ்வுகள் மற்றும் உலக அரசியலுடன் நேரடியாக இணைத்துப் பேசுகிறது.
"அதன்பிறகு, ஒவ்வொரு சமூகக் கொந்தளிப்பும் அந்த உலக அழிவு குறித்த கருத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது" என்று பக் கூறுகிறார்.
பனிப்போரின் போது, சோவியத் ஒன்றியமும் கம்யூனிசமும் கிறிஸ்துவுக்கு எதிரான சக்தியாகக் கருதப்பட்டன. 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, சில கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை இஸ்லாம் கிறிஸ்துவுக்கு எதிரான சக்தியாகக் கருதப்பட்டது.
"எந்தக் காலகட்டத்தில் நீங்கள் வாழ்கிறீர்களோ, அந்தக் காலத்தின் அச்சங்கள், பொதுவாக இதுபோன்ற [உலக அழிவு] கதைகளின் மீது பிரதிபலிக்கப்படுகின்றன" என்று முனைவர் பக் கூறுகிறார்.
'மேட் இன் அவர் இமேஜ்: காட், ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், அண்ட் யூ' என்ற புத்தகத்தை எழுதிய ஆஸ்திரேலிய போதகர் ஸ்டீபன் டிரிஸ்கோல், கிறிஸ்துவுக்கு எதிரான சக்தி யார் அல்லது எது என்பது குறித்து தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று கூறுகிறார்.
"நாம் இதுவரை உருவாக்கிய தொழில்நுட்பங்களிலேயே மிகவும் அச்சமூட்டக்கூடிய ஒன்றான" ஏஐ, "சாத்தியமான ஒன்றாக" இருப்பதாக அவர் கூறுகிறார்.
ஆனால், எதிர்காலத்தைக் கணிக்க பைபிளைப் பயன்படுத்துவது குறிப்பாக பயனுள்ளதாக இல்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
"கிறிஸ்துவுக்கு எதிரான சக்தி யார் என்பது குறித்த ஊகங்களை மட்டுமே பைபிள் வழங்கவில்லை. அது மாற்றங்களுக்குத் தயாராக நம்மை வழிநடத்துகிறது, வேலை குறித்த இறையியலை வழங்குகிறது, மேலும் ஏஐ-யின் செயல்பாடுகளை நிஜத்துக்கு ஏற்ற வகையில் புரிந்துகொள்வதற்கான கருவிகளையும் வழங்குகிறது" என்று டிரிஸ்கோல் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
'கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள்'
பைபிளின் பழைய ஏற்பாட்டில், "தானியங்களைப் பிரித்தெடுக்கும் வண்டிகள் மற்றும் பல்வேறு வேளாண் தொழில்நுட்பப் புதுமைகள் குறித்து பேசப்படுகிறது. இவை அனைத்தும் இறைவனிடமிருந்து வந்தவை" என்று டிரிஸ்கோல் கூறுகிறார்.
"கடவுள் தொழில்நுட்ப அறிவின் கடவுள். கற்காலம் முதல் வெண்கலக் காலம், இரும்புக் காலம், எஃகு, அணுசக்தி, ஏஐ என ஒவ்வொரு தொழில்நுட்பக் காலகட்டத்தின் மீதும் இறுதி கட்டுப்பாடு அவரிடமே உள்ளது."
பழைய ஏற்பாட்டில், நாடுகடத்தப்பட்ட டேனியல், வெவ்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய பல்வேறு பேரரசுகளின் ஆட்சியின் கீழ் வாழ்ந்ததாக டிரிஸ்கோல் கூறுகிறார்.
"வரப்போகும் பேரரசுகளை, அவை துயரத்தை ஏற்படுத்தப் போகின்றன என்றாலும், அவரால் கட்டுப்படுத்தவோ அல்லது அவை வருவதைத் தடுக்கவோ முடியவில்லை" என்று கூறும் அவர்,
"ஆனால், அவர் இருக்கும் இடத்திலேயே நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் வாழவும், நன்றாக வாழவும், மக்களை நேசிக்கவும், கடவுளுக்குக் கீழ்ப்படியவும் முடிந்தது" என்கிறார்.
"அவரால் காலத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அவரால் நன்றாக வாழ முடியும்"
"எனவே, நாம் உலகின் முடிவை எதிர்கொள்கிறோமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், இறுதியில் அனைத்தும் சிறந்த முறையில் முடிவடையும்."
"நடக்கும் அனைத்தும் நல்லவை அல்ல" என்று டிரிஸ்கோல் கூறுகிறார். ஆனால் மிக முக்கியமாக, "கடவுள் நல்லவர், மேலும் அவர் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்" என்றும் டிரிஸ்கோல் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































