'வெள்ளை நிறம், உயரம், ஆங்கிலம் பேசுவதை வைத்து பட்டியல் சாதி சான்றிதழை ரத்து செய்ய முடியாது' - நீதிமன்ற உத்தரவின் பின்னணி

சாதிச் சான்றிதழ், பட்டியல் சாதிகள், சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"மனுதாரரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மிகவும் வெள்ளை நிறத்தில் உள்ளார்கள், ஆண்கள் மிகவும் உயரமாகவும் நல்ல உடல்வாகும் கொண்டுள்ளார்கள். அவர்கள் தமிழும் ஆங்கிலமும் பேசுகிறார்கள் மற்றும் சுருள் முடி கொண்டுள்ளார்கள் எனத் தோற்றத்தை அடிப்படையாக மட்டும் வைத்து சான்றிதழ் உண்மையானது அல்ல என முடிவெடுக்கப்பட்டுள்ளது."

சென்னையில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர் ஒருவரின் சாதிச் சான்றிதழ் உண்மையானது அல்ல என்று கூறி ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் சென்னையில் சுங்க ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவரின் சாதிச் சான்றிதழ் உண்மையானது அல்ல என்று திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவால் ரத்து செய்யப்பட்டது.

அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில் கண்காணிப்பு குழுவின் உத்தரவை உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்ரவர்த்தி ரத்து செய்தார்.

வழக்கின் பின்னணி என்ன?

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 1960-ஆம் ஆண்டு இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். இவர் ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்தவராக இருந்துள்ளார். 1966-ஆம் ஆண்டு அவருக்கு ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற மகன் பிறக்கிறார்.

அவர்கள் இருவரும் கடந்த 1983-ஆம் ஆண்டு மீண்டும் இந்து மதத்திற்கு மாறியுள்ளனர். இந்தச் சடங்குகள் சென்னையில் உள்ள ஆர்ய சமாஜ் மையத்தில் நடைபெற்றுள்ளது. அவர்கள் இருவரின் பெயர்களும் மாற்றப்படுகிறது.

அதன்பிறகு இந்து ஆதிதிராவிடர் பிரிவு சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழின் அடிப்படையில் சென்னை சுங்க ஆணையர் அலுவலகத்தில் மகன் பணியில் சேர்கிறார். கடந்த மே மாதம் 30-ஆம் தேதி அவர் பணி ஓய்வு வயதை அடையவிருந்தார்.

"ஆனால் அதற்கு முன்பாக அவரது சாதிச் சான்றிதழின் உண்மைத்தன்மையை அதிகாரிகள் சரிபார்க்கத் தொடங்கியதாக" மனுதாரர் ராஜாவின் வழக்கறிஞர் தெரிவித்ததாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளது.

'தோற்றத்தை மட்டும் வைத்து ரத்து செய்யப்பட்ட சான்றிதழ்'

சாதிச் சான்றிதழ், பட்டியல் சாதிகள், சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்து சடங்குகள் (கோப்புப் படம்)
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த விசாரணையின்போது மனுதாரர் நேரில் ஆஜராகி அவர் இந்து மதத்திற்கு மாறியதற்கான சான்றுகளையும் இந்து மதத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர் என்பதற்கான சான்றுகளையும் வழங்கியதாக அவர் தரப்பு வழக்கறிஞர் கூறினார் என்று தீர்ப்பு தெரிவிக்கிறது.

"அவரது பிள்ளைகள் இந்துக்களாகவே வளர்க்கப்பட்டுள்ளனர். அவர் இந்துக் கடவுள்களை வழிபடுகிறார். அவரது திருமணமும், அவரது மகளின் திருமணமும் இந்து மதச் சடங்குகள் மற்றும் வழக்கப்படி நடத்தப்பட்டன," என்று அவர் வழக்கறிஞர் கூறியதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவில் உள்ள அனைத்து ஆதாரப்பூர்வமான சான்றுகளையும் மீறி அவரது தோற்றத்தை மட்டும் வைத்து அவரது சான்றிதழ் உண்மையானது அல்ல என்று நிராகரிப்பட்டதாகவும் அதனால் தான் அவர் நீதிமன்றத்தின் முன் வந்துள்ளதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் ராஜாவின் தந்தையான குமார் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டார் என மாநில அரசின் சார்பில் ஆஜராக வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

அப்போது வாதாடிய ராஜாவின் வழக்கறிஞர், அவரது தந்தை இறக்கும் தருவாயில் ராஜாவின் சகோதரர் தான் அவரைப் பார்த்துக் கொண்டார் என்றும் அவர் கிறிஸ்தவ முறையையே பின்தொடர்ந்தார் என்றும் கூறினார்.

ராஜாவின் இல்லத்திற்கு மானுடவியலாளரை ஒருவர் வந்து பூஜை அறை உள்பட அனைத்தையும் ஆய்வு செய்துள்ளார்.

"மானுடவியலாளரிடம் அவரது திருமணம், குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்வு வரை அனைத்தும் இந்து முறைப்படி நடைபெற்றதற்கான புகைப்பட ஆதாரங்களை ராஜா காண்பித்தார்," என அவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

குடும்ப அட்டை பற்றிய குழப்பம்

மாவட்ட கண்காணிப்புக் குழுவின் உத்தரவில், 1994-ஆம் ஆண்டின் குடும்ப அட்டையில் மனுதாரரின் மகள் கிறிஸ்தவர் எனப் பதிவு செய்யப்பட்டிருந்ததாக நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ராஜாவுக்கு 1994-ஆம் ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது என்றும் இது அபத்தமானது என்றும் அவரது வழக்கறிஞர் கூறினார்.

மேலும் மனுதாரர் வெண்மையான நிறம், நல்ல உடல்வாகு, தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசும் திறன் மற்றும் சுருள் முடி ஆகியவற்றைக் கொண்டிருப்பதன் அடிப்படையில் மட்டுமே அவர் ஒரு கிறிஸ்தவர் என்கிற முடிவுக்கு கண்காணிப்புக் குழு வந்ததாகவும் வழக்கறிஞர் வாதிட்டார்.

அரசு வழக்கறிஞர்கள் முன் வைத்த வாதங்கள் என்ன?

சாதிச் சான்றிதழ், பட்டியல் சாதிகள், சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

"மனுதாரர் சமர்ப்பித்த பல்வேறு ஆவணங்களிலிருந்து அவர் வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு போன்ற நோக்கங்களுக்காகத் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களாகக் காட்டிக்கொண்டாலும், அவர்கள் உண்மையில் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தையே பின்பற்றி வருவதாகத் தெரிகிறது.'' என இந்த வழக்கு விசாரணையின்போது மாநில அரசு வழக்கறிஞர் கூறினார்.

''ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆளுமையை மதிப்பிடுவதற்கும், அவரது மனுவைப் பரிசீலிப்பதற்கும், அவரது உடல் தோற்றம் மற்றும் பிற அம்சங்களை நிச்சயமாகக் கருத்தில் கொள்ளலாம். மனுதாரர் சென்னை மற்றும் பெங்களூருவில் மட்டுமே வசித்துள்ளார். அவரது தாய் கூட ஆதி திராவிடர் காலனிக்கு வெளியேதான் வசித்துள்ளார். அவர் கிறிஸ்தவ மதம் மற்றும் கலாசாரத்தை பின்பற்றுவதால் அவரது பிரிவைச் சேர்ந்த மக்களே அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் இந்து மதத்திற்கு திரும்பினார்கள் என ஏற்றுக் கொள்ள முடியாது."

சுங்க அலுவலகம் சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் வழக்கு விசாரணையின்போது சில வாதங்களை முன்வைத்தார்.

"ராஜாவின் தந்தை இந்து மதத்திற்கு மாறியதாகக் கூறினாலும் பள்ளி ஆவணங்களும் 1986-இல் பெற்ற சாதிச் சான்றிதழும் அவரை கிறிஸ்தவப் பெயரை வைத்தே குறிப்பிடுகின்றன. தேவாலயம் வழங்கிய கடிதமும் இருவரையும் அவர்களின் சொந்த பெயரை வைத்தே குறிப்பிட்டுள்ளது. இது உண்மையான மத மறுமாற்ற நிகழ்வாகத் தோன்றவில்லை." என கூறினார்

நீதிபதி கூறியது என்ன?

சாதிச் சான்றிதழ், பட்டியல் சாதிகள், சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

வாதத்தை கேட்ட நீதிபதி, மனுதாரர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதில் எந்தச் சர்ச்சையும் இல்லை எனத் தெரிவித்தார்.

"அவர் இந்து மதத்திற்கு மீண்டும் மாறினார் என்பது உண்மையானதா இல்லையே என்பதே சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அவர் மீண்டும் மதம் மாறி அந்தப் பிரிவினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவருக்கு சான்றிதழ் கிடைக்கும்," என்றும் அவர் கூறினார்.

மாவட்ட கண்காணிப்புக் குழுவின் ஆய்வு முடிவுகள் தெளிவானதாகவும் திட்டவட்டமானதாகவும் இல்லை என்று கூறிய நீதிபதி, குடும்ப அட்டையில் அவரது மகள் கிறிஸ்தவர் என இருந்தது மற்றும் அந்தப் பிரிவைச் சேர்ந்த மக்கள் ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்புடையதுதான் என்றாலும் அதன் முடிவுகளுக்கு திட்டவட்டமான காரணங்கள், உண்மைகள் அல்லது ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

"கண்காணிப்புக் குழுவின் உத்தரவின் கொடுக்கப்பட்டுள்ள காரணங்களும் மானுடவியலாளர் யாரேனும் மேற்கொண்ட மதிப்பீட்டின் அடிப்படையிலும் இல்லை," என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மாவட்ட கண்காணிப்புக் குழுவின் உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.

தீர்ப்பில் உள்ள முக்கியமான விஷயங்கள்:

  • மனுதாரர் ராஜா நான்கு வாரங்களுக்குள் மீண்டும் ஆஜராகி தனது தரப்பு ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்கலாம்.
  • மாவட்ட கண்காணிப்புக் குழு தேவைப்பட்டால் வேறு எந்த ஆதாரங்களையும் கேட்கலாம்.
  • மனுதாரர் விசாரணைக்கு ஆஜரான பிறகு 8 வாரங்களுக்குள் புதிய உத்தரவு வழங்க வேண்டும்.

சாதிச் சான்றிதழ்களை வழங்குவது யார்?

சாதிச் சான்றிதழ், பட்டியல் சாதிகள், சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

சாதிச் சான்றிதழ் மற்றும் அதன் உண்மைத்தன்மை மீது எழுப்பப்படும் சந்தேகங்கள் குறித்து மானுடவியல் பேராசிரியர் சுமதி பிபிசி தமிழிடம் விளக்கினார்.

"பட்டியல் பழங்குடிகளைப் பொருத்தவரை வருவாய் கோட்ட அலுவலரும் பட்டியல் சாதிகளைப் பொருத்தவரை தாசில்தாரும் தான் சாதிச் சான்றிதழ்களை வழங்குவார்கள். பள்ளிகளில் சேர்கின்றபோது பெரும்பாலும் சாதிச் சான்றிதழ்கள் கேட்கப்படுவதில்லை, உயர்கல்விக்கு வருகிறபோது தான் இடஒதுக்கீடு போன்ற விஷயங்களுக்கு அது அவசியமாகிறது," என்றார்.

கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்களுக்கான நடைமுறையை விளக்கிப் பேசிய அவர், "தங்களின் பெயர் மாற்றத்தை அரசிதழில் வெளியிட வேண்டும். மதமாற்ற சடங்கு நடத்திய ஆதினத்திடமிருந்து சான்று பெற வேண்டும். அந்தப் பிரிவைச் சேர்ந்த 10 பேரின் கையெழுத்து வேண்டும்" எனத் தெரிவித்தார்.

சாதிச் சான்றிதழ்கள் தொடர்பான புகார்களை யார் விசாரிப்பார்கள்?

சாதிச் சான்றிதழ்கள் மீது எழும் புகார்களை விசாரிக்க மாவட்ட அளவிலும் இருவேறு குழுக்கள் இருப்பதாகக் கூறும் பேராசிரியர் சுமதி, அதன் பணிகளையும் விளக்கினார்.

"மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் மாநில அளவிலான ஆய்வுக் குழு உள்ளன. மாவட்ட கண்காணிப்புக் குழு எஸ்சி, பிசி, எம்பிசி, ஓபிசி சாதிச் சான்றிதழ்கள் தொடர்பாக விசாரணை நடத்துவார்கள். எஸ்டி சாதிச் சான்றிதழ்கள் தொடர்பான புகார்களை மாநில ஆய்வுக் குழு தான் விசாரிக்கும். மாவட்ட அளவில் எஸ்சி சாதிச் சான்றிதழ்கள் மீது அந்தக் குழு பிறப்பிக்கும் உத்தரவுகளை உயர் நீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும். மற்ற பிரிவினர் மாநில ஆய்வுக் குழுவில் மேல்முறையீடு செய்யலாம்." என்றார்.

இந்தக் குழுவினர் எடுக்கும் முடிவு இறுதியானது என்று கூறும் அவர் நீதிமன்றங்களும் அதனை மறுபரிசீலனை செய்ய மட்டுமே கோர முடியும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து பெற மனுதாரர் தரப்பை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது இந்த வழக்கு தொடர்பாக தற்போது பேச விருப்பமில்லை என்றும் புதிய உத்தரவைப் பொருத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றும் தெரிவித்துவிட்டனர்.

இது தொடர்பாக கருத்து பெற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால் அவர்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. பதில் கிடைத்தவுடன் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு