100 ஆண்டுக்குப் பின் கோவிலில் பட்டியல் பிரிவினர் வழிபாடு - முகநூலில் தொடங்கிய பிரச்னை சுமூகமாக தீர்ந்தது எப்படி?

பட மூலாதாரம், HANDOUT
- எழுதியவர், மாயகிருஷ்ணன். க
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
திருவண்ணாமலை அருகே செல்லங்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பட்டியல் பிரிவு மக்கள் காவல்துறை பாதுகாப்புடன் புதன்கிழமை பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கோவில் ஒரு தரப்புக்கு மட்டும் சொந்தமானது என்று சொல்லி வந்த நிலையில் பட்டியில் பிரிவு மக்கள் வழிபாடு செய்ய கோரிக்கை விடுத்ததன் பின்னணி என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
முகநூல் விவாதம் தகராறாக மாறியதன் விளைவு

பட மூலாதாரம், HANDOUT
திருவண்ணாமலை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் ஊர் மக்கள் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நாட்களில் ஒன்று கூடி வழிபட்டு வருகின்றனர். அதேபோல அதே கிராமத்தில் ஆதி திராவிட சமூகத்தை சார்ந்தவர்களுக்காக காளியம்மன் திருக்கோவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்தவர்களின் சார்பில் கட்டப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த செந்தமிழுக்கும், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவருக்கும் கடந்த மாதம் முகநூலில் கோயிலுக்குள் செல்வது குறித்து பதிவிட்டு தகராறு ஏற்பட்ட நிலையில், இவர்கள் இரண்டு பேரும் செல்லங்குப்பம் கிராமத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கைகலப்பும் ஏற்பட்டது.
ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில் பலத்த காயமடைந்த இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், வழக்கு பதிவு செய்த வேட்டவலம் போலீசார் கோயிலுக்குள் நுழைவது குறித்து இரு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் முகநூல் பக்கத்தில் தாக்கிக் கொண்ட விவகாரத்தில் இருவரையும் கைது செய்தனர்.
"10 சமூகத்தவர்கள் சேர்ந்து கட்டிய கோவில் இது"

ஒரு தரப்பைச் சேர்ந்த மாரியம்மன் கோவில் முக்கியஸ்தர் பழனி நம்மிடம் தொலைபேசியில் பேசுகையில், "எங்கள் ஊரில் நத்தம் புறம்போக்கு பகுதியில் மிகச் சிறிய அளவில் ஒரு கோயில் கட்டி எங்களது முன்னோர்கள் வழிபாடு செய்து வந்தனர். பல ஆண்டுகளாக தொடர்ந்து வழிபாடு நடைபெற்ற வந்தது. இந்நிலையில் கடந்த 2007- ஆம் ஆண்டு கோவிலை புதுப்பித்து கட்டுவதாக நாங்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்தோம். அதன்படி விநாயகர், சிவன், மாரியம்மன், காமாட்சியம்மன் என நான்கு கடவுளுக்கான கருவறைகள், மற்றும் மண்டபம் உருவாக்கி 2009-ல் கட்டி முடித்தோம். கும்பாபிஷேகமும் வெகு சிறப்பாக செய்தோம். தொடர்ந்து 2023-ல் சென்ற மாதம் கோவிலில் கோபுரம் கட்டி அதற்கான கும்பாபிஷேகம் சிறப்பாக செய்தோம். இதேபோல் அந்த தரப்பிலும் ஏரியில் காளியம்மன் கோவிலை கட்டி அதற்கும் கும்பாபிஷேகம் நடத்தி அதில் அவர்கள் வழிபாடு பல ஆண்டுகளாக செய்து வருகின்றார்கள். இதுதான் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற வழக்கம்.
இந்த நிலையில் தங்கராசு என்பவர் மூலமாக தான் இந்த பிரச்சனை உருவானது. அவர் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று சமத்துவ பொங்கல் வைக்க வேண்டும் என்று மனு ஒன்றை அதிகாரியிடம் கொடுத்திருந்தார் அப்பொழுதிலிருந்து பிரச்சனை உருவாகிவிட்டது. சமாதான கூட்டங்களும் நடத்தப்பட்டது. அப்பொழுது கோட்டாட்சியர் மந்தாகினியும் எங்களிடம் கோவில் பொதுவானது அதனால் அவர்களும் வந்து வழிபாடு செய்யலாமே என்று கூறினார். அதற்கு நாங்கள் அவர்களுக்கும் ஒரு கோயில் உள்ளது அவர்களுடைய வழிபடும் முறைகள் வேறு, எங்களுடைய வழிபாடு முறைகள் வேறு, அதனால் பிரச்சனை இல்லாமல் நாங்கள் இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறினோம் என்ற போதிலும் அவர் எங்களிடம் கோவில் பொதுவானது என்று வலியுறுத்தினார்.
இருதரப்பு சேர்ந்தவர்கள் இது நாள் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் அவரவர்கள் கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றோம் என்று நாங்கள் மீண்டும் கூறினோம். இதற்கிடையில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார். இதற்கிடையில் முகநூலில் தங்கராசுவுக்கும், செந்தமிழுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஏற்பட்ட சலசலப்பு சண்டையாகவும் மாறியது. வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் நடவடிக்கையும் எடுத்தார்கள்.
இதற்கிடையில் புதன்கிழமை கோவில் வழிபாடு செய்வதற்கு அவர்கள் வந்தார்கள். எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை நாங்கள் பிரச்சனை வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டோம். போலீஸ் பாதுகாப்புடன் வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். என்ன நடக்கிறது என்று தெரியவில்லை எல்லாம் இறைவன் விட்ட வழி என்று கூறி முடித்தார்.
"சமூகத்தில் மாற்றம் நிகழ வேண்டும்"

செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்ததவரும், தமிழ்நாடு பறையர் நலச் சங்க நிர்வாகியுமான தங்கராசு நம்மிடம் தொலைபேசியில் பேசுகையில், "இந்து கோயில்களில் குறிப்பாக ஆண்டாண்டு காலமாக ஊர் கோவில் எனவும் சேரி கோவில் எனவும் பிரிந்து வழிபாடு செய்து வருகிறார்கள். ஆனால் கிறிஸ்தவ கோயில்களிலோ, மசூதிகளிலோ அந்த நிலை இல்லை. இந்த நிலை மாற வேண்டும். அதன்படியே நான் எங்கள் ஊரில் மாரியம்மன் கோவிலில் வழிபட வேண்டும் எனவும் குறிப்பாக அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி கடந்த ஆண்டு சமத்துவ பொங்கல் கொண்டாட நான் காவல் நிலையத்தில் மனு தந்து இருந்தேன்.
அப்பொழுது கொரோனா காலம் என்பதால் அதை தவிர்த்தனர். ஆனாலும் நான் தொடர்ந்து உயர் அதிகாரிகளிடம் மனு தந்து வந்துள்ளேன். எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலை எங்கள் முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வணங்கி வந்துள்ளனர். அதுவும் கேட் முன்பு இருந்தே கும்பிட்டு செல்வார்கள். காளி கோவிலுக்கும் அந்தப் பகுதியில் இருந்து வந்து வழிபட்டு செல்வார்கள். எங்கள் சமூகத்தினால் கட்டப்பட்ட காளி கோவில் மிகப் பிரமாண்டமாகவே கட்டியுள்ளோம்.
ஆனாலும் எங்கள் முன்னோர்களும் அந்த கோவிலில் அதாவது தற்பொழுது மாரியம்மன் கோவிலாக உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு செய்துள்ளனர். இந்த கோவிலை அவர்கள் கட்டவில்லை புதுப்பித்தனர் அவ்வளவுதான். நான் சென்னையில் பழ வியாபாரம் செய்து வந்தாலும் அடிக்கடி எனது ஊருக்கு வந்து செல்வேன். அம்பேத்கர் வழியில் சமத்துவம் பேணுவது எனது முக்கிய நோக்கமாகும். மாரிஅம்மன் கோவிலில் எங்கள் பகுதி பெண்கள் சந்தோஷத்துடன் வந்து பொங்கல் வைத்து சென்றுள்ளனர். இது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று கூறினார்.
"ஊர் அமைதி முக்கியம், எங்களுக்குள் பிரச்சனை இல்லை"

செல்லங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி விஜயன் தொலைபேசியில் நம்மிடம் பேசினார். "எனக்கு ஊர் அமைதி தான் முக்கியம். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. தற்பொழுது காவல் அதிகாரிகள் பாதுகாப்புடன் எங்கள் ஊர் ஒரு தரப்பு பெண்கள் வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்து சென்றுள்ளனர். அது அவர்களுடைய விருப்பம். மீண்டும் கூறுகின்றேன் ஊர் அமைதி மிகவும் முக்கியம். மற்றபடி எதுவும் சொல்வதற்கு இல்லை" என்று முடித்துக் கொண்டார்.
500 போலீசார் பாதுகாப்புடன் பொங்கல் வழிபாடு

பட மூலாதாரம், HANDOUT
திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். "செல்லங்குப்பம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒரு தரப்பு அதாவது பட்டியலின மக்கள் பொங்கல் வைத்து வழிபடுவதற்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது. வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர்.
துப்பாக்கி ஏந்திய போலீசாரும் வீடுகளின் மாடியில் நின்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பட்டியல் பிரிவு மக்கள் வழிபாடு செய்ய வந்தபோது பொது பிரிவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பட்டியல் சமுதாய மக்கள் கோவிலுக்குள் சென்று பொங்கலிட்டு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர். எந்த பிரச்சினையும் இல்லை" என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























