அதிக நேரம் வெயிலில் நின்றால் சீக்கிரம் 'முதுமை' வருமா?

வெப்பம், முதுமை, டிஎன்ஏ, தோல் சுருக்கம், இதய நோய்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அதிக வெப்பத்தை எதிர்கொள்வதால் வேகமாக வயதாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
    • எழுதியவர், ஏஞ்சலா ஹென்ஷால்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சுலைமான் ஹமுதன் அதீத வெப்பம் கொண்ட நகரில் வளர்ந்தவர்.

ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் 45°C (115°F) அளவிற்கு வெப்பம் தகிக்கக் கூடிய ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் தகவல் தொழில்நுட்பத் துறையில் விற்பனையாளராக பணிபுரிகிறார்.

"பகல் நேரத்தில் வெளியே செல்லும்போது நீங்கள் பாலைவனத்தில் இருப்பதுபோல இருக்கும். வெப்பமும் அதன் ஈரப்பதமும் உங்களை தலைசுற்ற வைக்கும்" என்கிறார்.

மேலும் "கோடை காலத்தில் வெகு சில மக்களே வெளியே நடந்து செல்வார்கள், வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் நான் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு காரில் செல்வேன்" எனக் கூறுகிறார்.

"அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதி உள்ளது, குறிப்பாக மக்கள் அதிக நேரத்தை செலவிட விரும்பும் வணிக வளாகங்களில் இந்த வசதி உள்ளது. இதுதான் அவர்களின் 2வது வீடு"

நம்மைப் போலவே சுலைமானும் இதற்குமுன் நினைத்துக்கூட பார்த்திடாத வெப்பநிலைக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொண்டார்.

தொடர்ந்து இந்த அளவிலான வெப்பத்தை எதிர்கொண்டால் நம் உடலில் என்ன நடக்கும் என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

பல்வேறு மாகாணங்களில் பல்வேறு காலநிலையில் வாழும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை தெற்கு கலிஃபோர்னிய பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. அவர்கள் எதிர்கொள்ளும் தினசரி தட்பவெப்ப நிலை 32°C (90°F) வரை உயர்கிறது.

3600 பேருக்கு ரத்த பரிசோதனை செய்து, அவர்களின் நோயியல் வயதையும் (Epidemiological age) உண்மையான வயதையும் ஒப்பிட்டது. இதனை வெப்ப குறியீட்டு தரவுகளுடன் ஒப்பிட்டது.

இந்த ஆய்வின் ஆசிரியரும், பிந்தைய முனைவர் புலனாய்வாளருமான யூன்யங் சோய், "அடிக்கடி அதிக வெப்பநிலைக்கு உட்பட்டவர்களின் உடல்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அவர்கள் வேகமாக முதிர்ச்சியடைந்தவர்களாக உள்ளனர்" என்கிறார்.

வெப்பம், முதுமை, டிஎன்ஏ, தோல் சுருக்கம், இதய நோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிக தட்பவெப்ப நிலையை எதிர்கொள்வது, வேதியியல் ரீதியாக உங்களின் டிஎன்ஏவை மாற்றக்கூடும்.

இது உடலில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துமா?

வெப்பம் நம் உடலில் அறிவாற்றல் செயல்பாடு, ரத்த நாளங்களின் நலன் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் நன்கு அறிவர்.

தொடர்ந்து அதிக வெப்ப நிலையை எதிர்கொள்வது, வேதியியல் ரீதியாக உங்களின் டிஎன்ஏவை மாற்றக்கூடும் என்று USC தரவுகள் கூறுகிறது. இதன் பெயர் மித்தைலேஷன் (Methylation) எனப்படுகிறது.

"நமது உடல் வெப்பநிலை உயரும்போது, செல்களைச் சூழ்ந்து இருக்கும் உண்மையான கொழுப்புச் சத்துகள், அதாவது லிப்பிட்கள் (Lipids) வடிவம் குலைந்து சிதைகின்றன. அதுவே கரையத் தொடங்குகிறது" என The Heat Will Kill You First - Life and Death on a Scorched Planet என்ற நூலின் ஆசிரியர் ஜெஃப் கூடெல் கூறுகிறார்.

செல்களின் அமைப்பு சிதைந்து விடுகிறது. நீங்கள் முட்டை சமைக்கும் போதும் இதுதான் நடக்கிறது. முட்டையின் மெம்பிரேன் வடிவம் சிதைந்து விடுகிறது என்கிறார்.

வெப்பம், முதுமை, டிஎன்ஏ, தோல் சுருக்கம், இதய நோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிஎன்ஏ மித்தைலேஷனைக் (DNAm) ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

மரபணு வெளிப்பாட்டு மாற்றங்களால் ஏற்படும் முதுமை (epigenetic ageing) என்றால் என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நமது செல்களை நாம் எவ்வளவு சீக்கிரம் சிதைக்கிறோம்?

ஒரு சிலர் சீக்கிரமே வயதானவர்கள் போல தோற்றமளிப்பதை பார்த்திருப்போம். மரபணு வெளிப்பாட்டு மாற்றங்களால் ஏற்படும் முதுமை என்பது ஒருவரின் உயிரியல் அமைப்பால் ஏற்படும் முதுமையை கணிக்க மருத்துவர்கள் கண்டறிந்த முறை என்கிறார் USC-ஐ சேர்ந்த மருத்துவர் சோய்.

இது செல்லுலர் அளவில் நம் உடல் எப்படி செயல்படுகிறது என்பதைக் குறிக்கிறது.

"டிஎன்ஏ பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகிறது. இதை நம்மால் மாற்ற முடியாது. ஆனால், மித்தைலேஷன் என்பது ஜீன்களில் ஏற்படும் சிறிய மாற்றம் மற்றும் ஜீனின் வெளிப்பாட்டை கட்டுப்படுத்தும் ஒன்று" என்கிறார் மருத்துவர் சோய்.

இந்த டிஎன்ஏ மித்தைலேஷனைக் (DNAm) ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

டிஎன்ஏவை ஒரு ப்ளூபிரிண்ட் போலவும், மித்தைலேஷனை இதை செயல்பட வைக்கும் ஒரு ஸ்விட்ச் போர்ட் போலவும் எண்ணிக் கொள்ளுங்கள் என்கிறார் மருத்துவர் சோய்.

"மன அழுத்தம், காற்று மாசு போன்ற சுற்றுச்சூழல் வெளிப்பாடுகளைப் போல தற்போது வெப்பமும் இந்த ஸ்விட்சை மாற்றும் ஒன்றாக மாறியுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம்" என்கிறார் மருத்துவர் சோய்.

நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிலவுவதால், அதீத வெப்பத்தை எதிர்கொள்வது நம் உடலில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர் சாய் தெரிவிக்கிறார். இதை புகைப்பிடித்தல் மற்றும் அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளுடன் ஒப்பிடலாம் எனவும் கூறுகிறார்.

முதுமையை வேகப்படுத்தும் இந்த மாற்றங்கள் சிறிதாக தோன்றலாம். சில மாதங்கள் மட்டுமே தோன்றினாலும், அது காலப்போக்கில் எப்படி பெரிதாகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். உயிரியல் ரீதியாக முதுமையடைவது வருடந்தோறும் சிறிதுசிறிதாக அதிகரித்தாலும், அது பல வருடங்களுக்கு வேகமான முதுமையானதாக மாறிவிடும்.

இதனால் நீரிழிவு, மறதி நோய் (டிமென்ஷியா), இதய-இரத்த நாள நோய் போன்ற வயது சார்ந்த நோய்கள் முன்னதாகவே ஏற்படலாம்.

"இந்த கண்டுபிடிப்பை நாங்கள் ஒரு முன்னோட்டமாகவே பார்க்கிறோம். இது மருத்துவர்கள் தலையிட சரியான நேரம்" என மருத்துவர் சோய் கூறுகிறார்.

நரை முடி மற்றும் சுருக்கம்

அதிக வெப்பத்தை எதிர்கொள்வதால் உங்களின் தோற்றம் மாறுமா?

துபாயில் இருக்கும்போது, தனது முகத்தில் அதிக சுருக்கங்கள் இருப்பதாகவும், தனது உடல் அதிகமாக முதுமையடைவதாக உணர்வதாக சுலைமான் கூறுகிறார். கடந்த வாரம் என் உடலில் சூரிய ஒளி அதிகமாக பட்டதால் (Sunburnt) மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்ததாக அவர் கூறுகிறார். "எனது சருமம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இப்போது கூட அதன் தழும்புகள் உள்ளன." என்றார். லண்டனில் இருந்தவரை சன்ஸ்கிரீனே பயன்படுத்தாத இவர் தற்போது தீவிரமாக சன்ஸ்கிரீனை தேடி வருவதாக தெரிவிக்கிறார்.

"பகல் நேரங்களில் மக்கள் ஏன் குடையுடன் நடக்கிறார்கள் என்பது இப்போது எனக்கு புரிகிறது. தொடர்ந்து வெயிலில் இருப்பதன் விளைவுகள் வீட்டிற்குச் சென்ற பின்னரே உங்களுக்கு தெரியும்"

சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா வைலெட் ஒளி (ultra-violet light) உங்கள் சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தி வயதான தோற்றத்தை அளிக்கும்.

இது உங்கள் தலைமுடி விரைவாக நரைப்பதற்கும் காரணமாகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தலைமுடியின் நிறம் மெலனோசைட் (Melanocyte) எனப்படும் நிறமியை உற்பத்தி செய்யும் செல்களால் நிர்ணயிக்கப்படுகிறது. புறஊதா கதிர்கள் இந்த செயல்முறையையும் சிதைக்கும் என சில தோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வெப்பமும் ஈரப்பதமும் அதிகரிப்பதால் எபிலெப்ஸி (Epilepsy), பக்கவாதம் (Stroke), மூளைக்காய்ச்சல் (Encephalitis), மல்டிப்பிள் ஸ்கிளிரோசிஸ் (Multiple Sclerosis), தலைவலி (Migraines) போன்ற பல நரம்பியல் நோய்கள் தீவிரமடைகின்றன. இவை அனைத்தும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை கட்டுப்படுத்துவதை கடினமாக்குகின்றன.

அதீத வெப்பத்தில் இருந்து யாருக்கு அதிக பாதுகாப்பு தேவை?

வெப்பம், முதுமை, டிஎன்ஏ, தோல் சுருக்கம், இதய நோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெப்பத்தால் உடலின் எந்த அமைப்புகள் மிக அதிகமாக பாதிப்படைகின்றன என்பது தெளிவாக இல்லை.

ஜெர்மனியில் 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஹார்வர்ட் டி.எச்.சான் பொது சுகாதாரப் பள்ளியின் சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி நிபுணரான டாக்டர் வென்லி நீ, அதிகமான காற்று வெப்பநிலையும் செல்களின் வேகமான முதுமையை ஏற்படுத்துவதில் தொடர்புடையது எனக் கூறினார்.

அவரின் ஆராய்ச்சியின் ஒரு முக்கிய அம்சம், வயது சார்ந்த நோய்களுடன் தொடர்புடைய டிஎன்ஏ மெத்திலேஷன் (DNA methylation) முறைப்படிகளைப் புரிந்துகொள்வதாக இருந்தது.

இது, நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் மிகவும் வேகமாக முதுமையடைகிறார்கள் என்பதை காட்டியதாக அவர் கூறினார். "நாங்கள் தொடர்ந்து, நீரிழிவு நோயாளிகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுவதை கண்டறிந்தோம்." என்றார்.

"ரத்த பரிசோதனைகள் செல்களில் வேகமான முதுமையை காட்டும் போது, அது உயிரிழப்பை ஏற்படுத்தும் நீரிழிவு, இதய-ரத்த நாள பாதிப்பு, நுரையீரல் நோய்கள் மற்றும் நரம்பியல் நோய்களின் பாதிப்புக்கான அதிக வாய்ப்பு உள்ளது." என்கிறார் டாக்டர் வென்லி நீ.

ஆராய்ச்சியில் சில குறைகள் உள்ளன. எனவே, எபிஜெனெடிக்ஸ் முதுமை வேகப்படுத்துதலைப் புரிந்துகொள்வது நல்லது என்றாலும், வெப்பத்தால் உடலின் எந்த அமைப்புகள் மிக அதிகமாக பாதிப்படைகின்றன என்பதை அது தெளிவுபடுத்தவில்லை.

இதனால், மருத்துவர் சோயின் குழு இப்போது சிறுநீரகம், மூளை அல்லது இதயம் ஆகிய அமைப்புகளில் எது அதிகமாக பாதிக்கப்படுகிறது என்பதை ஆராயத் திட்டமிட்டுள்ளனர்.

வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்

வெப்பம், முதுமை, டிஎன்ஏ, தோல் சுருக்கம், இதய நோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூறாவளிகளுக்கு எண்கள் அளிப்தைப் போல வெப்பஅலைகளின் தீவிரத்தையும் எண்களால் மதிப்பிடும் திட்டம் உள்ளது.

பீனிக்ஸில் 115°F (46°C) வெப்பநிலையில் வேலைசெய்துக் கொண்டிருந்தபோது, காலநிலை மாற்றம் பற்றிய புத்தகத்தை எழுத வேண்டும் என முடிவு செய்தார் ஜெஃப் கூடெல்.

அவர் ஒரு கூட்டத்திற்கு செல்வதற்காக கொஞ்ச தூரம் நடக்கத் தொடங்கினார். ஆனால், கொளுத்தும் வெப்பத்தால் வழியிலேயே மயங்கி விழுந்தார்.

இது மாதிரியான ஓர் அனுபவம் கூட, உடலின் மாற்றத்தில் (metabolism) பாதிப்பை உண்டாக்குமா என்பதை அறியவேண்டும் என அவருக்கு ஆவல் ஏற்பட்டது.

சமீபத்தில் எலிகள் மீது நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, ஒரே முறை மிகுந்த வெப்பத்துக்கு உட்பட்டாலும், அந்த எலியின் செயல்பாட்டில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியதைக் காட்டியது.

காலநிலை மாற்றம் வேகமெடுக்கும் நிலையில், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள், அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் தீவிர வெப்பநாட்கள் ஆண்டுக்கு மேலும் 20 முதல் 30 நாட்கள் கூடலாம் என அமெரிக்காவின் தேசிய காலநிலை மதிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் தெற்கு மாகாணங்கள் ஏற்கனவே நீண்டகால வெப்ப பருவத்தையும், ஒவ்வொரு ஆண்டும் முன்கூட்டியே தொடங்கும் வெப்பத்தையும் எதிர்கொண்டு வருகின்றன.

"டெக்சாஸ் போன்ற இடங்களில், மக்கள் எப்போதும் வெப்ப பருவத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்" என்று கூடெல் கூறுகிறார்.

"கடந்த இரண்டு கோடை காலங்களில் பார்த்த அனுபவத்திலிருந்து, தாங்கள் வாழும் முறையை மாற்றிக்கொள்ளவும், எவ்வாறு வேலைசெய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்துள்ளனர்."

இதன் விளைவாக, தீவிர வெப்பத்தின் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துள்ளதால், அவர்களிடம் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது என்கிறார் கூடெல்.

சூறாவளிகளுக்கு எண்கள் அளிப்பதைப் போல வெப்பஅலைகளின் தீவிரத்தையும் எண்களால் மதிப்பிடும் திட்டம் உள்ளது. இருப்பினும் ஈரப்பதத்தையும் சேர்த்து கணக்கிட வேண்டிய அவசியம் இருக்கலாம்.

"வெப்ப அலை வீசும் நேரத்தில், தொலைக்காட்சி செய்திகளில், வரிசையாக கார்கள் கடற்கரைக்கு செல்வதை காட்டுவார்கள்" என்று அவர் கூறுகிறார்.

"ஆனால் இப்போது, மக்கள் வெப்ப அலைகளை ஒரு ஆபத்தான சக்தியாகவே பார்க்கின்றனர். குறிப்பாக வெளியே வேலை செய்ய வேண்டியவர்களுக்கும், வெப்பத்தைத் தடுக்கும் பாதுகாப்பு இல்லாத கட்டடங்களில் வாழ்பவர்களுக்கும் இது ஆபத்தாக தெரிகிறது." என்கிறார்.

கூடெல்-ஐ பொருத்தவரை காலநிலை நெருக்கடி ஏற்கனவே பெரிய பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.

"நாம் 2 வகையாக மக்களைப் பிரிக்கிறோம். ஒன்று குளிரானவர்கள் மற்றொன்று சுட்டெரித்து காணப்படுபவர்கள் ஆவர்"

"ஒருபுறம் தண்ணீர், நிழல், குளிர்சாதன வசதி உள்ளது. மறுபுறம் வியர்வை, உளைச்சல், இதில் மரணமே மோசமான நிலையாக உள்ளது." என்கிறார்

"இந்த அதீத வெப்பம் என்பது முதலில் பலவீனமானவர்களை தாக்கும் சக்தி என்று டெக்சாஸில் மக்கள் புரிந்துவைத்திருப்பதாக அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு