தவெக எம்எல்ஏ-வின் 'பேரம்' புகார் தொடர்பாக தொலைக்காட்சி நெறியாளரிடம் போலீஸ் விசாரணை - பின்னணி என்ன?

பட மூலாதாரம், VijayanRamalingam/Facebook
தவெக எம்எல்ஏ-விடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாகப் பதிவான வழக்கில் கைதான நபருடன் தொடர்பில் இருந்ததாக, தொலைக்காட்சி நெறியாளரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
நெறியாளரை காவல்துறை அலைக்கழித்ததாகக் கூறி பத்திரிகையாளர் சங்கங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
'35 கோடி ரூபாய் தருவதாக பேரம்'
தவெக எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த 29ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், சில நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசு என்பவர் ஒரு கருத்துக் கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் ஒரு முக்கியக் கட்சியைச் சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நேரில் சந்திக்க வேண்டும் எனவும் கேட்டதாகக் கூறியுள்ளார்.
ஆனால், தான் வேறு பணிகளில் இருப்பதாகக் கூறி அந்த இணைப்பைத் துண்டித்துவிட்டதாகப் புகார் மனுவில் கூறியுள்ள இளையராஜா, "இருந்தும் அந்த நபர் தன்னை மீண்டும் தொடர்புகொண்டு சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவுள்ளதாகப் பேசினர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்போது தாங்கள் கூறும் வகையில் நடந்துகொண்டால் 35 கோடி ரூபாய் வரை தருவதாக பேரம் பேசியதாகவும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
"இதில் எனக்கு விருப்பமில்லை. இனிமேல் என்னிடம் பேசாதீர்கள்" எனக் கண்டிப்புடன் கூறிவிட்டதாகவும், இதுகுறித்து வெளியில் தெரிவித்தால் நானும் என் குடும்பத்தினரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மிரட்டப்பட்டதாகவும் இளையராஜா கூறியுள்ளார்.

பட மூலாதாரம், TVKVijayUthangarai/Facebook
தன்னிடம் பேரம் பேசிய நபர்கள் மீதும் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் நடந்து கொண்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தனது புகார் மனுவில் கோரியிருந்தார்.
இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்குப் பின்னணியாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், ChennaiPolice/FB
'வழக்கில் 12 பேர் கைது' - காவல்துறை
காவல்துறை புலன் விசாரணையில் திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், வழக்கில் கைதான நரேஷ் என்பவரை சென்னையில் சந்தித்துள்ளதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின்பேரில் கைதான திருநாவுக்கரசு வழக்கின் புகார்தாரரான இளையராஜாவை தொடர்புகொண்டு மேற்கூறிய செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
தற்போது வரை இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஜூலை 15ஆம் தேதி சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்கின் சாட்சி விசாரணைக்காக தொலைக்காட்சி நெறியாளர் விஜயனிடம் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தியது பேசுபொருளாக மாறியுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
விசாரணை என்ற பெயரில் அழைத்து நெறியாளர் விஜயனின் செல்போனை காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக, சென்னை பத்திரிகையாளர் மன்றம் விமர்சித்துள்ளது.
"வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, விஜயன் பணிபுரியும் அலுவலத்திற்கு நேரடியாகச் சென்று சம்மன் வழங்கியுள்ளனர். மேலும், அன்றிரவே (ஜூலை 15) காவல் நிலையம் வர வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர்" என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, "இரவு 10 மணியளவில் காவல் நிலையத்தில் ஆஜரான விஜயனிடம் இரண்டு மணிநேரத்திற்கு மேல் விசாரணை நடத்திய காவல்துறை, நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு மீண்டும் காவல் நிலையம் வருமாறு கூறியுள்ளனர்" எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் காவல் நிலையம் சென்ற விஜயனிடம் எந்தவித சட்டவிதிகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் செல்போனை பறிமுதல் செய்துள்ளதாக, சென்னை பத்திரிகையாளர் மன்றம் விமர்சித்துள்ளது.
விஜயனிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும் விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளரை அச்சுறுத்துவதை நிறுத்தவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக் கொண்டது.

பட மூலாதாரம், Getty Images
திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர் விஜயனின் தொலைபேசியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருக்கும் காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது" எனப் பதிவிட்டுள்ளார்.
ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கும் அரசியலை தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் தவெக அரசு செய்யத் தொடங்கிவிட்டதாகவும் கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நெறியாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு செய்து அச்சுறுத்தும் போக்கு கண்டிக்கத்தக்கது. அவரது செல்போனை பிடுங்கி வைத்துக்கொள்வது கண்டனத்துக்குரியது" எனத் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
"சாட்சிக்கு அழைக்கப்பட்ட பத்திரிகையாளரை ஒரு குற்றவாளி போலச் சித்தரிக்கும் காவல்துறையின் போக்கு கடும் கண்டனத்துக்குரியது" என புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஆசிரியர் சமஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'15 தவெக எம்எல்ஏ-க்கள் இலக்கு' - காவல்துறை
இந்த விவகாரம் குறித்து செய்திக் குறிப்பு ஒன்றை வியாழக்கிழமை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.
அதில், "ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தன்னை சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் மற்றும் ஐபிடிஎஸ் என்ற கருத்துக் கணிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் திருநாவுக்கரசு என்பவர் மேலும் சில நபர்களுடன் சேர்ந்து சட்டப்பேரவை வாக்கெடுப்பில் தவெக நிலைப்பாட்டை மீறி வாக்களிக்க வேண்டும் எனக் கூறியதாக புகார் கொடுத்துள்ளார்" எனக் கூறியுள்ளது.
அவ்வாறு செய்தால் 35 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்குவதாகவும் செய்ய மறுத்தால் அது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்தாகுமென கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை செய்திக் குறிப்பு கூறுகிறது.
"வழக்கின் விசாரணையில் திருநாவுக்கரசு மேலும் சிலருடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்து 'மேகாலயா ப்ராஜக்ட்' எனப் பெயரிட்டு சுமார் 15 தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களை பெருந்தொகை கொடுத்து விலைக்கு வாங்கி ஆட்சியின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டது தெரிய வந்ததாகவும்," காவல்துறை கூறியுள்ளது.

பட மூலாதாரம், VijayanRamalingam/Facebook
'ஆட்சேபகரமான குறுந்தகவல்'
வழக்கில் ஆவண சாட்சியங்களை ஆய்வு செய்தபோது, புதிய தலைமுறை தொலைக்கட்சியின் நெறியாளர் விஜயன், வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுவுக்கு ஆட்சேபகரமான வகையில் குறுந்தகவல் அனுப்பி குற்றச்சதியின்போது தொடர்ச்சியாக தொடர்பில் இருந்ததாக, காவல்துறை தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.
"இதுகுறித்து விசாரிப்பதற்காக விஜயனுக்கு முறையாக சம்மன் அனுப்பப்பட்டு ஜூலை 15, ஜூலை 16 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது" என்று காவல்துறை கூறியுள்ளது.
வழக்கு தொடர்புடைய ஆதாரங்களை அறிவதற்கு அவரது செல்போனை சைபர் பகுப்பாய்வுக்கு உட்படுத்தவே அவரிடமிருந்து பெற்றதாகவும் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் காவல்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
'விஜயன் அழைக்கவில்லை. ஆனால்?'
இதுதொடர்பாக, விஜயனின் வழக்கறிஞர் ஆனந்த சீனிவாசனிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், சாட்சி விசாரணை என்ற பெயரில் நெறியாளர் விஜயனை காவல்துறை அலைக்கழித்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும், "ஜூலை 15ஆம் தேதி சாட்சி விசாரணைக்காக மாலையில் ஆஜராகுமாறு, குற்றவியல் தொடர்பான வழக்குகளில் சாட்சிகளை நேரில் அழைத்து காவல்துறை விசாரிப்பது தொடர்பான சட்டப்பிரிவின்கீழ் திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் கொடுத்தனர்" என்று ஆனந்த சீனிவாசன் கூறினார்.
அத்துடன், "காவல் நிலையத்தில் ஒரு மணிநேரம் விசாரித்துவிட்டு அனுப்பிவிட்டனர். சுமார் 45 நிமிடங்கள் கழித்து மீண்டும் அவரை அழைத்துள்ளனர். அன்றிரவு 12 மணி வரை விசாரித்துள்ளனர். மறுநாள் காலை வருமாறு கூறிவிட்டு செல்போனை வாங்கிக் கொண்டனர்," என்றும் அவர் தெரிவித்தார்.
வழக்கறிஞர் ஆனந்த சீனிவாசனின் கூற்றுப்படி, "காலை சுமார் 11 மணிக்கு அவர் காவல் நிலையம் சென்றபோது, மீண்டும் அதே கேள்விகளைக் கேட்டுள்ளனர். அன்றிரவு 7 மணியளவில், 'எப்போது அழைத்தாலும் வர வேண்டும்' எனக் கூறியுள்ளனர்."
"வழக்கில் தனக்கு என்ன தெரியுமோ அதைப் பற்றி காவல்துறை விசாரணையில் விஜயன் தெரிவித்துள்ளார். தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடும் திருநாவுக்கரசுவிடம் அவர் பேசியுள்ளதாக காவல்துறை கூறுகிறது" எனவும் அவர் தெரிவித்தார்.
"ஊடக நிறுவனங்களில் பணியாற்றுவோர் தேர்தல் வல்லுநர்களுடன் பேசுவது வழக்கமான ஒன்று" எனக் கூறிய ஆனந்த சீனிவாசன், "ஊத்தங்கரை எம்எல்ஏ-விடம் பேரம் பேசியதாகக் கூறப்பட்ட நேரத்தில் ஓரிரு தகவல்களை விஜயன் அனுப்பினாரா எனக் கேட்பதற்காக காவல்துறை அழைத்தது" என்றார்.
"திருநாவுக்கரசுவை விஜயன் தொடர்பு கொள்ளவில்லை. அவர்தான் இவருக்கு அழைத்துப் பேசியுள்ளார். விசாரணைக்காக காலையில் வந்த அவரை இரவு வரை அமர வைத்துள்ளனர். இதை விசாரணையாக எடுத்துக் கொள்ள முடியுமா?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
விஜயன் தரப்பு வழக்கறிஞர் எழுப்பும் குற்றச்சாட்டு தொடர்பாக, திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் அழகுவிடம் பிபிசி தமிழ் பேசியது.
"நெறியாளர் விஜயனை அலைக்கழிக்கவில்லை. அவரிடம் விசாரித்த பிறகு அனுப்பிவிட்டோம்" எனக் கூறிய அவர், "வழக்கின் மேலதிக தகவல்களைத் தற்போது கூற இயலாது" என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























