அரசு பள்ளி ஆய்வு சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா - தொடர் விமர்சனங்களை எதிர்கொள்ளும் தவெக அரசு

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"அரசு அலுவலகங்களுக்கு தேவையில்லாமல் சென்று ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது"

சிவகாசி அரசுப் பள்ளியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட ஆய்வு ஏற்படுத்திய சர்ச்சைக்கு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

மாணவர்களின் ஆங்கில திறன் தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா எழுப்பிய கேள்விகள், அரசியல்ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தின.

த.வெ.க அரசு ஆட்சியமைத்ததில் இருந்து அரசு அலுவலகங்களில் அக்கட்சியின் நிர்வாகிகள் 'ஆய்வு' என்ற பெயரில் ரீல்ஸ் எடுப்பதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

சிவகாசியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, கடந்த ஜூலை 2 ஆம் தேதி ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.

பள்ளியின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கல்விச் சூழல், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் தான் ஆய்வு செய்ததாக, தனது எக்ஸ் தள பக்கத்தில் அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டிருந்தார்.

வகுப்பறையில் சர்ச்சைக் கேள்வி

ஆனால், ஆய்வின்போது மாணவி ஒருவரிடம் அவர் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியவிதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒரு மாணவியிடம், "வாட் இஸ் யுவர் ஃபாதர்?" என ஆங்கிலத்தில் அமைச்சர் கீர்த்தனா கேட்டபோது, அவரால் பதில் அளிக்க முடியவில்லை. அருகில் இருந்த ஆசிரியையிடம், "நீங்கள் மாணவியிடம் உரையாடுங்கள்" என அவர் கூறுகிறார்.

"உன் அப்பா என்ன வேலை செய்கிறார்?" என ஆசிரியை ஆங்கிலத்தில் கேட்கவும் மாணவி பதில் அளித்தார். அப்போது பேசிய கீர்த்தனா, "இதையே கடைசி வரிசையில் அமர்ந்துள்ள மாணவர்களிடம் கேட்டுப் பாருங்கள்" எனக் கூறிவிட்டு, "இவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளியுங்கள். ஆங்கிலம் கற்பது தைரியத்தைக் கொடுக்கும்" என விளக்கம் அளித்தார்.

ஷார்ட் வீடியோ

'அமைச்சரின் பணி அதுவல்ல' - அன்பில் மகேஷ்

இந்தக் காணொளி இணையத்தில் வேகமாக பரவியது. அமைச்சரின் பேச்சு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டிருந்தார்.

அதில், 'தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல. அமைச்சரின் பணியும் அதுவல்ல' எனக் கூறியிருந்தார்.

'மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து கடைசி பெஞ்ச் என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்' என விமர்சித்திருந்தார்.

அடுத்த ஒரு பதிவில், ' அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளோம். ரீல்ஸை மட்டும் பார்க்காமல் மாணவர்களின் சாதனைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அரசுப் பள்ளிகள் மீதான வன்மம் இத்துடன் நிற்கட்டும்' எனவும் அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.

'அமைச்சருக்கு வகுப்பெடுக்க வேண்டும்' - உதயநிதி

இதே கருத்தை முன்வைத்த தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அரசுப் பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் அமைச்சர் ஒருவர், குழந்தையிடம் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார்.

'மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சருக்குத் தான் முதலில் வகுப்பெடுக்க வேண்டும்' எனவும் உதயநிதி விமர்சித்துள்ளார்.

"குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது" எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.

'யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை' - கீர்த்தனா

அரசுப் பள்ளி ஆய்வு ஏற்படுத்திய சர்ச்சைக்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.

'அரசுப் பள்ளி மாணவியை கேலி செய்ததாக பொய்யான கதையைப் பரப்புகிறார்கள். நானே ஓர் அரசுப் பள்ளி மாணவி. தமிழ்வழிக் கல்வியில் படித்தவள்' எனக் கூறியுள்ளார்.

சர்ச்சை காணொளி குறித்துக் கூறியுள்ள அமைச்சர் கீர்த்தனா, 'அந்த வீடியோவை நான் பார்க்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்தவை. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடம் கேளுங்கள்' எனக் கூறியுள்ளார்.

அமைச்சர் கீர்த்தனா மட்டுமல்லாமல் த.வெ.க அமைச்சர்களில் சிலர் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் மீது கடந்த சில வாரங்களாக ரீல்ஸ் தொடர்பான சர்ச்சைகள் அணிவகுத்துள்ளன.

தொடரும் ரீல்ஸ் சர்ச்சை

காஞ்சிபுரம், உத்தரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட தளவாரம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளிக்கு த.வெ.க ஒன்றிய செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றுள்ளனர்.

அங்குள்ள குழந்தைகளிடம், இவர் யார் என்று தெரிகிறதா என முதலமைச்சர் ஜோசப் விஜய் படத்தைக் காட்டி கேள்வி கேட்டுள்ளனர். அங்கிருந்த சுவரில் முதலமைச்சரின் படத்தை மாட்டியுள்ளனர். இந்தக் காணொளி இணையத்தில் வேகமாக பரவியது.

இந்தச் சம்பவத்துக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், வீ த லீடர் அமைப்பின் அண்ணாமலை உள்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, உத்தரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு சென்ற விருதுநகர் த.வெ.க மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல், அங்கு ஆய்வு செய்வதுபோல வீடியோ எடுத்து சினிமா பாடலை இணைத்து ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்த விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏவுமான செல்வம், கட்சியின் ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் மூன்று மாதங்களுக்கு முத்துவேலை தற்காலிக நீக்கம் செய்வதாக அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரீல்ஸ் எடுப்பதால் மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்களும் செவிலியர்களும் கடந்த ஜூலை 6 ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.

'யார் தவறு செய்தாலும் நடவடிக்கை' - அமைச்சர் நிர்மல்குமார்

த.வெ.க நிர்வாகிகளின் ரீல்ஸ் சர்ச்சை குறித்து, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேவையில்லாமல் அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து சொல்லப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

அனைத்து துறைகளிலும் சீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகக் கூறிய அவர், "அரசு மருத்துவமனைகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. தன்னிறைவு அடைந்த பிறகு ஆய்வு மேற்கொள்ளலாம். அதற்கு முன்னதாக ஆய்வு மேற்கொள்வதால் என்ன நடக்கப் போகிறது?" எனக் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் கீர்த்தனா குறித்த சர்ச்சைக்கு பதில் அளித்த சி.டி.ஆர்.நிர்மல்குமார், "சொந்த ஊரில் அரசுப் பள்ளி எப்படி உள்ளது என்பதை அவர் ஆய்வு செய்திருக்கலாம். அவ்வாறு ஆய்வு செய்து சரிசெய்வதற்காக சென்றால் தவறு இல்லை" என்கிறார்.

த.வெ.க நிர்வாகிகள் ரீல்ஸ் வெளியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, " அவர்களில் சில நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.

"முதலமைச்சர் அலுவலகத்தில் இதனை அனுமதிக்க மாட்டார்கள்" எனவும் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு