வயநாடு மண் சரிவு: 'இருவர் உயிரிழப்பு.. பலரை காணவில்லை' - என்ன நடக்கிறது?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார்

கேரள மாநிலம் வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

"மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்" என, அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி.அனில்குமார் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மெப்பாடி அருகில் உள்ள கல்லாடியில் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் அனஹம்பொயில் - மெப்பாடி சுரங்கப்பாதை சாலைத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமை காலை சுமார் 9 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதைக்கான சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பணிகள் நடைபெறும் மீனாட்சி பாலம் அருகே மண்சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவில் சிலர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை தொழிலாளர்களை சுரங்கப் பாதை பணிக்கு அழைத்து வந்த பேருந்து ஒன்று மண்ணில் புதைந்துள்ளது.

மண்சரிவை தொடர்பாக செவ்வாய்க் கிழமையன்று முதலமைச்சர் வி.டி.சதீஷன் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார். மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு வயநாடு மாவட்ட பொறுப்பு அமைச்சர் சித்திக்குக்கு முதலமைச்சர் வி.டி.சதீஷன் உத்தரவிட்டுள்ளார்.

மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நிலைமையை ஆராய்வதற்கு செல்லுமாறு அமைச்சர்கள் ஏ.பி.அனில்குமார், சித்திக் ஆகியோருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயம் அடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை மையம் கூறியுள்ளது.

"இதை இயற்கையான நிலச்சரிவு" எனக் கூற முடியாது என செய்தியாளர்களிடம் கூறிய வயநாட்டில் உள்ள கல்பெட்டா தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான சித்திக், "சுரங்கப் பாதை கட்டுமானப் பணிக்காக தோண்டி எடுக்கப்பட்ட மண் இடம்பெயர்ந்தது தான் காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.

சுரங்கப்பாதை பணிக்காக அகற்றப்பட்ட மண், கட்டுமானப் பகுதிக்கு அருகிலேயே குவித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் செய்தியாளர்களிடம் பேசும்போது அமைச்சர் சித்திக் குறிப்பிட்டார்.

கேரள முதலமைச்சர் தெரிவித்தது என்ன?

இதே தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த கேரள மாநில முதலமைச்சர் வி.டி.சதீஷன், சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் இருந்து மண்ணை அகற்றுமாறு பேரிடர் மேலாண்மை ஆணையமும் மாவட்ட ஆட்சியரும் கடந்த ஜூன் 20 ஆம் தேதியே உத்தரவிட்டிருந்ததாக குறிப்பிட்டார்.

"ஆனால், கட்டுமானப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மண்ணை அகற்றுமாறு ஆட்சியர் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றவில்லை" எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"முதற்கட்ட தகவலின்படி ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேரைக் காணவில்லை. காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன" எனக் கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

"மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு இரண்டு அமைச்சர்களை சம்பவ இடத்துக்கு அனுப்பியுள்ளோம். அங்குள்ள நிலைமையை முதலமைச்சர் அலுவலகம் தொடர்ந்து கண்காணிக்கும்" எனவும் கேரள முதலமைச்சர் கூறியுள்ளார்.

முன்னதாக, கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. சில பகுதிகளுககு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தன.

கனமழை எச்சரிக்கை காரணமாக திங்கள்கிழமை முதலே சுரங்கப்பாதை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக, கேரள மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 265 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

"சாலை சீரமைக்கப்பட்ட பிறகு மீட்புப் பணிகள் நிறைவடையும்" என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உள்ளூர் மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.

"கேரளாவுக்கு வெளியில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு வயநாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைக்கும் நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்" எனவும் முரளிதரன் குறிப்பிட்டார்.

'வயநாட்டுக்கு சிவப்பு எச்சரிக்கை'

வயநாட்டுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி நீதா கே.கோபால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த சில நாட்களாக வயநாட்டில் அதிக மழைப் பொழிவு இல்லை" எனக் கூறியுள்ளார்.

திங்கள்கிழமை முதல் மேற்கத்திய காற்று வலுவடைந்துள்ளதால் கேரளாவில் மலைப்பாங்கான பகுதிகள் அனைத்திலும் குறிப்பாக வயநாடு, மலப்புரம், இடுக்கி மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதாக நீதா கே.கோபால் தெரிவித்தார்.

ஆகவே, வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 7) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மண் சரிந்தபோது என்ன நடந்தது? நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?

வயநாடு மண்சரிவை நேரில் பார்த்த அஜ்மல் என்பவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, "முதலில் சிறிய சத்தம் கேட்டது. அனைவரும் கடையைவிட்டு வெளியே ஓடினோம். தொடக்கத்தில் மண்ணின் சிறிய பகுதி சரிந்து விழுவதைக் கண்டோம்" என்கிறார்.

வெளியில் வந்து பார்த்தபோது சிறிய நிலச்சரிவு, திடீரென பெரும் சரிவாக மாறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"அங்கிருந்த அனைவரையும் விலகிச் செல்லுமாறு எச்சரித்தோம். அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் தொழிலாளர்களும் மக்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து ஓடுமாறு கூறியபோதே, ஒரு டேங்கர் லாரி மண்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு எங்களை நோக்கி வந்தது" என்கிறார் அஜ்மல்.

சுமார் 10 முதல் 15 பேர் வரை மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என தான் கருதுவதாகக் கூறும் அஜ்மல், பாலத்தில் இருந்தவர்கள் ஆற்றில் விழுந்தார்களா அல்லது இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார்களா எனத் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.

18 பேரில் 7 பேர் நிலைமை என்ன?

மீட்புப் பணிகள் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "இன்று 18 பேர் வேலைக்குச் சென்றதாக மேற்பார்வையாளர் கூறியுள்ளார். அவர்களில் ஒன்பது பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன" எனக் கூறியுள்ளார்.

"மீதம் உள்ள ஏழு பேர் குறித்த எந்தத் தகவலும் இல்லை" எனக் கூறியுள்ள பாலகிருஷ்ணன், "மீட்புப் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பாலத்தின் வழியாக போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க வேண்டியுள்ளது" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு