You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப்: குளியலறையில் ரகசிய ஆவணங்களை வைத்த வழக்கில் தண்டனை வழங்க வாய்ப்பு உள்ளதா?
- எழுதியவர், நீதிமன்ற அறையிலிருந்து காய்லா எப்ஸ்டீன், மயாமியிலிருந்து மேடெலைன் ஹால்பர்ட், வாஷிங்டன், டிசியிலிருந்து ஹோலி ஹோண்டரிச்
- பதவி, பிபிசி செய்திகள்
- பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க அரசின் அதிமுக்கியமான ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை தவறாக கையாண்டதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அந்நாட்டு அரசு அவர் மீது வழக்கு தொடுத்துள்ள நிலையில், ஃப்ளோரிடா மாநிலத்தின் மயாமி நகர நீதிமன்றத்தில் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க வழக்கு விசாரணையின் போது, அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
அமெரிக்காவில் முன்னாள் அல்லது இந்நாள் அதிபர் மீது அரசு சார்பில் குற்றவியல் வழக்கு தொடுப்பது இதுவே முதல் முறை.
இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நீதிமன்ற விசாரணைக்கு வந்த டிரம்ப், அடர்த்தியான நிறத்தில் உடையணிந்து, சிவப்பு வண்ணத்தில் டை கட்டி, கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர், நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டெர் நகரில் உள்ள தமது கோல்ஃப் கிளப்புக்கு ஆதரவாளர்களை அழைத்திருந்த நிலையில் டிரம்ப் அங்கு புறப்பட்டுச் சென்றார்.
2024 அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள டிரம்ப், அமெரிக்க கொடிகளின் பின்னணியில் தோன்றி, அங்கு கூடியிருந்த ஆதரவாளர்களிடம் பேசிய போது, அரசு ரகசியங்களை வைத்திருக்க தமக்கு எல்லா உரிமைகளும் இருந்தன என்றும், இருந்தாலும் அனைத்து பெட்டிகளிலும் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை முழுமையாகப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
சட்டத்தை முழுமையாகப் பின்பற்றியதாகத் தெரிவித்த அவர், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் மற்றும் ஹிலாரி கிளின்டன் மீது எந்த வித ஆதாரங்களையும் காட்டாமல் பல குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் தெரிவித்தார்.
"நமது நாட்டிற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்நாளில் இது போன்ற உற்சாகமான வரவேற்பு" அளித்தற்கு மயாமி நகர மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, அங்கிருந்து புறப்படும் முன் அவரது சமூக வலைதளமான 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.
சட்டவிரோதமாக அரசு ரகசியங்களை எடுத்துச் சென்றுவிட்டு, அவற்றை அரசு மீண்டும் திரும்பப் பெறமுடியாத அளவுக்கு அழித்துவிட முயன்றதாக டிரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மயாமி நகரில் உள்ள ஒரு கட்டடத்தின் 13வது மாடியில் செயல்படும் இந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அவர் இருண்ட முகத்துடன் அமர்ந்திருந்தார். விசாரணை தொடங்கிய போது, அவர் குற்றமற்றவர் என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.
"எங்கள் கட்சிக்காரர் மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் நேரடியாகவும் உறுதியாகவும் மறுக்கிறோம்," என நீதிபதியிடம் வழக்கறிஞர் டாம் பிலான்ச்சி தெரிவித்தார்.
டிரம்ப்புடன் இணைத்து குற்றம் சாட்டப்பட்டுள்ள, அவரது முன்னாள் உதவியாளரான வால்ட் நௌட்டா மீது 6 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரும் டிரம்புடன் இந்த விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.
அதற்கு எதிரில் இருந்த அறையில் அமெரிக்க அரசின் சிறப்பு வழக்கறிஞரான ஜேக் ஸ்மித் மற்றும் அவருடைய குழுவினர் அனைவரும் அமர்ந்திருந்தனர். இந்த சிறப்பு வழக்கறிஞர் தான் கடந்த வாரம் டிரம்ப்புக்கு எதிரான வழக்கு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார்.
76 வயதான டிரம்ப் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும் நிலை எதுவும் இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவினர் நீதிபதி ஜொனாதன் குட்மேனிடம் தெரிவித்ததை அடுத்து, டிரம்ப்புக்கு பயணத் தடை எதையும் நீதிமன்றம் விதிக்கவில்லை.
ஆனால், டிரம்பின் முன்னாள் உதவியாளர் நௌட்டாவிடம் இந்த வழக்கு குறித்து நேரடியாக ஆலோசனை நடத்த டிரம்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திலிருந்து டிரம்பின் பாதுகாப்பு வாகனங்கள் புறப்பட்ட போது அங்கு கூடியிருந்த தமது ஆதரவாளர்களை நோக்கி அவர் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். இதற்கிடையே, டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், சிறைக் கைதியைப் போல் ஆடையணிந்த நபர் ஒருவர் பாதுகாப்பு வாகனங்களின் முன்னால் ஓட முயன்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து அகற்றினர். பெரும்பாலும் அமைதியாக இருந்த நாளில் இந்த ஒரு சம்பவம் மட்டுமே டிரம்ப்புக்கு எதிராக நடந்த மோசமான நிகழ்வாக கருதப்படுகிறது.
க்யூபா உணவு முறைகளுடன், மயாமி நகரில் உள்ள 'லிட்டில் ஹவானாவில்' செயல்படும் உணவகத்தில் கூடியிருந்த ஏராளமான டிரம்ப் ஆதரவாளர்கள், வரிசையில் நின்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இன்று டிரம்பின் 77வது பிறந்த நாள் என்பதால், அவர் தனது முக்கிய ஆதரவாளர்களுடன் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஏராளமானோர் இணைந்து 'ஹாப்பி பர்த்டே டூ யூ' பாடலைப் பாடினர்.
டொனால்ட் டிரம்பின் வழக்கறிஞர் அலினா ஹப்பா, நீதிமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, டிரம்ப் மீதான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கத்துடன் எழுப்பப்பட்டுள்ளதாக மீண்டும் மீண்டும் உறுதியாகத் தெரிவித்தார்.
"நாங்கள் இந்நாட்டின் வரலாற்றை மாற்றிவருகிறோம். ஆனால் எங்களுடைய அரசியல் எதிரிகள், க்யூபா, வெனிசூலா நாடுகளைப் போல் எதேச்சதிகாரம் மிக்கவர்களாகச் செயல்பட்டு எங்கள் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்," என்றார் அவர்.
"முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, இந்நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் இழைக்கப்பட்ட அநீதி என்பதே உண்மை," என அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.
விசாரணைக்கு டிரம்ப் வரும் போது புகைப்படம் எதுவும் எடுக்கப்படாது என்றும், அவரது விரல் ரேகைகள் பெறப்படும் என்றும் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு டிஎன்ஏ சோதனை நடத்தப்படும் என்றும் முன்னதாக நீதிமன்ற அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.
ஃப்ளோரிடாவில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிவரும் அய்லீன் கேனான் என்பவர் இந்த வழக்கை விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நீதிபதி டிரம்பால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் ஃளோரிடா எஸ்டேட்டான மார்-அ-லாகோ (Mar-a-Lago ) உல்லாச தங்குமிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை எஃப்.பி.ஐ. (FBI) அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
அமெரிக்கா மற்றும் பிறநாடுகளின் ஆயுத பலம் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை குறித்த ரகசிய தகவல்கள் அந்த ஆவணங்களில் இருந்தன. இதே போல் அமெரிக்கா மீது பிற நாடுகள் தாக்குதல் நடத்தினால் அதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது போன்ற ரகசிய திட்டங்கள் குறித்த தகவல்களும் அந்த ஆவணங்களில் இருந்தன.
டிரம்புக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமான சொகுசு வீட்டின் நடன அறை மேடைகள் மற்றும் குளியலறையில் இந்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எஃப்.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணைக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் அவரது உதவியாளரைப் பயன்படுத்தி ஒரு சதிச்செயலில் ஈடுபட்டுள்ளதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டிரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டுகள் அவருக்கு குடியரசுக் கட்சி வாக்காளர்களிடத்தில் எந்த ஒரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவில்லை.
அமெரிக்காவில் பிபிசிக்கு உதவும் சிபிஸ் செய்தி நிறுவனம் வாக்காளர்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில், டிரம்ப்பிடம் இருந்த ரகசிய ஆவணங்கள் நாட்டுக்கு ஆபத்து ஏற்படுத்தலாம் என்பதை விட டிரம்புக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதாகவே 76 சதவிகித வாக்காளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க சட்டங்களை அமல்படுத்துவதில் முக்கியத் துறையாக இருக்கும் நீதித்துறை, வெள்ளை மாளிகையின் ஆதிக்கத்துக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாமல், தனிப்பட்ட முறையில், சுதந்திரமாக இந்த விசாரணையை நடத்த வேண்டும் என சட்டம் சொல்கிறது. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீதும் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது. அவரும் அமெரிக்க அரசின் முக்கிய ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை சட்டவிரோதமாகக் கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கடந்த வாரம், "இந்த விஷயத்தில் நீதித்துறை எப்படிச் செயல்பட வேண்டும் என நான் ஒரு போதும் ஆலோசனை அளிக்கப்போவதில்லை," என அவர் தெரிவித்திருந்தார்.
டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டால் அவர் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படலாம் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த வழக்கில் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதைக் கடந்து, அதிபர் தேர்தலுக்காக டிரம்ப் தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக டிரம்ப் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளார். 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது, ஒரு ஆபாச நடிகைக்கு பெரும் தொகையைக் கொடுக்க, தமது தொழில் குறித்த ஆவணங்களில் பொய் தகவல்களைத் தெரிவித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் நகரில் டிரம்ப் மீது மற்றொரு வழக்கில் விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்