You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நான் கொந்தளித்த எரிமலை குழியில் விழுந்தேன்; காலுக்கு அடியில் எரிமலைக் குழம்பு கொதிக்க, ஓர் இரவைக் கடந்து உயிர் பிழைத்தேன்'
- எழுதியவர், ஏஸ்யா ஃபௌக்ஸ் & ஜூன் கிறிஸ்டி
- பதவி, பிபிசி அவுட்லுக்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
பறந்துகொண்டிருக்கும் ஒரு விமானம், கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலைக்குள் திடீரென மோதி விழுவது பேரபாயம்! ஆனால், அதைவிடவும் கொடூரமான ஒன்று விமானத்தில் இருந்தவர்களுக்கு நடக்க முடியுமா?
நடக்கலாம்! தங்கள் கால்களுக்குக் கீழே எரிமலை குழம்பு கொதித்துக் கொண்டிருக்க அந்த இரவை முழுமையாக அந்த எரிமலைக் குழிக்குள்ளேயே கழிப்பது அதைவிட மோசமானது.
அது 1992 நவம்பர் மாதம். டைட்டானிக் மற்றும் டெர்மினேட்டர் 2 போன்ற பிரமாண்ட வெற்றிப் படங்களின் விஷுவல் எஃபெக்ட்ஸ் குழுவில் இடம் பெற்றிருந்தவரான கிறிஸ் டட்டி, ஒரு புதிய ஹாலிவுட் படத்திற்கான காட்சிகளைப் படம்பிடிக்க அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் பிக் ஐலேண்ட் மீது பறந்து கொண்டிருந்தார்.
அவருடன் விமானி கிரேக் ஹோஸ்கிங் மற்றும் கேமரா உதவியாளர் மைக் பென்சன் ஆகியோர் உடன் சென்றனர்.
நீராவி அடர்ந்த மூடுபனிப் படலத்தை ஊடுருவிப் பறந்த அவர்கள், எதிர்பாராத விதமாகப் பாறை மீது மோதினர். அடுத்த கணமே என்ஜின் முற்றிலும் செயலிழக்க, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து அந்த எரிமலைக் குழிக்குள் தலைகுப்புற விழுந்தது.
"ஸ்லிவர்" திரைப்படத்தின் இறுதி காட்சிக்காக நாங்கள் பறந்து கொண்டே படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அது பிரமிக்க வைப்பதாக இருந்தது. எரிமலைக்குழம்பு, கிலாவேயா எரிமலையிலிருந்து கடற்கரையோரமாகக் கடலை நோக்கிப் பாய்ந்து, தண்ணீரைச் சந்திக்கும்போது, அங்கிருந்து மிகப்பெரிய வெள்ளை நிறப் புகை மண்டலம் மேலே எழுந்தது.
அந்த நொடியில் என் மனதில் தோன்றியது இதுதான்: "இதற்காக எனக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இதுதான் இதுவரை கிடைத்ததிலேயே சிறந்த வேலை."
அது ஒரு சனிக்கிழமை காலை நேரம். ஒரு புயல் நெருங்கிக் கொண்டிருந்ததால், வெளியே சென்று படப்பிடிப்பு நடத்த எங்களுக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேர அவகாசம் மட்டுமே இருந்தது.
அந்தத் திரைப்படத்தில் திட்டமிட்ட காட்சியமைப்பின்படி, முக்கிய கதாபாத்திரங்கள் எரிமலைக்கு மேலே பறந்து செல்லும்போது திரைக் காட்சி மெதுவாக மறையும்.
எடுத்த காட்சியைத் திரையில் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, 'நம்மால் இதைவிட இன்னும் அருமையாகப் படம்பிடிக்க முடியும்' என்று மைக் சொன்னார்.
அப்போதுதான் நிலைமை கைமீறிப் போனது.
எரிமலையை நோக்கி நாங்கள் மீண்டும் சென்றபோது, அதிலிருந்து புகை மூட்டம் வந்தது. நாங்கள் முன்னேற முன்னேற, பார்வை மறைக்கும் அளவுக்குப் புகை மிக அடர்த்தியானது.
ஹெலிகாப்டரின் பின்பகுதி ஆடியது; "அடக் கடவுளே!" என்று கிரேக் ஹோஸ்கிங் அலறினார்.
நான் மேலே நிமிர்ந்து பார்த்தேன், ஒரு மேகத்திற்குள் இருப்பதைப் போல சுற்றிலும் வெண்மையாகக் காட்சியளித்தது.
"நாம் கீழே விழப்போகிறோம்!" என்று அலறினார் கிரேக்.
"ஹெலிகாப்டரின் சுழலிறக்கை செங்குத்தான பாறைச் சுவரில் மோதி துண்டானது. இதனால் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, அப்படியே செங்குத்தாகக் கீழே விழுந்தது."
குலுங்கிய அதிர்வில் கிரேக் மற்றும் மைக் இருவரும் பலமாக தூக்கி வீசப்பட்டதால், ஒரு கணம் அவர்கள் என் கண்ணுக்கே தெரியவில்லை.
கீழே மோதிய வேகத்தில், அவர்கள் மீண்டும் வெளிப்புறமாக தூக்கி வீசப்பட்டனர். க்ரெய்க்கின் தலையில் பலத்த அடிபட்டு, கண்ணுக்கு அருகில் ஆழமான காயம் ஏற்பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.
நாங்கள் ஹெலிகாப்டரிலிருந்து வெளியே குதித்து சுற்றிலும் பார்த்தோம்; சுழலிறக்கையைக் காணவில்லை, அதன் வால் பகுதி உடைந்து தரையில் கிடந்தது.
அங்கே நச்சு வாயுக்களின் வீரியம் அதிகமாக இருந்ததால், மூச்சு விடுவதே பெரும் போராட்டமாக இருந்தது. கந்தகப் புகையால் இருமல் வெடித்து வர, கண்கள் எரிந்தன.
அதிர்ச்சியுடன் சுற்றும்முற்றும் பார்த்தபடி, "நாம் எரிமலைக்குள்ளா இருக்கிறோம்?" என்று அவர்களிடம் கேட்டேன்; கிரேக் அதை உறுதிப்படுத்தினார்.
விபத்தில் சிக்கியதை யாராவது அறிவார்களா?
அது ஒரு கால்பந்து மைதானத்தின் அளவை விட மிகவும் பிரமாண்டமாக விரிந்து கிடந்தது. எரிமலையின் உச்சி விளிம்பிலிருந்து சுமார் 100 மீட்டர் ஆழத்தில் நாங்கள் இருந்தோம். நாங்கள் வெளியேற ஒரு வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும்.
நாங்கள் மேலே ஏறத் தொடங்கினோம், ஆனால் அது மிகவும் கடினமாக இருந்தது.
உறைந்த லாவா பாறைகள் தொட்டதுமே நொறுங்கி விழுந்தன; அவை கத்தி முனையைப் போல மிகக் கூர்மையாக இருந்தன. உடைந்த கண்ணாடித் துண்டுகளின் மீது ஊர்ந்து செல்வதைப் போல இருந்தது அந்தப் பயணம்.
நான் பாதியளவு வரை ஏறியிருப்பேன், ஆனால் அதற்கு மேல் ஏறுவது சாத்தியமே இல்லை என்று தோன்றியது.
கீழே இருந்த மைக் மற்றும் கிரேக்கிடம், "நான் நிறுத்தியாக வேண்டும். என்னால் மேலே செல்ல முடியவில்லை, இது மிகவும் ஆபத்தானது" என கத்தினேன்.
வெறும் ஒரு மீட்டர் அகலமே கொண்ட ஒரு சிறிய பாறை விளிம்பில் நான் தஞ்சமடைந்தேன்.
"கொஞ்சம் பொறுங்கள், நாம் ஒரு திட்டம் தீட்ட வேண்டும்" என்றார் கிரேக்.
"நாம் விபத்தில் சிக்கியது யாருக்காவது தெரியுமா? இதற்குள் யாருக்காவது விஷயம் தெரிந்திருக்குமா?" என்று நான் அவரிடம் கேட்டேன்.
"வாய்ப்பே இல்லை, தெரிந்திருக்காது" என்று அவர் பதிலளித்தார்.
"சிறிது நேரம் ஓய்வெடுப்போம். நாம் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும்" என்று கிரேக் கூறினார்.
கிரேக் ஹெலிகாப்டருக்குத் திரும்பிச் சென்று, ரேடியோவைச் சரிசெய்து உதவி கோர முடிவு செய்கிறார்.
அதை இயங்கவைத்த அவர், அவசர உதவிக்கான சிக்னலான "மேடே! மேடே! மேடே!" என்று அலறத் தொடங்கினார்.
சிறிது நேரத்தில் அவருக்கு இருமல் ஏற்படுகிறது. "என்னால் மூச்சு விட முடியவில்லை, என்னால் மூச்சு விட முடியவில்லை!" என்று சொல்லிக் கொண்டே அவர் வாந்தி எடுத்தார், கடுமையாக இருமினார். அவரது நிலைமை மிகவும் மோசமானது.
சில ஹெலிகாப்டர்கள் எரிமலைக்கு மேலே பறக்கத் தொடங்கின; அதில் ஒன்றின் சத்தம் எங்களுக்குக் மிக அருகில் கேட்கிறது. ஆனால், அது அங்கிருந்து சென்றுவிட்டது. எங்கள் குரலுக்கு கிரெய்க் பதிலளிக்கவில்லை. அவருக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்றே நாங்கள் நினைத்தோம்.
100 மீட்டர் ஆழமான பாதாளம்
விரக்தி எங்களை அணுவணுவாகக் கொன்றது. அது அப்படியே ஒரு மரணத்தின் விளிம்பிற்கே சென்று திரும்பிய அனுபவம்.
ஆனால் மைக்கிற்கும் எனக்கும் இன்னும் ஒரு மெல்லிய நம்பிக்கை இருந்தது; ஏனெனில் நாங்கள் எங்கிருந்து புறப்பட்டோம் என்பது மீட்புக் குழுவினருக்கு நன்றாகத் தெரியும்.
சிறிது நேரத்தில், ஒரு தரைவழி மீட்புக் குழுவினர் எரிமலையின் மேல் விளிம்பிற்கு வந்து, மேலிருந்து எங்களை நோக்கி, "நாங்கள் உங்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம்!" என்று உரக்கக் கத்தினார்கள்.
ஒரு சிறு நம்பிக்கை எங்களுக்குள் துளிர்விட்டது.
"நாங்கள் உங்களுக்கு ஒரு கயிற்றைக் கீழே வீச முயற்சிக்கிறோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
காற்றில் கீழே கயிறு பறந்து வருகிறது, ஆனால் அது எங்களை விட்டு வெகு தொலைவில் விழுந்தது.
"வலதுபுறம் 6 மீட்டர் தள்ளி வீசுங்கள்" என்று நான் அவர்களை நோக்கி கத்தினேன். கயிறு பலமுறை மேலே உயர்த்தப்பட்டு கீழே இறக்கப்பட்டது, ஒவ்வொரு முறையும் அது எங்களை நெருங்குகிறது, ஆனாலும் தொடும் அளவுக்கு அருகில் வரவில்லை.
அதைப் பிடிப்பதற்கு நான் தாவி குதிக்க வேண்டும், ஆனால் கீழே 100 மீட்டர் ஆழமான பாதாளம் நேரடியாகக் காத்திருக்கிறது!
அப்போது அடர்ந்த மேகங்கள் எரிமலைக் குழிக்குள் நுழையத் தொடங்குகின்றன; மழை பெய்ய ஆரம்பிக்கிறது. மழை தீவிரமாக பெய்கிறது; அந்தக் கயிறையும் காணவில்லை; அவர்கள் அதை மீண்டும் கீழே வீசவே இல்லை.
அரை மணி நேரம் கடக்கிறது. ஒரு மணி நேரம் கடக்கிறது. மேலிருந்து எந்தச் சத்தமும் கேட்கவில்லை.
அங்கு என்ன நடக்கிறது என்றே எங்களுக்குப் புரியவில்லை.
இரவு நெருங்கிக் கொண்டிருந்தது; மேலும் ஒரு மணி நேரம் கடந்துவிட்டது, எனக்கு பதற்றம் அதிகரிக்கிறது.
"கடவுளே, இதெல்லாம் உண்மையாக இருக்கக்கூடாது. ஏதோ ஒரு பெரிய தவறு நடக்கிறது," என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்.
அந்த ஆட்கள் மேலிருந்து எட்டிப் பார்த்து மீண்டும் எங்களிடம் பேசினார்கள்: "நாளை விடியும் வரை மீட்புப் பணியை நிறுத்தி வைக்கிறோம். பதற்றப்படாமல் இருங்கள், காலையில் வந்து உங்களை மீட்கிறோம்."
"என்ன? செயல்பாட்டில் இருக்கும் எரிமலைக்குள் நாங்கள் இரவு முழுவதும் இருக்க வேண்டுமா?"
அவர்கள் மேலே கூடாரம் அமைக்கத் தொடங்கினார்கள்; ஒவ்வொரு மணி நேரமும் நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று பரிசோதிப்பதாகக் சொன்னார்கள். அவர்கள் விசில் அடிப்பார்கள், நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க நாங்களும் பதிலுக்கு விசில் ஊத வேண்டும்.
நானும் மைக்கும் அங்கேயே அமர்ந்துவிட்டோம். நான் ஒரு ஸ்வெட்டர் மற்றும் பேஸ்பால் தொப்பி அணிந்திருந்தேன். ஸ்வெட்டரைத் தலைக்கு மேல் இழுத்து, தொப்பியை மாட்டி, ஒரு சிறிய கூடாரம் போல அமைத்து... மூச்சை மெதுவாக விட்டு, முடிந்தவரை கண்களை மூடிக்கொண்டிருக்க முயற்சித்தேன்.
நான் அமர்ந்திருக்கும் சிறிய பாறை விளிம்பு நொறுங்கி கீழே விழுந்துவிடக் கூடாது என்று வேண்டிக்கொண்டு காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
அடுத்த 12 மணி நேரத்தை நாங்கள் எப்படி இங்கு உயிரோடு கழிக்கப் போகிறோம்? சுத்தமான காற்று இல்லை, சல்பர் டை ஆக்சைடைச் சுவாசிப்பதால் கண்கள் எரிகின்றன.
"அவ்வளவுதான் என் வாழ்க்கை இப்படித்தான் முடியப் போகிறது" என மனம் சோர்ந்துபோனது.
மைக் எனக்கு ஆறுதல் கூறினார். தான் அருகில் இருப்பதாகவும், தொடர்ந்து பேசிக்கொண்டே ஒருவருக்கொருவர் நம்பிக்கையளிப்போம் என்றும் கூறி என்னைத் தேற்றினார்.
இருட்டிவிட்டது. மழை பெய்து கொண்டிருக்கிறது, பலத்த காற்றும் வீசுகிறது. நான் நனைந்து தொப்பலாகிவிட்டேன். கடும் குளிரில் உறைகிறேன். என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உடல் நடுங்குகிறது.
எந்த நிலையிலும் என்னால் வசதியாக உட்கார முடியவில்லை. ஒருவேளை நான் தூங்கிவிட்டால், பாதாளத்தில் விழுந்துவிடுவேனோ என்ற அச்சத்தால் இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை.
மனதிற்குள் என் குடும்பத்தினரிடம் பேசி அனைவரிடமும் விடைபெற்றேன். கொடுமையான இந்த இரவை நான் கடந்து பிழைப்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை.
புகை மற்றும் நீராவிக்கு நடுவே எரிமலைக் குழம்பின் நிறங்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் மாறிக்கொண்டே இருந்தன.
எனக்கு மனப்பிரமை ஏற்பட்டதா என்று தெரியவில்லை, ஆனால் ஒரு விசித்திரமான சத்தம் கேட்கிறது. ஒரு வகை பழங்காலப் பறவையான டெரோடாக்டைல் அலறுவது போல அந்த எரிமலைக்குள்ளிருந்து சத்தம் கேட்கிறது. மீண்டும் மீண்டும் அந்தச் சத்தம் கேட்டது, மிகவும் பயங்கரமாக இருந்தது.
என்னைச் சுற்றிலும் பாறைகள் விழுந்து கொண்டிருக்கின்றன. செய்வதறியாது பயத்தில் கைகளை இறுக்கமாக மூடிக்கொண்டு, இறந்துவிடக் கூடாது என்ற ஒற்றைப் போராட்டத்தோடு விடியவிடிய அங்கேயே உறைந்துபோய் அமர்ந்திருந்தேன்.
பொழுது விடிந்தவுடனேயே மீட்புக்குழுவினர் மீண்டும் வந்தனர், ஆனால் மழை மேலும் தீவிரமடைந்து, புலப்பாடும் மிகவும் குறைந்துவிட்டது.
நண்பகல் நேரமாகிவிட்டது, நாங்கள் இன்னும் அங்கேயே தான் இருக்கிறோம். மேலிருந்து ஹெலிகாப்டர்கள் பறக்கும் சத்தமும், தரைவழி மீட்புக்குழுவினரின் குரல்களும் கேட்கின்றன. ஆனால் விளிம்பில் ஒரு பெரிய பிளவு இருந்ததால், மேலே ஏறினால் மண் சரிவு ஏற்படுமோ என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது.
என் தொண்டை வீங்கிவிட்டது. என்னால் எச்சிலைக் கூட விழுங்க முடியவில்லை. கண்களில் எரிச்சல்... இருந்தாலும் நான் எழுந்து நின்று மேலே ஏறுவதற்கு ஒரு வழியைத் தேடுகிறேன்.
"எனக்கு ஒரு தெளிவான பாதை கிடைத்தால், நான் மேலே ஏறிவிடுவேன். என்னால் இன்னொரு இரவு இங்கே இருக்க முடியாது" என்று நான் சொன்னதும், "வேண்டாம் மேலே ஏறாதே. அவர்கள் நம்மைக் காப்பாற்றிவிடுவார்கள்" என்று ஆசுவாசப்படுத்தினார்.
திடீரென்று மேகங்கள் விலகி, சூரிய ஒளி அந்தச் செங்குத்துப் பாறையின் மீது விழுகிறது; எனக்கு வெளியேறுவதற்கான ஒரு பாதை தெரிகிறது. நான் மேலே ஏறத் தொடங்குகிறேன். ஆனால் உச்சியைக் அடைந்ததும் பிடித்துக் கொள்வதற்கு அங்கு எதுவுமே இல்லை. சொல்லப்போனால், கடைசி ஒன்றரை மீட்டர் தூரம் வெறும் தட்டையான சரளைக் கற்கள் மட்டுமே இருந்தன.
நான் கீழே பார்க்கிறேன், மேலே பார்க்கிறேன்: "கடவுளே! இப்போது என்ன செய்வது?" என்று மலைத்துப்போனேன்.
என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, என்னால் மீண்டும் கீழே இறங்கவும் முடியாது.
நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனா? அல்லது இறந்துவிட்டேனா?
அந்தச் செங்குத்துப் பாறை விளிம்பைப் பிடித்தபடி, மேலே ஏறுவதற்கு ஒரே வழி என் கைகளை அந்த சரளைக் கற்களுக்குள் பலமாக ஊன்றுவதுதான் என்று உணர்கிறேன். ஆனால் அது உடைந்த கண்ணாடிகளுக்குள் கைகளை விடுவது போல் இருந்தது.
நான் என் வலது கையை முழங்கை வரை உள்ளே விடுகிறேன், பிறகு இடது கையையும் விட்டு, மூன்று வரை எண்ணுகிறேன்.
உடல்ரீதியாக அதை நான் எப்படிச் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் சுழன்று தரையில் மல்லாக்காக விழுவதை உணர்கிறேன். ஒரு நொடி அப்படியே படுத்துக் கொண்டு யோசிக்கிறேன்: நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனா? அல்லது இறந்துவிட்டேனா?
என்னால் சரியாக மூச்சுவிட முடியவில்லை; கண்கள் எரிந்துகொண்டிருந்தன. ஆனால் நான் வெளியே வந்துவிட்டேன்.
நான் அந்த எரிமலைக் கூம்பின் பின்புறமாக ஓடிச் சென்று, அந்தக் கயிற்றைப் பார்க்கிறேன். மைக்கை மேலே இழுக்கும் அளவுக்கு எனக்கு பலமில்லை, அதனால் அவர் அங்கேயே இருக்கிறார் என்பதைக் காட்ட ஒரு அடையாளமாக அந்தக் கயிற்றை வைக்கிறேன்.
மீட்புக் குழுவினரின் முகாமை நான் கண்டுபிடித்துவிட்டேன்; அங்கே சில கூடாரங்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மட்டுமே இருந்தன, ஆனால் அங்கு யாருமே இல்லை.
யாராவது ஒருவரைச் சந்திக்கும் வரையிலோ அல்லது யாராவது என்னைக் கண்டுபிடிக்கும் வரையிலோ நான் நடந்துகொண்டே இருக்கப்போகிறேன்.
அதனால் நான் நடக்கத் தொடங்குகிறேன். ஒரு கட்டத்தில் ஒரு ஹெலிகாப்டர் காற்றில் மிதப்பதைக் காண்கிறேன், அவர்களும் என்னைப் பார்த்துவிட்டார்கள்.
அவர்கள் என்னை நோக்கி ஓடி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் என் கையைத் தொட்ட அந்தத் தருணத்தில், என் உடல் முழுவதும் தளர்ந்துபோய் செயலிழக்கிறது—ஏதோ ஒரு ஜெல்லிப் பையைப் போல நான் ஆகிவிட்ட உணர்வு. நான் தரையில் சரிந்து விழுகிறேன். என் உடலின் அட்ரினலின் (உற்சாகம் மற்றும் பதற்றத்தைத் தரும் வேதிப்பொருள்) அளவு சட்டெனக் குறைகிறது.
அவர்கள் என்னை ஹெலிகாப்டரில் பாதுகாப்பாக அமரவைத்து, அங்கிருந்து முகாமிற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கிருந்த ஒருவர் என் முதுகில் தட்டிக் கொடுத்தார். நான் அடக்க முடியாமல், நெஞ்சின் ஆழத்திலிருந்து கதறி அழத் தொடங்கினேன்.
"நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். நீங்கள் பிழைத்துவிட்டீர்கள்."
ஹெலிகாப்டரை நோக்கி ஓடி வந்த முதல் நபர் எங்கள் விமானி கிரேக் தான்.
"கிரேக், நீ உயிரோடு இருக்கிறாயா! நீ இறந்துவிட்டாய் என்று நாங்கள் நினைத்தோம்."
கிரேக் எப்படியோ வெளியேற முடிந்திருக்கிறது. எரிமலையின் அடிவாரத்தில், அதாவது அவர் பதுங்கியிருந்த இடத்திற்கு அருகில் வந்த ஹெலிகாப்டரில் ஏறித் தப்பிக்க அவரால் முடிந்தது.
ஒரு நாள் கழித்து மைக் மீட்கப்பட்டார். அப்போதுதான் அவர் பாறையில் தன் மனைவிக்காக, "நான் உன்னை நேசிக்கிறேன்" என்ற செய்தியைப் செதுக்கிக் கொண்டிருந்தார்.
இந்தக் கட்டுரை பிபிசி வேர்ல்ட் சர்வீஸின் 'அவுட்லுக்' வானொலி நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு