'இதய குறைபாடு' - பெற்றோரின் கருக்கலைப்பு கோரிக்கையை மறுத்து குழந்தை பெற்றெடுத்த வாடகை தாய் நீதிமன்றத்தை நாடியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மேட்லின் ஹால்பர்ட்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தங்களுக்கு குழந்தையைப் பெற்றுத்தருவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட பெற்றோர் கருக்கலைப்பு செய்யக் கோரியதை மறுத்த வாடகைத் தாய், குழந்தை 'யார் பாதுகாப்பில் இருப்பது’ என்ற உரிமை தொடர்பான இந்த விவகாரத்தில் தலையிடுமாறு அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தம்பதி ஓமர் அகமது மற்றும் நவ்ஷீன் கில்கருக்கு குழந்தையின் மீதான பெற்றோர் உரிமையை வழங்கிய முந்தைய நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு கோரி, அவசர மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் மெக்கென்னா வெஸ்ட் தாக்கல் செய்துள்ளார்.
20 வார கர்ப்பகால ஸ்கேனில் கருவுக்கு கடுமையான இதயக் குறைபாடு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, கருக்கலைப்பு செய்யுமாறு வெஸ்டிடம் அகமது மற்றும் கில்கர் கேட்டிருந்தனர்.
ஆனால், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுள்ள வெஸ்ட், கருக்கலைப்புகள் ஏறத்தாழ முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ள டெக்சாஸுக்குச் சென்று குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அகமது மற்றும் கில்கரின் வழக்கறிஞர்களிடம் பிபிசி கருத்துக் கேட்டுள்ளது.
கடந்த மாதம் பிறந்த அந்தக் குழந்தைக்கு ஹைப்போபிளாஸ்டிக் லெஃப்ட் ஹார்ட் சிண்ட்ரோம் எனப்படும் இதயக் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனால் இதயத்தின் இடதுபுறப் பகுதியால் உடலின் மற்ற பகுதிகளுக்குப் போதுமான அளவு ரத்தத்தைச் செலுத்த முடியாது.
இந்தக் குறைபாட்டுக்கு பெரும்பாலும் பல அறுவை சிகிச்சைகள் தேவைப்படும். ஆனால், அவை முழுமையான குணமளிக்கும் சிகிச்சைகள் அல்ல. இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் பல்வேறு உடல்நலச் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.
வெஸ்ட் டெக்சாஸுக்குச் சென்ற பிறகு, அந்த மாகாணத்தின் குடியரசுக் கட்சி அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் இந்த வழக்கில் தலையிட்டார். குழந்தைக்கு அந்த மாகாணத்திலேயே மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்று கோரி அவசர நீதிமன்ற உத்தரவையும் அவர் பெற்றார். குழந்தை பிறந்த சிறிது காலத்திலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்படி, மருத்துவ சிகிச்சைக்கான வாய்ப்புகள் இருப்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, இந்த குழந்தையை" உயிருடன் வைத்திருக்க வேண்டும் என விரும்பியதால், கருக்கலைப்பு செய்யுமாறு தம்பதி விடுத்த கோரிக்கைகளை மறுத்ததாக வெஸ்ட் தெரிவித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான இதயக் குறைபாடு இருப்பது தெரிந்த பிறகு குழந்தையைக் கருக்கலைக்க அவர்கள் கேட்டதால், அந்தக் குழந்தைக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை அவர்கள் வழங்க மாட்டார்கள் என்று அஞ்சுவதாக வெஸ்ட் கூறியுள்ளார். எனவே, குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்ற உரிமை உயிரியல் பெற்றோருக்கு வழங்கப்படக் கூடாது என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
முந்தைய நீதிமன்ற விசாரணையின்போது, இந்தக் குழந்தைக்கு ரூமி என்று பெயரிட்டுள்ளதாகவும், "அது எங்கள் குழந்தை. எங்கள் வாழ்க்கையின் அன்பு" என்று கில்கர் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
வெஸ்ட் தங்களிடம் தெரிவிக்காமல் டெக்சாஸுக்குச் சென்றதாகவும், குழந்தையின் மருத்துவத் தகவல்களைத் தாங்கள் பெற முடியாதபடி செய்ததாகவும் உயிரியல் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கலிஃபோர்னியா நீதிமன்றம் அகமது மற்றும் கில்கருக்கு குழந்தையின் மீதான பெற்றோர் உரிமையை வழங்கியது. அதே நேரத்தில், வெஸ்ட் குழந்தையைச் சந்திக்கத் தடை விதித்து டெக்சாஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த மாதம், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தம்பதியின் வழக்கறிஞர், குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், "சாத்தியமான சிக்கல்களால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது" என்றும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் தலையிடாவிட்டால், குழந்தையின் உடல்நிலை குறித்த தகவல்களைத் தொடர்ந்து பெறும் வாய்ப்பைத் தான் இழந்துவிடுவேன் என்று வெஸ்ட் தெரிவித்துள்ளார்.
மேலும், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தம்பதி அந்தக் குழந்தையை ஹாஸ்பிஸ் பராமரிப்பில் வைக்கக்கூடும் என்றும் வெஸ்டின் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































