இமயமலையில் பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன - இந்திய பொருளாதாரத்திற்கு என்ன ஆபத்து?

பட மூலாதாரம், Nur Photo via Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்தியா செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
புதிய ஆய்வொன்றின் படி, பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது, பனிப்பாறை ஏரிகள் அதிக நிலையற்றதாக மாறுவது மற்றும் மலைப்பகுதிகளில் கண்காணிப்பில் பெருகிவரும் இடைவெளி ஆகிய காரணங்களால் இமயமலை ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கி வருகிறது.
நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட பேரழிவான வெள்ளப்பெருக்கிற்கு பின்னர் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. அந்த வெள்ளப்பெருக்கு 1,300-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் பரவலான சேதத்தையும் ஏற்படுத்தி, வேகமாக மாறிவரும் இமயமலைச் சூழலின் அபாயங்களை வெளிப்படுத்தின.
உலகளாவிய ஆலோசனை நிறுவனமான சிஸ்டமிக், ஒருங்கிணைந்த மலைப்பகுதி முன்னெடுப்புடன் (Integrated Mountain Initiative) இணைந்து தயாரித்த இந்த அறிக்கை, ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டிற்கான அனைத்துலக மையம் (ஐசிமோட்) மற்றும் ஜி. பி. பந்த் தேசிய இமயமலைச் சுற்றுச்சூழல் நிறுவனம் ஆகியவற்றின் தொழில்நுட்ப பங்களிப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் படி, இமயமலைப் பனிப்பாறைகள் தற்போது ஒரு தசாப்தத்திற்கு முன்பைவிட 65% அதிக வேகத்தில் தங்களது நிறையை இழந்து வருகின்றன.
இருப்பினும், இமயமலை-காரகோரம் பிராந்தியத்தில் உள்ளதாக மதிப்பிடப்படும் சுமார் 40,000 பனிப்பாறைகளில் வெறும் 21 மட்டுமே விரிவாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணிக்கப்படுகின்றன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த கண்காணிப்பில் உள்ள இடைவெளி முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் நிலப்பரப்பு மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.
பனிப்பாறைகள் உருகும் போது, பாறை மற்றும் பனிக்கட்டியின் நிலையற்ற படிவுகளால் தடுத்து நிறுத்தப்பட்ட, விரிவடைந்து வரும் ஏரிகளை அவை விட்டுச் செல்லக்கூடும். அதே சமயம், புவி வெப்பமயமாதல் நிரந்தரப் பனியை நிலைகுலையச் செய்கிறது. வெப்பநிலை உயரும்போது உருகக்கூடிய, நிரந்தரமாக உறைந்த பகுதிகள் மற்றும் உயரமான மலைச் சரிவுகள் ஆகியவை தொடர் ஆபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

பட மூலாதாரம், Reuters
இந்த அபாயத்தின் அளவை உணர்த்தும் ஆதாரங்கள் இந்தியாவிடம் ஏற்கனவே உள்ளன.
இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 18% மட்டுமே இமயமலைப் பகுதியாக இருந்தாலும், நாட்டில் நிகழும் பேரிடர்களில் சுமார் 35% இந்தப் பிராந்தியத்திலேயே நிகழ்கின்றன என்று அறிக்கை கூறுகிறது.
2025-ஆம் ஆண்டு இந்திய இமயமலைப் பகுதியில் உள்ள 189 அதிக ஆபத்தான ஏரிகள் குறித்த அறிவியல் மதிப்பீட்டைத் தொடர்ந்து, அவற்றில் 56 பனிப்பாறை ஏரிகள் "மிக அதிக ஆபத்தானவை" என வகைப்படுத்தப்பட்டதாக ஜூலை மாதத்தில் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இந்திய இமயமலை நதிப்படுகைப் பகுதிகளில் 10 ஹெக்டேருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட 2,485 பனிப்பாறை ஏரிகளை மத்திய நீர்வள ஆணையம் கண்காணித்து வருவதாகவும் அரசு தெரிவித்தது.
பனிப்பாறை ஏரிகள் தங்களது இயற்கை தடுப்புகளை உடைத்து வெளியேறும்போது என்ன நிகழக்கூடும் என்பதற்கான அழிவூட்டும் எடுத்துக்காட்டுகளை இமயமலை பகுதிகள் ஏற்கனவே கண்டுள்ளன.
2023-ஆம் ஆண்டு சிக்கிமில் ஏற்பட்ட பனிப்பாறை ஏரி உடைப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழந்தனர். சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் பரவலாக சேதமடைந்தன. 2021-ஆம் ஆண்டு உத்தரகண்டில் ஏற்பட்ட இதேபோன்ற பேரிடரில், ரிஷிகங்கா மற்றும் தௌலிகங்கா பள்ளத்தாக்குகள் வழியாகப் பெருவெள்ளம் பாய்ந்ததால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஆனால் இந்த அபாயம் வெறும் பெருவெள்ளங்களுக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை.
இமயமலைகள் தென் ஆசியா முழுவதும் பல கோடி மக்களை வாழவைக்கும் நதிகளுக்கு நீர் வழங்கும் மிகப்பெரிய இயற்கை நீர்வள அமைப்பாகும். ஐசிமோடின் தகவலின்படி, பெரும்பாலான இந்துகுஷ்-இமயமலை நதிப்படுகைகளில் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் "உச்ச நீரோட்ட நிலை" (பீக் வாட்டர்) எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பனிப்பாறைகள் உருகி வரும் நீரின் ஓட்டம் அதிகபட்ச அளவை எட்டிய பின்னர், பனிப்பாறைகள் நிறையை இழப்பதால் அது குறையத் தொடங்கும் தருணம்.
இந்த புதிய ஆய்வு, அதற்கு ஒரு மிகப் பெரிய பொருளாதார மதிப்பீட்டை வழங்குகிறது.
இமயமலை நீர்வளம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20% பங்கிற்கு ஆதாரமாக இருப்பதாக அது மதிப்பிடுகிறது. கோதுமை, அரிசி, தேயிலை, நீர்மின் உற்பத்தி மற்றும் யாத்திரை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் இதனை சார்ந்துள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
"இமயமலை மூன்றாவது துருவம்," என்று லண்டன் பொருளியல் பள்ளியின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான கிரான்தம் ஆய்வு நிறுவனத்தின் தலைவரான பொருளாதார நிபுணர் லார்டு நிக்கோலஸ் ஸ்டெர்ன் கூறினார். "ஆர்க்டிக் அல்லது அண்டார்டிகாவைப் போல அல்லாமல், இந்தத் துருவத்தின் கீழ் பல கோடி மக்கள் வாழ்கின்றனர்."

பட மூலாதாரம், Corbis via Getty Images
"இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் முக்கியமான அடிப்படை உள்கட்டமைப்பாகும்," என்று அவர் கூறினார். இதைத் தாங்கி நிற்கும் சூழலியல் அமைப்பு "ஒரு திருப்புமுனையை நெருங்கிக் கொண்டிருக்கிறது" என்றும் அவர் எச்சரித்தார்.
பனிப்பாறை இழப்பை ஏற்படுத்தும் அனைத்து காரணிகளும் அந்தப் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை அல்ல.
சிஸ்டமிக்கின் ஆய்வின்படி, இமயமலைப் பனிப்பாறை உருகலில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கருப்பு கார்பனால் ஏற்படுகிறது. இதில் பெரும்பாலானது சமவெளிப் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளிலிருந்து உருவாகிறது. பனி மற்றும் உறைபனியின் மேல் படியும் கரித்துகள்கள் அதிக சூரிய ஒளியை உறிஞ்சி, உருகும் வேகத்தை அதிகரிக்கின்றன.
உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வைப் போல அல்லாமல், கருப்பு கார்பன் மாசுபாடு என்பது இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் நேரடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒன்றாகும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
"இமயமலை ஒரு திருப்புமுனையை நெருங்கிக் கொண்டிருக்கிறது, லட்சக்கணக்கான உயிரும் வாழ்வாதாரங்களும் கேள்விக்குறியாகியுள்ளன," என்று சிஸ்டமிக் நிறுவனத்தின் மூத்த இயக்குநரும் அறிக்கையின் முதன்மை ஆசிரியருமான ஆருஷி சோப்ரா கூறினார். "பனிப்பாறைகள் ஒரு தசாப்தத்திற்கு முன்பைவிட இப்போது வேகமாக உருகுகின்றன."
அறிக்கை, முன்னுரிமை தரப்பட வேண்டிய 10 மாற்றங்களை முன்மொழிகிறது. அவை கருப்பு கார்பன் வெளியீடுகளைக் குறைப்பது மற்றும் பனிப்பாறை கண்காணிப்பை விரிவுபடுத்துவது முதல் பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் மலைப்பகுதிகளில் சுற்றுலா மேம்படுத்தப்படும் முறையை மாற்றுவது வரை பரவலானவையாக உள்ளன.
அவற்றில் ஒரு முக்கிய முன்னுரிமை பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்துவதாகும். அபாயங்கள் தோன்றும் போது வெளியேற்ற நடவடிக்கைகள் முதல் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பது வரை என்ன செய்ய வேண்டும் என்பதை அரசுகள் முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும் என அறிக்கை கூறுகிறது.
மற்றொரு முன்னுரிமை சுற்றுலாவை மறுபரிசீலனை செய்வதாகும். அறிக்கையின்படி, இந்திய இமயமலைப் பகுதிக்கு ஆண்டுதோறும் சுமார் 40 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதை விட, உள்ளூர் அளவில் தக்கவைக்கப்பட்டு மறுமுதலீடு செய்யப்படும் மதிப்பை உருவாக்குவதே இலக்காக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஐசிமோடின் தலைமை இயக்குநர் பெமா க்யாம்ட்ஷோ, அபாயங்கள் மேலும் சிக்கலானவையாக மாறிவருவதாகக் கூறினார்.
"பனிப்பாறைகள் உருகுகின்றன. பெர்மாஃப்ராஸ்டும் உயரமான மலைச் சரிவுகளும் அதிகளவில் நிலையற்றதாக மாறுகின்றன. அவற்றிற்கு கீழே உள்ள பகுதிகளில் உள்ள சமூகங்களும் உள்கட்டமைப்புகளும் சிக்கலான மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய அபாயங்களால் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றன," என்று அவர் கூறினார்.
இந்த அபாயங்கள் இமயமலைகளின் மீது வரையப்பட்ட தேசிய எல்லைகளுடன் நின்றுவிடுவதில்லை. "இத்தகைய அபாயங்கள் தேசிய எல்லைகளை பொருட்படுத்துவதில்லை; எந்த ஒரே நாடும் தனியாக அவற்றைச் சமாளிக்க முடியாது," என்று க்யாம்ட்ஷோ கூறினார்.
இதனால் எல்லை தாண்டிய கண்காணிப்பு, பகிரப்பட்ட தகவல்கள் மற்றும் முன்எச்சரிக்கை அமைப்புகள், தாங்குதிறனை மேம்படுத்தும் கூட்டு முதலீடுகள் ஆகியவை அவசரத் தேவையாகி வருகின்றன. இது உயிர்களைக் காப்பதற்காக மட்டுமல்ல; மலைப்பகுதிகளைச் சார்ந்திருக்கும் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்பதற்கும் அவசியமானதாகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































