சுதந்திரத்துக்கு பின் மிகப்பெரிய தனியார் தங்கச் சுரங்கம் - இந்தியாவின் தேவையை எந்த அளவுக்கு பூர்த்தி செய்யும்?

- எழுதியவர், அமரேந்திர யார்லகட்டா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
தங்கச் சுரங்கம் என்றவுடனேயே கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் (கேஜிஎஃப்) நினைவுக்கு வரும்.
ஆனால், இப்போது இந்தியாவில் மற்றொரு 'தங்கச் சுரங்கத்தில்' பணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஜொன்னகிரி தங்க வயல்களில் இருந்து தற்போது வணிகத் தேவைகளுக்காக தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு செயல்பட்டு வரும் 'முதலாவது மிகப்பெரிய தனியார் தங்கச் சுரங்கம்' என்று இந்தியப் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜியோ மைசூர் சர்வீசஸ் (இந்தியா) பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் இங்கு தங்கம் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

நான்கு பிளாக்குகளில் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது
ஜொன்னகிரி பகுதி ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தில் உள்ளது. இங்குள்ள ஜொன்னகிரி, பகிடிராயி, எர்ரகுடி ஆகிய கிராமங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அபரிமிதமான தங்கத் தாது இருப்பு இருப்பதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.
ஜொன்னகிரியில் தோனா டெம்பிள் பிளாக், ஈஸ்ட், நார்த், சவுத்.. என நான்கு பிளாக்குகளில் தாது இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் ஓய்வுபெற்ற துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.ஆனந்த மூர்த்தி பிபிசியிடம் தெரிவித்தார்.
"நாங்கள் சுமார் பத்தாண்டுகளாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். பொதுவாக தங்கம்.. வெள்ளியுடன் கலந்து இருக்கும். ஜொன்னகிரியில் முழுமையாக தங்கத் தாது மட்டுமே உள்ளது. சல்பைடுகளும் கூட மிகவும் குறைந்த அளவிலேயே கண்டறியப்பட்டுள்ளன" என்று ஆனந்த மூர்த்தி விளக்கினார்.

ஜொன்னகிரியில் எவ்வளவு தங்கம் உள்ளது?
துளையிடுதல் மற்றும் மதிப்பீட்டிற்குப் பிறகு, கிழக்கு பிளாக்கில் 6.8 டன் தங்கம் இருப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக ஜியோமைசூர் சர்வீசஸ் நிறுவனம் கூறுகிறது.
இந்த பிளாக்கில், 597.82 ஹெக்டேர் (1477.24 ஏக்கர்) சுரங்கக் குத்தகையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.
டெக்கான் கோல்டு மைன்ஸ் லிமிட்டெட் என்ற மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து ஜியோமைசூர் சர்வீசஸ் நிறுவனம் ரூ.405 கோடி முதலீட்டில், இங்கு பணியில் ஈடுபட்டு வருகிறது.
கிழக்கு பிளாக்கிலேயே ஒரு டன் தாதுவிலிருந்து 1.78 கிராம் தங்கம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. சில மாதிரிகளில் 3.5 கிராம் வரை முடிவுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மொத்தம் நான்கு பிளாக்குகளையும் சேர்த்து ஜொன்னகிரி பகுதியில் இந்தியப் புவியியல் ஆய்வு மையம் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசின் மதிப்பீட்டின்படி, 50 டன் தங்கம் இருப்பு இருப்பதாக ஆந்திரப் பிரதேச சுரங்கத் துறையின் முதன்மைச் செயலாளர் முகேஷ் குமார் மீனா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இதே விஷயத்தை ஜொன்னகிரி தங்கச் சுரங்கத் தொடக்க விழாவின் போது ஜூன் 24 அன்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.

கிழக்கு பிளாக்கில் சுரங்கப் பணிகள்
ஜியோமைசூர் சர்வீசஸ் நிறுவனம் 5.97 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுரங்கக் குத்தகைக்காக 2006-இல் அன்றைய ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச அரசிடம் விண்ணப்பித்தது.
அதன் பிறகு அரசின் அறிவுறுத்தலின்படி, 2008-இல் இந்தியச் சுரங்கப் பணியகத்திடம் (இந்தியன் பியூரோ ஆஃப் மைன்ஸ்) சுரங்கத் திட்டத்தைச் சமர்ப்பித்தது. அதே ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று அந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2043 வரை செல்லுபடியாகும் வகையில் 2010-இல் மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது. ஆந்திரப் பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்தும் அனுமதிகள் கிடைத்தன.
தற்போது ஓர் ஆலையின் மூலம் உற்பத்தி நடைபெற்று வரும் வேளையில், விரைவில் இரண்டாவது ஆலையும் செயல்பாட்டிற்கு வரும் என்று ஜியோமைசூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரபாகரன் தெரிவித்தார்.
"சுமார் 800 மீட்டர் ஆழம் வரை தங்கத் தாது இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பல்வேறு முறைகளில் சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது" என்று அவர் கூறினார்.
முதலில் கிழக்கு பிளாக்கில் சுரங்கப் பணிகள் தொடங்கியுள்ள பின்னணியில் அதன் சிறப்பம்சங்களை பிபிசியிடம் விளக்கினார் இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் ஓய்வுபெற்ற துணை இயக்குநர் ஜெனரல் ஆனந்தமூர்த்தி.
"இது ஒரு பெரிய சுரங்கம் என்பதை எங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்தோம். 7.93 மில்லியன் டன் தங்கத் தாது இருப்பதாகக் கண்டறிந்துள்ளோம். எங்கள் ஆராய்ச்சியில் 180 மீட்டர் வரை கண்டறியப்பட்ட போதிலும், இன்னும் ஆழத்தில் கூடுதல் தாது இருப்பதற்கான வாய்ப்புள்ளது" என்று அவர் கூறினார்.
"ஜொன்னகிரியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தில் இருந்து முதல் 400 கிலோவிற்கு ரூ.57 கோடியும், 900 கிலோவிற்கு ரூ.144 கோடி வரையிலும் ராயல்டி வடிவில் ஆந்திரப் பிரதேச அரசுக்கு வருவாய் கிடைக்கவுள்ளது" என்று ஆந்திரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

1914-இல் முதன்முறையாக ஆராய்ச்சிகள்
ஜொன்னகிரியில் தங்கத் தாது இருப்பு இருப்பதாகப் பழங்காலம் முதலே பேச்சு வழக்கில் உள்ளது.
இந்தியப் புவியியல் ஆய்வு மையத்திடம் உள்ள தகவலின்படி, ஜொன்னகிரியில் தங்கம் இருப்பை முதன்முறையாக 1914-இல் அப்போதைய இந்தியாவில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரிட்டிஷ் நிறுவனமான ஈஸ்டர்ன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனைச் சேர்ந்த போஸ்வொர்த் ஸ்மித் கண்டறிந்தார்.
இங்குள்ள கவனிகொண்டா பிளாக்கில் தங்கம் மற்றும் தாமிரத்திற்காக அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அந்த நேரத்தில் எதிர்பார்த்த முடிவுகள் வராததால் ஆராய்ச்சிகள் முன்னோக்கி நகரவில்லை என்று ஆனந்தமூர்த்தி கூறினார்.
பின்னர் பல்வேறு கட்டங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் 'சிஸ்ட் பெல்ட்' கண்டறியப்பட்டது. சுரங்கத்தில் தங்கத்தின் இருப்பு அதிகமாக இருக்கும் பகுதியே சிஸ்ட் பெல்ட் ஆகும்.
"1993 முதல் 2002 வரை எங்கள் ஆராய்ச்சிகள் நடந்தன. தோனா டெம்பிள் பிளாக், கவனிகொண்டா பகுதிகளில் புவியியல் வரைபடமாக்கல், லித்தோஜியோ கெமிக்கல் சாம்பிளிங் உட்பட பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்தோம். அந்தச் சந்தர்ப்பத்தில் தோனா டெம்பிள் பிளாக்குடன் கிழக்கு, வடக்கு, மற்றும் தெற்கு பிளாக்குகளிலும் தங்கத் தாது இருப்பு இருப்பதைக் கண்டறிந்தோம்" என்று கூறினார் ஆனந்தமூர்த்தி.
தங்கத் தாது இருப்பைக் கண்டுபிடித்ததற்காக இந்திய புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் கே.ஸ்ரீராமச்சந்திர ராவ், எம்எஸ் ஜெயராம், எஸ்.ஆனந்தமூர்த்தி, டி.ரூப் குமார் ஆகியோருக்கு 2000-ஆம் ஆண்டில் இந்திய அரசு தேசிய கனிம விருதை வழங்கிக் கௌரவித்தது.
ஜொன்னகிரியில் பூமியின் மேற்பரப்பில் இருந்தே தங்கத் தாது கண்டறியப்பட்டதாக அவர் கூறுகிறார்.
மற்றொரு புறம், ஜொன்னகிரி, பகிடிராயி பகுதிகளில் வைரங்கள் கிடைப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

ஜொன்னகிரியில் மட்டும் ஏன் தாது உள்ளது?
இங்குள்ள பாறைகள் சுமார் 2000-2500 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று கண்டறிந்துள்ளதாக ஆனந்தமூர்த்தி விளக்கினார்.
"எரிமலைச் செயல்பாடு காரணமாக பாறை அடுக்கு அடுக்காக உருவாகி மடிப்புகளைப் பெற்றது. அந்த வரிசையில் அது குவார்ட்ஸ் ஆக மாறியது" என்று விளக்கினார்.
ஜொன்னகிரி சிஸ்ட் பெல்ட் சுமார் 25 கிலோமீட்டர் நீளமும், 0.5-5 கிலோமீட்டர் அகலமும் கொண்டு 50 சதுர கிலோமீட்டரில் பரவியுள்ளது என்று விளக்கினார்.
மேற்பரப்பு சுரங்கப் பணிகள் காரணமாகக் குறைந்த செலவிலேயே தங்கம் உற்பத்தி செய்ய முடியும் என்றும், இது லாபகரமானதாகவும் இருக்கும் என்றும் ஆனந்தமூர்த்தி பிபிசியிடம் கூறினார்.
"இயற்கையாகவே கோலார் தங்க வயலில் சராசரியாக ஒரு டன் தாதுவிலிருந்து 5 கிராம் தங்கம் உற்பத்தி செய்தனர். அது நிலத்தடி சுரங்கம். செலவு அதிகம். ஜொன்னகிரியில் ஒரு டன் தாதுவிலிருந்து 1.78 கிராம் தங்கம் உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், இது மேற்பரப்பு பணி என்பதால் செலவு குறைவு. நிலத்தடி சுரங்கத்துடன் ஒப்பிடும்போது மேற்பரப்பு சுரங்கப்பணியில் ஐந்து மடங்கு செலவு குறையும்" என்று கூறினார்.

இந்தியாவின் தேவைகளுக்கு இது போதுமானதா?
இறக்குமதி அடிப்படையில் பார்த்தால், 2025-26 ஆம் ஆண்டில் இந்தியா 721.04 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
2024-25-இல் 757.09 டன்னும், 2023-24-இல் 795.2 டன்னும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் உள்ளது.
மதிப்பு அடிப்படையில் பார்த்தால், 2025-26-இல் 71.98 பில்லியன் டாலராகவும், 2024-25-இல் 58 பில்லியன் டாலராகவும், 2023-24-இல் 45.54 பில்லியன் டாலராகவும் உள்ளது.
இந்தியாவில் ஒரு காலத்தில் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் (கேஜிஎஃப்) தங்கம் உற்பத்திக்கான முக்கிய ஆதாரமாக இருந்தது.
1880 முதல் 2001 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இங்கு சுமார் 800 டன் வரை தங்க உற்பத்தி நடைபெற்றதாக 2014-இல் ரிசர்ச் கேட்டில் வெளியான ஓர் ஆய்வு அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.
பூமியின் மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 3.2 கிலோமீட்டர் ஆழம் வரை தங்கத் தாதுவிற்காகத் தோண்டப்பட்டது.
கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு திப்பு சுல்தான் காலத்தில் இருந்தே இங்கு தங்கம் தேடும் பணி நடைபெற்றதாக இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
லண்டனைச் சேர்ந்த ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் மைன்ஸ் நிறுவனத்தின் வழிகாட்டுதலில், 1880-இல் தொழிற்துறை அளவில் தங்கம் உற்பத்தி தொடங்கியது. அதன் பிறகு 1950-இல் கர்நாடக அரசு கேஜிஎஃப்-ஐ தன்வசப்படுத்திக் கொண்டது, பின்னர் 1972-இல் இந்திய அரசு தன்வசப்படுத்தியது.
இங்கு தங்கம் இருப்பு தீர்ந்துவிட்டது என்ற காரணத்தினால் மத்திய அமைச்சரவையின் முடிவின்படி 2001 மார்ச்சில் கேஜிஎஃப்-ஐ இந்திய அரசு மூடியது.
1972 முதல் 2001-இல் மூடப்படும் வரை மத்திய அரசின் கீழ் இயங்கி வந்த பாரத் கோல்டு மைன்ஸ் லிமிட்டெட் இங்கு தங்கத்தை தோண்டி எடுத்தது.

கர்நாடகா, ஜார்க்கண்ட், ஆந்திராவில் சுரங்கப் பணிகள்
இந்தியாவில் தற்போது கர்நாடகா, ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே தங்கம் உற்பத்தி நடைபெறுகிறது.
கர்நாடக மாநில அரசின் கணக்கீட்டின்படி, 2025 மார்ச் 31 நிலவரப்படி ஹட்டி தங்கச் சுரங்கத்தில் 21.58 மில்லியன் டன் தங்கத் தாதுவிலிருந்து 101.64 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு சராசரியாக ஒரு டன்னுக்கு 4.71 கிராம் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
2023-இல் பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தங்கத் தாது இருப்பு இருப்பதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.
மத்திய சுரங்கத் துறையின் தரவுகளின்படி கர்நாடகா, ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சேர்த்து 2025-26 ஆம் ஆண்டில் 1.8 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஜொன்னகிரியில் சுரங்கப் பணிகள் தொடங்கியுள்ளதால் உள்நாட்டிலேயே மேலும் சில டன் தங்கம் கிடைக்கப் பெறவுள்ளது.
ஆந்திரப் பிரதேச அரசின் கணக்கீட்டின்படி, "முதல் ஆண்டில் (2026) 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இரண்டாவது ஆண்டில் (2027) 900 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. அவ்வாறு படிப்படியாக உயர்த்திக் கொண்டு சென்று ஆண்டுக்கு 2 டன் தங்கம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலைகளின் திறன் அதிகரிக்கப்படவுள்ளது " என்று ஆந்திரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
ஜொன்னகிரியில் 50 டன் தங்கம் இருப்பு மதிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு சுரங்கப் பணிகள் நடப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் தங்கத்தால் இறக்குமதி விஷயத்தில் இந்தியாவிற்கு ஓரளவிற்குப் பலன் கிடைக்கும் என்று எஸ்.ஆனந்தமூர்த்தி கருத்து தெரிவித்தார்.
"தங்கத்திற்கு இந்தியாவில் தேவை அதிகமாக உள்ளது. உள்நாட்டில் குறைந்தபட்சம் பத்து சதவீத உற்பத்தி இலக்குகளை எட்டினாலும் கூட, அந்த அளவிற்கு அன்னிய செலாவணி இருப்பைச் சேமிக்க முடியும்" என்று கூறினார்.
அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராமகிரி தங்க வயல்களுடன் சேர்த்து, கேஜிஎஃப்-லும் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க முடிந்தால் நிச்சயமாகக் கூடுதல் பலன் கிடைக்கும் என்று ஆனந்தமூர்த்தி நம்புகிறார்.
சந்தைக்கு வரும் ஜொன்னகிரி தங்கம்
ஜியோமைசூர் நிறுவனம் உற்பத்தி செய்த தங்கம் ஆந்திரப் பிரதேச புல்லியன் சந்தையில் வெளியிடப்பட்டது.
50 கிராம், 100 கிராம், 500 கிராம் அளவுகளில் இது கிடைப்பதாக கர்னூல் சராஃப் பஜாரைச் சேர்ந்த வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
"இறக்குமதி காரணமாகத் தங்கத்தின் மீது வரிகள் விதிக்கப்படுகின்றன. இப்போது உள்நாட்டிலேயே கிடைத்தால், அந்த அளவிற்கு வரிகள் குறைந்து சற்றுக் குறைந்த விலையிலேயே வர்த்தகர்களுக்குத் தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது" என்று கர்னூலைச் சேர்ந்த வர்த்தகர் ஜெகதீஷ் கூறினார்.
ஜொன்னகிரியில் உற்பத்தி கட்டம் கட்டமாக அதிகரிக்கப்படவுள்ளது என்று கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ விளக்கினார்.
"கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக சுரங்கப் பணிகளை மேற்கொண்டு முன்னோடித் திட்டத்தின் கீழ் ஜியோமைசூர் நிறுவனம் தங்கம் உற்பத்தி செய்து வருகிறது. 30 கிலோ உற்பத்தித் திறனை எட்டியுள்ளது. இதை மேலும் அதிகரிக்கவுள்ளது" என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































