You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குணால் ஷா: நிர்வாகம் அல்லது பொறியியல் படிக்காமல் வாட்ஸ் அப்பின் தலைமை பொறுப்புக்கு வந்தது எப்படி?
- எழுதியவர், அபிஷேக் டே
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சமீப காலம் வரை குணால் ஷாவின் பெயர் முக்கியமாக இந்தியாவின் ஸ்டார்ட்அப் மற்றும் முதலீட்டாளர்கள் உலகுக்குள் மட்டுமே இருந்தது.
ஃபின்டெக் நிறுவனமான 'கிரெட்'-இன் நிறுவனர் ஷா, தனது வணிகத்துக்கு அப்பாலும் ஒரு வலுவான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
தனது பாட்காஸ்ட்டில் (ஒலிப்பதிவு) அவர் பெரும்பாலும் நம்பிக்கை, ஊக்கம், சொத்து உருவாக்கம் மற்றும் மனித நடத்தை போன்றவற்றைப் பற்றி பேசுகிறார். சமூக ஊடகங்களில் அவரது பதிவுகள் செயற்கை நுண்ணறிவு முதல் தத்துவம் வரையிலான தலைப்புகளைத் தொடுகின்றன.
இப்போது, மெட்டா நிறுவனம் அவருக்கு வாட்ஸ்அப்-இன் பொறுப்பை ஒப்படைத்து அவரை உலகளாவிய தலைப்புச் செய்திகளில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்த நியமனம் மெட்டா நிறுவனம் 'கிரெட்' இல் 900 மில்லியன் டாலர் முதலீடு செய்த பிறகு நடந்துள்ளது.
வெறும் மெசேஜிங் (செய்தி அனுப்புதல்) உடன் மட்டும் நின்றுவிடாமல் கட்டணம் செலுத்துதல், வணிகச் சேவைகள் மற்றும் ஏஐ சார்ந்த தயாரிப்புகளை நோக்கி விரிவடைய வாட்ஸ்அப் விரும்பும் நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தலைமை தாங்கியிருந்தாலும், இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழலில் தனது வாழ்க்கையை உருவாக்கிய ஒரு நிறுவனரிடம் இவ்வளவு பெரிய உலகளாவிய நுகர்வோர் தளத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்படுவது அரிதாகவே பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் வாட்ஸ்அப்புக்கு 300 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர்.
ஸ்டார்ட்அப் முதல் வாட்ஸ்அப் தலைவர் வரை
மெட்டா நிறுவனம் தொடர்புகொள்வதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, குணால் ஷா இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழலில் நன்கு அறியப்பட்ட முகமாக மாறியிருந்தார்.
அவருக்கு முதல் பெரிய வெற்றி 'ஃப்ரீசார்ஜ்' (Freecharge) மூலம் கிடைத்தது. இது ஒரு மொபைல் ரீசார்ஜ் தளமாகும், இதை அவர் 2010 இல் இணைந்து நிறுவினார்.
அந்த நேரத்தில் இந்தியாவின் இணையப் பொருளாதாரம் வடிவம் பெறத் தொடங்கியிருந்தது.
நிறுவனம் வேகமாக வளர்ந்தது, 2015 இல் இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் (Snapdeal) இதனை வாங்கியது. அந்த நேரத்தில் இது நாட்டின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் கையகப்படுத்துதல்களில் ஒன்றாக இருந்தது.
ஆனால் காலப்போக்கில் குணால் ஷாவின் அடையாளம் அவர் உருவாக்கிய வணிகங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை.
'ஃப்ரீசார்ஜ்' நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிறகு, அவர் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வதிலும் நிறுவனர்களுக்கு ஆலோசனை வழங்குவதிலும் பல ஆண்டுகளைக் கழித்தார்.
அவர் ஸ்டார்ட்அப்களை விரைவுபடுத்தும் 'ஒய் காம்பினேட்டர்' (Y Combinator) மற்றும் 'செகுவியா கேபிடல்' (Sequoia Capital) ஆகியவற்றில் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
இந்தப் பணிகள் மூலம் அவர் ஒரு தலைமுறை நிறுவனர்களுடனும் நெருக்கமாகத் தொடர்பில் இருந்தார். குறிப்பாக இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழல் வேகமாக விரிவடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அவர் தொழில்நுட்பத் துறையில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டார்.
தத்துவக் கல்வியும் 'ஃப்ரீசார்ஜ்' தொடக்கமும்
மும்பையில் வளர்ந்த குணால் ஷா, கல்லூரியில் தத்துவம் படித்தார். நாட்டின் பல பிரபலமான தொழில்நுட்ப நிறுவனர்களைப் போல அவர் புகழ்பெற்ற பொறியியல் அல்லது மேலாண்மை நிறுவனங்களின் வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை.
இந்த பாடத்தின் காலை நேர வகுப்புகள் காரணமாக அவர் நிதி நெருக்கடியில் தவித்து வந்த தனது குடும்ப வணிகத்தில் முழு நேரமும் தொடர்ந்து பணியாற்ற முடிந்தது என்பதால் குணால் ஷா தத்துவத்தைத் தேர்ந்தெடுத்ததாகத் தன்னிடம் கூறினார் என, இந்திய தொழிலதிபரும் முதலீட்டாளருமான சஞ்சீவ் பிக்சந்தானி எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், ஒருமுறை நினைவு கூர்ந்தார்.
பல ஆண்டுகளாக அளிக்கப்பட்ட நேர்காணல்கள் மற்றும் பாட்காஸ்ட்களில், குணால் ஷா தனது படிப்பின் போது சிறிய சிறிய வேலைகளைச் செய்ததைப் பற்றியும் பேசியுள்ளார்.
அவரது கூற்றுப்படி, இந்த ஆரம்பகால அனுபவங்களுக்குப் பிறகுதான் அவருக்கு முதல் முறையாக தேசிய அளவில் அடையாளத்தை அளித்த 'ஃப்ரீசார்ஜ்' தொடங்கப்பட்டது.
2018 இல் தொடங்கப்பட்ட 'கிரெட்' (CRED) ஒப்பீட்டளவில் எளிமையான வணிக மாதிரியுடன் வெளிவந்தது. இதன் பின்னணியில் இருந்த சிந்தனை - சரியான நேரத்தில் கிரெடிட் கார்டு பில்களை செலுத்தும் மக்களுக்கு வெகுமதி அளிப்பதாகும்.
பொது மேடைகளில் குணால் ஷா பெரும்பாலும் நிறுவனத்தின் தொடக்கத்தை நம்பிக்கை மற்றும் ஊக்கத்துடன் தொடர்புபடுத்தி இணைத்துப் பேசி வருகிறார்.
பின்னர் நிறுவனம் கடன்கள், காப்பீடு, வர்த்தகம் மற்றும் செல்வ மேலாண்மை தயாரிப்புகளிலும் விரிவடைந்தது.
ஒரு ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, மெட்டாவின் சமீபத்திய முதலீட்டுக்குப் பிறகு 'கிரெட்' நிறுவனத்தின் மதிப்பு சுமார் 4.5 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது அதன் முந்தைய நிதித் திரட்டல் சுற்றின் மதிப்பை விட அதிகம், ஆனால் 2022 இல் அது எட்டிய மிக உயர்ந்த மதிப்பை விடக் குறைவு ஆகும்.
குறிப்பாக பெரும்பாலும் நகைச்சுவை, பழைய நினைவுகள் மற்றும் எதிர்பாராத பிரபலங்களின் வருகையைப் பயன்படுத்திய அதன் விளம்பரங்கள் காரணமாக 'கிரெட்' ஒரு பிரபலமான ஃபின்டெக் பிராண்டாகவும் மாறியது.
ஆனால் நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சியுடன் அதன் மீது கேள்விகளும் எழத் தொடங்கின. பல ஆண்டுகளாக நிறுவனம் அதன் பிராண்ட் மற்றும் வளர்ச்சிக்காகப் பாராட்டப்பட்டது, ஆனால் லாபத்தை எட்டுவதற்கான அதன் வழி குறித்து பெரும்பாலும் கேள்விகள் எழுந்தன.
முதலீட்டாளர்களின் உற்சாகமும் உயர்ந்த மதிப்பீடும் நிறுவனத்தின் நிதிச் செயல்பாட்டுக்குப் பொருத்தமாக இருந்ததா என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.
அதே நேரத்தில், பல வெற்றிகரமான தொழில்நுட்ப நிறுவனங்களும் பெரிய அளவில் விரிவடையும் போது நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வருகின்றன என்று ஆதரவாளர்கள் கூறினர்.
கடந்த ஆண்டு இந்த விவாதம் மீண்டும் உருவானது. தொடர்ச்சியான லாபம் இல்லாதபோதிலும் தொழிலதிபர்கள் ஏன் இவ்வளவு மகிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஷா, லாபம் ஈட்டும் வணிகங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார், ஆனால் வணிகங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், ஏனெனில் அவை வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன மற்றும் அவற்றில் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் கூறினார்.
இந்தியாவின் நவீன இணையப் பொருளாதாரத்தை வடிவமைத்தார்
அவரது ஆதரவாளர்களைப் பொறுத்தவரை, குணால் ஷா முதலில் டிஜிட்டல் கட்டண முறைகள் பின்னர் நிதித் தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவின் நவீன இணையப் பொருளாதாரத்தை வடிவமைக்க உதவிய தொழிலதிபர்களின் தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
அவருடன் பல ஆண்டுகளாகக் கொள்கை விஷயங்களில் பணியாற்றியவரும், ஸ்டார்ட்அப் பாலிசி ஃபோரத்தின் சிஇஓ-வுமான ஸ்வேதா ராஜ்பால் கோஹ்லி, அவரை, "ஒரு தயாரிப்பை ஒழுங்குமுறை சிக்கல்களின் பார்வையில் பார்க்கும் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை ஒழுங்குமுறைப்படுத்துபவரின் பார்வையில் புரிந்து கொள்ளும் அரிய திறன் கொண்ட ஒரு நபர்" என்று விவரித்தார்.
"அவரது படைப்பாற்றலும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனும் எப்போதும் மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்திருக்கின்றன" என அவர் பிபிசியிடம் கூறினார்.
விமர்சகர்களைப் பொறுத்தவரை, அவர் நிலையான வணிக மாதிரிக்கு பதிலாக மதிப்பீடு, நிதித் திரட்டல் மற்றும் அதிவேக வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்த ஒரு ஸ்டார்ட்அப் கலாசாரத்தின் அடையாளமாக இருக்கிறார்.
இந்த புதிய நியமனம் குணால் ஷாவின் வாழ்க்கையோடு தொடர்புடைய பல பழைய போக்குகளையும் பிரதிபலிக்கிறது.
வாட்ஸ்அப் இப்போது வெறும் மெசேஜிங் உடன் மட்டும் நின்றுவிடவில்லை, அது கட்டண முறைகள், வர்த்தகம் மற்றும் வணிகச் சேவைகளை நோக்கி நகர்கிறது.
இவைதான் குணால் ஷா கடந்த தசாப்தத்தில் தயாரிப்புகளை உருவாக்குவதிலும், முதலீடு செய்வதிலும் மற்றும் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதிலும் நேரத்தைச் செலவிட்ட பகுதிகளாகும்.
வாட்ஸ்அப்-இன் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது, இது குணால் ஷாவின் தொழில்துறை பயணத்தின் முக்கிய மையமாகவும் இருந்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம் வாட்ஸ்அப்-க்குத் தலைமை தாங்கும் முதல் இந்தியராக குணால் ஷா மாறப் போகிறார்.
இருப்பினும், சில நிபுணர்கள் அவரின் நியமனத்தை ஃபின்டெக் அல்லது கட்டண முறைகளின் பார்வையில் இருந்து மட்டும் பார்ப்பதற்கு எதிராக எச்சரிக்கிறார்கள்.
தொழில்நுட்ப செய்தி இணையதளமான 'மீடியாநாமா'-வின் (MediaNama) நிறுவனரும் ஆசிரியருமான நிகில் பக்வா, "ஃபின்டெக் மற்றும் கட்டண முறைகளில் அவருக்கு உள்ள அனுபவத்தின் காரணமாகவே இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று நம்பும் ஒரு போக்கு உள்ளது. இது மிகவும் குறுகிய பார்வை என்று நான் நினைக்கிறேன்" என பிபிசியிடம் தெரிவித்தார்.
"அவர் பல ஆண்டுகளாகத் தயாரிப்பு, நுகர்வோர் நடத்தை, ஊக்கத்தொகைகள் மற்றும் வளர்ச்சி குறித்து ஆழமாகச் சிந்தித்த ஒரு நபர். அவரது வணிகங்களில் கட்டண முறை என்பது நுகர்வோரை இணைப்பதற்கான ஒரு வழியாக மட்டுமே இருந்துள்ளது, அதன் மூலம் பின்னர் அவர்களுக்கு மற்ற தயாரிப்புகளை வழங்க முடியும்."
"இது கட்டண முறை தொடர்பான நியமனமாகத் தெரியவில்லை, மாறாக நுகர்வோர் வணிகத்தின் வணிகப் பக்கத்தைப் பெரிய அளவில் வளர்த்த அனுபவமுள்ள ஒரு நிறுவனரை மெட்டா தேர்ந்தெடுத்துள்ளது போல் தோன்றுகிறது."
இந்த பொறுப்புக்காக குணால் ஷாவை ஏன் தேர்ந்தெடுத்தது என்பதை மெட்டா பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை.
இருப்பினும், நியமனத்தை அறிவித்த தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், அவரது 'உருவாக்குபவர் போன்ற சிந்தனை' மற்றும் 'உலகளாவிய தொலைநோக்கு பார்வை' ஆகியவற்றைப் பாராட்டினார்.
வாட்ஸ்அப் உலகம் முழுவதிலும் உள்ள பில்லியன் கணக்கான பயனர்களுக்குச் சேவைகளை வழங்கி வரும் வேளையில், கட்டண முறைகள், வணிகக் கருவிகள் மற்றும் ஏஐ சார்ந்த தயாரிப்புகளில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்த முயலும் போது இந்த குணங்கள் சோதிக்கப்படும்.
குணால் ஷா எதிர்கொள்ளும் சவாலும் அவரது கடந்தகால அனுபவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
'கிரெட்' நிறுவனத்தில் அவர் பொருளாதார ரீதியாகச் தீவிரமாக உள்ள பயனர்களுக்காகத் தயாரிப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். அவரது வரம்பு முக்கியமாக நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், வாட்ஸ்அப்-இல் இப்போது அவர் இந்த வரம்புகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் பயன்படுத்தும் சேவைகளுக்குப் பொறுப்பாக இருப்பார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு