நரேந்திர மோதி அந்நிய மண்ணில் பேசியவை என்ன?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிபிசி இந்தி குழு
    • பதவி, புது தில்லி
  • பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டன் பயணத்தின் போது, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, 'கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்', 'இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம்' மற்றும் பிரிட்டிஷ் பார்லிமென்ட் 'ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்' அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பேசினார்.

இந்த நிகழ்ச்சிகளில், இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

ராகுல் காந்தியின் இந்த உரைக்கு பாஜக தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.

ராகுல் காந்தியை ஆளும் கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் விமர்சித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல், “லண்டனில் இந்திய ஜனநாயகத்தை சிலர் விமர்சிக்கிறார்கள்” என்று பூடகமாகக் குறிப்பிட்டார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ராகுல் காந்தி இந்தியாவை 'யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்' அதாவது 'மாநிலங்களின் ஒன்றியம்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்திய அரசியலமைப்பு, கூட்டாட்சி முறையை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார்.

தற்போது இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அதானி குழுமத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அமைத்து விசாரிக்கக் கோரும் நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருகின்றனர். இந்த அமளி காரணமாகப் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இரு தரப்பிலும் காட்டமான கருத்துகள் வெளியாகிவருகின்றன. வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, தனக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மீரட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும், பேசும்போதெல்லாம் மைக்கை அணைத்துவிடுவதாகவும் ராகுல் காந்தி கூறியதை விமர்சித்தார்.

ராகுலின் இந்த பேச்சு குறித்துப் பேசிய குடியரசு துணைத் தலைவர் தன்கர், ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது என்றார்.

ராகுல் காந்தியின் கருத்துக்கு விளக்கம் அளித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கர்கே, 'அரசாங்கத்தை விமர்சிப்பது நாட்டை விமர்சிப்பதாகாது’ என்றார்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அந்நிய மண்ணில் நரேந்திர மோதி

பிரதமர் மோதி வீடியோ

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதே நேரத்தில், காங்கிரஸின் சமூக ஊடகப் பொறுப்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் உட்பட, கட்சியின் பல தலைவர்கள் இப்போது சில வீடியோக்களைப் பகிரத் தொடங்கியுள்ளனர். அவற்றில் நரேந்திர மோதி தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது முந்தைய அரசாங்கங்களை விமர்சிப்பதைக் காணலாம்.

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி, 2013ஆம் ஆண்டு இந்திய-அமெரிக்கர்களிடம் உரையாற்றி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். இந்த நிகழ்வு 13 மே 2013 அன்று நடந்தது. காணொளிக் காட்சி மூலம் பேசிய அவர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை விமர்சித்து, 'இந்தியாவில் பலவீனமான தலைவர்களின் அரசு உள்ளது' என்றார்.

அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ‘ஊழல்’ நிறைந்தது என்று குற்றம் சாட்டிய அவர், ‘அரசின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய் விட்டது’ என்று கூறியிருந்தார்.

2015ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது, கனடாவுக்குச் சென்ற நரேந்திர மோதி, டொரான்டோவில் ஆற்றிய உரை, காங்கிரஸ் கட்சியால் விமர்சிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோதி தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது, முந்தைய அரசை விமர்சித்தது குறித்தும் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 28, 2015 அன்று, ராஜ்யசபாவில் அமளிக்கு மத்தியில், மோதிக்கு ஆதரவாக அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ராஜ்யசபாவில், "வெளிநாட்டுப் பயணங்களின் போது பிரதமர் பேசுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை." என்று கூறினார்.

அதே நாளில், ராஜ்யசபாவில், காங்கிரசின் ஆனந்த் சர்மா, 'டொராண்டோவில் பிரதமர் ஆற்றிய பேச்சு' குறித்து கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

ஆனந்த் சர்மா, “முன்பு இந்தியாவை ‘ஸ்கேம் இந்தியா’ என்று கூறிய பிரதமர், இப்போது அது ‘ஸ்கில் இந்தியா’ ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டதாக மோதி மீது குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்விக்கும், ஆனந்த் சர்மாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபையில் உரையாற்றிய ஆனந்த் சர்மா, "தவறுகள் நடக்கலாம் ஆனால் நாட்டை 'ஊழல்' நாடு என்று அழைக்க முடியாது" என்று கூறியிருந்தார்.

மே 2015 இல், பிரதமர் நரேந்திர மோதியின் சீனா மற்றும் தென் கொரியா பயணத்தின் போது அவர் ஆற்றிய உரைகள் விமர்சிக்கப்பட்டன.

மே 16 அன்று ஷாங்காயில் இந்திய வம்சாவளி மக்களிடம் உரையாற்றிய நரேந்திர மோதி, "ஒரு வருடம் முன்பு வரை இந்தியர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ள வெட்கப்பட்டவர்கள், இப்போது பெருமை கொள்கிறார்கள்" என்று கூறினார்.

பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோதி, மே 2ம் தேதி ஜெர்மனியின் பெர்லினில் இந்திய வம்சாவளி மக்களிடம் உரையாற்றும் போதும் முந்தைய அரசை விமர்சித்தார்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா ஒரு 'வர்க் இன் ப்ராக்ரஸ்’ நிலையில் இருந்ததாகவும், ஆனால் "கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியா வளர்ச்சியின் மாபெரும் பாய்ச்சலைத் தொடங்கியுள்ளது" என்றும் அவர் கூறியிருந்தார்.

2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நரேந்திர மோதி, நாட்டில் ஊழல் ஒரு கலாசாரமாக மாறிவிட்டது என்று கூறினார்.

நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், மார்ச் 14ஆம் தேதி, நரேந்திர மோதி வெளிநாட்டில் பேசியதை மேற்கோள் காட்டி, “மோதியின் இதுபோன்ற பேச்சுகள் நாட்டுக்கு அவமானம் இல்லையா?” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மார்ச் 14 அன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: