You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா- நியூசிலாந்து: ரோஹித் முடிவை நியாயப்படுத்திய பந்துவீச்சாளர்கள்
இந்தியா நியூசிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. தொடரின் மூன்று போட்டிகளில், முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதையடுத்து இரண்டாவது போட்டி ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியின் தொடக்கத்தில், டாஸ் வென்றபோது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் செய்தார். ரோஹித் ஷர்மா டாஸ் வென்றபோது, அவருடைய முடிவு என்ன என்பதைக் கூறுவதற்கு நீண்ட நேரம் தயங்கினார்.
தலையில் கை வைத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தவர், சில நொடிகள் கழித்தே பந்துவீச்சைத் தேர்வு செய்வதாகக் கூறினார்.
விக்கெட்டுகளை குவித்த இந்தியாவின் பந்து வீச்சு
தயக்கத்துடன் ரோஹித் பந்துவீச்சை தேர்வு செய்தாலும், அவரது முடிவு சரியானதுதான் என்பதை தங்களின் சிறப்பான பந்துவீச்சு மூலம் இந்திய பந்துவீச்சாளர்கள் நிரூபித்தனர்.
முதல் ஓவரை வீசிய முகமது ஷமி, ஃபின் ஆலெனை வீழ்த்தினார். ஒரு ரன்கூட எடுக்காமல் இருந்த நிலையில், நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்தது.
இரண்டாவது ஓவரை வீசிய முகமது சிராஜ், மூன்று ரன்களை மட்டுமே கொடுத்தார். இப்படியாகத் தொடர்ந்து இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய நியூசிலாந்து ஆறாவது ஓவரில் ஹென்ரி நிக்கோல்ஸ் விக்கெட்டை எடுத்தார்.
ஏழாவது ஓவரின் இறுதியில், எதிரணியின் மூன்றாவது விக்கெட்டும் விழுந்தபோது வெறும் 10 ரன்களோடு களத்தில் இருந்தது நியூசிலாந்து. அடுத்தடுத்து, 10, 11 என்று அடுத்தடுத்த ஓவர்களில், டேவான் கான்வே, டாம் லேதம் ஆகிய நான்காவது மற்றும் ஐந்தாவது விக்கெட்டுகள் சரசரவென விழுந்தன.
15 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மிகவும் மோசமான நிலையில் நியூசிலாந்து அணி இருந்தது. இதனால் 50 ரன்களை அந்த அணி தாண்டுவதே கடினமாக இருக்கும் என்ற நிலை ஒரு கட்டத்தில் ஏற்பட்டது.
பெரும் சரிவில் இருந்து மீட்ட கடைசி நிலை ஆட்டக்காரர்கள்
11வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் இரண்டு ஃபோர் அடித்த கிளென் பிலிப்ஸ், கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி 140 ரன்கள் குவித்த மைக்கேல் பிரேஸ்வெல் உடன் சரிவின் பாதையில் இருந்த அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
முகமது சமி வீசிய 18வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் ஃபோருக்கு அனுப்பிய மைக்கேல் பிரேஸ்வெல், 3வதாக வீசப்பட்ட ஷார்ட் லெந்த் பந்தை அடிக்க முயற்சித்தபோது, பேட்டில் பட்ட பந்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷானிடம் தஞ்சமடைந்தது. இதனால் 22 ரன்களுடன் மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்பிற்கு 56 ஆக இருந்தது.
இதையடுத்து, கிளென் பிலிப்ஸ் உடன் மிட்செல் சான்ட்னர் ஜோடி சேர்ந்தார். இந்த அணி மேலும் விக்கெட் விழாத வகையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிடைத்த ஒருசில பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பவும் அவர்கள் தவறவில்லை. இதனால் அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது. 47 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ஹர்திக் பாண்டியா பிரித்தார். 30வது ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் வீசிய ஃபுல் லெந்த் பந்தில் மிட்செல் சான்ட்னர் ஃபோல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கிளேன் பிலிப்ஸும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஆட்டக்காரர்களும் ஒற்றை இலக்க ரன்களின் வெளியேறினர்.
34.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களை இழந்த நியூசிலாந்து அணி 108 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது சமி மூன்று விக்கெட்களையும் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தொடரை கைப்பற்றிய இந்திய அணி
109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா 47 பந்துகளில் 7 ஃபோர், 2 சிக்ஸர்களுடன் 50 அரை சதம் கடந்தார். எனினும் அடுத்த ஒரு ரன் எடுத்த நிலையில், ரோஹித் ஆட்டமிழந்தார். இறுதியில் 20.1 ஓவர் முடிவில் 111 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றதோடு 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்