சஹல், அஸ்வின் பின்னிய ஸ்பின் வலையில் சிக்கிய ஹைதராபாத்: ராஜஸ்தான் ராயல்ஸ் பிரமாண்ட வெற்றி

பிரசுரிக்கப்பட்டது

ஐபிஎல் தொடரின் மூன்றாவது நாளான இன்று மொத்தம் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முதல் போட்டியில் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான பந்துவீச்சையும் ஃபீல்ச்டிங்கையும் காட்டிய ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 138 ரன்களில் சுருட்டி, பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக உள்ளார்.

ராஜஸ்தான் தரப்பில் ஜாஸ் பட்லரும் யஷஸ்வி ஜைஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் ஓவரிலேயே பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்ட ஜைஸ்வால் தனது அணிக்கான முதல் பவுண்டரியை அடித்தார்.

புவனேஸ்வரும் பட்லரின் ஆட்டத்தைப் பரிசோதிக்கும் வகையில் பந்துவீசினார். ஆனால், இரண்டாவது ஓவரை ஃபஸல்ஹக் ஃபரூக்கி வீசியபோது, அவர் வீசிய பந்துகளைப் பறக்கவிட்டுக் கொண்டேயிருந்த ஜைஸ்வாலும் பட்லரும் அந்த ஒரு ஓவரில் மட்டும் 14 ரன்களை சேர்த்தனர்.

முதல் இரண்டு ஓவர்களில் மட்டுமே 20 ரன்களை எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் கணக்கை இருவரும் அதிரடியாகத் தொடக்கி வைத்தனர். தொடர்ச்சியாக பட்லரும் ஜைஸ்வாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, பவர் பிளே முடிவில் 85 ரன்களை குவித்தனர்.

ஃபரூக்கி, புவனேஸ்வர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பந்துவீச்சில் முதல் நான்கு ஓவர்களில் 56 ரன்களை இருவரும் இணைந்து குவித்திருந்தனர். 5-வது ஓவரை வீச வந்த நடராஜனுக்கு முந்தைய மூன்று பேருக்கு கொடுத்ததைவிட கூடுதலான அதிர்ச்சியைக் கொடுத்தார் ஜாஸ் பட்லர். நடராஜன் தான் வீசிய ஒரே ஓவரில் 17 ரன்களைக் கொடுத்திருந்தார்.

பட்லர் 5வது ஓவரில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை அடித்து நடராஜன் வீசிய பந்துகளை துவம்சம் செய்தார். ராஜஸ்தான் அணிக்காகக் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஜாஸ் பட்லர் 22 பந்துகளில் அரை சதம் அடித்துக் கலக்கினார்.

ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜைஸ்வால் இருவரது கூட்டணி 85 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், பவர் பிளே இறுதியில் ராஜஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை, பலமான விக்கெட்டை ஃபரூக்கி வீழ்த்தி ஹைதராபாத் அணிக்குச் சிறிய ஆசுவாசத்தை வழங்கினார்.

ஜாஸ் பட்லர் ஃபரூக்கி பந்தில் அவுட்டாகி வெளியானதைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் களமிறங்கினார். ஆனால், அவரும் அதிரடியை தொடர்ந்தார். களமிறங்கியதில் இருந்தே விளாசத் தொடங்கினார்.

10 ஓவர் முடிவில் அவர் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர்களை அடித்து 13 பந்துகளில் 28 ரன்களை எடுத்திருந்தார். யஷஸ்வி ஜைஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, 8 பவுண்டரிகளை அடித்திருந்தார். 11வது ஓவர் முடிவில் அவர் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

ஒரு மொத்த போட்டியின் ஹைலைட்ஸை 10 ஓவர்களில் பார்த்தைப் போல், அதற்குள்ளாகவே ஹைதராபாத் வீரர்கள் 17 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசியிருந்தார்கள்.

ஜைஸ்வாலை தடுக்க முடியும் என்பதைப் போல் களத்தில் நிலைமை இருக்கவில்லை. இன்னொருபக்கம் சஞ்சுவும் விளாசுவதை நிறுத்துவதைப் போல் தெரியவில்லை. அவர் உம்ரான் பந்துவீச்சில் ஒரு பந்தைத் தூக்கி அடிக்கவே, பந்து வேலியைத் தாண்டிச் சென்றது.

பத்தாவது ஓவர் முடிவில் ராஜஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்திருந்தது.

அடங்காத காளையை அடக்கிய சஞ்சு சாம்சன்

நடராஜன், ஃபரூக்கி, வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் என்று பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி ராஜஸ்தானின் ரன் மழையை நிறுத்த பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனாலும் அதற்குப் பலன் கிடைப்பதைப் போல் தெரியவில்லை.

ஜாஸ் பட்லரை போலவே ஜைஸ்வாலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்த அடுத்த சில நிமிடங்களிலேயே கேட்ச் அவுட்டானார். ஜைஸ்வால் 37 பந்துகளில் 54 ரன்களை எடுத்து அவுட்டானார். ஃபரூக்கி தனது நீண்ட நேர போராட்டத்திற்குப் பலனாக இரண்டாவது விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். ஆனால், அவரை உம்ரான் மாலிக் இரண்டே ரன்களோடு திருப்பி அனுப்பி ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டினார். அடுத்ததாக ரியான் பராக் களமிறங்கினார்.

ஆனாலும் மிக முக்கிய விக்கெட்டான சஞ்சு சாம்சன் தொடர்ந்து வெளுத்துக்கொண்டே இருந்தார். 14வது ஓவரில் அசுரத் தனமான சிக்ஸ் ஒன்றை விளாசினார். 15 ஓவர் இறுதியில் ராஜஸ்தான் மூன்று விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்திருந்தது.

அடுத்தபடியாக 16வது ஓவரை வீச வந்த ரஷீத்தை பிரமாண்டமான சிக்ஸ் ஒன்றோடு சஞ்சு சாம்சன் வரவேற்றார்.

தொடக்க ஆட்டக்காரர்களான ஜாஸ் பட்லரும் யஷஸ்வி ஜைஸ்வாலும் சேர்ந்து இடி இடித்ததைப் போல் ஆடிவிட்டுச் சென்றனர். அவர்கள் கொடுத்துச் சென்ற ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டு செல்கிறார் சஞ்சு சாம்சன்.

ரன்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்த எதிரணியைத் தடுக்க யார்க்கர் நடராஜன் உள்ளே நுழைந்தார். அவர் வந்தவுடனேயே ஒரு விக்கெட்டை எடுத்தார். ரியான் பராக் அவரது பந்தை எதிர்கொண்டபோது, ஃபரூக்கி அதை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.

அதற்கு முந்தைய ஓவரில் ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவவிட்ட ஃபரூக்கி, 17வது ஓவரில் நடராஜ் வீசி, பராக் அடித்த பந்தை அழகாக கேட்ச் பிடித்து ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார்.

ஆனால், 28 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் அடித்த சஞ்சு சாம்சன், 17வது ஓவரில் தொடர்ந்து யாராலும் அடக்காத முடியாத காளையாக ஆடிக் கொண்டிருந்தார். அந்தக் காளையை நான் அடக்குகிறேன் என்பதுபோல் பந்துவீசிய நடராஜன், வைட் யார்க்கராக வீசினார். அதை சிக்சரை குறிவைத்து சஞ்சு பறக்க விடவே, பவுண்டரி எல்லையின் நுனியில் நின்று கச்சிதமாக கேட்ச் பிடித்தார் அபிஷேக் ஷர்மா.

ராஜஸ்தான் அணியின் ரன் ரேட், பவர் பிளேவின்போது 14.17 ரன் ரேட் இருந்தது. அதற்கு அடுத்ததாகவும் 7-15 ஓவர்களில் 8.33, 16-20 ஓவர்களில் 8.21 என்ற அளவில் வீரர்கள் சிறப்பாகக் கொண்டு சென்றனர்.

ராஜஸ்தான் வைத்த இலக்கு

16வது ஓவர் இறுதியில் ராஜஸ்தான் 3 விக்கெட் இழப்பில் 170 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், கடைசி மூன்று ஓவர்களில் புவனேஸ்வர் குமார், நடராஜன் இருவரும் ரன்களைக் குறைக்க முயன்றார்கள்.

20 ஓவர் முடிவில் களத்தில் அஸ்வின், ஹெட்மியர் இருவரும் அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை எடுத்திருந்தது.

சொதப்பிய பவர் பிளே

சிக்ஸ், ஃபோர் என்று வெளுத்து வாங்கிய ராஜஸ்தான் அணி 204 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துவிட்டு பேட்டிங்கை நிறைவு செய்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஹைதராபாத் தரப்பில் அபிஷேக் ஷர்மா, மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினார்கள். ராஜஸ்தான் தரப்பில் முதல் ஓவரை வீச வந்தார் டிரென்ட் பௌல்ட்.

பவர் பிளே தொடக்கத்தில் முதல் ஓவரில் ராஜஸ்தான் 6 ரன்களை எடுத்தது. ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கு வகையில் முதல் ஓவரிலேயே ஹைதராபாத் பூஜ்ஜிய ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழக்க நேர்ந்தது.

அபிஷேக் ஷர்மா விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுத்தார் டிரென்ட் பௌல்ட். அடுத்ததாகவே ராகுல் திரிபாதியும் ஜேசன் ஹோல்டர் கைகளில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இரண்டாவது ஓவரை கே.எம்.ஆசிஃப் வீசினார். மயங்க் அகர்வால், ஹேரி ப்ரூக் இருவரும் களத்தில் நின்றனர். ஆனால், ராஜஸ்தான் வீரர்கள் பவர் பிளேவில்கூட அவர்களை ரன் எடுக்கவிடாமல் தடுத்தார்கள்.

ஹைதராபாத், ஐந்து ஓவர் முடிவில் 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பவர் பிளேவின் கடைசி ஓவரை அஸ்வின் வீசினார். அதில், இரண்டு மற்றும் மூன்றாவது பந்துகளில், தலா இரண்டு ரன் எடுத்தார்கள். மயங்க் அகர்வால் கடைசி பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்டார். இந்த ஒரு ஓவரில் அஸ்வின் 10 ரன்களை கொடுத்திருந்தார்.

பவர் பிளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது ஹைதராபாத். மயங்க் அகர்வால், ஹேரி ப்ரூக் இருவரும் களத்தில் நின்றனர்.

ராஜஸ்தான் பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட்டை பறிகொடுத்து 85 ரன்களை எடுத்திருந்தது. ஹைதராபாத் இப்போதே ரன் ரேட்டை அதிகப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

ஆனால், ஏழாவது ஓவரை வீசிய யஸ்வேந்திர சஹல் அதற்குக் கொஞ்சமும் வாய்ப்பளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ரன் குவிக்க வாய்ப்பளிக்காதது மட்டுமின்றி, அவர் வீசிய ஒரு பந்து பேட்ஸ்மேனை கடந்து சென்று ஸ்டம்பில் பட்டு மிக அழகாக ஹாரி ப்ரூக் விக்கெட்டை வீழ்த்தியது. இதன்மூலம் சஹல், டி20 போட்டிகளில் தனது 300வது விக்கெட்டை எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கடந்த சீசனில் டி20இன் மூன்று கட்ட ஓவர்களிலும் சிறப்பாகச் செயல்பட்டார். அது அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பாக இருந்தது. அதேபோல் இந்த முறையும் பவர் பிளே முடிந்து இரண்டாவது கட்டம் தொடங்கியபோதே களமிறங்கியவர், அணியில் தனக்கு இருக்கும் முக்கியத்துவத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டினார்.

சாவகாசமாக சமாளித்த அஸ்வின், சாஹல்

ஹைதராபாத் அணி 8 ஓவர் முடிவில் 38 ரன்களே எடுத்திருந்தது. இந்த நேரத்தில் ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் 12க்கும் மேல் இருந்தது. ஆனால், ஹைதராபாத் அணியின் ரன்ரேட் சராசரியே 5க்கும் குறைவாக இருந்தது. ஆனால், அவர்களுக்கு 13.94 என்ற ரன்ரேட் தேவைப்பட்டது.

ஒன்பதாவது ஓவரை ஜேசன் ஹோல்டர் வீசினார். அவரும் தனது உயரத்தை நன்றாகப் பயன்படுத்தவே, பந்து அழகாக பவுன்ஸ் ஆகிச் சென்றது. அது வாஷிங்டன் சுந்தர் பேட்டில் பட்டு மேலெழும்பவே, அதைக் கச்சிதமாக கேட்ச் பிடித்தார் ஷிம்ரோன் ஹெட்மியர்.

ஹைதராபாத் அணியின் பேட்டிங் பேட்டரி குறைந்த வாகனத்தின் செல்ஃப் ஸ்டார்ட் வசதியைப் போலவே திணறிக் கொண்டிருந்தது. சன்ரைசர்ஸ் அணிக்காக அடுத்து களமிறங்கினார் கிளென் ஃபிலிப்ஸ். ஹோல்டர் பவுன்சராக வீச முயன்ற பந்தை உயர அடித்து சிக்சருக்கு பறக்கவிட்டார் கிளென் ஃபிலிப்ஸ்.

அவரை எதிர்கொள்வதற்கு 10வது ஓவரில் அஸ்வின் வந்தார். அஸ்வினை எதிர்கொள்வது பேட்டருக்கு கொஞ்சம் சிக்கலான காரியம்தான். பேட்ஸ்மேனைவிட ஒரு படி முன்னால் இருப்பதில் அஸ்வின் திறமையானவர். அதை நிரூபிக்கும் வகையில் வந்தவுடனே கிளென் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஹைதராபாத் அணி மிக மோசமான நிலைமையில் இருந்தது. ஒரு ஓவருக்கு 15 ரன்கள் என்ற அளவில் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், அஸ்வின் துல்லியமாகக் கணக்கிட்டு பந்துகளை வீசிக்கொண்டிருந்தார். அஸ்வினுடைய பந்துவீச்சில் அனுபவம் தெரிந்தது.

கிளென் ஃபிலிப்ஸ் வெளியேறியதும், இம்பாக்ட் பிளேயராக ஹைதராபாத் அணி ஃபஸல்ஹக் ஃபரூக்கிக்கு பதிலாக அப்துல் சமாத் கொண்டுவரப்பட்டார். பத்து ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 48 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

அப்துல் சமாத், 26 போட்டிகளில் 226 ரன்களை எடுத்துள்ளார். இம்பாக்ட் பிளேயராக களமிறங்கியுள்ள அவர் ‘இம்பாக்ட்’ ஏற்படுத்துவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

ஆனால், அந்த எதிர்பார்ப்பு ஒருபுறம் எழுந்துகொண்டிருந்த வேளையிலேயே, சஹல் தனது அடுத்த வெற்றியாக மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்ததாக ஆதில் ரஷீத் களமிறங்கினார்.

அஸ்வின் வீசிய பந்தில் பவுண்டரிக்கு பந்தை சமாத் தட்டிவிட்டார். ஆனால், பந்து எல்லையைத் தொடும் முன்னரே, தாவிச் சென்று பந்தைத் தடுத்து மிக அழகாக ஃபீல்டிங் செய்தார் ரியான் பராக்.

ஆனால் அந்த இழப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆதில் ரஷீத் ஒரு சிக்ஸ் அடித்தார்.

யஷஸ்வி ஜைஸ்வாலுக்கு பதிலாக நவ்தீப் சைனியை ராஜஸ்தான் இம்பாக் பிளேயராக களமிறக்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்காக ஆடிய நவ்தீ சைனி, காயத்திற்குப் பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

நவ்தீப் சைனி, அவரது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு நோபால்களை வீசினார். ஒரு இம்பாக்ட் பிளேயராக வரும்போது, திடீரென உள்ளே வந்ததும் செயல்படத் தொடங்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் உடனடியாகத் தகவமைத்துக்கொள்வது சில நேரங்களில் சிரமமான காரியமாகக் கூட இருக்கலாம்.

சஹலின் ஸ்பின் வலையில் சிக்கிய பேட்டர்கள்

நவ்தீப் சைனி தொடர்ச்சியாக இரண்டு நோபால்களை வீசினார். அதற்கு அடுத்து அவர் வீசிய பந்தை ரஷீத் பவுண்டரிக்கு பறக்கவிட்டார். இருந்தாலும் ஹைதராபாத் வெற்றி பெற வேண்டுமெனில் அவர்களது ரன் ரேட் 18.14 என்ற அளவில் இருந்தாக வேண்டும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் இந்தப் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என்று அனைத்திலுமே சிறப்பாகச் செயல்பட்டது. ஹைதரபாத் 13 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 75 ரன்களை எடுத்திருந்தது.

13 ஓவர் முடிந்த நிலையில் ராஜஸ்தானி ரன்ரேட் 5.93. கடைசி 22 பந்துகளில் அவர்களது ரன் ரேட் 9 ஆக இருந்தது. ஆனால், அவர்களுக்கு அப்போதைய நிலவரப்படி 19.42 ரன்ரேட் இருந்தால்தான் தாக்குப்பிடித்திருக்க முடியும்.

இருப்பினும் களத்தில் நின்றிருந்த அதுல் சமாத்தும் ஆதில் ரஷீத்தும் எதிரணியின் பந்துவீச்சையும் திறமையான ஃபீல்டிங்கையும் எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அதன்விளைவாக ஆதில் விக்கெட் சஹல் பந்துவீச்சில் சஞ்சு சாம்சன் கேட்ச் மூலம் வீழ்த்தப்பட்டது.

15வது ஓவரை கே.எம்.ஆசிஃப் வீசினார். பேட்டிங் தரப்பில் அப்துல் சமாத், புவனேஸ்வர் குமார் களத்தில் இருந்தார்கள். ஜாஸ் பட்லர் போன்ற ஒரு பேட்ஸ்மேனை தொடக்க ஆட்டக்காரராக இறக்கி பவர் பிளேவை ராஜஸ்தான் அணி சாமர்த்தியாக விளையாடியது.

அவரது பேட்டில் அடித்த பந்துகள் ஒவ்வொன்றும் இடிபோல் ரன்களைக் குவிக்க உதவின. அத்தகைய பவர் பிளேவில் குவிக்கப்பட்ட ரன்களை எதிர்கொள்வது ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது.

பந்துவீச்சிலும் சாஹல், அஸ்வின் ஆகியோரது அதிரடியால் திணறியது. ராஜஸ்தான் பவர் பிளே முடிவில் எடுத்த ரன் கணக்கை எடுக்கவே ஹைதராபாத் அணிக்கு 15 ஓவர்கள் தேவைப்பட்டன. அதற்காக அவர்கள் 7 விக்கெட்டுகளை இழக்க வேண்டியிருந்தது.

மலிங்காவின் முகம் பூரிப்பு நிறைந்திருந்தது. வேகப்பந்து, ஸ்பின்னிங், பவுன்சர், யார்க்கர் என்று அனைத்து வகை பந்துவீச்சையுமே சிறப்பாகச் செய்த ராஜஸ்தான் அணியை நினைத்து அவர் மகிழ்ந்துகொண்டிருப்பதைப் போல் இருந்தது.

ஏற்கெனவே சோகத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ரசிகர்களை இன்னும் வேதனைப்படுத்தக்கூடிய வகையில், சாஹல் தனது நான்காவது விக்கெட்டாக புவனேஸ்வர் குமாரை அவுட்டாக்கினார். சஹலின் ஸ்பின் வலை மிகவும் சிக்கலானதாக இருந்தது. 18 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை மட்டுமே சன்ரைசர்ஸ் எடுத்திருந்தனர்.

களத்தில் அப்துல் சமத், உம்ரான் மாலிக் இருந்தனர். ஆட்ட இறுதியில் அப்துல் சமத் 74 மீட்டர் தொலைவுக்கு சிக்ஸ் ஒன்றை அடித்தார். அதற்கு அடுத்து மீண்டுமொரு சிக்ஸ். ஆனால், அவரது ஆட்டம் அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரிவதைப் போன்ற உணர்வை ஹைதராபாத் மீது ஏற்படுத்தியது.

இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எடுத்தது.

ஹைதராபாத் அணி திட்டமிடலில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மதிய நேரம் தொடங்கிய விளையாட்டில், டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஒருவிதத்தில் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: