"பொதுக்கூட்டம் நடத்த பணம் டெபாசிட்" - புதிய வரைவு விதிகளை அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

'20 லட்ச ரூபாய் டெபாசிட்' -  பொதுக்கூட்ட வரைவு விதிகளை கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

"கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக அரசியல் கட்சிகள் இயங்குவதையே முடக்கும் வகையில் செயல்படுவதை ஏற்க முடியாது" எனக் கூறுகிறார், இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.

பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான விதிகளை வகுப்பதற்காக நவம்பர் 6 அன்று தமிழ்நாடு அரசு கூட்டிய கூட்டத்துக்கு எதிராக இப்படியொரு கருத்தை அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த செப்டெம்பர் 13 அன்று மக்கள் சந்திப்பை தொடங்கினார். அவரின் திருச்சி பரப்புரைக்கு சில நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதியை வழங்கியது.

ஆனால், இவை கடுமையானதாக உள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், 'தவெக தலைவரின் பரப்புரைக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விண்ணப்பங்களை பரிசீலித்து அனுமதி வழங்குவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

'ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களில் காவல்துறை அனுமதியை வழங்குகிறது. ஆனால், தவெகவுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது' எனவும் மனுவில் சி.டி.ஆர்.நிர்மல்குமார் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.

பொதுக்கூட்டங்களுக்கான விதிகள்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்

அவர் தனது உத்தரவில், அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்க ஏதுவாக குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்குமாறு உத்தரவிட்டார்.

இந்தநிலையில், செப்டெம்பர் 27 அன்று கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றுக்கு புதிய விதிமுறைகளை வகுக்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டது.

நவம்பர் 6 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், இ.கம்யூ, மா.கம்யூ, வி.சி.க உள்பட இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், சுமார் 26 பக்கங்களுக்கு கையேடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், DIPR

வரைவு விதிமுறைகளில் என்ன உள்ளது?

கூட்டத்தில், சுமார் 26 பக்கங்களுக்கு கையேடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அதில், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ரோட் ஷோ, ஆர்ப்பாட்டம் போன்றவற்றுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு முன்மொழிந்துள்ளது. அதில் உள்ள விவரங்கள்

  • மாவட்ட ஆட்சித் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும்.
  • ஒரே இடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் அனுமதி கேட்டால் யார் முதலில் அனுமதி கோரினார்களோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • ரோட் ஷோ நடத்துவதற்கு மாநில நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை அல்லது உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும்.
  • பொதுக்கூட்டங்கள், ரோட் ஷோ ஆகியவற்றை மூன்று மணிநேரத்துக்குள் முடிக்க வேண்டும்.
  • கூட்டங்களில் இரண்டு மணிநேரத்துக்கு மேல் மக்கள் காத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • 'தலா 4 லிட்டர் குடிநீர்... தற்காலிக கழிப்பறை' பங்கேற்பாளர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • கூட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தாலுகா அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குழுவில் வருவாய், காவல்துறை, சுகாதாரம், பொதுப்பணி, மின்சாரம் மற்றும் தீயணைப்புத் துறைகளின் அதிகாரிகள் இருப்பார்கள்.
  • கூட்டம் நடக்கும் இடங்களில் அதிக ஆபத்துள்ள இடங்களை மாவட்ட அளவிலான குழுக்களும் குறைந்த மற்றும் நடுத்தர ஆபத்து உள்ள நிகழ்வுகளை தாலுகா அளவிலான குழுக்களும் கண்காணிக்கும்.
  • மேடை மற்றும் மின்சார உபகரணங்களின் நிலைத்தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்களிடம் இருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
  • வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறையின் விதிமுறைகளின்படியே கொடிக் கம்பங்களும் டிஜிட்டல் பேனர்களும் அமைக்கப்பட வேண்டும்.
  • அனுமதிக்கப்பட்ட இடத்தில் கூட்டத்தின் அளவு மீறப்பட்டால் அதனை ஒழுங்குபடுத்துவதற்கு தடுப்புகள் மற்றும் கயிறுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வைக்க வேண்டும்.
  • அவசர சேவைகள் மற்றும் போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்படாமல் இருப்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • கட்சித் தலைவர்களின் வாகனங்களை மக்கள் பின்தொடர்வதைத் தடுப்பதற்கு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.
  • முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இடங்களை ஒதுக்க வேண்டும்.
பொதுக்கூட்ட வரைவு விதிகளை கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

'1 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய்'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கூட்டத்துக்கு வரும் தொண்டர்களால் பொதுச்சொத்துக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதனை ஈடு செய்யும் வகையில் முன்வைப்புத் தொகை (Deposit) விவரங்களும் அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

  • 5000 முதல் 10,000 பேர் கூடினால் ஒரு லட்ச ரூபாயை முன்வைப்பாக செலுத்த வேண்டும்.
  • 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் கூடினால் 3 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும்.
  • 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் பங்கேற்றால் 5 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும்.
  • 50 ஆயிரத்துக்கு மேல் பொதுமக்கள் கூடினால் 20 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும்.

'இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வரும் 10-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்' என, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், 'இவற்றில் உள்ள சில அம்சங்களை ஏற்க முடியாது' என அ.தி.மு.க, காங்கிரஸ், இ.கம்யூ, மா.கம்யூ, விடுதலைச் சிறுத்தைகள் உள்பட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

"மக்களுக்குக் குடிநீர் உள்பட அத்தியாவசிய உதவிகளைச் செய்து தர வேண்டும் எனக் கூறுவதை ஏற்கிறோம். ஆனால், முன்வைப்புத் தொகையாக ஒரு லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரையில் செலுத்துமாறு கூறுவதை ஏற்க முடியாது" எனக் கூறுகிறார், அ.தி.மு.கவின் வழக்கறிஞர் பிரிவு செயலரும் மாநிலங்களவை எம்.பியுமான ஐ.எஸ்.இன்பதுரை

"கூட்டங்களுக்கு பணம் செலுத்துமாறு கூறுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது" எனக் கூறும் ஐ.எஸ்.இன்பதுரை, " ஜனநாயக மாண்புகள் அகன்று காவல்துறை மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சியாக அரசின் புதிய விதிமுறைகள் உள்ளன" எனவும் குறிப்பிட்டார்.

பொதுக்கூட்ட வரைவு விதிகளை கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

சட்டம் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992ன் கீழ் (Tamilnadu Property (prevention of Damage &Loss) Act, 1992) நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆனால், இதுவரை இழப்பீடு வசூலிக்கப்பட்டது குறித்து சுயாதீனமாக பிபிசி தமிழால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனை சென்னை உயர் நீதிமன்றமும் மேற்கோள் காட்டியுள்ளது.

மாமல்லபுரத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரைத் திருவிழா நடத்தப்பட்டது. அப்போது மரக்காணம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் கலவரம் ஏற்பட்டது.

இந்த வழக்கில் அக்கட்சியின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவரை அன்றைய அ.தி.மு.க அரசு கைது செய்தது.

கலவரம் காரணமாக 58 பேருந்துகள் சேதம் அடைந்ததாகவும் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 'பொதுச் சொத்துகள் சேதம் விளைவித்தல் சட்டம் 1992 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. எத்தனை பேரிடம் இழப்பீடு வசூலிக்கப்பட்டது என்பது தெரியவில்லை' எனத் தெரிவித்தார்.

பொதுக்கூட்ட வரைவு விதிகளை கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

'மோசமான முன்னுதாரணம்'

"பொதுச் சொத்துகள் சேதம் விளைவித்தல் சட்டப்படி சேதம் ஏற்பட்டால் அரசியல் கட்சிகளிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கலாம். அப்படியிருக்கும்போது புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டால் இந்தச் சட்டம் என்ன ஆகும்?" எனக் கேள்வி எழுப்புகிறார், மா.கம்யூ கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

இதே கருத்தை முன்வைக்கும் அ.தி.மு.க எம்.பி இன்பதுரை, " கரூர் துயர சம்பவத்துக்கு முறையான சட்டங்கள் இல்லாதது காரணம் அல்ல. அவற்றை முறையாக செயல்படுத்தாமல் இருப்பதுதான் காரணம்" எனக் கூறுகிறார்.

"தற்போது அமலில் உள்ள விதிப்படி பொதுக்கூட்டம் நடப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் அனுமதி பெற வேண்டும். ஆனால், புதிய விதிமுறையில் 15 நாள்களுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும் என்கின்றனர். இதற்கு அ.தி.மு.க சார்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்" எனவும் இன்பதுரை தெரிவித்தார்.

"அரசியல் கட்சிகளிடம் முன்வைப்புத் தொகையைப் பெறுவது, கூட்டங்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு அனுமதியைப் பெற வேண்டும் எனக் கூறுவது ஆகியவற்றை ஏற்க முடியாது" என்கிறார், கே.பாலகிருஷ்ணன்.

"பாலியல் சம்பவத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டால் அதற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. உடனே போராட்டம் நடத்தாமல் 15 நாட்கள் கழித்து போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோர முடியாது. இது நடைமுறையில் சாத்தியமில்லை எனவும் கூட்டத்தில் தெரிவித்தோம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய கே.பாலகிருஷ்ணன், "வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு விதிகளைக் கொண்டு வந்தால் அவை மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும். நவம்பர் 10 ஆம் தேதிக்குள் பதிலை அளிக்க முடியாது என்பதால் கால அவகாசம் கோரியுள்ளோம்" என்கிறார்.

பொதுக்கூட்டங்களுக்கான விதிகள்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, மா.கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

'போராட வேண்டிய நிலை ஏற்படும்' - கே.பாலகிருஷ்ணன்

இதே கூட்டத்தில் அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதைப் பற்றிப் பேசும் கே.பாலகிருஷ்ணன், "மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகங்களின் முன்புறமாக ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. அங்கு நடத்தாமல் வேறு எங்கு நடத்துவது?" எனக் கேள்வி எழுப்புகிறார்.

"உயர் நீதிமன்றம் கூறிவிட்டது என்பதற்காக காவல்துறைக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் நோக்கில் விதிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. இதனை ஏற்க முடியாது" எனக் கூறும் அவர், "அரசுத் தரப்பில் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். இதே விதிகள் அமல்படுத்தப்பட்டால் போராட வேண்டிய நிலை ஏற்படும்" எனவும் தெரிவித்தார்.

"நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம். அதற்காக அனைத்து விஷயங்களையும் ஏற்க முடியாது" எனக் கூறுகிறார், இ.கம்யூ கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.

"கூட்டம் நடத்துவதற்கு முன்வைப்புத் தொகை கோருவதை அரசியல் கட்சிகளை முடக்கும் வேலையாகவே பார்க்கிறோம்" என்கிறார்.

தொடர்ந்து பேசிய மு.வீரபாண்டியன், "தேர்தல் ஜனநாயகத்தின் அடித்தளமாக அரசியல் கட்சிகள் உள்ளன. இங்கு பல கட்சிகள் இயங்கி வருகின்றன. பல்வேறு மொழி பேசும் கட்சிகளும் ஏழைகளை அடையாளப்படுத்தும் கட்சிகளும் உள்ளன. இவர்கள் பணம் கட்டிய பிறகே கூட்டம் நடத்த வேண்டும் எனக் கூறுவதை ஏற்க முடியாது" எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுக்கூட்ட வரைவு விதிகளை கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

'அரசியல் கட்சிகளை முடக்கக் கூடாது'

"பேரணி, ஆர்ப்பாட்டம் ஆகியவை எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து போராடிப் பெற்ற உரிமைகளாக உள்ளன. இதன் மீது தாக்குதலைத் தொடுப்பதை ஏற்க முடியாது" எனக் கூறுகிறார், மு.வீரபாண்டியன்.

"தனி நபருக்கு 4 லிட்டர் தண்ணீர் தர வேண்டும் எனக் கூறுகின்றனர். அத்துடன், சாதி உணர்வைத் தூண்டாத கூட்டங்களாக இருக்க வேண்டும் என விதிகளைக் கொண்டு வரலாம்" என அவர் குறிப்பிட்டார்.

"சாதி, மதம் தொடர்பான கூட்டங்களுக்கு இதுபோன்ற விதிமுறைகளை வகுக்கலாம். அரசியல் கட்சிகளுக்கு ஏன் நெருக்கடி தர வேண்டும்?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய மு.வீரபாண்டியன், "கரூர் சம்பவத்தில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்பது வேறு. அதற்காக அரசியல் கட்சிகள் இயங்குவதையே முடக்கக் கூடாது. மக்களுடன் அரசியல் கட்சிகள் நெருங்கியிருக்க வேண்டும். எதிர்மறைக் கருத்துகளுக்கு இடமளிக்க வேண்டும்" என்கிறார்.

'இறுதி முடிவை நீதிமன்றம் எடுக்கும்' - ஆர்.எஸ்.பாரதி

அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு தொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"எங்கள் கருத்துகளை நாங்களும் கூறியுள்ளோம். அரசியல் கட்சிகள் கூறிய கருத்துகளை ஆராய்ந்து விதிமுறைகளில் திருத்தம் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை வைத்து முடிவு செய்யப்படும்" எனக் கூறினார்.

ஏற்கெனவே சட்டங்களை மற்றும் விதிகளை முறையாக அமல்படுத்துவது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுவது குறித்துக் கேட்டபோது, "நீதிமன்ற உத்தரவின்படி இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் நடவடிக்கை எடுப்பது தொடர்பான சட்டங்கள் இருப்பது நீதிமன்றத்துக்கும் தெரியும். ஆனால், புதிய விதிகளை வகுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது" என்கிறார்.

"மாநில அரசு சமர்ப்பிக்கும் விஷயங்களை ஆராய்ந்து நீதிமன்றம்தான் இறுதி முவை எடுக்க வேண்டும்" எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு