You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்? டிரம்ப் சொன்னது என்ன?
இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 270 நாட்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நாசா குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று 9 மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன.
வெறும் 8 நாட்கள் பயணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளி நிலையத்துக்கு சென்ற அந்த குழுவினர் இத்தனை நாட்கள் அங்கேயே தங்கக்கூடும் என்று நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். தற்போது அவர்கள் பூமிக்கு திரும்புவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜுன் 5ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.
ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அருகில் சென்றபோது அதில் சிக்கல்கள் ஏற்பட்டன. விண்கலத்திற்கு உந்துசக்தியை வழங்கக்கூடிய ஐந்து உந்துகலன்கள் வேலை செய்யாமல் போனது.
இதையடுத்து, இந்த விண்கலம் ஆளில்லாமல் பூமி திரும்பியது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்துவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவை பலனளிக்கவில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர்களை பூமிக்கு அழைத்து வரும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் ஈலோன் மஸ்கிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாசாவின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட பத்து மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும், மார்ச் 19 அல்லது 20ஆம் தேதியில் பூமிக்குத் திரும்பலாம்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுனிதா வில்லியம்ஸின் , முடியின் தோற்றம் குறித்து கமெண்ட் அடித்துப் பேசினார்.
"கடினமான முடியைக் கொண்ட பெண்ணை நான் பார்க்கிறேன். நல்ல உறுதியான முடியை அவர் பெற்றுள்ளார். நான் கிண்டலடிக்கவில்லை. அவரது முடியைப் பற்றி விளையாட ஏதுமில்லை" என டிரம்ப் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)