You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
23 எக்ஸ்ட்ராஸ், சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்கள் - ஆர்சிபியின் தோல்வி எங்கு தொடங்கியது?
4 ஆண்டுகளுக்கு பின்னர் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளூர் ரசிகர்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விருந்து படைத்துள்ளது.
போட்டிக்கு பிந்தைய பரிசளிப்பு நிகழ்வில் பேசிய பெங்களூரு கேப்டன் டூப்ளெஸ்ஸி, "12, 13வது ஓவர் வரை ஆட்டம் எங்களுக்கு சாதகமாக இருந்தது. கூடுதலாக 20-25 ரன்களை கொடுத்துவிட்டோம். ஷர்தூல் சிறப்பாக விளையாடினார். கொல்கத்தாவின் லெக்ஸ்பின்னர்கள் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். பிட்ச் சிறப்பாக இருந்தது. இருந்தாலும் கொல்கத்தாவின் ஸ்பின்னர்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். பேட்டிங்கில் நாங்கள் சராசரியாக இருந்தோம். இதன் மூலம் கற்றுக்கொள்கிறோம். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம். அது எங்களிடம் இருந்து விலகிச் சென்றது" என்று குறிப்பிட்டார்.
கொல்கத்தாவின் அதிரடி பேட்டிங், சுழற்பந்துவீச்சு என்பதைத் தாண்டி நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி அதிகளவில் எக்ஸ்ட்ராஸை வாரி வழங்கியதும் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். இந்த ஆட்டத்தில் மொத்தம் 23 எக்ஸ்ட்ராஸை பெங்களூரு அணி விட்டுக்கொடுத்தது. குறிப்பாக சிராஜ் அதிகளவு எக்ஸ்ராஸ் வழங்கினார். முதல் 3 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 26 ரன்களை எடுத்திருந்தது. இதில் அவர்கள் அடித்தது 16 ரன்கள் தான். மீதம் 10 ரன்கள் எக்ஸ்ட்ராஸ் மூலம் அவர்களுக்கு கிடைத்தது.
13-ஆவது ஓவரின் கடைசி பந்தை வீசிய ஆகாஷ் தீப் அதனை நோ பாலாக வீச அதில் ரிங்கு சிங் ஒரு ரன் எடுத்தார். அடுத்த வீசிய ஃப்ரி ஹிட்டை ஹர்தூல் தாக்கூர் சிக்ஸுக்கு விரட்டினார். இதுபோன்ற எக்ஸ்ட்ராஸ்களை அவர்கள் கட்டுப்படுத்தியிருந்தால் கொல்கத்தா அணியை 180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க முடியும். இமாலய இலக்கு என்பதால் அழுத்ததுடன் ஆடி விக்கெட்களை இழந்த பெங்களூர் பேட்ஸ்மேன்கள் டார்கெட் ஒருவேளை 180 ரன்களாக இருந்திருந்தால் வேறு விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கக் கூடும்.
இதே ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெறும் 6 எக்ஸ்ட்ராஸ் மட்டுமே வழங்கியது.
ரஹ்மானுல்லாவின் அதிரடி
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவுக்கு முதல் மூன்று ஓவர்கள் சராசரியாக அமைந்தாலும் 4வது ஓவர் அவர்களும் கடுமையானதாக மாறியது. அந்த ஓவரை வீசிய வில்லி வெங்கடேஷ் ஐயர், மன்தீப் சிங் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி அழுத்தம் கொடுத்தார். ஹாட்ரிக் பாலை எதிர்கொண்ட நிதிஷ் ராணா ஷார்ட் மிட்விக்கெட்டில் அடித்து ஒருவழியாக சமாளித்தார். அந்த ஓவரில் ஒரு ரன் கூட விட்டுத்தராத வில்லி 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். பின்னர் 7வது ஓவரில் ராணா வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்துகொண்டே இருந்தாலும், ரஹ்மானுல்லா குர்பாஸ் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்துகொண்டே இருந்தார்.
மாயாஜாலம் நிகழ்த்திய ஷர்துல் தாக்கூர்
கரண் ஷர்மா வீசிய ஆட்டத்தில் 11ஓவது ஓவரின் 2வது பந்தில் ரஹ்மானுல்லா கேட்ச் ஆகி வெளியேறினார். அப்போது அவர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 57 ரன்களை எடுத்திருந்தார். ஈடன் கார்டன் மைதானமே எதிர்பார்த்திருந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் அடுத்ததாக களமிறங்கினார். இது அவரது 100வது ஐபிஎல் ஆட்டம் என்பதால் தங்களுக்கு விருந்து படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்.
ஆனால், ரஸ்ஸல் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து நடையை கட்டினார். அப்போது கொல்கத்தா 89 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்தது. கடைசி நம்பிக்கையாக இருந்த ரஸ்ஸலும் ஆட்டமிழந்ததால் அந்த அணி 150 ரன்களை தாண்டுமா என்றவொரு சந்தேகம் இருந்தது. ஆனால், அடுத்ததாக களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி மூலம் மாயாஜாலத்தை நிகழ்த்தி காட்டினார். கரணின் ஹாட்ரிக் பாலை அவர் எதிர்கொண்டபோது இன்சைட் எட்ஜ் மூலம் பந்து பவுண்டரிக்கு சென்றது.
அதற்கு பின்னர், ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரி நிச்சயம் என்ற வகையில் கொல்கத்தாவின் பேட்டிங் இருந்தது. விக்கெட்களை விரைவாக இழந்தாலும், அதிரடியை அவர்கள் கைவிடவில்லை. குறிப்பாக ஷர்தூல் தாக்கூர் பெங்களூரு பந்துவீச்சாளர்களை பந்துகளை சிதறடித்துக்கொண்டிருந்தார். இருபதே பந்துகளில் அரை சதத்தை அவர் கடந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் ரிங்கு சிங்கும் அதிரடியை வெளிப்படுத்தினார். 18வது ஓவரில் சிராஜ் வீசிய நோ பாலை சிக்ஸருக்கு விரட்டிய ரிங்கு, ஹர்ஷல் பட்டேல் வீசிய அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர் என அடித்து 46 ரன்களில் வெளியேறினார். கடைசி நேரத்தில் இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் வழங்கியதால் கொல்கத்தாவால் இமாலய ஸ்கோரை எட்ட முடிந்தது. இந்த ஆட்டத்தில் பெங்களூருவின் ஃபீல்டிங் அமைப்பும் விமர்சனத்துக்கு உள்ளாகினர். ஷர்துல் அடித்த ஒருசில ஷாட்கள் கேட்ச் ஆக வாய்ப்பு இருந்தும் அங்கு ஃபீல்டர்கள் இல்லாததால் அவர் தப்பித்தார்.
வீழ்ச்சியில் இருந்து எழுச்சி - கொல்கத்தாவுக்கு புதிதல்ல
5 விக்கெட்களை இழந்தாலும் அதன் பின் மீண்டு வருவது என்பது கொல்கத்தாவுக்கு புதிது அல்ல. ஏற்கனவே, கடந்த 2021ஆண்டு சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்திலும் கொல்கத்தா இதனை செய்திருந்தது. முதலில் பேட் செய்த 220 ரன்களை எடுக்க, அடுத்து வந்த கொல்கத்தா 31 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. ஆனாலும் தினேஷ் கார்த்திக், ரஸ்ஸல், பேட் கம்மின்ஸ் ஆகியோரின் அதிரடியால் அந்த ஆட்டத்தில் 202 ரன்களை அந்த அணி தொட்டது. இதேபோல், 2018 சிஸ்கேவுக்கு எதிராக 89 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த கொல்கத்தா 6 விக்கெட்களுக்கு 202 ரன்களை எடுத்திருந்தது. 2020ல் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 99-5ல் இருந்து 191-7 என உயர்ந்தது. 2022ல் டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 92-5 என்பதில் இருந்து 189-5 என எழுச்சி பெற்றது என பலவற்றை கூறலாம். எனவே, வீழ்ச்சியில் இருந்து எழுச்சி பெறுவது தங்களுக்கு புதிதல்ல என்பதை நேற்றைய ஆட்டம் மூலம் மீண்டும் ஒருமுறை அவர்கள் நிரூபித்துள்ளனர்.
சிறப்பான தொடக்கம்
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு இருந்தாலும் விராட் கோலி, டூப்ளெஸ்ஸி ஜோடி சிறப்பான தொடக்கத்தையே பெங்களூருவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். தனது ரன் கணக்கை பவுண்டரியுடன் தொடங்கிய விராட் கோலி முதல் ஓவரின் கடைசி பந்தையும் பவுண்டரியுடன் முடித்து வைத்தார். இதேபோல் டிம் சௌதி வீசிய 4வது ஓவரில் விராட் கோலி ஒரு பவுண்டரி அடிக்க, டூப்ளெஸ்ஸி 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என அடித்து எதிரணிக்கு அச்சமூட்டினார். அந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள் கிடைத்தது. ஆனால் 5 ஓவரை வீசிய சுனில் நரேன் விராட் கோலியை போல்ட் ஆக்கி ஆட்டத்தை கொல்கத்தா பக்கம் திருப்பினார். 150வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய நரேன் இந்த போட்டியில் 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். மேலும், ஐபிஎல் போட்டிகளில் கோலியின் விக்கெட்டை அவர் வீழ்த்துவது இது 4வது முறையாகும். அடுத்த ஓவரிலேயே வருண் சக்ரவர்த்தி டூப்ளெஸ்ஸியை போல்ட் ஆக்க பெங்களுருவின் சரிவும் அதில் இருந்து தொடங்கியது.
சொதப்பிய மிடில் ஆர்டர்
பெங்களூரு - மும்பை இண்டியஸ் இடையே நடைபெற்ற முந்தைய ஆட்டத்தில் மும்பை 171 ரன்களை எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய கோலி (82 ரன்கள் - நாட் அவுட்) - டூப்ளெஸ்ஸி(73 ரன்கள்) ஜோடியின் அதிரடியால் அந்த ஆட்டதில் பெங்களூரு எளிதாக வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் இந்த இருவரும் ஆட்டமிழந்த பின்னர், யாருமே பெரிதளவு நின்று ஆடவில்லை என்பதும் பெங்களூருவின் தோல்விக்கு முக்கிய காரணம். கோலி- டூப்ளெஸ்ஸியை வீழ்த்தி விட்டால் ஆட்டத்தை வென்றுவிடலாம் என்ற நிலை நேற்றைய ஆட்டத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. 6வது ஓவரில் டூப்ளெஸ்ஸியை வெளியேற்றிய வருண் சக்ரவர்த்தி 8வது ஓவரில் மேக்ஸ்வெல், ஹர்ஷால் ஆகியோரை ஆட்டமிழக்க செய்தார். அடுத்த ஓவரில் சுனில் நரேன் ஷபாஸ் அஹமத்தை ஆட்டமிழக்க செய்ய 61-5 என பெங்களூரு தவித்தது. 44-0 என்ற வலுவான நிலையில் இருந்த பெங்களூரு அணி அடுத்த 15 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது அந்த அணியின் பேட்டிங் பலவீனத்துக்கு சான்றாக அமைந்தது. பின்னர் வந்த பிரேல்வெஸ், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்தி ஆகியோரும் பெரிதாக ரன்களை குவிக்காமல் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இறுதிக்கட்டத்தில் வில்லி, கரண் ஷர்மா ஆகியோரின் உதவியால் அந்த அணி 100 ரன்களை கடந்தது. இல்லையென்றால் 100 வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றிருக்கும்.
சூழலில் தாக்கு பிடிக்க முடியாமல் வீழ்ந்தது
இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவின் வெற்றிக்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு மிக அதிகம். தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்த விராட் கோலியை சுனில் நரேனும், டூப்ளெஸ்ஸியை வருண் சக்ரவர்த்தியும் தங்கள் சூழலில் வீழ்த்த அதன் பின்னர் பெங்களூரு அணியால் மீண்டு வரவே முடியவில்லை. இந்த ஆட்டத்தில் பெங்களூருவின் 9 விக்கெட்களை கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றியிருந்தனர். அதில் தனது முதல் போட்டியில் விளையாடிய கொல்கத்தாவின் இன்பேக்ட் வீரர் சுயாஷ் சர்மா தினேஷ் கார்த்திக்கின் விக்கெட் உட்பட மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்கள், சுனில் நரேன் 2 விக்கெட்கள் எடுத்திருந்தனர். இவர்கள் தவிர ஷர்தூல் தாக்கூர் பிரேஸ்வெல்லில் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தாவுக்கு கிடைத்த இரண்டாவது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 2017ல் பெங்களூரு அணியை 49 ரன்களில் கொல்கத்தா ஆல் அவுட் செய்திருந்தது. இந்த ஆட்டத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தது. நேற்றைய ஆட்டத்தில் இந்த சாதனையை நூலிழையில் அவர்களால் முறியடிக்க முடியாமல் போனது.