அஸ்வினை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஆட்டம் விறுவிறுப்புடன் நடந்து முடிந்துள்ளது. இறுதி ஓவர் வரை ஆட்டத்தின் போக்கு கணிக்க முடியாததாகவே இருந்தது. அந்த வகையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக நேற்றைய ஆட்டம் அமைந்தது. அதேநேரத்தில் ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரராக அஸ்வினை களமிறக்கியது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி 197 ரன்கள் எடுக்க அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி 192 எடுத்து 5 ரன்கள் வித்தியாத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய துருவ் ஜூரெல் மற்றொரு பேட்ஸ்மேனான ஹெட்மயர் உடன் இணைந்து கடைசி நேரத்தில் வாணவேடிக்கை காட்டினார்.

15 ஓவர்களுக்கு 124 ரன்களை எடுத்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 5 ஓவர்களுக்கு 74 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில், இருவரும் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு பக்கத்தில் அணியை வழி நடத்தி சென்றனர். கடைசி ஓவரில் 16 ரனகள் தேவைப்பட்ட நிலையில், சாம் கரணின் சிறப்பான பந்துவீச்சால் 5 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியை தழுவியது.

ஆட்டம் முடிந்த பின்னர் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், 'இந்த மைதானம் பேட் செய்வதற்கு ஏற்றது என்று எண்ணுகிறேன், குறிப்பாக பவர்பிளேவில் சிறப்பாக பேட் செய்யலாம். இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்கக்கூடிய சாத்தியம் இருந்தும் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினர்' என்று குறிப்பிட்டார். அஸ்வினை தொடக்கக் ஆட்டக்காரராக களமிறக்கியது பற்றி பேசும்போது, 'ஜாஸ் பட்லர் அப்போது தயாராக இல்லை.

கேட்ச் பிடித்ததற்கு பின்னர் அவர் கையில் காயம் ஏற்பட்டது. முதலில் படிக்கலை களமிறக்கலாம் என்றுதான் நினைத்தோம். அவர்களிடம் இரண்டு ஸ்பின்னர்கள் இருந்ததால், மிடில் ஓவரில் அவர் தேவை என்று விரும்பினோம்' என்று தெரிவித்தார்.

ஈரப்பதத்தால் அவதிப்பட்ட பவுலர்கள்

முன்னதாக, டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மைதானத்தின் ஈரப்பதத்தை கணக்கில் கொண்டு பந்துவீச்சை தேர்வு செய்தார். இரண்டாவதாக பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்பது அவரது கணக்கு. பஞ்சாப் கிங்ஸ் சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சின் - ஷிகர் தவான் ஜோடி ராஜஸ்தானின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ஈரப்பதம் காரணமாக ராஜஸ்தான் பவுலர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் பந்துவீசினர்.

அந்த அணியில் அஸ்வின், ஹோல்டரை தவிர மற்றவர்களின் பந்து வீச்சு சோபிக்காமல் போனது. குறிப்பாக கே.எம்.ஆசிஃப் பஞ்சாப் பேட்ஸ்மேன்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டார். ஆட்டத்தின் 4வது ஓவரை ஆசிஃப் வீசியபோது, அதில், 3 பவுண்டரி, 1 சிக்சர் உட்பட 19 ரன்களை பிரப்சிம்ரன் விளாசினார்.

பிரப்சிம்ரன் ஒருபக்கம் அடித்து ஆட ஷிகர் தவான் அவருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் விதமாக விளையாடினார். இதனிடையே, ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தை பிரப்சிம்ரன் அடித்தார். 28 பந்துகளில் அவர் அரை சதத்தை கடந்தார்.

பட்லர் பிடித்த அற்புத கேட்ச்

பஞ்சாப் அணியின் விக்கெட்டை வீழ்த்த ராஜஸ்தான் எவ்வளவோ முயன்றும் தொடக்கத்தில் அதற்கு பலனளிக்கவில்லை. அஸ்வின், ஹோல்டர் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு பஞ்சாப் அணி ரன் குவிப்பதை கட்டுப்படுத்தியதே தவிர விக்கெட்டை அவர்களுக்கு பெற்று தரவில்லை. இதனிடையே 10வது ஓவரின் 4வது பந்தை ஹோல்டர் லெந்த் பாலாக போட பிரப்சிம்ரன் அதனை புல் ஷாட் அடிக்க முயன்றார். அப்போது பட்லர் ஓடி வந்து அற்புதமாக கேட்ச் செய்து பிரப்சிம்ரனை வெளியேற்றினார்.

அடுத்து களமிறங்கிய பனுகா ராஜபக்ச நாந் ஸ்ரைக்கர் என்டில் இருந்தபோது ஷிகர் தவான் அடித்த பந்து அவரது வலது கையை கடுமையாக தாக்கியது. இதனால் காயம் காரணமாக அவர் வெளியேறினார். கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் அணி விளையாடிய கடைசி ஆட்டத்தில் ராஜபக்ஷ அரைசதம் விளாசியிருந்தது கவனிக்கத்தக்கது.

360 கோணங்களிலும் அடித்த ஷிகர் தவான்

இதையடுத்து ஷிகர் தவான் உடன் ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்தார். பிரப்சிம்ரன் வெளியேறியப் பின்னர் ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். சஹால் வீசிய 12வது ஓவரில் ஜித்தேஷ் இரண்டு பவுண்டரிகள் விளாச தவான் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர் அடித்தார். சாஹல் வீசிய 14வது ஓவரில் மேலும் 3 பவுண்டரிகளை தவான் விளாசினார்.

அஸ்வினை தவிர பிற பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது ஒருமுறையாவது பவுண்டரி எல்லைக்கு பந்தை பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் அனுப்ப தவறவில்லை. குறிப்பாக தவான் 360 டிகிரியில் பந்தை அடித்து ஆடினார். ஆட்டத்தின் முதல் ஓவரில் களமிறங்கிய தவான் கடைசி ஓவர் வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்களை எடுத்தார். இந்த ஆட்டத்தில் அவர் அடித்த அரை சதம் ஐபிஎல்லில் அவரது 48வது அரைசதமாக பதிவானது. இறுதியில் 20 ஓவர் முடிவுக்கு பஞ்சாப் அணி 197 ரன்களை எடுத்திருந்தது.

தொடக்கத்தில் தடுமாறிய விக்கெட்கள்

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தானின் ஜெய்ஸ்வால், அஸ்வின் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சிக்ஸருடன் தனது ரன் கணக்கை தொடங்கிய ஜெய்ஸ்வால் அர்ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவரிலேயே ராஜபக்சவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த பட்லர் 3 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹர்பிரீத் தவறவிட்டார். இதற்கிடையே அஸ்வின் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன், தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினார். ஹர்பிரீத் ஓவரில் 2 பவுண்டரி, அடுத்து வீசிய நாதன் எல்லீஸ் ஓவரில் இரண்டு பவுண்டரி என துரிதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

எல்லீஸ் பந்துவீச்சில் வீழ்ந்த ராஜஸ்தான்

3 ரன்களில் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பிய பட்லர் எல்லிஸ் வீசிய பந்தை அடித்து ஆடியபோது, இன்சைட் எட்ஜ் ஆகி அவரது பேடில் பட்டு மேலே எழும்ப எல்லீஸ் அதனை அற்புதமாக கேட்ச் பிடித்தார். அப்போது. ராஜஸ்தான் அணி 57 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது.

இதற்கு பின்னர் ராஜஸ்தான் அணியின் ரன் குவிக்கும் வேகமும் குறைந்துபோனது. 3 ஓவர்களுக்கு பவுண்டரியே அடிக்கப்படவில்லை. இதனிடையே, 11வது ஓவரை வீசிய எல்லீஸ் கடைசி பந்தில் சஞ்சு சாம்சனை ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டரில் வந்த படிக்கல், ரியான் பராக் ஆகியோரலும் களத்தில் நீடித்து ஆட முடியவில்லை. எல்லீஸ் வீசிய 15வது ஓவரில் இருவருமே ஆட்டமிழந்தனர். இதனால், 15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

பஞ்சாப் அணிக்கு பயம் காட்டிய ஹோல்டர் - துருவ் ஜூரெல்

நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தபோது, அந்த அணி 250 ரன்கள் வரை எடுக்கக் கூடும், குறைந்தபட்சம் 220 ரன்களாவது சாத்தியம் என்று முதலில் கணிக்கப்பட்டது. ஆனால், இறுதிக் கட்டத்தில் ராஜஸ்தான் அணி பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் 200 ரன்களுக்குள்தான் அந்த அணி ஸ்கோர் செய்தது.

அதேபோல், ராஜஸ்தான் விக்கெட்களை இழந்து ரன்களை குவிக்கத் திணறியதால் பஞ்சாப் அணி எளிதாக வெற்றிப் பெற்றுவிடும் என்று பலரும் நினைத்தனர். ஆனால், அவர்களின் நினைப்பை ஹோல்டர்- துருவ் ஜூரேல் கூட்டணி பொய்யாக்கினர். 4 விக்கெட்களை வீழ்த்திய எல்லீஸ் அதுவரை 3 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். ஆனால், அவர் வீசிய 17வது ஓவரில் ஜூரெல் - ஹோல்டர் இருவரும் தலா ஒரு சிக்ஸர் அடிக்க மொத்தம் 16 ரன்கள் கிடைத்தது.

சாம் கரண் வீசிய 18வது ஓவரில் 6 சிக்ஸர், 1 பவுண்டரி உட்பட 19 ரன்கள், அர்ஷ்தீப் வீசிய 19வது ஓவரில் ஒரு சிஸ்கர் , 2 பவுண்டரி உட்பட 18 ரன்களை இந்த ஜோடி அடித்தது. எனினும் ஆட்டத்தின் இறுதி ஓவரை சிறப்பாக வீசிய சாம்கரண் 10 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். பட்லர், சஞ்சு சாம்சன் போன்ற முக்கிய விக்கெட்களை வீழ்த்திய எல்லீஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: