ராஜ்நாத் சிங் கருத்தால் பாகிஸ்தானின் சிந்து பற்றி விவாதம் - இந்த பகுதியின் வரலாறு என்ன?

தலையில் தலைப்பாகையுடன் இருக்கும் ஒரு நபர்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது சிந்து பகுதி பாகிஸ்தானுக்கு சென்றது (சித்தரிப்புப் படம்)
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் பற்றி இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்துக்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அமைச்சரின் கருத்தை 'விரிவாக்கவாத சிந்தனை' என்று விமர்சித்துள்ளது.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் இதை 'தூண்டிவிடும் மற்றும் திரித்துக் கூறப்பட்டும்' கருத்து என்று கூறியுள்ளது.

"சிந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், நாகரிகத்தின் பார்வையில் அது எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்" என்று ஞாயிற்றுக்கிழமை ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.

மேலும் அவர், "எல்லைகள் மாறலாம், யாருக்கு தெரியும்? நாளை சிந்து மீண்டும் இந்தியாவுக்கு வரலாம்," என்றும் கூறியிருந்தார்.

ராஜ்நாத் சிங், பாஜகவின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி, சிந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்துக்கள் சிந்து நதியை புனிதமாகக் கருதுகின்றனர் என்று கூறினார்.

1947 பிரிவினைக்குப் பிறகு சிந்து பாகிஸ்தானுடன் இணைந்தது, அப்போது நடந்த இடம்பெயர்வின் போது லட்சக்கணக்கான இந்து சிந்தி குடும்பங்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறின.

லால் கிருஷ்ண அத்வானியின் குழந்தைப் பருவம் சிந்து பகுதியில்தான் கழிந்தது. அவரது குடும்பம் இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு வந்தது. 2005 ஆம் ஆண்டில், அவர் சிந்துவுக்குப் பயணம் செய்திருந்தார்.

ஒரு மசூதியின் புகைப்படம்

பட மூலாதாரம், Muhammed Semih Ugurlu/Anadolu Agency via Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானின் சிந்து மாகாணம் இந்தியாவின் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் எல்லையை ஒட்டி உள்ளது.

பாகிஸ்தான் வசமான சிந்து மாகாணம்

பிரிட்டிஷ் இந்தியாவில் சிந்துப் பகுதி பம்பாய் மாகாணத்தின் கீழ் வந்தது.

பிரிவினைக்குப் பிறகு இந்தியா ஏற்றுக்கொண்ட தேசிய கீதத்திலும் சிந்துவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா-வின்படி, தற்போதுள்ள சிந்து மாகாணம் கிழக்கில் இந்தியாவின் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் எல்லையை ஒட்டி உள்ளது, வடமேற்கில் பலுசிஸ்தான் எல்லையுடனும், வடகிழக்கில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி சிந்து டெல்டாவில் அமைந்துள்ளது மற்றும் இந்த ஆற்றின் பெயரால் இது சிந்து என்று அழைக்கப்படுகிறது.

சிந்து அரசின் மனித உரிமைகள் ஆணையத்தின்படி, இந்த மாகாணத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. அதன் மொத்த மக்கள் தொகை சுமார் 5.5 கோடி ஆகும்.

சிந்து மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோமீட்டர் ஆகும்.

2017 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த மாகாணத்தில் மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 91.3 சதவீதமும் இந்துக்கள் 6.5 சதவீதமும் உள்ளனர். சிந்துவின் உமர்கோட் மாவட்டம் இன்றும் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியாகும்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்புகளில் ஒன்று

பட மூலாதாரம், AFP via Getty Images

சிந்து சமவெளி நாகரிகத்தின் மையம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தற்போதைய சிந்து மாகாணம் பண்டைய இந்தியாவின் ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது. பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் சிந்து நதிக்கரையில் வளர்ந்தது.

இங்குள்ள பழங்கால நகரமான மொஹெஞ்சதாரோ உலகின் மிகப் பழமையான நகர்ப்புற அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிந்து நதிக்கரையில் அமைந்துள்ள சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நகரம் கடந்த நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

மொஹெஞ்சதாரோவை யுனெஸ்கோ 1980-ஆம் ஆண்டில் உலக பாரம்பரிய தலமாக அறிவித்தது.

பிரிட்டானிகாவின்படி, கி.பி. 711 இல் சிந்துவை அரேபியர்கள் கைப்பற்றினர். 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் சிந்துவை முகலாயர்களும் (1591-1700), பின்னர் பல சுதந்திர சிந்தி வம்சங்களும் ஆட்சி செய்தன.

முகலாயப் பேரரசர் அக்பர் 1542-ஆம் ஆண்டில் சிந்துவின் உமர்கோட் கோட்டையில் பிறந்தார்.

1843-ஆம் ஆண்டில் இந்தப் பகுதி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.

இங்குள்ள சிந்தி இந்து குடும்பங்கள் வர்த்தகம் மற்றும் நிதி விவகாரங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தன. ஆனால் பிரிவினைக்குப் பிறகு நடந்த இடம்பெயர்வின் போது பல குடும்பங்கள் இந்தியா அல்லது மற்ற நாடுகளுக்குச் சென்றன.

சிந்து நதியின் காரணமாக இந்தப் பகுதி எப்போதும் வளமானதாக இருந்துள்ளது. இங்கு குறிப்பாகப் பருத்தி பயிரிடப்படுகிறது, மேலும் இன்று வரை மாகாணத்தின் தலைநகரான கராச்சி, பாகிஸ்தானின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றாக இருக்கிறது.

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட மக்ளி ஹில் நெக்ரோபோலிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட மக்ளி ஹில் நெக்ரோபோலிஸ், உலகின் மிகப்பெரிய கல்லறைகளில் ஒன்றாகும்.

கலாசார மையம்

இந்தப் பகுதி கலாசார ரீதியாக மிகவும் வளமானது மற்றும் இங்குள்ள பல பழங்கால இடங்களை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவித்துள்ளது.

கராச்சியில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மக்ளி ஹில் நெக்ரோபோலிஸ் பல பழங்கால கல்லறைகளைக் கொண்டுள்ளது.

யுனெஸ்கோவின் இணையதளத்தின்படி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டாவிற்கு அருகில் அமைந்துள்ள மக்ளி நெக்ரோபோலிஸ் உலகின் மிகப்பெரிய மற்றும் தனித்துவமான கல்லறைகளில் ஒன்றாகும்.

இது துறவிகள், கவிஞர்கள், ஆளுநர்கள், இளவரசர்கள், பேரரசர்கள் மற்றும் ராணிகளின் கல்லறைகள், கல்லறை மாடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களுடன் உலகின் மிகப்பெரிய கல்லறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சின்னங்கள் சுமார் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளன. இங்கு சுமார் ஐந்து லட்சம் கல்லறைகள் மற்றும் சமாதிகள் உள்ளன.

இங்குள்ள கட்டடக்கலை இஸ்லாமிய, இந்து, பாரசீக, முகலாய மற்றும் குஜராத்தி தாக்கங்களின் செழுமையான கலவையைக் காட்டுகிறது.

இந்தக் கல்லறைகள் அவற்றின் நீல பளபளப்பான ஓடுகள், நுணுக்கமான செதுக்கல்கள், அழகான கையெழுத்து மற்றும் வடிவமைப்புகளுக்காகப் பிரபலமாக அறியப்படுகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சிந்துவில் மதமாற்ற விவாதங்கள்

இந்து வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் மதமாற்றம் தொடர்பாக சிந்து மாகாணம் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

2021-ஆம் ஆண்டில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராட் ஷெர்மன் சிந்துவில் இந்து மற்றும் கிறிஸ்தவ குடும்பங்கள் கட்டாய மத மாற்றத்திற்கு ஆளாகின்றன என்று குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையமும் அதன் அறிக்கை ஒன்றில் சிந்துவில் உள்ள இந்துப் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு