You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தலையின் விலை ரூ.81,000: ஹார்வர்ட் பிணவறையில் உடல் உறுப்புக்கள் திருடி விற்பனை
அமெரிக்காவின் போஸ்டன் நகரில் செயல்படும் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் பிணவறையில் இருந்து இந்த உடல் உறுப்புக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர்.
அந்த பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் இருந்து மனித உறுப்புகள் சட்டவிரோதமாகத் திருடப்பட்டு, பின்னர் விற்பனை செய்யப்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த விற்பனை தொடர்பாக ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் சவக்கிடங்கில் மேலாளராகப் பணியாற்றிய செட்ரிக் லாட்ஜ் மற்றும் மேலும் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட சடலங்களில் இருந்து, "தலை, மூளை, தோல், எலும்புகளை" சட்டவிரோதமாக எடுத்து இணையதளம் மூலம் விற்பனை செய்ததாக செட்ரிக் லாட்ஜ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செட்ரிக் லாட்ஜும், அவரது மனைவி டெனிஸும் இணைந்து பென்சில்வேனியா மற்றும் மாசசூசெட்ஸில் பலருக்கு இந்த உடல் உறுப்புக்களை விற்றதாக கூறப்படுகிறது.
கடந்த 2018 முதல் 2021 வரை இது போன்று உடல் உறுப்புக்கள் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் "உடல் தானம் செய்யும் திட்ட" அலுவலகத்தின் மேலாளராக செட்ரிக் லாட்ஜ் அப்போது பணியாற்றினார். மருத்துவ ஆராய்ச்சிக்காக நன்கொடையாக வழங்கப்பட்ட சடலங்களை விற்க அவர் தனது பதவியைப் பயன்படுத்தினார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாக கிடைக்கும் சடலங்கள் மூலம் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவம் தொடர்பாக செயல்முறை விளக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டுவருகிறது.
நன்கொடையாகக் கிடைத்த சடலங்கள் பயன்படுத்தப்பட்ட பின், குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுகின்ற அல்லது தகனம் செய்யப்படுகின்றன. சில நேரங்களில் அந்த உடல்கள் மருத்துவக் கல்லூரி கல்லறையில் அடக்கம் செய்யப்படுகின்றன.
ஆனால் செட்ரிக் லாட்ஜ் மற்றும் அவரது மனைவி டெனிஸ் ஆகியோர் இணைந்து, சடலங்களின் உறுப்புகளை வெட்டி, அவற்றை இணையதளம் மூலம் விற்பனை செய்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பிவைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
"செட்ரிக் லாட்ஜ் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் இருந்த பிணவறைக்குள் பலநேரங்களில் பல நபர்களை அனுமதித்து, பிணங்களின் உறுப்புக்களில் எதை வாங்குவது என்பதை அவர்கள் தீர்மானிக்க உதவிகரமாக இருந்துள்ளார்," என விசாரணை அதிகாரிகளின் அலுவலகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஒரு தலையின் விலை ரூ.81,000
மாசசூசெட்ஸ் மாநிலத்தின் சலம் நகரைச் சேர்ந்த கத்ரீனா மெக்லீன் என்பவரும் பென்சில்வேனியா மாநிலத்தின் வெஸ்ட் லானைச் சேர்ந்த ஜோசுவா டெய்லர் என்பவரும் உடல் உறுப்புகளை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டின் படி, அக்டோபர் 2020 இல், கத்ரீனா மெக்லீன் ரூ. 49,000 பணம் கொடுத்து பிணங்களின் முகங்களை வாங்கியதாகவும், அவற்றை பதப்படுத்தி தோல் பொருட்களாக மாற்ற முயன்றதும் தெரியவந்துள்ளது.
காட்'ஸ் கிரீப்பி கிரியேஷன்ஸ் என்ற கடையின் உரிமையைளரான மெக்லீன், இது போன்ற பொருட்களைப் பயன்படுத்தி திகிலூட்டும் வகையிலான பொம்மைகளைத் தயாரித்து விற்பனை செய்துவந்துள்ளார். இத்தகவல்கள் அவரது கடையின் சமூக வலைதளப்பக்கங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அதே நேரம் அவருடைய தயாரிப்புக்களில், பிணங்களில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மனித உறுப்புக்களை கடையில் வைத்திருந்ததாகவும், அவற்றை அவர் விற்பனை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜொசுவா டெய்லர் 4 ஆண்டுகளில் 39 முறை செர்டிக் லாட்ஜுவிடமிருந்து மனித உடல் உறுப்புக்களை வாங்கிக் கொண்டு அவரது வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பியுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
7ஆம் எண் கொண்ட தலைக்கு மட்டும் ரூ.81,000 பணத்தை அவர் பே பால் மூலம் அனுப்பியதாகவும், இது போல் மொத்தமாக ரூ.30,00,000 வரை பணம் கொடுத்ததாகவும் போலீசார் தங்களது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளனர்.
"சில குற்றங்களைப் பார்க்கும் போது, அவற்றை விவரிக்க முடியாத நிலையில் உள்ளன," என அமெரிக்க வழக்கறிஞர் ஜெரார்ட் எம். கரம் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
"மனித உடலுறுப்புக்களை இது போல் திருடி விற்றதன் மூலம், இவர்கள் எப்படி மனிதர்களாக இருக்கமுடியும் என்ற எண்ணமே மேலோங்குகிறது," என்றார் அவர்.
புதன்கிழமையன்று செட்ரிக் லாட்ஜ் மற்றும் டெனிஸ் லாட்ஜ் ஆகிய இருவரும் நியூஹாம்ப்ஷையர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் வெளியே வந்த போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட நால்வர் மீதும் சட்டவிரோதமாக மனித உறுப்புக்களைத் திருடியது, அவற்றை மாநிலங்களுக்கு இடையில் போக்குவரத்து மூலம் எடுத்துச் சென்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் தலா 15 ஆண்டுகள் சிறை அறிவிக்கப்படலாம் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் டீன் ஜார்ஜ் க்யூ. டேலி பேசிய போது, "எங்கள் கல்வி நிலையத்தில் ஏதோ ஒரு பாதகச் செயல் நடந்ததை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்," என்று கூறியதோடு, செட்ரிக் லாட்ஜை கடந்த மே மாதம் 6-ம் தேதியே பணியிலிருந்து நீக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
"இது போன்ற செய்திகள், எங்களுக்கு உடல் தானம் வழங்கிய குடும்பங்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை பல்கலைக்கழக நிர்வாகம் நன்றாக அறிந்துள்ளது.
அந்த குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் செயல்படவே பல்கலைக்கழகம் விரும்புகிறது. இந்த மோசமான சம்பவங்களுக்காக நங்கள் மிகவும் வருந்துகிறோம்," என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்