You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமைச்சர் பதவியில் தொடர வைக்கும் அரசாணை: செந்தில் பாலாஜிக்கே சிக்கலாக மாற வாய்ப்பு
- எழுதியவர், இரா.சிவா
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது தமிழக அரசியல் களத்தைப் பரபரபாக்கியதோடு, மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான பனிப்போரையும் தீவிரப்படுத்தியிருக்கிறது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் தொடர வைக்க வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் அரசு உறுதியாக உள்ளது.
ஆனால், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் தொடர அனுமதிக்கக் கூடாது என்பதில் ஆளுநர் உறுதியாக உள்ளார்.
இது தொடர்பான தமிழக அரசின் இரண்டு பரிந்துரைகளை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்ட நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் தொடர வைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எனவே செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் விஷயங்கள் தேசிய அளவில் கவனம் பெறக்கூடியதாக மாறக்கூடும்.
தமிழக அரசின் பரிந்துரையை திருப்பி அனுப்பிய ஆளுநர்
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால், நெஞ்சு வலி ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதால் நிர்வாக காரணங்களுக்காக அவர் வகித்த துறையைப் பிறருக்கு மாற்றிக் கொடுக்க முடிவு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பினார்.
அந்தப் பரிந்துரையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் பொன்முடி நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஆனால் முதலமைச்சரின் பரிந்துரைக் கடிதத்திற்கு, நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள் எல்லாம் 'தவறாக வழிநடத்துவதாகவும் சரியற்றைவையாகவும் (misleading and incorrect)' உள்ளதாகக் குறிப்பிட்டு ஆளுநர் பதில் கடிதம் அனுப்பினார்.
இலாகா மாற்றத்திற்கு செந்தில் பாலாஜியின் உடல்நிலையை காரணம் காட்டியதே ஆளுநர் ஏற்க மறுத்ததற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
இத்தகையை சூழலில், மீண்டும் ஒரு பரிந்துரை கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பினார்.
அதை ஏற்ற ஆளுநர் ஆன்.என்.ரவி, மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு துறையை முத்துசாமிக்கும் ஒதுக்கினார். அதேநேரம் குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளான செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் தொடர அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டார்.
குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளான ஒருவரை அமைச்சர் பதவியில் தொடர அனுமதிக்க முடியாது என ஆளுநர் தெரிவித்திருப்பது தற்போது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.
குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளானவர் பதவியில் தொடர முடியாதா?
குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளான ஒருவர் அமைச்சர் பதவியில் தொடர முடியாது என எந்தச் சட்டமும் தெரிவிக்கவில்லை என்கிறார் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்.
"குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர்தான் பதவியில் தொடர முடியாது என சட்டம் கூறுகிறது.
இன்றைக்கு நாடாளுமன்றத்தில் உள்ள 40 சதவீத எம்.பி.க்கள் குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளானவர்கள்தான். லோயா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமித் ஷா மந்திரி பதவியில் தொடரத்தானே செய்தார். எந்த அடிப்படையில் ஆளுநர் இப்படி கூறுகிறார் எனப் புரியவில்லை,’’ என்கிறார் ஹரி பரந்தாமன்.
தொடர்ந்து பேசிய அவர், ’"குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளானவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கான சட்டத்தை முதலில் கொண்டு வாருங்கள், அதன் பிறகு அதன் கீழ் நடவடிக்கை எடுத்தால் அனைவரும் வரவேற்போம்.
ஆனால், இல்லாத சட்டத்தை எதிர்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது. அப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால் ஒரு செந்தில் பாலாஜி அல்ல, பல செந்தில் பாலாஜிகள் அரசியலில் இல்லாமல் போவார்கள்,’’ என்றார்.
''சட்டப்படி தவறு; தார்மீக அடிப்படையில் சரி’’
குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளானவர் அமைச்சர் பதவியில் தொடர முடியாது என ஆளுநர் சொல்வது சட்டப்படி தவறு, ஆனால் தார்மீக அடிப்படையில் சரி என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.
"’இலாகா இல்லாத அமைச்சராக யாரேனும் பதவியில் தொடர்ந்திருக்கிறார்களா என்றால் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே சான்று உள்ளது.
அதிமுகவின் துரைக்கண்ணு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்ந்தார். பிறகு, குணமடைந்து மீண்டும் துறைக்கு பொறுப்பேற்றார்.
ஆனால், செந்தில் பாலாஜி விஷயத்தை அப்படி அணுகலாமா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். செந்தில் பாலாஜி விசாரணைக் கைதியாக இருக்கிறார். வழக்கு எவ்வளவு காலம் நடக்கும் என்று தெரியாது.
இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்ந்தால் அமைச்சருக்கான சம்பளம், போக்குவரத்துச் செலவு, அலுவலகச் செலவு ஆகியவற்றுக்கு மக்களின் வரிப்பணம்தான் செலவழிக்கப்படும். இலாகா இல்லாத அமைச்சருக்கு ஏன் மக்கள் பணத்தை செலவழிக்க வேண்டும்,’’ என்கிறார் தராசு ஷ்யாம்.
இந்த முடிவை ஆளுநர் தார்மீக அடிப்படையில் எடுத்திருக்கலாம் என்பது மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமின் வாதமாக இருந்தாலும், இதை அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாகவே திமுகவினர் பார்க்கின்றனர்.
கடந்த 15ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, செந்தில் பாலாஜி மீது வழக்கு இருப்பதால் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மே 31ஆம் தேதியே ஆளுநர் ஆர்.என். ரவி முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
அந்தக் கடிதத்தோடு தற்போதைய கைது நடவடிக்கையை ஒப்பிட்ட பொன்முடி, தமிழக ஆளுநர் பா.ஜ.கவின் ஏஜென்ட்டாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து கேட்ட போது, "ஆளுநர் அரசியல் செய்கிறார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. பதவிக்கு வந்த நாள் முதலே ஆளுநர் அரசியல்தான் செய்கிறார். ஆனால் அதற்கான இடத்தை ஏன் திமுக கொடுக்க வேண்டும்," என்கிறார் தராசு ஷ்யாம்.
"சம்மனை ஏற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு கொடுத்திருக்க வேண்டும். அதை மீறியும் அவரைக் கைது செய்திருந்தால் எளிதில் பிணை பெற்றிருக்க முடியும்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தில் எதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறாரோ அதை எதிர்க்காமல் அரசியல் காரணங்களுக்காக கைது என்று மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தை திமுக கையாளும் விதமே தவறாக இருக்கிறது,’’ என்கிறார் தராசு ஷ்யாம்.
''திமுகவின் முடிவு செந்தில் பாலாஜிக்குத்தான் சிக்கல்''
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் தொடர வைக்கும் திமுகவின் முடிவு செந்தில் பாலாஜிக்கே சிக்கலை ஏற்படுத்தும் என்றும் தராசு ஷ்யாம் கூறுகிறார்.
"துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கிறார் என்றால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதே கடினமாகிவிடும். அமைச்சர் பொறுப்பில் தொடர்வதால் அவர் சாட்சியங்களைக் கலைக்க கூடும் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் உறுதியாக வாதாடும்.
அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா பொறுப்பில் இருந்து விலகினார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் வந்த வழக்கு என்பதால் உயர்நீதிமன்றம் நிச்சயம் ஜாமீன் கொடுக்காது.
எனவே உச்சநீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டியிருக்கும். இவர் அமைச்சர் பொறுப்பில் தொடர்ந்தால் அங்கும் ஜாமீன் கிடைப்பது கடினம்தான்,’’ என்கிறார் தராசு ஷ்யாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்