You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் பாஜகவின் தோல்வி குறித்து அண்ணாமலை கூறியது என்ன?
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. பாஜக கூட்டணி தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, “பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய சரித்திரத்தைப் படைத்துள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் போன்று மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும் சாதனையை நிகழ்த்துக் காட்டியுள்ளார் நரேந்திர மோதி.
தமிழக வாக்காளர்களுக்கு நன்றி. பாஜகவுக்கு சில மாநிலங்களில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை. தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இது எங்களுக்கு தோல்வி அல்ல. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக இங்கிருந்து எம்.பி.க்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற இலக்கு எங்களுக்கு இருந்தது. அந்த இலக்கை அடைய முடியாததில் வருத்தமே.
ஆனால், வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. மக்கள் ஆதரவு அளித்திருக்கின்றனர். அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம். என்ன தவறு நிகழ்ந்தது என்பதை ஒருவாரத்தில் பரிசீலிப்போம். எத்தனையோ இடங்களில் இதுவரை பெறாத வாக்குகளை வாங்கியிருக்கிறோம். பணம் கொடுக்காமல் இந்த வாக்குகளை வாங்கியிருக்கிறோம்” என்றார்.
மேலும், “மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். மக்கள் யோசித்துத்தான் தீர்ப்பு வழங்குவார்கள். இங்கு வெற்றிபெற்றுள்ள திமுக கூட்டணி எம்.பிக்கள் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற ஒத்துழைப்பு அளிப்போம். திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாழ்த்துகள். இரண்டாவது முறையாக பெரிய வெற்றியை அக்கூட்டணி பெற்றுள்ளது” எனக் கூறினார் அண்ணாமலை.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)