மழைக் காலத்தில் பாம்புகள் வீட்டுக்குள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

காணொளிக் குறிப்பு,
    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவில் மட்டுமின்றி இந்திய துணைக்கண்டம் முழுவதுமே பருவமழைக் காலத்தில் பாம்புகள் வீட்டுக்குள் வருவதும், பாம்புக்கடி சம்பவங்கள் நிகழ்வதும் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வீட்டுக்குள் புகுந்துவிட்ட பாம்புகளை அடித்துக் கொல்வதும் அதிகமாக நடக்கிறது.

பாம்பு வந்துவிட்டால், வனத்துறையை நாடி அதை மீட்க வலியுறுத்த வேண்டும் என்று பல வழிகளில் அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், நஞ்சற்றது, நஞ்சுள்ளது என்ற வேறுபாடின்றி அனைத்துமே பெரும்பாலும் ஒரே விதமாகவே மக்களால் கையாளப்படுகினற்ன.

அதே நேரத்தில் மழைக்காலத்தில் பாம்புக்கடியால் அதிகமான மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதற்குத் தீர்வு என்ன? பாம்புகள் மழைக் காலத்தில் வீடுகளை நோக்கி அதிகமாக வருவது ஏன்? அதனால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

மழைக் காலத்தில் அதிகரிக்கும் பாம்புக்கடி மரணங்கள்

கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வின் முடிவுகள்படி, 2000 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நிகழ்ந்த மொத்த பாம்புக்கடி மரணங்களில் பாதியளவு சம்பவங்கள் பருவமழைக் காலத்தில் நடந்துள்ளன.

இதன் விளைவாக 70 வயதுக்கு முன்பே ஒரு இந்தியர் பாம்புக்கடியால் இறப்பதற்கான வாய்ப்பு சராசரியாக 250இல் ஒருவருக்கு என்றும் சில கிராமப் பகுதிகளில் இந்த ஆபத்து 100 பேரில் ஒருவர் என்றும் இருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழைக் காலத்தில் பாம்புகள் வீட்டுக்குள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Dr A. Thanigaivel

படக்குறிப்பு, சாரைப் பாம்பு

அந்த ஆய்வின்படி, 2000 முதல் 2019 வரையிலான இருபது ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் இறந்துள்ளனர். அதில் பெரும்பாலான பாம்புக்கடி சம்பவங்கள் கிராமப்புற வீடுகளில் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, சுமார் 6 லட்சம் மரணங்கள் பருவமழைக் காலங்களில் நடந்துள்ளன.

குறிப்பாக, ஜூன் முதல் டிசம்பர் வரையிலான பருவமழை மற்றும் அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதில் பெரும்பகுதி சம்பவங்கள் வீடுகளிலும் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும் நடந்துள்ளன.

மழைக் காலத்தில் பாம்புகள் வீட்டுக்குள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Dr A. Thanigaivel

படக்குறிப்பு, கேஸ் சிலிண்டருக்கு அடியில் தஞ்சம் புகுந்த கட்டு வரியன்

மழைக் காலத்தில் பாம்புகள் அதிகம் தென்படுவது ஏன்?

பருவமழைக் காலம் என்பது பாம்புகள் மட்டுமின்றி பல்லுயிர்கள் அனைத்திற்குமான வாழ்வியலிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கும் காலம் என்கிறார் அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர் முனைவர் அ. தணிகைவேல்.

இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், "மழைக்காலம் தொடங்கும்போதுதான் பல்லுயிர்களும் சுறுசுறுப்பாகின்றன. ஏனெனில் அதுதான், ஈசல், தட்டான் உள்ளிட்ட பூச்சிகள், தவளைகள், பறவைகள் உள்படப் பல்வேறு உயிரினங்களின் இனப்பெருக்க காலம்.

அது ஊர்வன உயிரினங்களுக்கும் பொருந்தும். பல வகைப் பாம்புகள், பல்லிகளின் இனப்பெருக்கமும் பருவமழைக் காலத்தில்தான் நடக்கின்றன. அதோடு, மற்ற உயிர்களைப் போலவே பாம்புகளுக்கும் மழை நேரத்தில் தவளைகள் போன்ற இரை உயிரினங்கள் அதிகம் கிடைக்கின்றன. ஆகையால், பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலம் என்பது அனைத்து உயிரினங்களையும் போலவே பாம்புகளுக்கும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது," என்று தெரிவித்தார்.

ஆனால், பாம்புகள் மீது மனிதர்களுக்கு இயல்பாகவே அச்ச உணர்வு அதிகமாக இருப்பதால் அவை அதிகம் தென்படுவது பிரச்னைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார் முனைவர் தணிகைவேல்.

மழைக் காலத்தில் பாம்புகள் வீட்டுக்குள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
படக்குறிப்பு, ஈசல், தட்டான் போன்ற பூச்சிகள், தவளைகள், பறவைகளைப் போலவே பாம்புகள் மழைக் காலத்தில் அதிகம் தென்படுவதும் பொதுவான ஒன்றுதான் என்கிறார் ஆராய்ச்சியாளர் முனைவர் அ.தணிகைவேல்

பாம்புகள் மழையின் போது வீடுகளை நோக்கிப் படையெடுக்குமா? ஏன்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பருவமழையின்போது எளிதில் தென்படும் பாம்புகள் வீடுகளுக்குள் வரும் சம்பவங்களும் அதிகமாகப் பதிவாகின்றன. இதனால், பாம்புக்கடி சம்பவங்கள் நடப்பதும், பல நேரங்களில் அவற்றின் மீதான அச்சத்தால் மக்கள் அவற்றை அடித்துக் கொல்லும் சம்பவங்களும் நடக்கின்றன.

அதற்கான காரணம் குறித்துக் கேட்டபோது, "இரை உயிரினங்களான தவளை, எலி போன்றவற்றைத் தேடி வருவது அதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், பாம்புகள் குளிர் ரத்தப் பிராணிகள் என்பதால் தங்களது உடல் வெப்பநிலையைச் சீரமைத்துக் கொள்வதற்கான கட்டுமானங்களை நாடி வருகின்றன" என்றார் தணிகைவேல்.

அதாவது, "பாம்புகள், வெயில் காலத்தில் ஈரப்பதம் மிகுந்த இடத்தை நாடிச் செல்வதைப் போலவே, மழை மற்றும் குளிர்காலங்களில் கதகதப்பான இடம் நாடிச் செல்லும் பழக்கம் கொண்டவை."

அதோடு, இத்தகைய சூழ்நிலைகளில் குளிருக்கும் மழைக்கும் அடைந்து கொள்ள அவை மனித குடியிருப்புகளை நாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"சென்னை போன்ற நகர்ப் பகுதிகளில், மொத்தப் பகுதிகளும் குடியிருப்புகளாக, கட்டுமானங்களாக மாறும்போது, தங்களுக்குத் தேவைப்படும் மேடான, மறைவான பகுதிகள் இல்லாதபோது, அவை மழைக் காலத்தைக் கழிப்பதற்கான இடமாக வீடுகள் மாறிவிடுகின்றன. அதற்குப் பிறகு தங்களுக்குச் சாதகமான சூழல் ஏற்படும்போது அவை மீண்டும் வெளியே சென்றுவிடுகின்றன," என்று விரிவாக விளக்கினார் முனைவர் தணிகைவேல்.

மழைக் காலத்தில் பாம்புகள் வீட்டுக்குள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Dr A. Thanigaivel

படக்குறிப்பு, நாகப் பாம்பு

பாம்புகள் எந்தெந்த வழிகளில் வீடுகளுக்குள் வரக்கூடும்? தவிர்ப்பது எப்படி?

மழைக்காலத்தில் வீடுகளை நோக்கி வரும் பாம்புகள் சுமூகமான மனநிலையில் எல்லா நேரங்களிலும் இருக்காது என்கிறார் ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன். அதாவது, தனது இருப்பிடத்தை இழந்து வேறு இடத்திற்குள் தஞ்சம் புகும் எந்தவொரு உயிரினத்திற்கும் இருப்பதைப் போலவே அச்சம் மற்றும் பதற்றத்துடன்தான் பாம்புகளும் இருக்கும் என்பதால் அவற்றை அணுகும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்று அவர் எச்சரிக்கிறார்.

"நிலத்தின் மேற்பரப்பில் மழைநீர் தேங்கிவிடுவதாலும், பொந்துகளை நீர் சூழ்ந்துவிடுவதாலும், தங்களுக்குப் பாதுகாப்பான நில அமைப்புகளை நோக்கிப் பாம்புகள் இடம் பெயர்கின்றன" என்று அவர் விளக்கினார்.

'தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்' என்ற கையேட்டில், வீட்டுக்குள் அவை வரக்கூடிய வழிகள் மற்றும் வராமல் தடுப்பதற்கான வழிகளை ரமேஸ்வரன் விளக்கினார்.

மழைக் காலத்தில் பாம்புகள் வீட்டுக்குள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
படக்குறிப்பு, பாம்புகள் தாம் இருக்கும் இடத்தில் தமக்குப் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தால் உடனடியாக அங்கிருந்து சென்றுவிடும் என்று விளக்கினார் ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன்

"வீடுகளின் கூரைகள், கதவின் அடிப்பகுதி, ஜன்னலில் கட்டப்பட்டிருக்கும் கொடிக் கயிறு (துணி காயப் போடும் கயிறு), ஜன்னலை தொட்டு வளரும் கொடிகள், மரக் கிளைகள் வழியாக வீட்டிற்குள் பாம்புகள் நுழையலாம். அதோடு, சுவர்களில் உள்ள விரிசல்கள், ஓட்டைகள், கழிவுநீர்க் குழாய்கள் என எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அந்த வழிகளில் எல்லாம் அவை வீட்டினுள் நுழையும்," என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ரமேஸ்வரன், "பாம்புகள் தங்கள் தேவைகள் பூர்த்தியாகக் கூடிய, பாதுகாப்பான இடத்தையே நாடுகின்றன. அவை தொடர்ந்து கிடைத்தால் அங்கேயே தங்கிவிடுகின்றன. அதேநேரம் பாதுகாப்பின்மையை உணர்ந்தால் உடனடியாக அங்கிருந்து நகர்ந்துவிடும்," என்றும் குறிப்பிட்டார்.

எனவே, "கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகளை முறையாகக் கையாள்வது, சுற்றுப்புறத்தில் புதர்ச்செடிகள் அதிகமில்லாமல் பார்த்துக் கொள்வது, தேவையற்ற பொருட்களோ அல்லது கல், விறகு போன்றவற்றையோ குவியலாகப் போட்டு வைப்பதைத் தவிர்ப்பது, வீட்டைச் சுற்றியுள்ள வளைகள் மற்றும் பொந்துகளை அடைப்பதுஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பாம்புகள் மேற்குறிப்பிட்ட வழிகளில் வீட்டினுள் நுழைவதைத் தடுக்க முடியும்" என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

மழைக் காலத்தில் பாம்புகள் வீட்டுக்குள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு முக்கியம்'

பாம்புகளால் மனிதர்களுக்கோ அல்லது மனிதர்களால் அவற்றுக்கோ எவ்வித ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாது எனில், "சுற்றுப்புறத்தை முழுமையாகச் சரிசெய்ய வேண்டும்" என வலியுறுத்துகிறார் ரமேஸ்வரன். ஒருவேளை முற்றிலுமாகச் சரிசெய்ய இயலாவிட்டாலும் "குறைந்தபட்சம் இருப்பிடத்தையும் பயன்படுத்தும் இடங்களையும் பாம்புகள் அண்டாத வகையில் பாதுகாப்பாக வைத்திருப்பது தீர்வாக இருக்கும்" என்றும் வலியுறுத்தினார்.

ஒருவேளை இவற்றையும் மீறி பாம்புகள் மனித இருப்பிடத்திற்குள் வந்துவிட்டால், அவற்றிடம் இருந்து விலகியிருந்து பாம்புகளை மீட்பதில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை உதவிக்கு அழைக்கலாம் என அறிவுறுத்துகிறது 'தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்' என்ற நூல்.

அதைச் செய்யாமல், "பாம்புகளைத் துன்புறுத்துவதோ, பிடிக்க நினைப்பதோ, அடித்துக் கொல்வதோ ஆபத்தில்தான் முடியும்" என்கிறார் ரமேஸ்வரன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு