You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்கள் 40 வயதுக்கு மேல் கருத்தரித்தால் தாய் - சேய் சந்திக்க வாய்ப்புள்ள சிக்கல்களும் தீர்வுகளும்
- எழுதியவர், சுமன்தீப் கவுர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சமீபத்தில், பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அவருக்கு தற்போது 42 வயதாகிறது.
கத்ரீனா கைஃப் மட்டுமல்ல, பல பெண்கள் தனிப்பட்ட வாழ்விலோ அல்லது தொழில் ரீதியாகவோ முக்கிய இலக்குகளை அடைந்த பிறகு குடும்ப வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்கின்றனர்.
2013 ஆம் ஆண்டு, அமெரிக்க நடிகை ஹாலே பெர்ரி 47 வயதில் குழந்தை பெற்றெடுத்தார். ஆனால் 40 வயதில் கருத்தரிப்பது, உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பல தனித்துவமான சவால்களை முன்வைக்கிறது.
40 வயதிற்குப் பிறகு கர்ப்பம் தரிப்பது தொடர்பான அறிவியல் உண்மைகளை நன்கு புரிந்துகொள்ள, டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மகப்பேறு, மகளிர் மருத்துவம் மற்றும் கருத்தரித்தல் துறை முதன்மை இயக்குநரும் தலைவருமான மருத்துவர் எஸ். என். பாசுவிடவும், அமிர்தசரஸின் அமன்தீப் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் ஷிவானி கார்கிடமும் பேசினோம்.
40 வயதுக்குப் பிறகு பெண்கள் தாய்மை அடையும் போது ஏற்படும் அபாயங்கள், சமீபத்திய அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த பல கேள்விகளுக்கு இந்த நிபுணர்கள் பதிலளித்தனர்.
சாத்தியமான அபாயங்களும் குறைப்பதற்கான வழிகளும்
மருத்துவர் எஸ். என். பாசுவும் மருத்துவர் ஷிவானி கார்க்கும் கூறியவற்றில் சில சிக்கல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
உயர் இரத்த அழுத்தம் – 40 வயதுக்குப் பிறகு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தானதாக இருக்கும். எனவே, இரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் அவசியம்.
கர்ப்பகால நீரிழிவு – கர்ப்ப காலத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலை தான் இது. தாய்க்கு முன்பே நீரிழிவு இருந்தால், 40 வயதில் நீரிழிவு மோசமடையும் வாய்ப்பு அதிகம். தாயின் சர்க்கரை அளவு அதிகரித்தால், அது நீண்டகால பிரச்னையாக மாறக்கூடும். இதனால் குழந்தையின் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படலாம்.
குழந்தையின் எடை அதிகரிக்கலாம், கருப்பையைச் சுற்றிய நீரின் அளவு அதிகரிக்கலாம். அதேபோல் பிறந்த பிறகு குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படும் அபாயமும் உள்ளது.
கருச்சிதைவு அபாயம் – இந்த வயதில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு சுமார் 30–40 சதவீதம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் ஆபத்துகள்
குழந்தைக்கு பிறவி குறைபாடு ஆபத்து – ஒரு பெண் 40 வயதில் கர்ப்பமாகும் போது, குழந்தையின் உடல் அமைப்பில் பிறவிக் குறைபாடுகள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கும்.
குழந்தையின் வளர்ச்சி தொடர்பான பிரச்னைகள்
இந்த வயதில் கர்ப்பமாகும் போது, குழந்தை கருப்பையில் சரியாக வளர்ச்சியடையாமல் போகலாம். பிரசவம் வரை எடை முறையாக அதிகரிக்காமல் இருக்கலாம்.
நஞ்சுக்கொடி (placenta) தொடர்பான பிரச்னைகளும் தோன்றலாம். நஞ்சுக்கொடி சரியாக உருவாகாமல் போனால், அதற்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் குழந்தையைச் சுற்றியுள்ள நீர் குறையலாம் அல்லது குழந்தையின் வளர்ச்சி தடைபடலாம்.
குரோமோசோம்கள் தொடர்பான சிக்கல்கள் – உதாரணமாக டவுன் சிண்ட்ரோம். தாய் 40 வயதிற்கு மேல் கருத்தரித்தால், குழந்தைக்கு மனநலம் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படும் அபாயம் மூன்று மடங்கு அதிகம்.
40 வயதில் டவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தையைப் பெறுவதற்கான ஆபத்து 100 இல் 1 ஆக உள்ளது என்று மருத்துவர் பாசு கூறுகிறார்.
அபாயங்களைக் குறைக்க முடியுமா?
வயது சார்ந்த அபாயங்களை முழுமையாக நீக்க முடியாவிட்டாலும், ஆரம்பகால பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை தேர்வுகள் சிக்கல்களை குறைக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"இந்த அபாயங்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலமும் தொடர்ந்து மகப்பேறு முன் பராமரிப்புகள் மேற்கொள்வதன் மூலமும் கட்டுப்படுத்த முடியும். அதற்காக ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை அடிக்கடி கண்காணித்தல், ஆரோக்கியமான எடையைப் பராமரித்தல், மகப்பேறுக்கு முன் தேவையான வைட்டமின்கள் (குறிப்பாக ஃபோலிக் அமிலம்) எடுத்துக்கொள்வது, புகைபிடித்தல் மற்றும் மதுவைத் தவிர்ப்பது அவசியம்" என்று மருத்துவர் எஸ்.என். பாசு விளக்குகிறார்.
அதேபோல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் இனப்பெருக்க அமைப்பையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
அதற்காக புரதம், முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் ஒமேகா-3 போன்றவை அடங்கிய சமநிலையான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். அதேசமயம், பாஸ்டுரைஸ் செய்யப்படாத சீஸ், (சமைக்காத) பச்சை கடல் உணவு, அதிக கஃபீன், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார்.
உடற்பயிற்சியும் அதே அளவு முக்கியமானது என மருத்துவர் பாசு கூறுகிறார். லேசானது முதல் மிதமான அளவிலான நடைபயிற்சி, நீச்சல், யோகா போன்றவற்றைச் செய்யலாம். ஆனால் ஆபத்தான விளையாட்டுகளைத் தவிர்க்க வேண்டும் என பாசு அறிவுறுத்துகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், மன அழுத்தமும் முக்கிய காரணியாக இருப்பதால், அதைத் தவிர்க்க தியானம், போதுமான உறக்கம், குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவு போன்றவை உதவும் எனக் குறிப்பிடுகிறார்.
மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, வைட்டமின் டி மற்றும் டிஹெச்ஏ போன்ற சத்து மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்புகள்
"40 வயதிற்குப் பிறகு கருத்தரிப்புத் திறன் வேகமாகக் குறைகிறது. பொதுவாக, 40 வயதில் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சிக்கும் இயற்கையான கருத்தரிப்பு வாய்ப்பு சுமார் 5 சதவீதம் மட்டுமே இருக்கும். அதன் பின்னர் அது மேலும் குறைந்து விடுகிறது" என்று மருத்துவர் பாசு விளக்குகிறார்.
இதனை மருத்துவர் ஷிவானியும் குறிப்பிடுகிறார்.
"கருமுட்டைகளின் தரத்தை அறிவதற்கான சீரம் AMH (Anti-Müllerian Hormone) சோதனையில், 40 வயதிற்குப் பிறகு பெறப்படும் மதிப்பு அதன் இயல்பான வரம்பை விட மிகக் குறைவாக இருக்கும். இது மாதவிடாய் நிற்பதை (menopause) நோக்கி உடல் நகர்வதை காட்டுகிறது. இந்தச் சோதனை ஒரு பெண்ணின் கருமுட்டைகளின் தரத்தை அறிய செய்யப்படுகிறது"
இவை அனைத்தும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது தான். சில பெண்களில் சீரம் ஏஎம்ஹெச் (AMH) 30 வயதிலேயே மிகவும் குறைவாகவும், சிலரிடம் 40 வயதிலும் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.
கருத்தரிப்பதற்கான உதவி பெறுவது குறித்து விளக்கிய மருத்துவர் பாசு, "நீங்கள் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்து, 6 மாத காலம் முயன்றும் கர்ப்பமாகவில்லை என்றால், உடனடியாக ஒரு கருத்தரிப்பு நிபுணரை அணுக வேண்டும்" என்று தெரிவித்தார்.
நீங்கள் 40 வயதில் தாயாக விரும்பினால் KFT, LFT, இரத்த சர்க்கரை, தைராய்டு, சீரம் AMH மற்றும் கருப்பை, கருப்பை முட்டைகள் ஆகியவற்றின் அல்ட்ராசவுண்ட் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பரிசோதனைகளையும் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ஷிவானி அறிவுறுத்துகிறார்.
"ஆண்களும் பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, அவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால், அவர்களின் விந்தணு தரத்தைச் சோதிக்க வேண்டும்" என்கிறார் ஷிவானி.
அறிவியல் முன்னேற்றங்களால் பல விஷயங்கள் சாத்தியமாகி இருக்கின்றன. பல்வேறு தொழில்நுட்பங்களின் உதவியால் பின்னால் வரக்கூடிய பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிய முடிகிறது.
மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனைகள்:
- குரோமோசோம்கள் தொடர்பான பிரச்னைகளுக்கான, ஊடுருவல் இல்லாத பிறப்புக்கு முந்தைய சோதனை (NIPT)
- முதல் மூன்று மாதக் கர்ப்ப பரிசோதனை (இரத்தப் பரிசோதனைகள் + நுச்சல் டிரான்ஸ்லூசென்சி ஸ்கேன்)
- தேவைப்பட்டால் அம்னியோசென்டெசிஸ் அல்லது கோரியானிக் வில்லஸ் மாதிரி (CVS)
சிக்கல்களின் அறிகுறிகள்
பின்வரும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று மருத்துவர் பாசு அறிவுறுத்துகிறார்.
- கடுமையான வயிற்று வலி அல்லது பிடிப்பு
- அதிக இரத்தப்போக்கு அல்லது திரவம் கசிதல்
- கடுமையான தலைவலி, பார்வை மங்குதல் அல்லது திடீர் வீக்கம் (முன்-எக்லாம்ப்சியாவின் அறிகுறிகளாக இருக்கலாம்)
- 20 வாரங்களுக்குப் பிறகு கருவின் இயக்கம் குறைவது அல்லது இல்லாமல் போவது
- தொடர்ந்து அதிக காய்ச்சல் அல்லது தொற்றின் அறிகுறிகள்
குழந்தை பெற்றுக்கொள்வதற்கு "சரியான" உயிரியல் வயது உள்ளதா?
கருவுறுதலைப் பாதிக்கும் மிகப்பெரிய காரணிகளில் வயதும் ஒன்று.
பெண்களின் இனப்பெருக்க வயது பொதுவாக 20 முதல் 35 வயது வரை எனக் கருதப்படுகிறது. 35 வயதிற்குப் பிறகு கருவுறுதலின் வாய்ப்பு குறையத் தொடங்குகிறது.
இந்தியப் பெண்களில் மாதவிடாய் நிற்கும் (menopause) வயது மேற்கத்தியப் பெண்களை விட குறைவானது என்று மருத்துவர் பாசு கூறுகிறார். இந்தியப் பெண்களிடம் மாதவிடாய் நிற்கும் வயது 45 முதல் 49க்குள் இருக்கின்றது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் சராசரியாக அது 51 ஆண்டுகள்.
"உயிரியல் ரீதியாக, 20 முதல் 30 வயது வரை கருவுறுதலுக்கான வாய்ப்பு உச்சத்தில் இருக்கும். 35 வயதிற்குப் பிறகு அபாயங்கள் படிப்படியாக அதிகரிக்கின்றன. 40 வயதிற்குப் பிறகு அவை இன்னும் வேகமாக அதிகரிக்கத் தொடங்குகின்றன," என மருத்துவர் பாசு விளக்குகிறார்.
அதே சமயம், கர்ப்பம் தரிப்பதற்கென்று உலகளவில் பொருந்தக்கூடிய "சரியான" வயது கிடையாது என்பதையும் மருத்துவர் பாசுவும் ஷிவானி கார்கும் வலியுறுத்துகின்றனர்.
"இது தனிப்பட்ட உடல்நலம், தயாரிப்பு, குடும்ப ஆதரவு அமைப்புகள் மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைகளைப் பொறுத்தது. சரியான பராமரிப்புடன், பல பெண்கள் 40 வயதிற்குப் பிறகும் ஆரோக்கியமாக கர்ப்பம் தரிக்கிறார்கள்" என அவர்கள் கூறுகிறார்கள்.
சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், கர்ப்பத்திற்கான சிறந்த வயது என்பது தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடும், ஆனால் ஒவ்வொரு காலகட்டமும் அதன் சொந்த நன்மைகள் மற்றும் சவால்களுடன் உள்ளது .
இதைப் பற்றி கூறுகையில், "20 வயதுடைய பெண்கள் கருவுறுதலுக்கான உயிரியல் உச்சத்தில் உள்ளனர்" என்று மருத்துவர் பாசு கூறுகிறார்.
"30 வயது பெரும்பாலும் தயார் நிலைக்கும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் இடையிலான சமநிலையை ஏற்படுத்துகிறது, இருப்பினும், 35 வயதிற்குப் பிறகு, கருவுறும் திறன் மேலும் குறையத் தொடங்குகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார்.
அதேபோல் 40 வயதில் கர்ப்பம் தரிப்பது மிகவும் பொதுவானதாகவும், சாத்தியமாகவும் மாறி வரும் நிலையில், இதற்கு பொதுவாக மருத்துவ மேற்பார்வையும், சில சமயங்களில் கருவுறுதல் உதவியும் தேவை என்று மருத்துவர் பாசு குறிப்பிடுகிறார்.
இறுதியில், குழந்தை பெறுவதற்கான சரியான வயது என்பது மருத்துவம் சார்ந்து, உளவியல் சார்ந்து, வாழ்க்கை முறை சார்ந்த காரணிகளை எடை போட்டு எடுக்கப்படும் தனிப்பட்ட முடிவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.