You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரதமர் மோதியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
பிரதமர் நரேந்திர மோதியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக ஆமதாபாத் யூ.என். மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "பிரதமர் நரேந்திர மோதியின் தாயார் யூ.என். மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை உடல்நிலை ஸ்திரமாக உள்ளது" என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 18ஆம் தேதி ஹீராபென் தனது நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிரதமர் நரேந்திர மோதி அந்த பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டார்.
வாட்நகர் ஹடகேஷ்வர் கோவிலில் பிரதமரின் தாயார் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
முன்னதாக தமது தாயாரின் 100 ஆண்டு பிறந்த நாளையொட்டி பிரதமர் மோதி உணர்ச்சிகரமான இடுகையை தமது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டார்.
அதில் அவர், "இன்று எனது மகிழ்ச்சியையும், எனது நல்ல அதிர்ஷ்டத்தையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் அம்மா ஹீரா இன்று ஜூன் 18ஆம் தேதி தனது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அதாவது அவர் பிறந்த நூற்றாண்டு ஆண்டு தொடங்குகிறது. இன்று எனது தந்தை உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் கடந்த வாரம் 100 வயது ஆகியிருக்கும்.
அதாவது 2022ஆம் ஆண்டு எனது தாயின் பிறந்த நூற்றாண்டு ஆண்டு தொடங்குகிறது. இதே ஆண்டு எனது தந்தையின் பிறந்த நூற்றாண்டு நிறைவடைகிறது," என்று கூறியிருந்தார். மேலும், "இன்று எனது வாழ்க்கையில் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என்றால் அது எனது தாய் மற்றும் தந்தை எனக்களித்த பரிசு. இன்று, நான் டெல்லியில் அமர்ந்திருக்கும்போது, எனக்கு பல பழைய விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன," என்று பிரதமர் மோதி குறிப்பிட்டிருந்தார்.
இதன் பின்னர் குஜராத் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலிலும் ஹீரா பென் வாக்களித்தார்.
பிரதமர் மோதி குஜராத் வரும்போதெல்லாம் தனது தாயைப் பார்த்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்.
கடைசியாக குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான கடைசி கட்ட பிரசாரத்தின்போது டிசம்பர் 4ஆம் தேதி ஆமதாபாதுக்கு வந்த நரேந்திர மோதி ராய்சன் நகரில் உள்ள தமது தாயாரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
ஹீரா பென் மோதியின் கடந்த காலம்
ஹீராபென் மோதி, 1922ஆம் ஆண்டு குஜராத்தின் மெஹ்சானாவில் பிறந்தார். அவர் தேநீர் விற்பனையாளரான பிரதமர் மோதியின் தந்தை தாமோதர்தாஸ் முல்சந்த் மோதியை மணந்தார்.
2015ஆம் ஆண்டு ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் உடனான பிரபல பேட்டியில், பிரதமர் மோதி தனது தாயைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார்.
பிரதமர் மோதி தனது தாயை தனது வாழ்க்கையின் தூண் என்று வருணித்தார். 2016ஆம் ஆண்டு மே மாதம் ஹீராபென் மோதி, டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நரேந்திர மோதியை சந்தித்தார்.
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது மகனும் நாட்டின் பிரதமருமான நரேந்திர மோதி அறிவித்த பணமதிப்பிழப்பு முடிவை ஹீரா பென் ஆதரித்து கருத்து வெளியிட்டார். அப்போது அவரது பெயர் பட்டி தொட்டியெங்கும் பரவி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.
இத்தனைக்கும் பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிற்பாடு ஹீராபென்னும் ஏடிஎம் வாயிலில் வரிசையில் காத்திருந்த படங்கள் அப்போது வெளிவந்து வைரலாயின.
கடந்த ஆண்டு, கோவிட்-19 தடுப்பூசியை வயதானவர்கள் போட்டுக் கொள்வதால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக வதந்தி பரவியபோது, ஹீராபென் தடுப்பூசி போட்டுக் கொண்ட காட்சிகள் வெளி வந்தபோதும் அவரது செயல்பாடு பரவலான கவனத்தை ஈர்த்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்