மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்கும்?
நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவ மகளிர், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் பணி புரியும் மகளிர் உள்ளிட்டோர் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்றும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று பேசிய பா.ம.கவின் ஜி.கே. மணி, மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தில், அந்தத் தொகை கிடைக்காதவர்களின் நிலை என்ன என்றும் இந்தத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்றும் கேள்வியெழுப்பினார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவான விளக்கமொன்றை அளித்தார்.
அதில், "இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘மகளிர் உரிமைத் தொகை’ குறித்த அறிவிப்பு வெளியாகி, பொருளாதார வல்லுநர்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாபெரும் திட்டத்தைச் செயல்படுத்தும் விதம் குறித்தும் அதில் பயன்பெறக் கூடிய குடும்பத் தலைவிகளின் தேர்வு குறித்தும் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துகளை முன்வைத்து விளக்கமளிக்கிறேன்.
பொருள் ஈட்டும் ஒவ்வோர் ஆணுக்குப் பின்னாலும், தன் தாய், சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப் பெண்களுடைய பல மணிநேர உழைப்பு மறைந்திருக்கிறது. ஆண் ஒருவரின் வெற்றிக்காகவும் தங்கள் குழந்தைகளின் கல்வி, உடல்நலம் காக்கவும் இந்த சமூகத்திற்காகவும் வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் அவர்கள் உழைத்திருப்பார்கள்?
அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டிருந்தால், இந்நேரம் நம் நாட்டில் குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும் சட்டம் இயற்றாமலேயே இடம்பெற்றிருக்கும்.
இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



