COP27 மாநாடு: பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

பட மூலாதாரம், Getty Images
எகிப்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் குறித்த (COP27) உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள் பருவநிலை மாற்றத்தை கையாளும் முயற்சிகள் குறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மேம்படுத்தும் ஒரு அழுத்தம் இந்த தலைவர்கள் மீது எழுந்தது.
இந்த பாரிஸ் ஒப்பந்தம் என்றால் என்ன?
உலக வெப்பமயதாலை ஏற்படுத்தும் பசுமைக் குடில் வாயுவின் வெளியேற்றத்தை குறைக்கும் ஒரு பொதுவான யுக்திக்கு முதன்முறையாக கிட்டதட்ட உலக நாடுகள் அனைத்தும் ஆதரவு வழங்கின.
2015ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிரான்ஸ் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை 194 நாடுகள்(193 நாடுகளுடன் ஐரோப்பிய யூனியன்) ஏற்றுக் கொண்டன.
இந்த ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்த ஒப்பந்தத்தில் இருந்து அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விலகினார். ஆனால், அவரை தொடர்ந்து அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் தான் பதவி ஏற்ற முதல் நாளிலேயே மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் இணைந்தார்.
பாரிஸ் ஒப்பந்தத்தில் என்ன ஒப்புக்கொள்ளப்பட்டது?
உலகளவில் வெப்பம் அதிகரிப்பதை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் குறைக்க வேண்டும் என்றும்
தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக இரண்டு டிகிரி உலக வெப்பமயமாதலைக் குறைப்பதை இது இலக்காகக் கொண்டிருக்கிறது.
மனித செயல்பாடுகள் காரணமாக உமிழப்படும் பசுமை குடில் வாயுக்களின் அளவில் இருந்து மரங்கள், மண், கடல்பகுதிகள் இயற்கையாக உறிஞ்சி எடுக்கும் அதே அளவு வரம்புக்கு உட்படும் இந்த நிலையை நிகர பூஜ்யம் என்று அழைக்கின்றனர் இதை 2050ஆம் ஆண்டுக்கும்-2100ஆம் ஆண்டுக்கு இடையே செயல்படுத்த வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு நாடும் தனது கார்பன் வெளியேற்ற இலக்கை ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு பரிசீலிக்க வேண்டும்.
காலநிலை மாற்ற செயல்பாடுகளுக்காக வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். இதன்மூலம் ஏழைநாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறவும் ஏதுவாக இருக்கும்
COP27 க்கு இது ஏன் மிகவும் முக்கியமானது? பாரிஸ் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி முன்னெடுத்தன அல்லது முன்னெடுக்கவில்லை என்பதைப் பற்றி எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் சில முக்கிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பாரிசில் ஒப்பந்தம் கையெழுத்தானபோது, உலகளவில் வெப்பம் அதிகரிப்பதை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் குறைக்க வேண்டும் என்ற இலக்கு போதுமானதாக இல்லை என்பதை உலக நாடுகள் ஒப்புக் கொண்டன.
2021ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் COP26 பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்ற போது சில நாடுகள் புதிய இலக்குகளை முன்வைத்தன.
அப்படியிருந்தும்கூட உலகம் வெப்பமயமாதல் 2.1 டிகிரி செல்சியஸ் வரைதான் குறைக்க முடியும் என சுயாதீனமாக காலநிலை நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
பாரிஸ் இலக்குக்கு இணங்க, உமிழ்வுகளை குறைப்பதற்கான மேலும் தீவிரமான இலக்குகளை COP27 மாநாட்டுக்கு முன்னதாக அளிக்கும்படி உலகநாடுகளிடம் மீண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், 194 நாடுகளில், 25 நாடுகள் மட்டுமே, வாக்குறுதிகளின் முன்னெடுப்புகளுடன் வந்தன.
தென் ஆப்ரிக்கா, இந்தோனீசியா ஆகிய நாடுகள் புதைபடிவ எரிபொருளில் இருந்து வெளியேறுவதற்கான நிதி திட்டங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. COP26 உச்சி மாநாட்டில் மீத்தேன், நிதி மற்றும் காடுகளை அழித்தல் குறித்து வரையறுக்கப்பட்ட உறுதி மொழிகளில் கையெழுத்திடும் என்று நம்பப்படுகிறது.
COP27 மாநாட்டில் பாரிஸ் ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நாடுகள் எந்த அளவிற்கு நிறைவேற்றியுள்ளது என்பதும் ஆராயப்படும்
இம்மாதிரியாக ஆராய்வது எதிர்கால நடவடிக்கை குறித்து திட்டமிட வசதியாக இருக்கும்.
ஏழை நாடுகளுக்கு உதவுவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் நிலை என்ன?
பசுமையான பொருளாதாரத்தை கட்டமைக்கவும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவ 2020ஆம் ஆண்டுக்குள் ஆண்டு தோறும் 100 பில்லியன் டாலர்(87 பில்லியன் பவுண்ட்) நிதி உதவியை உலகின் பணக்கார நாடுகள் தர வேண்டும் என 2009ஆம் ஆண்டில் கொடுக்கபட்ட வாக்குறுதியை பாரிஸ் ஒப்பந்தம் மீண்டும் உறுதி செய்தது.
ஆனால் 2019ஆம் ஆண்டில் 79.6 பில்லியன் டாலர் நிதி மட்டுமே திரட்டப்பட்டது. 2023ஆம் ஆண்டு வரை 100 பில்லியன் டாலர் இலக்கு எட்டப்படாது என அண்மையில் வெளியான ஐ.நா., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கூட, புதிய, மேலும் லட்சியத்துடன் கூடிய இலக்குகள் 2025ஆம் ஆண்டுக்காக நிர்ணயிக்கபடும் என்று தெரிகிறது.
பல நாடுகளுக்கு, இது COP26 உச்சி மாநாட்டில் தீர்க்கப்பட வேண்டிய மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது - மிகவும் ஏழ்மையான நாடுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தின.
தவிர, இழப்பு மற்றும் பாதிப்பு நிதி என்பது ஒரு அம்சமாக சேர்க்கப்பட வேண்டும் என வளர்ந்து வரும் நாடுகள் கோரிக்கை விடுத்தன. காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் அவர்கள் ஏற்கனவே அடைந்து வரும் இழப்புகளை ஈடுகட்ட இந்த நிதி உதவும்
ஆனால் ஒப்பந்தம் ஏதேனும் நிறைவேற்றப்பட்டால் உலக வெப்பமயமாதலுக்கு தாங்கள் பொறுப்பேற்று கொள்ளுதல் போலாகிவிடும் என்றும், பல வருடங்களாக அதற்காக இழப்பீடு வழங்க நேரிடும் என்றும் வளர்ந்த நாடுகள் அஞ்சுகின்றன.
பாரிஸ் ஒப்பந்தம் போதுமான இலக்கை அடைந்ததா?
பாரீஸ் ஒப்பந்தம் தெளிவான இலக்கு புள்ளியை திட்டமிட்டபோதிலும், எப்படி அந்த இலக்கை அடைவது என்பதற்கான குறிப்பிட்ட விவரங்களை உள்ளடக்கி இருக்கவில்லை.
2050ஆம் ஆண்டுக்குள் உலகம் நிகர பூஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தது. செயற்கையான முறையிலோ அல்லது இயற்கையான வழியிலோ சூழல் வெளியில் இருந்து மிச்சம் இருக்கும் எந்த ஒரு உமிழ்வுகளையும் அகற்ற வேண்டும் , எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் பசுமை குடில் வாயுக்களை குறைக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
ஒவ்வொரு ஆண்டும் அந்த இலக்கை நோக்கிய முன்னெடுப்புகளை மதிப்பிடுவது இன்றியமையாதது என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
1.5 டிகிரி செல்சியஸுக்கும் மேலே வெப்ப நிலை உயர்வதற்கு முன்பு உலகம் வெளியிட வேண்டிய கார்பன் உமிழ்வு குறித்து (காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு) IPCC எனும் பருவநிலை வல்லுநர்கள் அடங்கிய ஐநா குழு, CO2வை சமமான ஜிகாடன்களில் அளவிட்டு (GtCO2e) தோராயமான ஒரு ஆண்டு பட்ஜெட்டை மதிப்பிட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 25-30 GtCO2e என்ற அளவில் மட்டுமே உலகம் வெளியிட வேண்டும் என 2018ஆம் ஆண்டில் IPCC குழு மதிப்பிட்டுள்ளது. IEA (சர்வதேச ஆற்றல் முகமை) அமைப்பின் கூற்றுப்படி, இப்போது ஆண்டுக்கு 36.3 GtCO2e என்ற அளவில் வெளியிடப்படுகிறது.
அந்த எண்ணிக்கையைக் குறைக்க ஒரு குறிப்பிட்ட செயல் திட்டத்தை உருவாக்குவது - பாரிஸ் மாநாட்டைப் போலவே - முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகளுக்கு சர்வதேச ஆதரவைப் பெறுவது ஆகியவை COP27 ஆவது உச்சி மாநாட்டின் முன்னுரிமைகளாக உள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












