உ.பி. பள்ளியில் முஸ்லிம் மாணவரை சக மாணவர்களை விட்டு அடிக்கச் சொன்ன ஆசிரியை - என்ன நடந்தது?

பிரசுரிக்கப்பட்டது

உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் ஒரு பள்ளி மாணவரை மற்ற மாணவர்களைக் கொண்டு ஆசிரியை ஒருவர் கன்னத்தில் அறையச் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

திரிப்தா தியாகி என்ற ஆசிரியை ஒரு மாணவனை அடிக்க பிற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய காட்சிகள் இந்த வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியைக்கு அருகே நின்றுகொண்டிருந்த மாணவனை மற்ற மாணவர்கள் தயக்கத்துடன் கன்னத்தில் அறைந்தபோது, அவர்களை வேகமாக அறையுமாறு அந்த ஆசிரியை உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் நடந்துகொண்டிருந்த போதே, அந்த வகுப்பறையில் அமர்ந்திருந்த நபருடன் பேசிய ஆசிரியை, எல்லா இஸ்லாமிய குழந்தைகளின் பெற்றோரும் அவர்களை விட்டுவிட்டு உடனே வெளியேறவேண்டும் என்றும் பிரகடனம் செய்ததாகவும் அப்போது அவர் கூறினார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த நபர், அக்காட்சிகளைப் பதிவு செய்துகொண்டே பேசிய போது அனைத்து குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

வீடியோ வைரல் - ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

ஆகஸ்ட் 24ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாகத் தெரியவரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் சமூக வலைதளங்களில் ஏராளமானோர் இந்தக் காட்சிகளைப் பரப்பி வருகின்றனர்.

இந்த வைரல் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவோர், "இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் இது" என தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

ஆனால் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, இது வெட்கக்கேடான சம்பவம் என்றார்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோரும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடக்கும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாட்சியின் விளைவு இது என்று சாடியுள்ளார். "முஸ்லிம்களை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம், அதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்ற சேதியை குழந்தைகள் மனதிலேயே பதிய வைக்கப்படுகிறது" என்று அவர் விமர்சித்துள்ளார்.

தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு வழக்கறிஞர் கடிதம்

ஒரு மாணவரை மற்ற மாணவர்களைக் கொண்டு கன்னத்தில் அறையவைத்த பெண் ஆசிரியர் ஒருவர் மீது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹைதர் ரிஸ்வி போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவேண்டும் என கோரியுள்ளார்.

இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ள வழக்கறிஞர் ரிஸ்வி, ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் ஒரு சமூகத்துக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் ஆசிரியை செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆசிரியையின் இந்தச் செயல் சமூகங்களுக்கு இடையே பதற்றம் மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளர்.

ரிஸ்வி இது தொடர்பாக தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளார்.

உ.பி. அமைச்சர்கள் என்ன சொன்னார்கள்?

உத்தர பிரதேச மாநிலத்தின் முசாஃபர் நகரில் ஒரு ஆசிரியை அறிவுறுத்தலின் பேரில் மாணவனை பிற மாணவர்கள் கன்னத்தில் அறைந்த காட்சிகள் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கை எழுந்தபின், ஆசிரியைக்கு எதிராக காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

உ.பி. மாநில அரசின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஜைவீர் சிங் இது குறித்துப் பேசிய போது, "இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் மீது குற்றம் என்றாலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாரதிய ஜனதா கட்சி எந்த வகையிலும் யாரையும் மதம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து வேறுபடுத்திப் பார்ப்பதில்லை," என்றார்.

குற்றம்சாட்டப்படும் ஆசிரியை விளக்கம் என்ன?

குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியை திரிப்தா தியாகி அந்த பள்ளியின் முதல்வர் பொறுப்பிலும் இருக்கிறார். பிபிசியுடன் இணைந்து பணியாற்றும் செய்தியாளர் அமித் சைனியுடன் பேசிய அந்த ஆசிரியை, "இந்த வீடியோ காட்சிகள் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அந்த வீடியோவே ஒரு சதித்திட்டம்," என்றார். அவருடைய நோக்கம் குழந்தைகளை மத ரீதியாகப் பிரிப்பது அல்ல என்றும் அப்போது அவர் கூறினார்.

இது குறித்து மேலும் பேசிய ஆசிரியை, "அது ஒரு எதுவுமற்ற வீடியோ. அந்த மாணவனுக்கு சில அறிவுரைகளை வழங்கிய போது அதைப் பின்பற்றவில்லை. மாணவனின் தந்தையும் அவனைக் கண்டித்து வைக்கச் சொன்னார்.

நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் அந்த மாணவனை பிற மாணவர்கள் மூலம் தண்டித்தால் அவனிடம் மாற்றம் வரும் என எதிர்பார்த்தேன். எங்கள் ஊரில் இந்து-முஸ்லிம் என்ற பேதமெல்லாம் கிடையாது. அனைவரும் எங்கள் குழந்தைகள் தான். யாரையும் தனிப்பட்ட முத்திரையுடன் நாங்கள் பார்ப்பது இல்லை," என்றார்.

"எங்கள் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் தான். அந்த மாணவனின் கன்னத்தில் அறைந்த மாணவர்களும் முஸ்லிம் மாணவர்கள் தான். இந்து - முஸ்லிம் என்ற பாகுபாட்டுக்கே எங்கள் பள்ளியில் இடமில்லை. ஒரு சிறிய தவறு நடந்து விட்டது. நான் நன்றாக இருந்திருந்தால் நானே அந்த மாணவனைக் கண்டித்திருப்பேன். என்னால் அது முடியாததால் பிற மாணவர்களை வைத்து அந்த மாணவனைக் கண்டிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதை மட்டுமே என்னால் சொல்ல முடியும்," என்றார்.

மாணவரின் தந்தை கூறுவது என்ன?

பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையான இர்ஷாத் அகமது இந்த சம்பவம் குறித்துப் பேசிய போது, இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும், அதனால் இது தொடர்பாக எந்தப் புகாரையும் அளிக்கப்போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: