தனி ஆளாக போராடிய டேவிட் வார்னர், மிரட்டிய டிரென்ட் போல்ட் - 3வது போட்டியிலும் டெல்லி படுதோல்வி

பிரசுரிக்கப்பட்டது

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான லீக் போட்டி அஸாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள ஏ.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி மூன்றிலும் தோல்வி அடைந்துள்ளது.

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் ராஜஸ்தான் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது. அதன்படி யாஷ்வி ஜெய்ஷால்- ஜாஸ் பட்லர் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் , இந்த ஆட்டத்தில் இருவரும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். கலில் அஹ்மத் வீசிய முதல் ஓவரிலேயே 5 பவுண்டரிகளை விளாசிய ஜெய்ஷால் அந்த ஓவரில் மட்டும் 20 ரன்களை சேர்த்தார். அன்ரிச் நோர்ட்ஜே வீசிய 2வது ஓவரில் பட்லர் தன் பங்கிற்கு 3 பவுண்டரிகளை விளாசினார். இருவரின் அதிரடியால் முதல் 5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களை குவித்தது.

அதிரடியை தொடர்ந்த யாஷ்வி ஜெய்ஷால் 25 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். ஐபிஎல் தொடரில் அவரின் 5வது அரைசதமாக இது அமைந்தது. இந்த ஜோடியை பிரிக்க டெல்லி கேபிடல்ஸ் அணி பவுலர்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது. இதற்கு 9வது ஓவரில் பலன் கிடைத்தது. அந்த ஓவரை வீசிய முகேஷ் குமார் ஜெய்ஷாலை ஆட்டமிழக்க செய்தார். 31 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 60 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஷால் வெளியேறினார்.

ஜீரோ ரன்னில் வெளியேறிய சஞ்சு சாம்சன்

யாஷ்வி ஜெய்ஷால் தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 42 ரன்களை எடுத்திருந்தார். இதனால், அவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், ரன்கள் எதுவும் எடுக்காமல் குல்தீப் யாதவ் வீசிய 10வது ஓவரில் போல்ட் ஆகி சஞ்சு சாம்சன் ஏமாற்றமளித்தார். ஆட்டத்தின் முதல் 8 ஓவர்களில் ராஜஸ்தான் கை ஓங்கியிருந்தது. அதற்கு பின்னர் டெல்லி பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். குறிப்பாக 9வது ஓவர் முதல் 12வது ஓவர் முடிய ஒரு பவுண்டரியைக் கூட அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. முதல் ஓவரிலேயே 20 ரன்களை எடுத்திருந்த ராஜஸ்தான் அணி இந்த 4 ஓவர்களையும் சேர்த்து 17 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது.

மீண்டும் வேகமெடுத்த பேட்டிங்

இதனிடையே, ஜாஸ் பட்லர் அக்ஸர் படேல் ஓவரில் அதிரடியாக சிக்ஸர் அடித்து 32 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ரியான் பராக் 7 ரன்களில் வெளியேற, பட்லருடன் ஹெட்மயர் ஜோடி சேர்ந்தார். ஆட்டத்தின் 16வது ஓவரில் பட்லர் 2 பவுண்டரிகள் அடிக்க ராஜஸ்தானில் பேட்டிங் மீண்டும் வேகமெடுத்தது. அடுத்த ஓவரில் ஹெட்மயர் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடித்தார். முகேஷ் குமார் வீசிய 19வது ஓவரை சிக்ஸருடன் ஹெட்மயர் தொடங்கி வைக்க 3வது பந்தில் முகேஷ் குமாரிடமே கேட்ச் கொடுத்து பட்லர் ஆட்டமிழந்தார். அவர் 51 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரி உட்பட 79 ரன்கள் எடுத்திருந்தார். 15.5 முதல் 18.1 வரையிலான 14 பந்துகளில், பட்லர் மற்றும் ஹெட்மயர் 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசினார்கள்.

கடைசி ஓவரில் ஹெட்மயர் அதிரடியாக 2 சிக்ஸர் அடிக்க ராஜஸ்தான் அணி 199 ரன்கள் எடுத்தது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெல்லி கேபிடல்ஸ் விளையாடவுள்ளது.

மிரட்டிய போல்ட்

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெல்லி அணி களமிறங்கியது. முதல் ஓவரை வீசிய டிரென்ட் போல்ட் 2வது பந்திலேயே பிரித்வி ஷாவை வெளியேற்றினார். பிரித்வி அடித்த பந்தை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார்.

அடுத்து வந்த மணிஷ் பாண்டேவும் போல்ட் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டம் இழந்தார். முதல் ஓவரில் ரன்கள் எதுவும் விட்டுக்கொடுக்காத போல்ட் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஐபிஎல் போட்டிகளில் 6,000 ரன்களை கடந்த வார்னர்

ஆட்டத்தின் 6வது ஓவரில் ரோஸ்ஸோவை அஸ்வின் வெளியேற்ற அந்த ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு டெல்லி 38 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 6 ஓவர்களுக்கு 68 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், மேற்கொண்டு விக்கெட் விழாமல் இருக்க பெரிய ஷாட்கள் அடிப்பதைத் தவிர்த்து ஒன்று, இரண்டு ரன்களாக டெல்லி பேட்ஸ்மேன்கள் எடுத்துகொண்டிருந்தனர்.

இதனிடையே போல்ட் வீசிய 9வது ஓவரின் 3வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் 6000 ரன்களை கடந்தார்.

சாஹல் வீசிய 11ஓவரில் லலித் யாதவ் 2 பவுண்டரி விளாச அந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தன. ராஜஸ்தான் அணி பௌலர்களால் ரன்களை கட்டுப்படுத்த முடிந்தாலும் லலித் யாதவ்- வார்னர் ஜோடியை பிரிக்க முடியவில்லை.

36 ரன்களுக்கு 3 விக்கெட்களை டெல்லி இழந்திருந்த நிலையில், இருவரின் பார்னர்ஷிப்பால் 12 ஓவர் முடிவில் 93-3 என்ற நிலையை டெல்லி எட்டியது. இந்த ஜோடியை பிரிக்க மீண்டும் போல்ட்டுக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் வாய்ப்பு வழங்கினார். அந்த ஓவரின் 5வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய லலித் யாதவ், அடுத்த பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறினார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் இலக்கை எட்டுவதற்காக வார்னர் தனியாகப் போராடிக்கொண்டிருந்தார்.

அஸ்வின் வீசிய 15வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஐபிஎல் போட்டிகளில் தனது 61வது அரை சதத்தை நிறைவு செய்தார்.

சாஹல் வீசிய 19வது ஓவரில் வார்னரும் எல்பிடபிள்யூ ஆகி வெளியேற 20 ஓவர் முடிவில் அந்த அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு இது 2வது வெற்றி. அதேநேரத்தில் டெல்லி அணி, தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: