You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சார்லி கர்க் கொலையில் கைதானவர் காதலருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமானவரும் பழமைவாத ஆதரவாளருமான சார்லி கர்க் அமெரிக்காவின் யூட்டா பகுதியில் உள்ள யூட்டா வேலி பல்கலைக்கழகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொலையாளி என குற்றம்சாட்டப்பட்டிருக்கும் டைலர் ராபின்சன், LGBTQ சமூகத்திற்கு எதிராக பேசியதற்காக கர்க்கை சுட்டுக் கொன்றதாக கூறினார் என்று யூட்டா கவுண்டி அரசு வழக்கறிஞர் ஜெஃப்ரி கிரே தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? குற்றம் சாட்டப்பட்ட நபர் கர்க் பற்றி கூறியதாக வெளியான தகவல்கள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
நீதிமன்றத்தில் ஆஜரான குற்றம்சாட்டப்பட்ட நபர்
கடந்த வாரம் புதன்கிழமை யூட்டா வேலி பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, கர்க் சுட்டுக் கொல்லப்பட்டார்.
33 மணிநேர தேடலுக்குப் பிறகு 22 வயதான டைலர் ராபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஜாமீனில் வெளிவராதபடி குற்றம்சாட்டப்பட்டு யூட்டா கவுண்டி சிறையின் சிறப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை, வீடியோ வழியாக நீதிமன்றத்தில் ஆஜரான ராபின்சன் இதுவரை எந்தக் குற்றத்தையும் ஒப்புக்கொள்ளவோ அல்லது நீதிமன்றத்தில் பதிலளிக்கவோ இல்லை.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்குப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கியின் டிரிகரில் (Trigger) உள்ள டிஎன்ஏ சான்றுகளை அரசு வழக்கறிஞர் வெளியிட்டார்.
வழக்கறிஞர் என்ன சொன்னார்?
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த யூட்டா கவுண்டி வழக்கறிஞர் ஜெஃப்ரி கிரே, குற்றம் சாட்டப்பட்ட டைலர் ராபின்சன் தன்னுடன் அறையில் ஒன்றாக வசிப்பவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியைப் பற்றி விளக்கினார்.
அந்த உரையாடலில், "என் கீபோர்ட் கீழ் பார். அங்கு ஒரு குறிப்பு இருக்கும்." என்று ராபின்சன் கூறியுள்ளார்.
அதைப் பார்த்த பிறகு, "உண்மையாக சொல்கிறாயா? ஏன் கர்க்-ஐ கொன்றாய்?" என அவரின் அறைத் தோழர் கேட்டுள்ளார் என வழக்கறிஞர் கூறினார்.
இதற்கு பதிலளித்த ராபின்சன், "அவரது வெறுப்பை என்னால் சகிக்க முடியவில்லை. சில வெறுப்புகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாது." என கூறியுள்ளார்.
"இதை நீ செய்யவில்லை அல்லவா?" என அறைத் தோழர் கேட்டபோதும், ராபின்சன் "நான்தான் செய்தேன்" எனக் கூறியதாக வழக்கறிஞர் கூறினார்.
குற்றம்சாட்டப்பட்ட ராபின்சன் அவரது அறைத் தோழர் இருவரும் காதலர்கள். அந்த அறைத் தோழர் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் நிலையில் உள்ள திருநங்கை என அதிகாரிகள் கூறியதாக அரசு வழக்கறிஞர் கிரே தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் பெற்றோர் கூறியது என்ன?
கொலை நடந்த நாளின் வீடியோவைப் பார்த்த ராபின்சனின் தாய், அது தன் மகனா என்ற சந்தேகத்தில் ராபின்சனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
பிறகு ராபின்சனின் தந்தையும் நேரில் அவரைப் பார்த்து இதைப் பற்றி பேசியுள்ளார். அப்போது அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று தந்தையிடம் மறைமுகமாகக் கூறினார் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும் குற்றப்பத்திரிகையில், ராபின்சன் தனது பெற்றோரிடம் "உலகில் தீமை அதிகமாக இருக்கிறது, சார்லி கர்க் அதிக வெறுப்பை பரப்புகிறார்" என்று கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்ட ராபின்சன் தாய், சமீபத்திய ஆண்டுகளில் அவரது மகன் அரசியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என்றும், அவர் LGBTQ உரிமைகளை ஆதரித்தார் மற்றும் திருநங்கையுடன் உறவில் இருந்தார் என்றும் கூறியுள்ளார்.
LGBTQ சமூகத்துக்கு எதிரான நிலைப்பாடு
31 வயதான சார்லி கர்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய ஆதரவாளராகப் பார்க்கப்படுகிறார்.
'டர்னிங் பாயின்ட் யூஎஸ்ஏ' (Turning Point USA) என்ற அமைப்பை 18 வயதிலேயே தொடங்கி, அமெரிக்கக் கல்லூரிகளில் பழமைவாத கருத்துக்களைப் பரப்பினார்.
யூட்டா வேலி பல்கலைக்கழகத்தில் இவர் இறுதியாக கலந்துகொண்ட நிகழ்வில், "கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை திருநங்கை அமெரிக்கர்கள் பெரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று உங்களுக்கு தெரியுமா?" என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் 'நிறைய' என பதிலளித்திருந்தார்.
இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், மூன்றாம் பாலினத்தவருக்கு ராணுவத்திலிருந்து தடை விதித்தபோது அதை சார்லி கர்க் வரவேற்றிருந்தார். அதேபோல, தன்பாலின திருமணத்திற்கு எதிராகவும் அவர் தொடர்ந்து பேசி வந்தார்.
இதுமட்டுமின்றி, LGBTQ சமூகத்துக்கு ஆதரவான கருத்துக்களை "மக்களை துன்புறுத்தும் பொய்கள்" என விமர்சித்திருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு