சோனியா மீது ராஜீவ் காந்தி காதல் கொண்டது எப்படி? அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார்?

பட மூலாதாரம், Daniel SIMON/Gamma-Rapho via Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்
அது 1981-ஆம் ஆண்டு மே மாதம்.
ராஜீவ் காந்தி அமேதி தொகுதி மக்களவைத் இடைத்தேர்தலில் போட்டியிடவிருந்தார். அவர் அந்த தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
சில மணி நேரத்தில் லக்னோவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் விமானத்தில் அவர் பயணம் செல்ல வேண்டியிருந்தது. அப்போது, 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திலோய் பகுதியில் 30-40 குடிசைகள் தீப்பிடித்து எரிந்துவிட்டதாக தகவல் வந்தது.
லக்னோ செல்வதற்குப் பதிலாக, அவர் தனது காரை திலோய் நோக்கித் திருப்பினார்.
அங்கு தீயில் எரிந்து போன குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
அவருக்குப் பின்னால் நின்றிருந்த சஞ்சய் சிங், "சார், உங்கள் விமானத்தைத் தவறவிடப் போகிறீர்கள்" என்று மெதுவாகக் கூறினார்.
ஆனால், ராஜீவ் தொடர்ந்து மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அனைவரையும் சந்தித்து முடித்த பிறகு, அவர் சிரித்தபடி சஞ்சய் சிங்கிடம், "இங்கிருந்து லக்னோ செல்ல எவ்வளவு நேரமாகும்?" என்று கேட்டார்.
"குறைந்தது இரண்டு மணி நேரமாகும். ஆனால், நீங்கள் காரை ஓட்டினால் , ஒரு மணி நேரம் 40 நிமிடங்களில் அங்கு சென்றுவிடலாம்" என்று சஞ்சய் சிங் பதிலளித்ததாக, தி லோட்டஸ் இயர்ஸ் – ராஜீவ் காந்தி காலத்தில் இந்தியாவில் அரசியல் வாழ்க்கை (The Lotus Years - Political Life in India in the Time of Rajiv Gandhi) என்ற நூலின் ஆசிரியர் அஷ்வினி பட்நாகர் கூறுகிறார்.
"ராஜீவ் காரில் ஏறியதும், 'ஒரு மணி நேரம் 15 நிமிடங்களில் விமான நிலையத்தை அடைந்துவிடுவோம் என்று அவர்களிடம் தெரிவியுங்கள்' என்று கூறியுள்ளார்.
ராஜீவின் கார் விமானம் போல வேகமாகச் சென்றது. திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே ராஜீவ் விமான நிலையத்தைச் சென்றடைந்தார்."

பட மூலாதாரம், Hachette India
'விமான பயணத்தின் போது முழுப் பெயரை வெளிப்படுத்த தடை '
வேகமாக கார் ஓட்டுவதை விரும்பிய ராஜீவ் காந்தி, மிகவும் கட்டுப்பாடான விமானியாகச் செயல்பட்டார். ஆரம்பத்தில் அவர் டகோட்டா விமானத்தை ஓட்டினார். பின்னர் போயிங் விமானத்தை ஓட்டத் தொடங்கினார்.
அவர் விமானி இருக்கையில் இருக்கும் போதெல்லாம், விமானி அறையில் இருந்து பயணிகளுக்கு தனது முதல் பெயரை மட்டும் கூறி வாழ்த்து தெரிவிப்பார்.
விமானப் பயணத்தின் போது, தனது முழுப் பெயரை ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது என்றும் கேப்டன்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்தக் காலத்தில், விமானியாக அவருக்கு ரூ.5,000 சம்பளம் கிடைத்தது. அது நல்ல சம்பளமாகக் கருதப்பட்டது.
சோனியா காந்திக்கு அருகில் அமர்வதற்காக லஞ்சம்
ராஜீவ் காந்தி கேம்பிரிட்ஜில் பொறியியல் டிரைப்போஸ் படிப்பைத் தொடரச் சென்றபோது, இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியை 1965-ல் சந்தித்தார். இருவரும் ஒரு கிரேக்க உணவகத்துக்குச் செல்வது வழக்கம்.
"சோனியா அமர்ந்திருந்த மேசைக்கு அடுத்த மேசையில் தன்னை அமர அனுமதிக்குமாறு ராஜீவ், உணவகத்தின் உரிமையாளர் சார்லஸ் ஆன்டனியை சம்மதிக்க வைத்தார். இதற்காக சார்லஸ் அவரிடம் இருமடங்கு தொகையை வசூலித்தார்" என அஷ்வினி பட்நாகர் கூறுகிறார்.
பின்னர், ராஜீவ் காந்தி குறித்த சிமி கரேவாலின் திரைப்படத்தில் அவர், "இவ்வளவு ஆழமாகக் காதலித்த ஒருவரை நான் பார்த்ததே இல்லை"என்று கூறினார்.
கேம்பிரிட்ஜில் படித்துக் கொண்டிருந்தபோது, ராஜீவ் தனது செலவுகளை சமாளிப்பதற்காக ஐஸ்கிரீம் விற்றார். சோனியாவைச் சந்திக்க சைக்கிளில் செல்வார்.
அவரிடம் பழைய ஃபோக்ஸ்வாகன் கார் ஒன்று இருந்தது. அதற்கான பெட்ரோல் செலவை அவரது நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர்.

பட மூலாதாரம், Antonin Cermak/Fairfax Media via Getty Images
சோனியாவுக்காக கவிதை எழுதிய ராஜீவ்
ராஜீவ் மற்றும் சோனியா கேம்பிரிட்ஜில் சந்தித்துக் கொண்டது குறித்து பிரபல பத்திரிகையாளர் ரஷீத் கிட்வாயும், சோனியா குறித்த தனது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.
"தினமும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மாணவர்கள் பலர் பல்கலைக் கழக உணவகத்தில் கூடுவார்கள். அவர்கள் அனைவரும் பீர் குடிப்பார்கள். அவர்களில் ராஜீவ் மட்டுமே பீரைத் தொடக்கூட மாட்டார். அப்போது தான் சோனியாவின் கண்கள், கறுப்பு கண்களும் வசீகரமான புன்னகையும் கொண்ட அந்த உயரமான இளைஞர் மீது விழுந்தன"என்கிறார் ரஷீத் கிட்வாய்.
"இருவருக்குமே சம அளவில் ஈர்ப்பு இருந்தது. ராஜீவ் முதலில் சோனியாவின் அழகைப் பற்றி ஒரு காகிதத்தில் கவிதை எழுதி, அதை ஒரு பணியாளர் மூலம் சோனியாவுக்கு அனுப்பினார்.
அதை பெற்றுக்கொள்வதில் சோனியா சற்று தயக்கம் காட்டினார்.
ஆனால், ராஜீவின் ஜெர்மன் நண்பர் ஒருவர், சோனியாவுக்கும் அறிமுகமானவர் என்பதால், இருவருக்கும் இடையில் தூதராக மிகச் சிறப்பாக செயல்பட்டார்."
தொடர்ந்து விவரித்த ரஷீத் கிட்வாய், "சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ராஜீவ் கடைசி வரை தான் இந்திய பிரதமரின் மகன் என்பதை சோனியாவிடம் தெரிவிக்கவில்லை. நீண்ட காலத்துக்குப் பிறகு, இந்திரா காந்தியின் புகைப்படம் ஒன்று செய்தித்தாளில் வெளியானது. அப்போது சோனியாவிடம், 'இது எனது அம்மாவின் புகைப்படம்' என்று ராஜீவ் கூறினார்."
"அதன் பிறகு தான், கேம்பிரிட்ஜில் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர், இந்திரா இந்தியாவின் பிரதமர் என்று சோனியாவிடம் கூறினார். அப்போதுதான், தான் காதலிக்கத் தொடங்கியிருந்தவர் எவ்வளவு முக்கியமான நபர் என்பதை சோனியா முதன்முறையாக உணர்ந்தார்"என்கிறார்.

பட மூலாதாரம், TEKEE TANWAR/AFP via Getty Images
மெஹ்மூத் மற்றும் ராஜீவ் காந்தியின் சந்திப்பு
ராஜீவ் காந்திக்கு நான்கு வயது முதலே அமிதாப் பச்சனுடன் நட்பு இருந்ததாக ரஷீத் கிட்வாய் கூறுகிறார்.
அமிதாப் மும்பையில் சினிமாவில் வாய்ப்புகளுக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, ஒருமுறை ராஜீவ் அவரைச் சந்திக்கச் சென்றார். அப்போது அமிதாப், ராஜீவை நகைச்சுவை நடிகர் மெஹ்மூத்தைச் சந்திக்க அழைத்துச் சென்றார்.
"அந்த நேரத்தில், மெஹ்மூத்துக்கு காம்போஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது. அதனால் அவர் எப்போதும் போதையிலேயே இருப்பார். அமிதாப், ராஜீவை அவருக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால், மெஹ்மூத் போதையில் இருந்ததால், யாரிடம் தன்னை அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை"என்கிறார் ரஷீத் கிட்வாய்.
"அவர் ரூ.5,000 எடுத்து, அதை ராஜீவிடம் கொடுக்குமாறு தனது சகோதரர் அன்வரிடம் கூறினார். ஏன் அவரிடம் பணம் கொடுக்க வேண்டும் என்று அன்வர் கேட்டார். அதற்கு மெஹ்மூத், அமிதாப்புடன் வந்திருக்கும் அந்த நபர் தன்னைவிட அழகாகவும் புத்திசாலியாகவும் இருக்கிறார் என்று கூறினார். ஒருநாள் அவர் நிச்சயம் சர்வதேச நட்சத்திரமாக மாறுவார். இந்த ரூ.5,000 எனது அடுத்த படத்துக்கான முன்பணமாக இருக்கட்டும் என்றார்."
"அன்வர் சிரித்துக்கொண்டே, ராஜீவை மீண்டும் அறிமுகப்படுத்தினார். அவர் நட்சத்திரம் அல்ல, இந்திரா காந்தியின் மகன் என்று கூறினார். உடனே மெஹ்மூத் தனது ரூ.5,000-ஐ திரும்பப் பெற்றுக்கொண்டு, ராஜீவிடம் மன்னிப்பு கேட்டார்."
"ஆனால், எதிர்காலத்தில் ராஜீவ் உண்மையிலேயே ஒரு நட்சத்திரமாக மாறினார். திரைப்படத் துறையில் அல்ல. ஆனால் அரசியலில்."

பட மூலாதாரம், Bettmann/Getty Images
இந்திரா காந்தியின் படுகொலையின் போது...
சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திரா காந்திக்கு உதவுவதற்காக ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தார்.
ஆனால், சிறிது காலத்திலேயே இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
அப்போது ராஜீவ் காந்தி மேற்கு வங்கத்தில் இருந்தார்.
டெல்லிக்கு அவரை அழைத்து வந்த விமானப்படை விமானத்தில், பின்னாளில் டெல்லி முதலமைச்சராகப் பதவி வகித்த ஷீலா தீட்சித்தும் அவருடன் இருந்தார்.
ஷீலா தீட்சித் பிபிசியிடம் பேசுகையில், "விமானம் புறப்பட்டவுடன், ராஜீவ் விமானி அறைக்குச் சென்றார். அங்கிருந்து திரும்பி வந்த பிறகு, எங்களை விமானத்தின் பின்பகுதிக்கு அழைத்து, இந்திரா ஜி இறந்துவிட்டார் என்று கூறினார். பின்னர், 'இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வது?' என்று எங்களிடம் கேட்டார்."
"நீண்ட காலமாக ஒரு மரபு இருந்து வருகிறது. அதன் படி, மூத்த அமைச்சரே முதலில் இடைக்கால பிரதமராகப் பதவியேற்பார். பின்னர் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பிரணாப் முகர்ஜி பதிலளித்தார்."
"ஆனால், எனது மாமனார் உமா சங்கர் தீட்சித், இடைக்கால பிரதமரை நியமிக்கும் ஆபத்தை எடுக்க மாட்டேன் என்றும், ராஜீவை பிரதமராக்குவேன் என்றும் கூறினார்."

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP via Getty Images
பிரணாப் முகர்ஜியின் அறிவுரை அவருக்கே எதிராக அமைந்தது
மூத்த அமைச்சரை இடைக்கால பிரதமராக நியமிக்கலாம் என்ற பிரணாப் முகர்ஜியின் யோசனை அவருக்கே எதிராக அமைந்துவிட்டதாக என்று ஷீலா தீட்சித்திடம் கேட்டேன்.
அதற்கு ஷீலா தீட்சித் பதில் அளிக்கையில், "ஆம், அது சற்று பாதிக்கவே செய்தது. ஏனென்றால், ராஜீவ் வெற்றி பெற்றபோது, இந்திராவின் அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த பிரணாபை தனது அமைச்சரவையில் அவர் சேர்க்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, பிரணாப்பும் கட்சியை விட்டு வெளியேறினார்." என்றார் அவர்.
"ஆனால், தான் பிரதமராவதற்கான வாய்ப்பை வலுப்படுத்துவதற்காக பிரணாப் அப்படிக் கூறியதாக நான் நினைக்கவில்லை. அவர் பழைய உதாரணங்களை மட்டுமே குறிப்பிட்டார். ஆனால், அவரது எதிர்ப்பாளர்கள் அதை ராஜீவிடம் முற்றிலும் வேறு விதமாக எடுத்துக் கூறிவிட்டனர்."

மாலத்தீவு அதிபர் மீட்பு
பிரதமரான பிறகு, ராஜீவ் காந்தி தொழில்நுட்பத் துறையில் விரிவான பணிகளை மேற்கொண்டார். கட்சி மாறுதலுக்கு எதிரான சட்டம் கொண்டுவருவதிலும், 18 வயதானவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்குவதிலும், இந்தியாவை பிராந்திய வல்லரசாக நிலைநிறுத்துவதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
"அவர் பதவியேற்றவுடன், கல்வித் துறை, மாசுபாடு, அரசியல் அமைப்பைச் சீரமைத்தல் என பல்வேறு விஷயங்களில் விரைவாக முடிவுகளை எடுத்தார். காங்கிரஸ் நூற்றாண்டு விழாவில் அவர் ஆற்றிய உரையும் இதில் அடங்கும். இவை அனைத்தும் மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தின"என அஷ்வினி பட்நாகர் கூறுகிறார்.
"இன்று மக்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பேசுகிறார்கள். ஆனால், 1988-ல் 4,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்த போதும் மாலத்தீவில் இருந்து ஒரு தாக்குதல் நடவடிக்கையை ராஜீவ் காந்தி மேற்கொண்டார். 10 மணி நேர அவகாசத்தில் ஆக்ராவிலிருந்து 3,000 வீரர்கள் விமானம் மூலம் அங்கு கொண்டு செல்லப்பட்டனர்."
"அங்கு அதிபருக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. அவர் தலைமறைவாக இருந்தார். ராஜீவ் அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது மட்டுமல்லாமல், அவரை எதிர்த்தவர்களையும் கைது செய்ய வைத்தார்."

பட மூலாதாரம், Rajkumar/The India Today Group/Getty Images
சாம் பிட்ரோடாவின் உதவியுடன் இந்தியாவில் ஏற்பட்ட தகவல் தொடர்புப் புரட்சிக்கு பெருமளவிலான பெருமை ராஜீவ் காந்தியையே சேரும்.
பிபிசி-யிடம் பேசிய சாம் பிட்ரோடா, "நாங்கள் இருவரும் நல்ல புரிதலுடன் இணைந்தோம். எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. அவர் எங்களிடம் மிகவும் அன்பாகப் பேசினார். எங்களைப் புரிந்துகொண்டார். நாங்கள் நண்பர்களானோம். எங்களது முயற்சிக்கு அவர் அரசியல் ரீதியான ஆதரவை வழங்கினார். சி-டாட் அமைப்பை உருவாக்கும் யோசனை எங்களுடையதும் ராஜீவினுடையதும் தான். அதற்காக எங்களுக்கு 400 பொறியாளர்களும் ஓர் இடமும் தேவைப்பட்டது"என்றார்.
"பெங்களூருவில் வன்பொருள் வடிவமைப்புப் பணிகளையும், இங்கு டெல்லியில் மென்பொருள் பணிகளையும் தொடங்கினோம். இங்கு இடம் கிடைக்காதபோது, ராஜீவ் எங்களை ஆசிய விளையாட்டு கிராமத்துக்கு அனுப்பினார். அந்த இடம் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால், அங்கு குளிர்சாதன வசதி இல்லை. அது இல்லாமல் மென்பொருள் பணிகளைச் செய்ய முடியாது. அக்பர் ஹோட்டலில் இடம் இருந்தது. அங்கு இரண்டு தளங்களை எடுத்துக்கொண்டோம்."
"அங்கு எந்தவிதமான மரச்சாமான்களும் இல்லை. அதனால், ஆறு மாதங்கள் கட்டில்களில் அமர்ந்தபடியே வேலை செய்தோம். இளைஞர்களை பணியில் சேர்த்து, அவர்களுக்கு பயிற்சி அளித்தோம். பின்னர், பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை உணர்ந்தோம். அதனால், இந்தப் பணிக்காக பெண்களையும் சேர்த்தோம்"என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், STEFAN ELLIS/AFP via Getty Images
அதிகாரிகளை விட சிறந்த கோப்புப் பணி செய்பவர்
ராஜீவ் காந்தியுடன் பணியாற்றிய முன்னாள் அமைச்சரவை மற்றும் பாதுகாப்புச் செயலாளர் நரேஷ் சந்திரா, ராஜீவுக்கு இதற்கு முன்பு நிர்வாக அனுபவம் எதுவும் இல்லாதபோதிலும், அவரை மிகச் சிறந்த நிர்வாகியாகக் கருதினார்.
பிபிசியிடம் பேசிய நரேஷ் சந்திரா, "ராஜீவ் காந்தி மிகவும் இளமையானவர். அவர் அபாரமாக உழைக்கக்கூடியவர். கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார். அவரது எழுத்து மற்றும் கோப்பு குறிப்புகள், அதிகாரிகளுடையதை விட சிறப்பாக இருந்தன. அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருப்பார் என்று நான் நினைக்கிறேன்"என்றார்.

பட மூலாதாரம், Express/Getty Images
ராஜீவ் நள்ளிரவு வரை விழித்திருப்பார்
ராஜீவ் அதிகாலையில் எழுந்து, இரவு வெகுநேரம் வரை பணியாற்றுவார். ஒருமுறை, ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத் சென்றார்.
அப்போது, ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக என்.டி. ராமராவ் இருந்தார்.
ராஜீவுடன் நெருக்கமாகப் பழகியவரும், பின்னர் தலைமை தகவல் ஆணையராகவும் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவருமான அவரைக் குறித்து வஜாஹத் ஹபிபுல்லா நினைவுகூருகிறார்.
"தெலுங்கு கங்கா திட்டம் தொடர்பாக என்.டி. ராமராவுடன் ஒரு கூட்டம் நடைபெற்றது. ராமராவ் மிகவும் சீக்கிரமாக, இரவு 8 மணியளவில் தூங்கச் செல்வார். அதிகாலை 3 மணிக்கு எழுவதற்காக அப்படிச் செய்வார். இந்தக் கூட்டம் இரவு 10 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது."
"அப்போது, இந்தத் திட்டம் தொடர்பாக என்.டி.ஆருக்கும் இந்திய அரசுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தன. அப்போது என்.டி.ஆருக்கு தூக்கம் வந்துகொண்டிருந்தது.
ராஜீவ் அவரிடம், 'இது குறித்து உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டவுடன், கண்களை மூடியபடி என்.டி.ஆர், 'நான் உடன்படவில்லை' என்பார். இதைக் கூறியதும், மீண்டும் தூங்கத் தொடங்கிவிடுவார்."
"கூட்டம் இரவு 11 மணியளவில் முடிந்தது. பின்னர் ராஜீவ் காந்தியிடம், 'சார், இந்தக் கூட்டத்திற்காக இவ்வளவு நேரம் விழித்திருந்ததற்கு மிக்க நன்றி' என்று ராவ் சாஹிப் மரியாதையுடன் கூறினார்."
"அதற்கு ராஜீவ், 'இன்னும் வெகுநேரமாகிவிடவில்லை. நான் தூங்கச் செல்வதற்கு முன்பு இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது' என்று பதிலளித்தார். பின்னர், ராஜ் பவனில் உள்ள தனது படுக்கையறைக்குச் செல்லும் படிக்கட்டுகளில் அவர் வேகமாக ஏறிச் சென்றார்."

பட மூலாதாரம், Bettmann/Getty Images
'உள்துறைச் செயலாளர் மீது ராஜீவ் காட்டிய அக்கறை'
இதேபோன்ற ஒரு சம்பவம் 1985-லும் நடந்தது.
ராஜீவ் காந்தி, உள்துறைச் செயலாளர் ராம் பிரதானுக்கு இரவு தொலைபேசியில் அழைத்தார்.
அப்போது பிரதான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
அவரது மனைவி தொலைபேசியை எடுத்தார்.
ராஜீவ், "நீங்கள் தூங்குகிறீர்களா, பிரதான்? நான் ராஜீவ் காந்தி பேசுகிறேன்" என்றார். அவரது மனைவி உடனடியாக அவரை எழுப்பினார்.
ராஜீவ், "என் வீட்டிலிருந்து நீங்கள் எவ்வளவு தொலைவில் வசிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
பிரதான், பண்டாரா சாலையில் உள்ள 2ஏபி-ல் இருப்பதாகக் கூறினார்.
ராஜீவ், "உங்களுக்காக எனது காரை அனுப்புகிறேன். முடிந்தவரை விரைவாக இங்கே வாருங்கள்" என்றார். அப்போது, பஞ்சாப் ஆளுநர் சித்தார்த் சங்கர் ராய் சில திட்டங்களுடன் ராஜீவைச் சந்திக்க வந்திருந்தார்.
ராய் அன்றிரவே சண்டிகருக்குத் திரும்ப விரும்பியதால், ராஜீவ் உள்துறைச் செயலாளரை இரவு அழைத்திருந்தார். அவர்கள் இரண்டு மணி நேரம் இதுகுறித்து விவாதித்தனர்.
அதிகாலை இரண்டு மணியளவில் அனைவரும் வெளியே வந்தபோது, ராம் பிரதானை தனது காரில் ஏறுமாறு ராஜீவ் கூறினார். பிரதமர் தன்னை நுழைவாயில் வரை அழைத்துச் செல்ல விரும்புகிறார் என்று பிரதான் நினைத்தார்.
ஆனால், ராஜீவ் காரை வாயிலுக்கு வெளியே ஓட்டிச் சென்று, திடீரென இடதுபுறம் திரும்பி, பிரதானிடம், "பண்டாரா சாலை எந்தப் பக்கம் இருக்கிறது என்று கேட்க மறந்துவிட்டேன்" என்றார்.
அதற்குள் ராஜீவ் என்ன செய்யப் போகிறார் என்பதை பிரதான் புரிந்துகொண்டார்.
அவர் ராஜீவின் ஸ்டீயரிங் வீலைப் பிடித்துக்கொண்டு, "சார், நீங்கள் காரைத் திருப்பவில்லை என்றால், ஓடும் காரிலிருந்து நான் குதித்துவிடுவேன்" என்றார்.
இதுபோன்ற ஆபத்துகளை எடுக்கமாட்டேன் என்று தன்னிடம் ராஜீவ் அளித்திருந்த வாக்குறுதியை பிரதான் நினைவூட்டினார்.
மிகுந்த சிரமத்துக்குப் பிறகு ராஜீவ் காந்தி காரை நிறுத்தினார். உள்துறைச் செயலாளர் மற்றொரு காரில் ஏறிச் செல்லும் வரை அவர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.

லட்சத்தீவில் காயமடைந்த திமிங்கலம் மீட்பு
சிறிது காலத்துக்குப் பிறகு, ராஜீவ் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக லட்சத்தீவுக்குச் சென்றார்.
அப்போது வஜாஹத் ஹபிபுல்லா அங்கு நிர்வாகியாக இருந்தார்.
"ராஜீவ் ஹெலிபேட் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். நாங்கள் அவருடன் ஜீப்பில் அமர்ந்திருந்தோம். அப்போது, அங்கு தண்ணீரில் திமிங்கலங்கள் சிக்கியிருப்பதாக ஒருவர் எங்களிடம் காட்டினார்."
"அங்கு லகூன்கள் இருந்தன. நீர்மட்டம் குறையும்போது, அவை மிகவும் ஆழமற்றதாகிவிடும். தண்ணீருடன் வந்த திமிங்கலங்களால் மீண்டும் கடலுக்குத் திரும்ப முடியாமல், அங்கேயே தண்ணீரில் துள்ளிக் கொண்டிருந்தன"என ஹபிபுல்லா நினைவுகூருகிறார்.
"ராஜீவ் காரை நிறுத்திவிட்டு, காலணிகளையும் பைஜாமாவையும் அணிந்திருந்த நிலையிலேயே தண்ணீருக்குள் குதித்தார். நான் சூட் அணிந்திருந்தேன். நானும் குதித்து ராஜீவைப் பின்தொடர்ந்தேன்."
"மேலும் பலரும் ராஜீவுடன் தண்ணீருக்குள் சென்றனர். அவர்களின் உதவியுடன், அவர் திமிங்கலத்தைத் தூக்கி, அதிகமாகத் தண்ணீர் இருந்த இடத்துக்குக் கொண்டு சென்று மீண்டும் தண்ணீரில் விட்டார்."

பட மூலாதாரம், Sharad Saxena/The India Today Group/Getty Images
போஃபர்ஸ் வழக்கால் மிகப்பெரிய இழப்பு
ராஜீவ் செய்த முதல் தவறு, ஷா பானு உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்ததுதான் என்று கூறலாம்.
போஃபர்ஸ் லஞ்ச ஊழல் விவகாரத்தில் அவர் தொடர்புபடுத்தப்பட்டதால், அவரது நற்பெயர் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, 1989 தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
இதுகுறித்து அஷ்வினி பட்நாகர் விளக்குகையில், "பொய்களின் அரசியல் போஃபர்ஸில் இருந்துதான் தொடங்கியது. அந்தத் தேர்தலில் விஸ்வநாத் பிரதாப் சிங் மிகப்பெரிய பொய் ஒன்றைக் கூறினார். ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தனது குர்தாவின் பாக்கெட்டிலிருந்து ஒரு துண்டுப் பிரசுரத்தை நாடகத்தனமாக எடுத்து, அதை காற்றில் அசைத்தபடி, 'போஃபர்ஸ் லஞ்சப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு எண் இதில் உள்ளது' என்றார். அதை வாசிப்பது போல் நடித்துவிட்டு, பின்னர் நிறுத்திவிட்டார்."
"அந்த நேரத்தில், இந்திய மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த நம்பகத்தன்மை மிகவும் அதிகமாக இருந்தது. அதனால், அவர் கூறுவது எதுவாக இருந்தாலும் அது உண்மைதான் என்று மக்கள் நம்பினர். இதன் விளைவாக, போஃபர்ஸ் விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, 'ராஜீவ் காந்தி ஒரு திருடன்' என்ற முழக்கம் ஒவ்வொரு தெருவிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. இன்றுவரை உண்மை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. போஃபர்ஸ் விவகாரத்தில் என்ன வெளிவந்தது?"
"நீதிமன்றம் அனைவரையும் விடுவித்தது. இன்றுவரை எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, யாருக்குக் கொடுக்கப்பட்டது, அல்லது உண்மையிலேயே பணம் கொடுக்கப்பட்டதா என்பதுகூட நிரூபிக்கப்படவில்லை. கார்கில் போரில் வெற்றி பெறுவதில் போஃபர்ஸ் துப்பாக்கிகள் மிகப்பெரிய பங்கு வகித்தன. இதன் மூலம் குறைபாடுள்ள துப்பாக்கிகளைக் கொண்டு வந்ததாக வி.பி. சிங் சுமத்திய குற்றச்சாட்டும் பொய்த்துப் போனது. "என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































