பேட்ஸ்மேன்களை திணறடித்த லக்னெள ஆடுகளம் டி20 போட்டிகளுக்கு உகந்ததா?

பட மூலாதாரம், SPORTZPICS
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலிரு இருபது ஓவர் போட்டிகள் நடைபெற்ற ராஞ்சி மற்றும் லக்னெள ஆடுகளங்கள் டி20 போட்டிக்கு உகந்தவையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக, லக்னெள மைதானத்தில் சுழன்று எகிறிய பந்துகளை கணிக்க முடியாமல் இந்திய, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறியதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
இந்த போட்டியில் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. மொத்தம் வீசப்பட்ட 40 ஓவர்களில் 30 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்கள் வீசினார்கள். இதுவரை இந்த அளவுக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் வேறு எந்த டி20 போட்டியிலும் பந்து வீசியதில்லை.
இரண்டு அணிகளுமே நூறு ரன்களை அடிப்பதற்குள்ளாக திணறிப் போய்விட்டன. சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா போன்ற இந்தியாவின் அதிரடியான பேட்ஸ்மேன்கள்கூட ஒன்றும் இரண்டுமாக ரன்களைச் சேர்க்க வேண்டியிருந்தது.
20 ஓவர்கள் வரை ஆடி 99 ரன்களை மட்டுமே நியூஸிலாந்து அணியால் சேர்க்க முடிந்தது. அந்த ரன்களை அடிப்பதற்கு இந்திய அணி கடைசி ஓவரின் 5-ஆவது பந்து வரை ஆட வேண்டியிருந்தது. இத்தனைக்கும் சூர்யகுமார் யாதவும், ஹர்திக் பாண்ட்யாவும் களத்தில் இருந்தார்கள்.
வழக்கமாக அதிரடி காட்டும் சூர்யகுமார், கேப்டன் ஹர்திக் ஆகிய இருவரும் கூட சூழலை புரிந்து கொண்டு அடக்கியே வாசித்தனர். சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 26 ரன்களையும், கேப்டன் ஹர்திக் 20 பந்துகளில் 15 ரன்களும், மட்டுமே எடுத்திருந்தனர்.
இந்தப் போட்டியில் நியூஸிலாந்து சார்பில் யாரும் 20 ரன்களுக்கு மேலாக எடுக்கவில்லை. அதேபோல் இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் எடுத்த 26 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர்.
பிட்ச் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், இரு அணிகளுமே வியக்கும் வகையில் பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்தன. வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக பகுதிநேரப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தத் தொடங்கின.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்தியா சார்பில் 7 பேர் பந்துவீசினார்கள். அதில் சிலர் ஒரு ஓவர், இரண்டு ஓவர்களை மட்டும் வீசிச் சென்றார்கள். நியூஸிலாந்து அணி இன்னும் ஒருபடி மேலே போய் 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது. விக்கெட் கீப்பராக இருந்து பகுதிநேர பந்துவீச்சாளராக மாறிய பிலிப்ஸ் 4 ஓவர்களை வீசினார். பந்து வீச்சாளரான டிக்னர் கடைசி ஓவரில்தான் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இந்திய அணிக்கு கடைசி நான்கு ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆனாலும்கூட 19-ஆவது ஓவர் வரை ஒரேயொரு பவுண்டரியை மட்டுமே இந்திய அணியால் அடிக்க முடிந்தது. அந்த ரன் வராமல் போயிருந்தால் இந்திய அணியின் வெற்றி சிக்கலாகி இருந்திருக்கும்.
கடைசி ஓவரில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், சூர்யகுமார் யாதவும், ஹர்திக் பாண்ட்யாவும் இந்திய ரசிகர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆடினார்கள். ஒரு வழியாக கடைசிக்கு முந்தைய பந்தில் சூர்யகுமார் யாதவ், பவுண்டரி அடித்து வெற்றிபெற வைத்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
போட்டிக்கு பின்னர் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில், லக்னெள ஆடுகளம் குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விமர்சித்தார்." நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளும் நடந்தேறிய ராஞ்சி, லக்னெள ஆகிய இரு ஆடுகளங்களுமே டி20 போட்டிக்கு உகந்தவை அல்ல" என்றார் அவர்.
"உண்மையைச் சொல்லப் போனால், இது அதிரவைக்கும் விக்கெட்டாக இருந்தது. பந்துகள் அதிகமாகச் சுழன்று வந்ததால் நல்ல வாய்ப்பை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. கடினமான ஆடுகளங்கள் பற்றி நான் கவலைப்படுவதில்லை.
ஆனால், இந்த இரு ஆடுகளங்களும் டி20 போட்டிக்காக உருவாக்கப்பட்டதாக தெரியவில்லைை. ஆடுகளங்கள் தயார் செய்யப்பட்டு விட்டனவா என்று முன்கூட்டியே உறுதி செய்து கொள்வது அவசியம்," என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.
இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் கருத்தை கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் ஆமோதித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் இந்திய வீரரும், ஐ.பி.எல். தொடரில் லக்னெள சூப்பர் ஜெயேன்ட்ஸ் அணி ஆலோசகருமான கவுதம் காம்பீரும் லக்னெள ஆடுகளத்தை குறை கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சில் பேசிய அவர், இது டி20 ஆடுகளமே அல்ல. இதுபோன்ற ஆடுகளத்தைப் பார்த்தால் லக்னெள சூப்பர் ஜெயேன்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள குயின்டான் டி காக் எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் இருந்தே விலகிவிடுவார்," என்று விமர்சித்தார்.
கவுதம் காம்பீரின் கருத்தையே நியூசிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் நீஷமும் வழிமொழிந்தார். ஆனால், பல வகையான பிட்ச்கள் உலகில் இருப்பது நல்லதுதான் என்று நியூசிலாந்து வீரர் பிரேஸ்வெல் கூறியிருக்கிறார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசிய அவர் 13 ரன்களை மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருக்கின்றன. அடுத்த போட்டி நாளை அகமதாபாத்தில் நடக்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானம் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தருமா? தொடரை தித்திப்புடன் இந்திய அணி முடிக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























