லக்னோவில் மிரட்டிய பந்துவீச்சாளர்கள்; தட்டுத்தடுமாறி 100 ரன்களை எடுத்த இந்திய அணி

பட மூலாதாரம், sportzpics
நூறு ரன்கள் எடுக்க வேண்டிய டி20 போட்டியில் கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுத்துச் சென்று இந்திய அணி வெற்றி பெற்றது.
லக்னௌ நகரில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கடைசி ஓவரில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், சூர்யகுமார் யாதவும், ஹர்திக் பாண்ட்யாவும் இந்திய ரசிகர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆடினார்கள்.
ஒரு வழியாக கடைசிக்கு முந்தைய பந்தில் சூர்யகுமார் யாதவ், பவுண்டரி அடித்து வெற்றிபெற வைத்தார்.
முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் பேட் செய்யத் தீர்மானித்தார். அவர்களது அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
நிதானமாக ஆடத் தொடங்கிய அந்த அணியின் கான்வே மற்றும் ஆலன் ஆகியோர் கணிசமாக ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்தபோது 4-ஆவது ஓவரில் சாஹல் பந்துவீச்சில் ஆலன் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே சுந்தரின் பந்துவீச்சில் கான்வே ஆட்டமிழந்தார்.
7-ஆவது ஓவரில் மற்றொரு முன்னணி வீரரான பிலிப்ஸும் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.அதன் பிறகு அந்த அணியின் ரன்குவிக்கும் வேகம் வீழ்ச்சியடைந்தது.
அடுத்தடுத்த இடைவெளிகளில் அந்த அணியின் வீரர்கள் வெளியேறினர். கடந்த போட்டியில் விமர்சனத்துக்கு உள்ளான அர்ஷ்தீப் சிங், இந்தப் போட்டியில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். கடைசி ஓவரில் அவர் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து அணி 99 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் ஆடிய இந்திய அணி கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுத்துச் சென்றது.

பட மூலாதாரம், sportzpics
சூர்யகுமார் யாதவும் ஹத்திக் பாண்ட்யாவும் கடைசிவரை களத்தின் நின்றனர்.
இருவரும் பந்துக்கு ஒரு ரன் என்ற அளவுக்குக் கூட ரன்களை எடுக்கவில்லை. கடைசி ஓவரில் ஆறு பந்துக்கு ஆறுரன் எடுக்கவேண்டும் என்ற நிலையில், ஹர்திக், சூர்யகுமார் ஆகியோரின் பவுண்டரி அடிக்கும் முயற்சிகளை கைகூடவில்லை
இறுதியில் இரண்டு பந்து மீதமிருந்தபோது சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.
ஹர்திக் 20 பந்துகளில் 15 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 26 ரன்களையும் எடுத்திருந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





















