You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானில் புதிய உச்ச தலைவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்? முழு விவரம்
இரானின் அரசியலமைப்பு மற்றும் தலைமைத்துவத்துக்கான நிபுணர்கள் குழுவின் (Assembly of Experts) உள்விதிமுறைகள், இஸ்லாமியக் குடியரசின் அதிஉயர் தலைவர் இறந்த பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை வகுத்துள்ளன.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சபை
அரசியலமைப்பின் 111-வது பிரிவின் கீழ், தலைவர் இறந்த நேரத்திலிருந்து நிபுணர்கள் குழுவால் புதிய தலைவர் அறிமுகப்படுத்தப்படும் வரை, மூன்று பேர் கொண்ட குழு தற்காலிகமாக தலைமைப் பொறுப்புகளை ஏற்கும்.
இந்தக் குழுவில் அதிபர், நீதித்துறையின் தலைவர் மற்றும் உயர்மட்ட நிர்வாகக் குழுவான துரித தீர்மான ஆலோசனைக்குழுவால் (Expediency Discernment Council) தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாவலர் குழுவின் (Guardian council) சட்ட அறிஞர்களில் ஒருவர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இருப்பினும், இந்த தற்காலிகக் குழுவுக்கு முழு அதிகாரம் கிடையாது. பின்வரும் சந்தர்ப்பங்களில் இதன் முடிவுகள் அமல்படுத்தப்பட வேண்டுமானால், அந்த ஆலோசனைக்குழுவால் முக்கால்வாசி உறுப்பினர்களின் ஒப்புதல் அவசியமாகும்:
1. அமைப்பின் பொதுவான கொள்கைகளைத் தீர்மானித்தல்.
2. பொது வாக்கெடுப்புக்கு உத்தரவிடுதல்.
3. போர் அல்லது அமைதியை அறிவித்தல்.
4. அதிபரைப் பதவியில் இருந்து நீக்குதல்.
5. கூட்டுப் படைத் தளபதி, ஐஆர்ஜிசி தலைமைத் தளபதி அல்லது மூத்த ராணுவ மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவு தளபதிகளைப் பணிநீக்கம் செய்தல் மற்றும் நியமித்தல்.
நோய் அல்லது விபத்து காரணமாகத் தலைவர் தனது கடமைகளைத் தற்காலிகமாகச் செய்ய முடியாமல் போனாலும், இதே விதிகளின்படி இந்தக் குழு அவரது பொறுப்புகளை ஏற்கும்.
புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் முறை
தலைவர் அல்லது அவரது வாரிசை நியமிக்கும் பொறுப்பு 88 இடங்களைக் கொண்ட தலைமைத்துவத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் உள்ளது (உறுப்பினர்கள் யாராவது இறந்து விட்டால், அடுத்த முறை தேர்தல் நடக்கும் வரை அந்த இடங்கள் காலியாகவே இருக்கும்).
இந்தக் குழுவின் தலைவராக முகமது அலி மொவஹேதி கெர்மானி உள்ளார்.
ஹாஷெம் ஹொசைனி புஷெஹ்ரி மற்றும் அலிரேசா அராஃபி ஆகியோர் துணைத் தலைவர்களாகப் பணியாற்றுகின்றனர். நிபுணர்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக பாதுகாவலர் குழுவால் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும்.
தலைவரின் பதவி காலியாகும்போது, குழு மிக விரைவாக கூட வேண்டும்.
அதன் உள்விதிமுறைகளின்படி, நிபுணர்கள் குழுவின் அமர்வு, அதன் உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கினர் (59 பேர்) முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக நடைபெறும்.
புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு அமர்வில் கலந்துகொண்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவு வாக்குகள் தேவை. அதாவது, 59 உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டால், அவர்களில் 40 பேரின் வாக்குகள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கப் போதுமானதாகும்.
இருப்பினும், இவ்வளவு முக்கியமான கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரப்பூர்வமான கூட்டத்தின் குறிப்புகளில், கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட வேண்டும்.
தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
அரசியலமைப்பின் 109-வது பிரிவு, தலைவருக்கான தகுதிகளை பின்வருமாறு வரையறுக்கிறது.
"இஸ்லாமியச் சட்டவியலின் பல்வேறு துறைகளில் மதத் தீர்ப்புகளை வழங்குவதற்குத் தேவையான கல்வித் தகுதி, நீதி மற்றும் இறையுணர்வு, சரியான அரசியல் மற்றும் சமூகப் பார்வை, விவேகம், தைரியம், நிர்வாகத் திறன் மற்றும் போதுமான தலைமைத்துவ ஆற்றல்."
வேட்பாளர்களை மறுஆய்வு செய்வதற்கான ஆணையம்
தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படக்கூடிய நபர்களின் தகுதிகளை ஆய்வு செய்யும் பணி நிபுணர் குழுவின் ஆணையத்திடம் உள்ளது.
தற்போது, இந்த ஆணையத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருப்பவர்கள்:
1.அகமது ஹொசைனி கோரசானி (பாதுகாவலர் குழுவின் நீதிபதி உறுப்பினர்)
2. அலிரேசா அராபி (பாதுகாவலர் குழு உறுப்பினர், ஜாமியாத் அல்-முஸ்தபா அமைப்பின் முதல் தலைவர். இது உலகம் முழுவதும் ஷியா மதத்தைப் பரப்பும் ஒரு அமைப்பாகும். ஐஆர்ஜிசி-க்காக உளவுத் தகவல்களைச் சேகரித்ததாகவும், குட்ஸ் படையுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களுக்கு ஆட்களைச் சேர்த்ததாகவும் அமெரிக்காவால் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது)
3.முகமது ரேஸா மொதர்ரெசி யாஸ்தி (பெண்களின் ஹிஜாப், பஹாய்கள் மற்றும் மத சிறுபான்மையினர் தொடர்பாகக் கடும்போக்குக் கருத்துகளை வெளிப்படுத்திய பாதுகாவலர் குழு உறுப்பினர்)
4.ஹாஷெம் ஹொசைனி புஷெஹ்ரி (நிபுணர்கள் குழுவின் முதல் துணைத் தலைவர், கோம் செமினரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர்)
5.மொஹ்சென் முகமதி அரக்கி (இஸ்லாமியச் சிந்தனைப் பள்ளிகளின் நெருக்கத்திற்கான உலக மன்றத்தின் முன்னாள் பொதுச் செயலாளர். புரட்சிக்குப் பிந்தைய ஆரம்ப ஆண்டுகளில் அபாடான், கோரம்ஷாஹர் மற்றும் பின்னர் குசெஸ்தானின் புரட்சிகர நீதிமன்றத் தலைவர். பத்ர் கார்ப்ஸ் நிறுவனர்களில் ஒருவர். ஐரோப்பாவுக்கான ஆயதுல்லா காமனெயியின் முன்னாள் பிரதிநிதி)
6.அபுல்ஹசன் மஹ்தவி (இஸ்பஹானின் தற்காலிக வெள்ளிக்கிழமை தொழுகை தலைவர்)
7. அப்பாஸ் காபி (ஐந்தாவது பதவிக்காலத்தில் பாதுகாவலர் குழுவின் நீதிபதி உறுப்பினர். 1980-களில் லெபனானில் தங்கியிருந்து ஹெஸ்பொலா அமைப்பை நிறுவுவதில் பங்காற்றியவர். ஹிஜாப் கட்டாயச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதை கடுமையாக விமர்சித்தவர்)
8. ஹசன் ஆமெலி (அர்தாபிலின் வெள்ளிக்கிழமை தொழுகைத் தலைவர், மூன்று முறை நிபுணர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தவர்)
9.அகமது தனேஷ்சாதே மொமென் (நிபுணர்கள் குழுவின் ஐந்தாவது காலப்பகுதியின் பிரதிநிதி)
10.அபுல்காசிம் வாஃபி (இஸ்லாமிய ஆலோசனைக் சபையின் முதல் மற்றும் இரண்டாவது காலப்பகுதிகளின் பிரதிநிதி)
11.கோர்பனாலி டோரி-நஜாபாபாடி (மார்கசி மாகாணத்தில் உச்சத் தலைவரின் பிரதிநிதி. அரசு முன்னாள் வழக்கறிஞர் மற்றும் உளவுத்துறை முன்னாள் அமைச்சர். உளவுத்துறை ஏஜெண்டுகளின் தொடர் கொலைகளில் அமைச்சகத்தின் பங்கு அம்பலமானதையடுத்து இவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது.)
இந்த ஆணையம் செயல்படும் விதம் வெளிப்படையானது அல்ல, அதன் அறிக்கைகள் ரகசியமாக வைக்கப்படுகின்றன.
2015 டிசம்பரில், அலி காமனெயின் புரோஸ்டேட் அறுவை சிகிச்சைக்கு ஒரு வருடம் கழித்து, அக்பர் ஹாஷெமி ரப்சஞ்சானி கூறியபோதுதான் இந்த ஆணையத்தின் இருப்பு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
அப்போது அவர், நிபுணர்கள் குழுவில் "தகுதியுள்ள நபர்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளனர். இதனால் பிற்காலத்தில் ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால், அவர்களை வாக்கெடுப்புக்கு முன் வைக்க முடியும்." என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 2016-இல் அவர் மேலதிக விளக்கம் அளித்தார்.
அப்போது, "இரண்டு அல்லது மூன்று நிபுணர்கள் நபர்களை ஆய்வு செய்து வருகின்றனர், இதனால் ஒரு நாள் தேவைப்பட்டால், அவர்கள் குறித்து நிபுணர்கள் குழுவில் சமர்ப்பிக்க முடியும்." என்று தெரிவித்தார்.
அவர் கூற்றுப்படி, இந்த ஆணையம் "ஒரு கட்டத்தில், பல நூறு மக்களுடன் கலந்தாலோசித்த பிறகு, ரகசியமாக இரண்டு நபர்களை அறிமுகப்படுத்தியது."
இந்த இரண்டு நபர்கள் யாரிடம் அல்லது எந்த அமைப்பிடம் அறிமுகப்படுத்தப்பட்டனர் என்பதை அக்பர் ஹாஷெமி ரப்சஞ்சானி கூறவில்லை.
இருப்பினும், நிபுணர்கள் குழுவின் உறுப்பினரும் செயலாளருமான அகமது காதாமி கூறுகையில், ஆயதுல்லா காமனெயி, "நிபுணர்கள் குழுவில் பல தலைவர்களை வைத்திருக்க வேண்டும்... அதிஉயர் தலைவர் விரும்பினால் மட்டுமே இந்த பெயர்கள் அவரிடம் சமர்ப்பிக்கப்படும், மற்றவர்களுக்கு அல்ல." என்று நம்புவதாக முன்னர் தெரிவித்தார்.
அடுத்த தலைவரைத் தேர்வு செய்ய எவ்வளவு காலம் ஆகும்?
புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு நிபுணர்கள் குழுவுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
தற்காலிகமாக மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பது குறித்து ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளதால், குறைந்தபட்சம் ஆவணங்களின் அளவிலாவது அதிகார வெற்றிடம் ஏற்பட வாய்ப்பில்லை.
இருப்பினும், இஸ்லாமியக் குடியரசின் நிறுவனரான ஆயதுல்லா ருஹொல்லா கொமெனியின் மறைவுக்குப் பிந்தைய அனுபவங்கள், இத்தகைய சூழ்நிலைகளில் விரைவாகச் செயல்படுவதற்கே நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்கள் முக்கியத்துவம் அளித்ததைக் காட்டுகின்றன.
ருஹொல்லா கொமெனி 1989-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் தேதி அன்று இரவு 10 மணிக்குப் பிறகு காலமானார். அவருக்குப் பின் ஆட்சிக்கு வருபவரைத் தேர்ந்தெடுக்க அடுத்த நாள் காலையிலேயே நிபுணர்கள் குழு கூடியதுடன், சில மணி நேரங்களிலேயே ஒரு முடிவை எட்டியது.
அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுக்கொண்டிருந்த அந்தச் சமயத்தில், தலைமைப் பதவிக்கான தகுதிகளில் ஒன்றான 'மர்ஜாயத்' (பின்பற்றப்பட வேண்டிய மத அதிகாரம் கொண்டவர்) என்ற நிபந்தனை அப்போது நீக்கப்படவில்லை.
இருப்பினும், அந்த நேரத்தில் நிச்சயமாக ஒரு 'மர்ஜா' ஆக இல்லாத அலி காமனெயியை , நிபுணர்கள் குழு தற்காலிக அடிப்படையில் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
பின்னர், அரசியலமைப்புத் திருத்தப்பட்ட பிறகு, இந்தத் தேர்வு நிரந்தரமாக்கப்பட்டது.
இருப்பினும், அலி காமனெயி நியமனம் செய்யப்பட்டது தற்காலிகமானது என்பது அப்போது பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு