You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேகேதாட்டு: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் - விஜய் பேசியது என்ன? பிரச்னையின் பின்னணி
(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் ஜோசப் விஜய் இதற்கான அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில்,"காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்துதாகவும் தீர்மானம் கூறுகிறது.
மேலும்,"காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது." என கூறுப்பட்டுள்ளது.
எனவே,"கர்நாடக அரசு மேகேதாட்டுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது." எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும்,"கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது." எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் இந்த தீர்மானத்தை வாசித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேஷ் குமார் இந்த தீர்மானத்திற்கு, காங்கிரஸ் கட்சி முழுமனதோடு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார்.
மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தமிமூன் அன்சாரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வன்னிஅரசு உள்ளிட்டோர் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசி வருகின்றனர். திமுக, அதிமுக, தேமுதிக, சிபிஐ, சிபிஎம், பாமக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்காததால், சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை கடிதம் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கு பதிலாக, தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் குழுவாகச் சென்று மத்திய அரசிடம் தீர்மானத்தை வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுப்பதாகக் கூறினார்.
"தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் நடவடிக்கை"
தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி,"மேகேதாட்டு அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகும்" என்று கூறினார்.
"இந்த அணை கட்டப்பட்டால், தமிழக மக்களின் வாழ்வாதாரமும் உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில் கடந்த காலங்களைப் போலவே காவிரி நீரை முழுமையாக தனது உபயோகத்துக்காக கர்நாடகம் பயன்படுத்தும் நிலை உருவாகும்" என்று தெரிவித்தார்.
இந்த தீர்மானத்திற்கு அதிமுக முழு மனதுடன் ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
கர்நாடகா என்ன செய்கிறது?
கர்நாடகாவில் சமீபத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.கே.சிவக்குமார், மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் டெல்லி சென்ற அவர், பிரதமர் மோதி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்த மேகேதாட்டு அணை திட்டத்திற்கான அனுமதியை விரைந்து அளிக்குமாறு வலியுறுத்தினார்.
'கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்'என நேற்றைய ஆளுநர் உரையின் போது தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் முதலமைச்சர் ஜோசப் விஜய் இதற்கான அரசினர் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
மேகேதாட்டு அணை பிரச்னையின் பின்னணி என்ன?
மேகேதாட்டு என்பதற்கு கன்னடத்தில் 'ஆடு தாண்டக்கூடிய' என்று பொருள். கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் இருந்து சுமார் 100 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது மேகேதாட்டு.
இங்கு ஓர் அணையைக் கட்டி, பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவதோடு, மின்சார உற்பத்தியிலும் ஈடுபட விரும்புகிறது கர்நாடகா.
மேகேதாட்டுவில் அணை கட்ட வேண்டும் என்ற திட்டம் முதன்முதலாக 1948இல் முன்வைக்கப்பட்டது. 1956இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, இந்தத் திட்டத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
ஆனால், காவிரி நீரை எப்படி பிரித்துக்கொள்வது என்பதில் கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் 70களில் மோதல் மூண்ட நிலையில் மேகேதாட்டு விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அதற்குப் பிறகு தேசிய நீர் மின் கழகம், காவிரியின் குறுக்கே நான்கு மின் திட்டங்களை உருவாக்க ஒரு யோசனையை முன்வைத்தது. அதன்படி மேகேதாட்டுவில் 400 மெகாவாட்டிற்கும் சிவசமுத்திரத்தில் 345 மெகாவாட்டிற்கும் ராசிமணலில் 360 மெகாவாட்டிற்கும் ஒகேனக்கலில் 120 மெகாவாட்டிற்கும் நீர்மின் நிலையங்களை உருவாக்கலாம் எனப் பேசப்பட்டது.
ஆனால், இந்த மின் திட்டங்களை உருவாக்குவதிலும் இரு மாநிலங்களுக்கு இடையில் எந்தக் கருத்து ஒற்றுமையும் ஏற்படவில்லை. ஆகவே, சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் மேகேதாட்டு அணை விவகாரத்தை கர்நாடகா கையில் எடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி மேகேதாட்டுவில் 9,000 கோடி ரூபாய் செலவில் ஓர் அணை கட்டப்படும். இதில் 67.16 டிஎம்சி நீர் தேக்கப்படும். இந்த அணை கட்டப்படுவதால் 6,996 ஏக்கர் நிலம் நீரில் மூழ்கும்.
இந்தத் திட்டத்தில் சேகரிக்கப்படும் தண்ணீரைக் கொண்டு பெங்களூருவுக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப் போவதாக கர்நாடக அரசு கூறுகிறது.
இந்த அணையில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் ஒரு நீர் மின் நிலையமும் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணையைக் கட்டினால், நடுவர் மன்றம் அளித்த ஆணையில் உள்ளதுபோல ஒவ்வொரு மாதமும் அணையைத் திறந்து நீரைச் சரியாக வழங்க முடியும் எனவும் கர்நாடகா கூறுகிறது.
இந்தத் திட்டத்திற்கு Mekedatu Balancing Reservoir cum Drinking Water Project என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவேண்டும் என கர்நாடக மாநிலத்தின் இரு அவைகளும் கடந்த ஆண்டு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றின. இதற்கு 2022ம் ஆண்டு மே 30ஆம் தேதியன்று கர்நாடக மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதற்குப் பிறகு 2022 -23ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் பாஜக அரசு ரூ.1000 கோடி ரூபாயை இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில்தான் புதிய அரசு அமைந்த பிறகு, டி.கே. சிவகுமார் இந்தத் திட்டத்தில் வேகம் காட்ட ஆரம்பித்தார். தற்போது டி.கே. சிவக்குமாரே முதலமைச்சரான பின்னர் மேகேதாட்டு அணை விவகாரம் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
காவிரி நீர் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக 1990இல் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், 1991இல் தனது இடைக்கால உத்தரவை வழங்கியது.
அதன்படி, தமிழ்நாட்டுக்கு காவிரி மூலம் 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. இதற்குப் பிறகு 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி இறுதி உத்தரவு வழங்கப்பட்டது.
நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான நடுவர் மன்றம் வழங்கிய அந்த இறுதி உத்தரவில் காவிரியின் மொத்த நீர் 740 டிஎம்சி எனக் கணக்கிடப்பட்டு அது தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மொத்த நீரில் தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி. வழங்கப்பட்டது. ஆனால், அந்த 419 டிஎம்சியில், கர்நாடக மாநிலம் வழங்க வேண்டியது 192 டிஎம்சி நீர் மட்டும்தான். மீதமுள்ள 227 டிஎம்சி நீரானது தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கிடைக்குமென நடுவர் மன்றம் கூறியது.
தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நீரில் 7 டிஎம்சியை புதுவைக்குத் தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த இறுதி ஆணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நீர், 192 டி.எம்.சியில் இருந்து 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. இதற்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைமையகம் டெல்லிக்கு மாற்றப்பட்டது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே நீர்மின் திட்டங்கள் கட்டப்பட்டாலும் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நீரின் அளவு மாறக்கூடாது எனக் கூறப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் இதில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை.
இதைச் சுட்டிக்காட்டும் கர்நாடக அரசு, தமிழ்நாட்டிலிருந்து பெருமளவு காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதாகவும் மேகேதாட்டுவில் அணையைக் கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் தடுக்கப்படும் என்றும் கூறுகிறது.
ஆனால், மழை பெய்யாமல் நீர் பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில் கர்நாடகம், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய காவிரி நீரை சரியான அளவில் தருவதில்லை என்பதால், கர்நாடகத்தின் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய தென்மேற்குப் பருவமழை மாதங்களில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குப் போதுமான நீரைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசுக்கு எப்போதுமே இருக்கிறது.
இத்தனைக்கும் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் அளிக்க வேண்டிய 177.2 டிஎம்சியில் 123.1 டிஎம்சியை இந்த நான்கு மாதங்களில்தான் தர வேண்டும் என நடுவர் மன்ற உத்தரவு கூறுகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு