தொடர் தோல்வி: கம்பீர், ஸ்ரேயாஸ் ஐயர் மீது எழும் கேள்விகள் - முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கூறுவது என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்தியா இங்கிலாந்துடனான டி-20 தொடரின் ஐந்தாவது போட்டியிலும் தோல்வியடைந்தது.

முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்தியா இங்கிலாந்திற்கு எதிராகத் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளது.

தொடரின் கடைசி டி-20 போட்டியில் இங்கிலாந்து இந்தியாவை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சனிக்கிழமை விளையாடப்பட்ட போட்டியில் இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார், அது தவறாகப் போனது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு 258 ரன்களை இலக்காக வைத்தது. ஆனால் இந்தியாவால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கடைசி போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது, ஆனால் அவரும் 27 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

வைபவ் சூர்யவன்ஷி இந்தப் போட்டியில் அணியில் இடம்பெறவில்லை.

நான்காவது டி-20 போட்டியிலும் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. இந்தியா இங்கிலாந்திற்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இங்கிலாந்து 13.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டிவிட்டது.

தொடரை இழந்ததால் நாலாபுறமிருந்தும் கேள்விகள்

முதலில் அயர்லாந்து, இப்போது இங்கிலாந்தில் 'ஒயிட்வாஷ்' ஆனதன் காரணமாக, டி-20 சாம்பியனான இந்திய அணி மீது நாலாபுறமிருந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே விமர்சிக்கப்படுகிறார்கள்.

இங்கிலாந்திற்கு எதிராக இந்தியாவின் தொடர் தோல்வி மற்றும் இந்தத் தொடருக்கு முன்னதாக அயர்லாந்திற்கு எதிராகக் கிடைத்த இரண்டு எதிர்பாராத தோல்விகள், ஜூன் தொடக்கத்தில் இந்தியாவின் டி-20 அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஸ்ரேயாஸ் ஐயர் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளன.

பேட்டிங்கில் வலுவானதாகக் கருதப்படும் இந்திய அணியின் பேட்டர்கள் இந்தத் தொடரில் முற்றிலும் தோல்வியடைந்தனர்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் ரன்களைக் குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தின் பிட்சுகளில் அசெளரியமாக இருந்தனர். அவர்கள் அதிவேகமாக ரன் எடுக்கும் முயற்சியில் தொடர்ந்து பெரிய ஷாட்டுகளை விளையாட முயன்றனர், ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

இந்தியாவின் பேட்டிங்கில் எந்த திட்டமும் தெரியவில்லை என்றும், அணி எந்த திசையில் செல்கிறது என்பதைத் தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் நான்காவது போட்டியில் தோல்வியடைந்த பிறகு, இந்தியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா கூறியிருந்தார்.

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருக்கும் இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்ததால் இந்தியாவின் தற்காலிக பந்துவீச்சுப் படையும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் தடுக்கத் தவறிவிட்டது.

இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சனிக்கிழமை போட்டியில் தோல்வியடைந்த பிறகு, அடுத்தடுத்து பல விக்கெட்டுகளை இழந்ததே இந்தியாவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்றார்.

போட்டி நடந்த சவுதாம்ப்டன் குறித்துப் பேசிய அவர், ''இது இந்தத் தொடரின் மிகச் சிறந்த பிட்ச் ஆகும், பேட்டிங் செய்யும்போது எங்களது அணுகுமுறையும் வித்தியாசமாக இருந்தது. முதல் போட்டியிலிருந்தே சூழ்நிலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தன. தொழில்முறை வீரர்களாக நாம் இவற்றைத் தெரிந்துகொண்டு, இதற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் இன்னும் என்ன சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்பது குறித்த இந்த கலந்துரையாடலும் அவசியமானது. ஃபீல்டிங் முக்கியப் பங்கு வகிக்கிறது, நாம் இதில் உழைக்க வேண்டும்" என்றார்.

தட்டையான பிட்சுகளில் விளையாடும் பழக்கமே தோல்விக்குக் காரணமா?

பலர் இந்தியாவின் தோல்விக்கு ஐபிஎல் போட்டிகளுக்காக உருவாக்கப்படும் பேட்டிங்கிற்கு சாதகமான தட்டையான பிட்சுகளே காரணம் என்று கருதுகிறார்கள்.

இந்தியா உள்நாட்டு மைதானங்களில் வென்றுவிடுகிறது, ஆனால் வெளிநாட்டு பிட்சுகளில் அதன் பேட்ஸ்மேன்களால் நிலைத்து நிற்க முடிவதில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடுவது ஐபிஎல் போட்டிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தெளிவாக தெரிவித்துள்ளார்.

இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் சூழலுக்கு ஏற்ப மாற வேண்டிய தேவை இருந்தது, ஏனெனில் இங்கு கிரிக்கெட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து மிகவும் வித்தியாசமானது என்று அவர் கூறினார்.

ஐபிஎல் பிட்சுகள் தட்டையாகவும், பவுண்டரிகள் சிறியதாகவும் இருக்கும். இது பேட்டிங்கை எளிதாக்குகிறது என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில் இங்கிலாந்தில் கிரிக்கெட் அதன் பழைய வடிவத்தில் இருக்கும். இங்கு பந்துவீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்கிறது, பேட்ஸ்மேன்கள் அதிக கவனத்துடன் விளையாட வேண்டும்.

"இங்கிலாந்தில் விளையாடுவது முற்றிலும் மாறுபட்டது. இது ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது போன்றது அல்ல, இந்திய அணி எவ்வளவு சீக்கிரம் இந்த விஷயத்தைப் புரிந்து கொள்கிறதோ, அவ்வளவு நல்லது" என இந்தியாவின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறினார்.

"ஐபிஎல் போட்டிகளில் நீங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு பந்தையும் மைதானத்திற்கு வெளியே அடிக்க முயற்சிக்கிறீர்கள். ஆனால் இங்கு அப்படி நடக்க முடியாது, ஏனென்றால் பந்து ஸ்விங் ஆகிறது, சூழ்நிலைகள் வேறுபட்டவை மற்றும் விக்கெட்டில் கூடுதல் பவுன்ஸ் இருக்கிறது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எந்த பேட்ஸ்மேனுக்கு எதிராக எப்படிப் பந்துவீச வேண்டும் என்பதை நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர்" என அவர் தெரிவித்தார்.

ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி குறித்தும் கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால் அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

''ஒரு கேப்டனின் செயல்பாடு அவரது அணியைப் பொறுத்தே அமையும். ஐபிஎல்-க்கும் சர்வதேச கிரிக்கெட்டிற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது, மேலும் சர்வதேச அளவில் ஒரு நபர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நேரம் எடுக்கும். ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் வெளிநாடுகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர், ஆனால் அவர்கள் இந்த அணியின் அங்கமாக இல்லை,"' என்று அவர் கூறினார்.

"நாம் தோற்ற விதம் ஆச்சரியமளிக்கிறது மற்றும் மிகவும் கவலையளிக்கிறது. நாம் ஒரு போட்டியை 125 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தோம், பின்னர் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோற்றோம். நாம் எந்த இடத்திலும் போட்டியில் இருப்பதாகத் தெரியவில்லை. இது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் கிட்டதட்ட இதே வீரர்களைக் கொண்டுதான் நாம் உலகக் கோப்பையை வென்றோம்," என முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வாசன் கூறினார்.

15 வயதான வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிறகு, தொடர்ந்து மூன்று போட்டிகளில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுமாறு வாசன் அவரை அறிவுறுத்துகிறார்.

''பந்து உங்களை நோக்கி மிக வேகமாகவும், அதிக பவுன்ஸுடனும் வருகிறது, அதுதான் ஜோஃப்ரா ஆர்ச்சரின் தனிச்சிறப்பு. ஜோஷ் டங்கும் வேகமாகப் பந்து வீசுகிறார். அவர் ஒரு நல்ல லென்த்தில் பந்து வீசுகிறார். பந்து நீங்கள் பழகியதை விட நான்கு அங்குலம் அதிகமாக பவுன்ஸ் ஆகலாம்" என்றார்.

"எனவே நிதானமாக விளையாடுங்கள். குறைந்தபட்சம் முதலில் விக்கெட்டையும், பந்தின் வேகத்தையும் புரிந்து கொள்ளுங்கள். ஆனால், 'நான் ஒரு பெரிய ஆட்டக்காரர், பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்க விடுவேன்' என்ற அழுத்தத்துடன் நீங்கள் விளையாடினால், அது எப்போதாவது ஒருமுறை கை கொடுக்கலாம், ஆனால் இங்கிலாந்தில் அது தொடர்ந்து உதவாது" என்று வாசன் கூறினார்.

''இந்திய அணி இந்த முடிவை தனது பலவீனங்களை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகப் பார்க்கத் தயாராக இருந்தால், இதிலிருந்து பல நல்ல விஷயங்கள் வெளிவரக்கூடும்.''என பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கூறினார்.

''அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங்கில் விவேகம் குறைந்து காணப்பட்டது, இருவரும் கிட்டத்தட்ட ஒவ்வொரு பந்திலும் பெரிய ஷாட் அடிக்க முயல்வது போல் தோன்றியது. இஷான் கிஷன் பவுன்ஸ் பிட்சுகளில் தோல்வியடைந்தார், திலக் வர்மாவும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை,'' என சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் வி.கே என்ற பயனர் எழுதினார்,

''இந்தியாவின் டாப் ஆர்டர் தொடர்ந்து தடுமாறியது, மிடில் ஆர்டராலும் அணியைத் தாங்கிப் பிடிக்க முடியவில்லை. சிவம் துபே மற்றும் அக்சர் படேல் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர், வாஷிங்டன் சுந்தரும் ஆல்ரவுண்டர் பாத்திரத்தில் தோல்வியடைந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே பொறுப்பான இன்னிங்ஸை விளையாடி ரன்களை எடுத்தார், ஆனால் அவருக்கு மற்ற பேட்ஸ்மேன்களின் ஆதரவு கிடைக்கவில்லை. அணியின் மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை, இதுவே இந்தியாவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது'' என்றார் அந்த பயனர்.

அணித் தேர்வு குறித்த கேள்விகள்

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் ஏற்பட்ட தோல்விக்குத் தொடர்ந்து இந்தியாவின் அணி நிர்வாகம் கேள்விகளுக்கு உள்ளாகி வருகிறது.

அணித் தேர்வு குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பே, கிரிக்கெட் ரசிகர்கள் அணியின் தேர்வு குறித்துப் பலவிதமான கேள்விகளை எழுப்பி வந்தனர். பல முக்கிய வீரர்களுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை.

இந்த அணியில் கடந்த டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித்தந்த கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு இடம் அளிக்கப்படவில்லை.

இங்கிலாந்தில் வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. பின்னர் அவர் விளையாட வைக்கப்பட்ட போதிலும் அவரது செயல்பாடு நன்றாக இல்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் அணித் தேர்வுக்கு முன்பாக சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், "இந்திய அணியில் ரஜத் படிதார் இல்லாதது வருத்தமளிக்கிறது. அவர் இன்னும் என்ன செய்ய வேண்டும்? அவர் 501 ரன்கள் எடுத்துள்ளார், அவரது ஸ்டிரைக் ரேட் கிட்டத்தட்ட 200 ஆக உள்ளது. இது அநீதி" என்று குறிப்பிட்டிருந்தார்.

''நான் உண்மையில் வார்த்தைகளின்றி நிற்கிறேன். என்ன சொல்வதென்றே புரியவில்லை. முற்றிலும் அதிர்ச்சியடைந்துள்ளேன். இது விவரிக்க முடியாத தோல்வி. உண்மையைச் சொன்னால், இப்போது சொல்வதற்கு எதுவுமே இல்லை'' என காங்கிரஸின் மூத்த தலைவரும், கிரிக்கெட் குறித்து நல்ல புரிதல் கொண்டவருமான சசி தரூர் எக்ஸ் பக்கத்தில் எழுதியிருந்தார்.

மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், ''பிப்ரவரியில் டி-20 உலகக் கோப்பையை வென்ற இதே இந்திய அணி, தற்போது இங்கிலாந்திற்கு முன்னால் முற்றிலும் திகைத்து நிற்பது போல் தோன்றுகிறது. இந்திய அணி இவ்வளவு மங்கலாகவும், உத்திகள் விஷயத்தில் இவ்வளவு பலவீனமாகவும் காட்சியளிப்பது மிகக் குறைந்த சில தருணங்களிலேயே நடந்துள்ளது. இந்த அணிக்கு ஜஸ்பிரித் பும்ராவை விட இன்றியமையாத வீரர் யாரும் இல்லை என்பதையும் இது தெளிவுபடுத்துகிறது. அவரே இந்தியாவின் உண்மையான மேட்ச் வின்னர். ஒரு தனி நபரால் மட்டும் அணியை உருவாக்க முடியாது என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. ஆனால் பும்ரா இந்த விதிக்கு விதிவிலக்கு'' என்று குறிப்பிட்டிருந்தார்.

நெருக்கடியில் கௌதம் கம்பீர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்

"கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் காலம் வெகுநாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனால் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றதும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியாவைப் போன்ற ஆடுகளங்களில் இந்திய அணி வெற்றி பெற்றதும் அவரைக் காப்பாற்றியுள்ளன,'' என இந்தத் தொடரின் தோல்வி குறித்துத் தனது ஒரு நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா கூறினார்.

''இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் சமநிலை முற்றிலும் இல்லை. இதில் அட்டாக் என்பதே இல்லை. வேகப்பந்து வீச்சு அட்டாக் இல்லாமல் எப்படி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்ல முடியும்? ஹர்ஷித் ராணாவைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பது புரியவில்லை."

''முழுமையாக பேட்ஸ்மேன்களும் இல்லாத, முழுமையாக பந்துவீச்சாளர்களும் இல்லாத வீரர்களை இந்தியா அழைத்துச் சென்றிருந்தது. பார்ட்-டைம் ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சு அட்டாக் இல்லாத நிலை மற்றும் பார்ட்-டைம் பேட்ஸ்மேன்களைக் கொண்டு காரியம் நடக்காது. முக்கியமான தருணத்தில் ஒரே நேரத்தில் மூன்று நோ-பால்களை வீசும் ரவி பிஷ்னோய் போன்ற வீரரை நீங்கள் அணியில் வைத்திருக்கிறீர்கள்.'' என சேகர் குப்தா கூறியுள்ளார்

இரண்டு நாட்களுக்கு முன்பு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-யிடம் பேசுகையில், "பிசிசிஐ தற்போது இந்திய டி20 அணியின் செயல்பாட்டைக் கண்காணித்து வருகிறது. இங்கிலாந்திற்கு எதிரான தற்போதைய தொடரில் அணியின் செயல்பாடு எதிர்பார்த்தபடி இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இது போன்ற விஷயங்கள் நடப்பது அசாதாரணமானது அல்ல. இதை ஒரு மோசமான கட்டமாக மட்டுமே நாம் பார்க்கிறோம்" என்றார்.

"ஜூலை 19 அன்று ஒருநாள் தொடர் முடிந்து அணி திரும்பிய பிறகு, அணியின் முக்கிய உறுப்பினர்களுடன் நாங்கள் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்துவோம். இதில் இங்கிலாந்தில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து விவாதிக்கப்படும். அணி மீண்டும் நல்ல ஃபார்மிற்குத் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

இந்த ஆய்வுக் கூட்டம் "அணியின் செயல்பாடு மற்றும் குறைபாடுகளைக் களைவதற்குத் தேவையான சீர்திருத்தங்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்தும். இதைத் தவிர வேறு எந்த விஷயமும் விவாதிக்கப்படாது" என்றும் சைகியா கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு